வெள்ளி மதியம் சிதம்பரம் புறப்பட்டேன். மதுரையிலிருந்து தஞ்சாவூர் சென்று அங்கிருந்து சிதம்பரம் செல்லும் பேருந்தில் ஏறினேன்.தெம்மூர் சென்றடைய இரவாகிவிட்டது.தவர்த்தாம்பட்டிலி ருந்து வீடு வரை நடந்தே சென்றுவிட்டேன்.மனைவியை கூட்டிச்செல்ல வந்துள்ளதாகக் கூறினேன். அது கேட்டு அப்பா சந்தோஷப்பட்டார். அவளும் மனதுக்குள் மகிழ்ந்தாள்.
காலையில் பால்பிள்ளை வந்தான். இருவரும் ஆற்றங்கரைக்குச் சென்றோம். அவன் கையில் தூண்டில் வைத்திருந்தான். சிறிது நேரம் தூண்டில் போட்டோம். ஆற்றில் குளித்தோம்.
வீட்டில் அம்மா கமகமக்கும் கோழிக்கறியுடன் சுடச்சுட தோசை வைத்திருந்தார். திண்ணையில் அமர்ந்து பால்பிள்ளையும் நானும் பசியாறினோம். செல்லக்கண்ணு மாமா வழக்கம்போல் வருகை தந்தார். ” தம்பி… சுகமா? ” என்று நலம் விசாரித்தார். மாமாவின் அன்பு அலாதியானது. என்னை சிறுவயதில் தூக்கி வளர்த்தவர் அவர். சிதம்பரம் வரை என்னை தோளில் சுமந்துகொண்டு நடந்தவர்.
ஞாயிறு காலையில் ஆலயம் சென்றோம். இஸ்ரவேல் உபதேசியார் அருமையாக பிரசங்கம் செய்தார். பணிக்கு செல்லும் எங்களுக்காக ஜெபம் செய்து ஆசிர்வதித்தார். ஆலயத்தில் உறவினரும் சபை மக்களும் நலம் விசாரித்தனர். ஆராதனை முடிந்தபின்பு ஆலயத்தின் பின்புறமுள்ள கல்லறைத்தோட்டம் சென்றோம். அங்கு அடக்கம்செய்யப்பட்டிருந்த தாத்தா பாட்டியின் கல்லறைகளின் முன் நின்று மரியாதை செலுத்தினோம்.
மதிய உணவுக்குப்பின்பு நாங்கள் இருவரும் புறப்பட்டோம். பால்பிள்ளை கூண்டு வண்டியை ஓட்டினான். தவர்த்தாம்பட்டில் பேருந்து ஏறினோம். அரை மணி நேரத்தில் சிதம்பரம் அடைந்தோம். அங்கு திருவள்ளுவர் விரைவு பேருந்து மூலம் தஞ்சாவூர் சென்றோம். மதுரை செல்லும் பேருந்தில் ஏறி திருப்பத்தூர் வந்தடைந்தோம்.
அவளை அழைத்துக்கொண்டு செல்லப்பா வீடு, ஃரெடரிக் ஜான் வீடு சென்றேன். அவளைக் கண்டு அவர்கள் மகிழ்ந்தனர்.இரவு உணவை செல்லப்பா வீட்டில் முடித்துக்கொண்டோம்.
கொண்டு வந்த சில சாமான்களை அடுக்கி வைத்தோம். சமையல் சாமான்கள் இன்னும் வாங்கவேண்டி இருந்தது. பாத்திரங்கள், காய்கறிகள் தேவைப்பட்டன. நாளை மாலையில்தான் வேலை முடிந்தபின்பு வாங்கலாம். அதுவரை செல்லப்பா வீட்டிலேயே உணவருந்தலாம். எங்களுக்கு உணவு வழங்குவதில் அவர்கள் மகிழ்ந்தார்கள்.
அவளுக்கு வீடு பிடித்திருந்தது. உடன் மீண்டும் அறைகளைக் கூட்டித் துடைத்து சுத்தம் செய்தாள். வீட்டின் முன் இருந்த சிறு பூந்தோட்டச் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றினாள். வீட்டு வேலைகள் நன்றாகச் செய்வாள் போல் தெரிந்தது.
நான் ஒரு பிலிப்ஸ் ரேடியோ வைத்திருந்தேன். அது எப்போதும் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும். அதுவே அவளுக்குப் பொழுதுபோக்கு. நேரம் கிடைக்கும்போது அவளை மருத்துவமனையைச் சுற்றிக்காட்ட அழைத்துச் செல்லலாம்.
டாக்டர் பார்த் அன்று வெளிநோயாளிகளைப் பார்த்தபின்பு என்னை தொழில் பயிற்சி சிகிச்சை ( Occupational Therapy ) பகுதிக்குக் கூட்டிச் சென்றார். அங்கு டேனியல் மெழுகுவர்த்தி வைக்கும் தண்டுகளைச் செய்துகொண்டிருந்தார். முன்பே செய்தவை அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.அவை பல வடிவங்களில் அழகாக இருந்தன. நான் அவற்றில் இரண்டை வாங்கினேன். விலை குறைவுதான். டாக்டர் பார்த் அங்கு அமர்ந்து அதை செய்யத் தொடங்கினார்.அவர்தான் அவற்றைச் செய்ய டேனியேலுக்கு கற்றுத்தந்துள்ளார். சில தொழுநோயாளிகளுக்கு அதைச் செய்யும் பயிற்சி அளிக்கப்படுகிறதாம். அதோடு அங்கு பெரிய மெழுகுவர்த்தியும் செய்கிறார்கள். அவற்றிலும் சிலவற்றை வாங்கினேன்.புது வீட்டில் தினமும் இரவில் மெழுகுவர்த்தி வைத்து ஜெபம் செய்யலாம்.
அந்தப் பகுதியிலேயே ஒரு அறையின் வெளியில் ” சமூக சேவகி ” என்று எழுதப்பட்டிருந்தது. டாக்டர் பார்த் என்னை அதனுள் அழைத்துச் சென்றார். அங்கு ஒரு அழகான இளம் பெண் அமர்ந்திருந்தார். எங்களைக் கண்டதும் அவர் எழுந்து நின்று வணக்கம் சொன்னார்.சந்தன நிறத்தில் நல்ல உயரமான பெண்மணி அவர். அவரை சாந்தி என்று அறிமுகம் செய்தார் இங்கு வரும் தொழுநோயாளிகளின் குடும்ப நிலையைக் கேட்டறிந்து அவர்களுக்கு சமூக பொருளாதார ரீதியில் உதவலாம் என்பதைப் பரிந்துரை செய்வது அவருடைய வேலை. அதோடு அவர்களின்பிள்ளைகளின் கல்வி தொடர்பான உதவியும் அவர் செய்வார். அதற்காக தனி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாம்.
டாக்டர் பார்த் பலதரப்பட்ட கலைகளில் ஆர்வம் கொண்டவர். அவர் கழுத்தில் ஒரு விலையுயர்ந்த புகைப்படக் கருவியைத் தொங்கவிட்டிருப்பார். திடீரெண்டு அதை எடுத்து அவருக்குப் பிடித்தமான நோயாளிகளை படம் பிடிப்பார். அழகான பெண்களையும் படம் பிடிப்பார். வயதானவர்களின் சுருக்கமுற்ற முகங்களையும் படம்பிடித்துக்கொள்வார்.
நண்பகல் வரை அவர் அங்கு மரக்கட்டைகளை இழைத்து மெழுகுவர்த்தி வைக்கும் அழகிய தண்டுகளை. செய்துகொண்டிருந்தார்.நான் அதைப் பார்த்துக்கொண்டுதானிருந்தேன். அவருடைய சுறுசுறுப்பு கண்டு வியந்தேன். இதற்கெல்லாம் அவருக்கு கூடுதல் ஊதியம் இல்லைதான். ஆனாலும் அதைப் பெரிதுபடுத்தாமல் அவர் அத்தகைய சமூகப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.சுவீடன் நாட்டு திருச்சபையினர் இங்கு மருத்துவப் பணியுடன் இத்தகைய சமூகப் பணி புரிவதையும் ஆதரித்து வருகின்றனர். தொழுநோயாளிகள்மீது அவர்கள் மிகுந்த கருணை காட்டுகின்றனர். அனால் நம் இனத்தவர் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களைக் கண்டு அஞ்சி ஒதுங்கி வாழ்கிறோம். அதனால் அவர்கள் பெருமளவில் கோவில்களின்முன் பிச்சைக்காரர்களாகவே காலங்கழிக்கின்றனர் தொடர்வண்டி நிலையங்களிலும் பேருந்து நிலையங்களிலும் தொழுநோயாளிகள் பிச்சை எடுக்கின்றனர். இத்தகைய நிலையை மாற்றவேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் இதுபோன்ற மிஷன் மருத்துவமனைகளில் தொழுநோய் சிகிச்சையும் புணர்வாழ்வு பயிற்சியும் தருவதில் ஈடுபட்டு வருகின்றன.கல்கத்தாவில்கூட அன்னை தெரசா தொழுநோயாளிகளுக்கு மனிதாபிமான சேவை செய்துவருவதை உலகறியும்.
நான் தொழுநோய்ப் பிரிவில் முழுநேரம்கூட பணியாற்றலாம். அதற்கு கரிகிரியில் உள்ள தொழுநோய் ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி பெற்று வரலாம்.அதை பின்பு செயல்படுத்த முடிவு செய்தேன்
அன்று மாலையில் பால்ராஜ் வீடு வந்தார்.நாங்கள் மூவரும் திருப்பத்தூர் கடைவீதிக்குச் சென்றோம். பாத்திரங்களும் மளிகைச் சாமான்களும் வாங்கினோம். வீட்டுக்குத் தேவையான வேறு பொருட்களும் வாங்கினோம். இரவு உணவை மாதவன் உணவகத்தில் முடித்துக்கொண்டோம். வாடகை ஊர்திமூலம் திரும்பினோம்.
இரவில் வீட்டின் மேல்தளத்தில் இருந்த வராந்தாவில் அமர்ந்து வேப்பங் காற்றிலும் நிலவொளியிலும் வெகுநேரம் மெய்மறந்தேன். இந்த இடமும் வேலையும் எனக்கு மிகவும் பிடித்தது. அதிலும் மனைவியுடன் இந்த புது வீட்டில் வாழ்வது இனிமையாக இருந்தது.
மறுநாள் காலையில் வீட்டில் பசியாறினேன். வேலைக்குச் சென்று வந்தபின் மதிய உணவு சமைத்து வைத்திருந்தாள் அவள் நன்றாக சமைக்கிறாள். அவள் வைத்த சாம்பார் மிகவும் ருசியாக இருந்தது.
மாலையில் தனியாக மருத்துவமனையின் நுழைவாயில் வரை சென்றேன். . அங்கு தமிழ் சுவிஷேச லுத்தரன் திருச்சபையின் துவக்கப்பள்ளி இருந்தது. அதில் ஆறாம் வகுப்புவரை இருந்தது. அதன் தலைமை ஆசிரியர் பாஸ்கரன். அவர் தாதியர் கண்காணிப்பாளர் தேவசகாயத்தின் மகன். என்னை மலர்ந்த முகத்துடன் வரவேற்று வகுப்புகளை சுற்றிக்காட்டினார். அப்போது வகுப்புகள் முடியும் நேரம். மாணவ மாணவிகள் எழுந்து நின்று வணக்கம் கூறினார்கள்.
பள்ளியின் பக்கத்திலேயே எஸ்.எம்.எச். தபால்நிலையம் இருந்தது. மருத்துவமனையின் பெயரிலேயே இருக்கும் ஒரே தபால் நிலையம் அது! அதில் குணசேகரன், நம்பெருமாள், ஜெயசீலன் ஆகியோர் பணியாற்றினர்.
நுழைவாயிலிருந்து நேராக இடதுபக்கத்தில் உயரமான சுவர் இருந்தது. அதன் மறுபக்கத்தில்தான் திருப்பத்தூர் சிறை உள்ளது. அங்குதான் மருதுபாண்டியர் சகோதரர்கள் கைதிகளாக இருந்தார்களாம். அந்த சிறைச்சாலை சுவரை ஒட்டிதான் மருத்துவமனை செல்லும் வீதி. அந்த வீதியின் வலது புறத்தில் இரத்தப் பரிசோதனைக்கூடத்தின் பின்புறம் ஒரு சதுரமான இடத்தில் கம்பி வேலி போடப்பட்டிருந்தது. அந்த இடத்தில் இரண்டு கருங்கற்கள் கிடந்தன. அவற்றின் மீது குங்குமப் பொட்டு இடப்பட்டிருந்தது. அங்குதான் மருது பாண்டியர்களின் தலைகள் துண்டிக்கப்பட்ட உடல்கள் புதைக்கப்பட்டுள்ளனவாம். அந்த இடம் நான் பணியாற்றும் பனிரெண்டாம் அறைக்குப் பின்னல் அமைந்திருந்தது. நான் அறையின் சன்னலைத் திறந்தால் அந்த இடத்தைப் பார்க்கலாம். அந்த வீர சகோதரர்களின் புனிதமான இடத்தின் அருகிலேயே நான் அன்றாடம் அமர்ந்து பணிபுரிவது எனக்கு பெருமையாக இருந்தது. மருதுபாண்டியர்கள் பற்றிய வரலாற்று நூல் கிடைத்தால் படித்து அவர்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளலாம்.
அந்த சாலையில் நேராக நடந்து சென்றால் என்னுடைய வீட்டுக்குத் திரும்பும் இடது பக்கத்தில் ஒரு தனி வீடு இருந்தது. அதில் வாகன ஓட்டுநர் தங்கராஜ் குடியிருந்தார். அவருடைய இரண்டு மகள்களான சந்திரிகாவும் சரளாவும் பள்ளியில் பயின்றுவந்தனர். அந்த வீட்டின் அருகில் வாகனங்கள் நிறுத்தும் கூடாரம் இருந்தது. அதில் மூன்று வாகனங்கள் இருந்தன. அவற்றில் ஆம்புலன்ஸ் வாகனம் வோக்ஸ்வேகன். தொழுநோய்க்கு மகேந்திரா நின்றது. தலைமை மருத்துவ அதிகாரிக்கு பயன்படுத்தப்படும் அம்பாசிடர் கார் நின்றது. தங்கராஜ் அந்த காரை ஓட்டுபவர். மகேந்திராவை விக்லீஸ் என்பவர் ஓட்டுகிறார். அந்த ஆம்புலென்ஸை கங்காதரன் ஓட்டுகிறார்.
தங்கராஜின் வீட்டின் எதிர்புறத்தில் தனியாக ஒரு கொட்டகை நின்றது. அதனுள் டேபிள் டென்னிஸ் விளையாடும் பெரிய மேசை இருந்தது. அதுதான் எஸ்.எம்.எச்.மனமகிழ் மன்றம். மருத்துவமனையின் ஊழியர்களுக்காக அந்த மனமகிழ் மன்றம் இயங்கியது. அதன் செயலாளராக பாலசுந்தரம் இருந்தார். மாலையில் வாலிபால் விளையாடுவதும், இங்கே கேரம், டேபிள் டென்னிஸ் விளையாடுவதும் மனமகிழ் மன்றத்தின்கீழ் இயங்கியது. பாலசுந்தரம் ஒரு விளையாட்டு வீரர்போன்று தெரியவில்லை. அவர் தடித்த உருவமுடைய முதியவராகத் தென்பட்டார்.
மனமகிழ் மன்ற கட்டிடத்தின் எதிரில் ஒரு டென்னிஸ் கோர்ட் இருந்தது.ஆனால் அதில் புல் வளர்ந்து பயனற்றுக் கிடந்தது. டாக்டர்கள் செல்லையா, ஃபிரெடரிக் ஜான், செல்லப்பா ஆகிய மூவரும் மாலையில் டென்னிஸ் விளையாடும் பழக்கம் கொண்டவர்கள். அவர்கள் இங்கு விளையாடாமல் டவுனில் உள்ள ஆறும் விருந்தினர் இல்லத்தின் டென்னிஸ் கோர்ட்டுக்குச் செல்கின்றனர்.. அங்கு நகரத் தந்தை திரு. நாகராஜன் இருப்பார். அவருடனும் இன்னும் சில பிரகமுகர்களுடனும் டென்னிஸ் ஆடிவிட்டுத் திரும்புகிறார்கள். நாகராஜன் மலேசிய வள்ளல் ஆறுமுகம் பிள்ளையின் மூத்த மகன். அவரின் தம்பி தங்கவேலு. அவர்கள் திருப்பத்தூர் தென்மாப்பட்டில் ஆறும் மாளிகையில் வாழ்கின்றனர். அரண்மனை போன்ற அதுதான் திருப்பத்தூரிலேயே பெரிய வீடு எனலாம். திருப்பத்தூர் மக்களும் அதைப் ” பெரிய வீடு ” என்றுதான் அழைப்பார்களாம்.அவர்களின் தந்தை வள்ளல் ஆறுமுகம் பிள்ளை மலேசியாவில் புக்கிட் மெட்ராஜாமில் வசிக்கும் கோடீஸ்வரர்.அங்கு அவருக்கு ரப்பர் தோட்ட்ங்கள் உள்ளன. திருப்பத்தூரில் ஒரு கலைக் கல்லூரியும் உள்ளது. அதன் பெயர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கலைக் கல்லூரி.திருப்பத்தூரில் ஒரு பெட்ரோல் பங்கும் உள்ளது. இவர்கள் தான் திருப்பத்தூரில் மிகுந்த செல்வாக்கு மிக்கவர்கள் இந்தத் தகவல்களையெல்லாம் என்னிடம் பால்ராஜ்தான் கூறினார்.
( தொடுவானம் தொடரும் )
- நாடில்லாத் தளத்தில் இருப்போன் !
- அவுஸ்திரேலியா சிட்னியில் கலை – இலக்கியம் 2017 தமிழக கவிஞர் வைதீஸ்வரனும் உரையாற்றுகிறார்.
- திறனாய்வு
- ஹாங்காங் தமிழ் மலரின் நவம்பர் 2017
- கவிதைகள்
- பூகோளம் வெகு விரைவாகச் சூடேறுகிறது விஞ்ஞானிகள் அஞ்சியதுபோல் !
- மழயிசை கவிதைகள்
- கவிதை
- வாட்ஸ் அப் வாழ்வியல்…!
- மொழிவது சுகம் 25 நவம்பர் 2017 : அ. பொறுமைக் கல் -அதிக் ரஹ்மி ஆ. என் கடன் உயிரை வதைப்பதே !
- தொடுவானம் 197. திருப்தியான திருப்பத்தூர்