பாரதி யார்? – நாடக விமர்சனம்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 20 in the series 17 டிசம்பர் 2017

ப்ரியா வெங்கட்

சென்னையைச் சேர்ந்த “வானவில் பண்பாட்டு மையம்” கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வோர் ஆண்டும் பாரதி பிறந்த தினத்தைக் கொண்டாடும் வகையில் சென்னையில் அவர் குடியிருந்த இல்லத்தில் பாரதி விழாவை நடத்தி வருகின்றனர். அவ்வாறே இவ்வாண்டும் டிசம்பர் 9,10,11ம் தேதிகளில் மகாகவி பாரதி விழா ‘தேசபக்திப் பெருவிழா’ என்ற வகையில் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக “பாரதி யார்?” என்ற நாடகத்தை அரங்கேற்றப் போவதாக முன்னரே அறிவித்திருந்தனர். அப்போதிருந்தே அனைவரும் ஆவலுடன் காத்திருக்கத் தொடங்கினர். நாடகத்தின் ஒத்திகையைக் கண்டு தினமலர், ஹிந்து போன்ற பத்திரிக்கைகள் தங்கள் முன்னோட்டத்தை வெளியிட்டிருந்தனர்.

”பாரதி யார்?” நாடகம் எஸ்.பி.கிரியேஷன்ஸ் தயாரிப்பில் காலஞ்சென்ற திரைத்துறை ஜாம்பவான் திரு வீணை பாலசந்தர் அவர்களின் மகன் எஸ்.பி.எஸ். ராமன் அவர்களின் இயக்கத்தில், இசைக்கவி ரமணன் அவர்களின் வசனங்களுடன் உருவாக்கப்பட்டு டிசம்பர் 9 ஆம் தேதி மாலை 6 மணிக்கு, சென்னை தி.நகர் ‘பாரத் கலாச்சார்’ அரங்கில் அரேங்கேற்றப்படுவதாக அறிவித்திருந்தனர். இதில் இசைக்கவி ரமணன் அவர்கள் பாரதியாராக நடிக்கவிருப்பதான அறிவிப்பு பாரதி ரசிகர்களுக்கும், நமக்கும் ஆவலையும் ஆர்வத்தையும் அதிகரித்தது.

டிசம்பர் 9ஆம் தேதி மாலை 5 மணியிலிருந்தே பார்வையாளர்கள் வரத்தொடங்க அப்போதே நம்முள் இந்த அரங்கம் எப்படித் தாங்கும் என்ற எண்ணம் மேலோங்கியது. 5:30மணிக்கெல்லாம் அரங்கம் நிரம்பி வழிந்தது. அப்போதே பல ரசிகர்கள் உட்கார இடம் இல்லையென்றாலும் எங்காவது நின்று பார்க்கவாது இடம் கிடைக்குமா என்று தேட ஆரம்பித்து விட்டார்கள்.

சரியாக 6 மணிக்கு நிகழ்ச்சியை பாரதியார் வழிதோன்றிய அவர் பேரன் ராஜ்குமார் பாரதி, மக்களவை உறுப்பினர் திரு இல. கணேசன், முன்னாள் காவல்துறைத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.நட்ராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். வானவில் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் திரு. கே. ரவி அவர்கள் இவர்களை வரவேற்றுப் பேசினார். ராஜ்குமார் பாரதியின் இறைவணக்கப் பாடலோடு நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நாடகத்தை தயாரித்த எஸ்.பி.எஸ். ராமன் அவர்கள் இது 2 மணி நேர நாடகம் அனைவரும் பொறுமையோடு பார்த்து ரசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவரின் இந்த வேண்டுகோளுக்குப் பின் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நாடகம் தொடங்கியது.

நாடகத்தை பாரதியின் இறுதிச் சடங்கலிருந்து ஆரம்பித்து அவன் வாழ்க்கையைப் பின்னோக்கிச் சொல்வதாக அமைத்திருந்தனர்.

“அவன் எட்டையபுரத்து சுப்பையாவாகப் பிறந்தான்…
சுப்பிரமணிய பாரதியாக வளர்ந்தான்…
மஹாகவியாக மலர்ந்தான்…
இதோ..மஹாசக்தியுடன் கலந்துவிட்டான்.
முப்பத்தொன்பது வயதுக்குள்ளே
முன்னூறு பேர்கள் வாழ்க்கை வாழ்ந்தான்..
மூச்சுக்கு மூச்சாக தேசத்தை நேசித்தான்
முக்தியைத் தாண்டிய முழுநிலை அடைந்தான்”

என்ற வரிகளுடன் தொடங்கியது.

பாரதியின் 10ஆம் வயதிலிருந்து அவர் வாழ்கையில் நடந்த முக்கியமான சம்பவங்களைத் தொகுத்து அளித்திருந்தனர். காசியில் இருந்து அவர் எட்டையபுரம் வந்து வாழ்ந்த வாழ்க்கை, சுதேசமித்ரன் பத்திரிக்கையில் பணியாற்றியது, சென்னை வாழ்க்கை, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முழு மூச்சாய் அவர் இறங்கியது, குவளை கிருஷ்ணமாச்சார் உதவியுடன் புதுச்சேரியில் வாழ்ந்தது, மண்டையம் சீனிவாச்சார் அவர்களுடனான நெருங்கிய நட்பு, புதுச்சேரியில் அவர் வாழ்ந்த வாழ்க்கை, வ.உ.சிதம்பரம்பிள்ளை மற்றும் சுப்ரமணியம் சிவா ஆகியோருடனான நட்பு, அவர்கள் ஜெயிலில் இருந்த போது அவர்களை அங்கு சென்றுச் சந்தித்தது, அவருடைய வறுமைமிகு வாழ்க்கை, நிவேதிதா அம்மையாரை சந்தித்துப் பெண்கள் முன்னேற்றத்திற்கு உழைக்க வேண்டும் என்கிற பாடம் பெற்றது, அவருடைய பாடல்களால் மக்களிடையே ஏற்பட்ட எழுச்சி, பாரதியார் வாழ்வில் யதுகிரியின் முக்கியத்துவம், செல்லம்மா உடனான அன்பான காதல் வாழ்க்கை, கடையத்தில் வாழ்ந்த வாழ்க்கை` என்று அவரது இறுதிக் காலம் வரை உள்ள அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் தொகுத்து நமக்கு அளித்திருந்தனர்.

மிகவும் விசேஷமான அம்சம் என்னவென்றால், செல்லம்மா பாரதி, வ.உ.சி, யதுகிரி அம்மாள், தங்கம்மாள், இரா.கனகலிங்கம், வ.ரா, சீனி விசுவநாதன், ரா.அ.பத்மநாபன், கவிமாமணி இலந்தை ராமசாமி போன்றோர் பதிவு செய்திருந்த அதிகாரப்பூர்வமான தகவல்களைக் கொண்டு இந்நாடகத்தின் கதையை அமைத்திருந்தார் இசைக்கவி ரமணன். அந்தப் பதிவுகளின் வரிகள் சில அப்படியே வசனத்தில் இடம் பெற்றிருந்தன என்பது கூடுதல் விசேஷம்.

இவைகளோடு பாரதி எழுதிய பிரபலமான பாடல்களான என்று தணியும் இந்த சுதந்திர தாகம், கும்மியடி பெண்ணே கும்மியடி, மனதில் உறுதி வேண்டும், ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஓடி விளையாடு பாப்பா, செந்தமிழ் நாடு எனும் போதினிலே, அச்சமில்லை அச்சமில்லை, பகைவனுக்கு அருள்வாய் நெஞ்சே, காக்கைச் சிறகினிலே போன்ற சில பாடல்களையும், அந்தப் பாடல்கள் உருவானதற்குப் பின்னால் இருந்த சம்பவங்களையும் காட்டி, அந்தப் பாடல்களை நடனத்தோடு அரங்கேற்றினார்கள். ஒவ்வொரு சம்பவமும் நடந்த இடம் வருடம் ஆகியவற்றை குறிப்பிட்டுப் பின்ணனியில் திரைகாட்சியாக அமைத்திருந்தார்கள். அந்த சம்பங்கள் நடந்த இடங்களையும் பின்ணனியில் திரைக்காட்சிகளாக அமைத்திருந்தது நம்மை அந்த இடங்களுக்கே அழைத்துச் சென்றது போல் இருந்தது. ஒரு மேடை நாடகம் என்ற உணர்வே இல்லாமல் இருந்தது திரைகாட்சி அமைப்பு.

நடன அமைப்பை கலைமாமணி ஷோபனா ரமேஷ் மற்றும் திருமதி. லலிதா கணபதி ஆகியோர் செய்திருந்தனர். அவர்களின் குழுவினர் ஆடிய அருமையான நடனங்கள் நாடகத்திற்கு மேலும் மெருகூட்டின. இயக்குனர் எஸ்.பி.எஸ்.ராமன் அவர்களின் மகனும் வீணை இசைக்கலைஞருமான பரத்வாஜ் ராமனின் இசை நாடகத்துக்குக் கூடுதல் பலத்தைக் கொடுத்தது, அருமையான மனதுக்கு இதமான இசை.

பிரபல கர்நாடக இசைப்பாடகரான விஜய் சிவா நடிகராக புது அவதாரம் எடுத்து குவளை கிருஷ்ணமாச்சாரியார் என்கிற பாத்திரத்தில் அற்புதமாக நவசரங்களையும் காட்டி ரசிகர்களுக்கு ஆனந்தம் கலந்த இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இனி குவளை கிருஷ்ணமாச்சாரியார் என்றால் நம் நினைவிற்கு வரப்போவது விஜய் சிவாதான் என்பதில் சந்தேகமே இல்லை. பாரதியின் தாசனாக, வெகுளியாக நடித்துக் கலக்கிவிட்டார். ”நீங்கள் பாரதி என்பதை என்னிடம் மூன்று நாட்கள் மறைத்துவிட்டீர்களே” என்று அவர் பாரதியிடம் சொல்வது இன்னும் நம் மனதில் பதியும் இனிய நினைவாக இருக்கிறது. அரங்கில் பலர் இவர், ”விஜய் சிவா வா?” என்று அருகில் இருப்பவர்களிடம் கேட்டு ஆச்சரியமடைந்தனர்.

செல்லம்மாவாக இயக்குனர் எஸ்.பி.எஸ். ராமனின் மனைவியான தர்மா ராமன் நடித்திருந்தார். நான் ஏற்கனவே ”அந்த நாள்“ மேடை நாடகத்திலேயே அவர் நடிப்புத் திறமையைப் பார்த்திருந்தாலும் இங்கு செல்லம்மாவாகே மாறி இருந்தார் என்றே சொல்லவேண்டும். செல்லம்மா பாத்திரத்தையும் மிக நேர்த்தியாக அமைத்திருந்தனர். பாரதியின் வாழ்க்கையில் செல்லம்மாவிற்கு இருந்த முக்கிய பங்கைச் சரிவர எடுத்துக் காண்பித்திருந்தனர், பாரதியின் மீது அளவு கடந்த காதலையும் அதே நேரத்தில் அன்றாட தேவைகளுக்கே திண்டாடும் வறுமையும், வாழ்க்கைப் போராட்டமும் கொடுத்த சலிப்பையும் செல்லம்மாவாக நடித்த தர்மா ராமன் அருமையாக வெளிப்படுத்தி இருந்தார். தன் கணவனின் பெயரும் புகழும் பெருகி வருவதை கண்டு ஆனந்தமடைந்தாலும், ஆங்கிலேயரின் கெடுபிடி, வறுமை இதனால் மனம் நொந்த செல்லம்மா, தன் அண்ணாவிடம், ”எல்லோருக்கும் வாய்த்தது போல் எனக்கும் சாதாரணக் கணவன் அமைந்திருக்க கூடாதா என்றிருக்கிறது அண்ணா” என்கிற வசனம் மனதை தொடுகிறது. இந்தக் காட்சியில் தர்மா ராமன் அசத்துகிறார்.

பாரதியின் வாழ்வில் யதுகிரியின் முக்கியத்துவத்தையும் அருமையாக எடுத்துச் சொல்லி இருந்தார்கள். யதுகிரியாக நடித்த கிருத்திகா சுரஜித் பாஞ்சாலி சபதம் காட்சியில் பாஞ்சாலியாகவே மாறி நம் மனதில் இடம் பிடிக்கிறார்.

செல்லம்மாவின் அண்ணன் அப்பாதுரையாக ’கிரி’ ரங்கநாதன், மண்டையம் சீனிவாச்சாராகவும் சுப்பிரமணியம் சிவாவாகவும் பத்திரிகையாளர் பி.ஆர்.ஹரன், பாரதிதாசனாக வளர்ந்து வரும் இளம் கவிஞர் விவேக்பாரதி ஆகியோர்களும் மற்றும் நாடகத்தில் பங்குபெற்ற அனைத்து கலைஞர்களும் தங்கள் நடிப்புத்திறனை அருமையாக வெளிப்படுத்தி இருந்தார்கள். இசைப்பாடகர் விஜய்சிவா, பி.ஆர்.ஹரன், விவேக்பாரதி, கிரி ரங்கநாதன் போன்றோர்கள் முதல்முறையாக மேடை ஏறி நடிக்கிறார்கள் என்று யாராவது சொன்னால் நிச்சயம் யாரும் நம்பப் போவதில்லை. அவ்வளவு நேர்த்தியாக நாடக முன்னனுபவம் கொண்டவர்கள் போலச் சிறப்பாகச் செய்திருந்தனர்.

இசைக்கவி ரமணன் அவர்கள், பாரதியாராக இந்த நாடகம் முழுவதும் நடித்திருந்தார் என்பதை விட வாழ்ந்திருந்தார் என்பதே பொருந்தும். அவரின் தோற்றத்தில் காட்டிய கம்பீரம், கண்களின் தீட்சண்யம், அவரது குரல் என்று உச்சத்தை தொட்டிருக்கிறார்.

இதில் குறிப்பாக, அவரது குரலில் ஒலித்த

”திக்குகள் எட்டும் சிதறி ‍ தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட‌”

என்ற பாடலில் அவர் நடிப்பிலும் பாடலிலும் நம்மை கட்டிப்போட்டார். இந்தப் பாடல் முடிந்தவுடன் பார்வையாளர்களின் கைதட்டலில் அரங்கமே அதிர்ந்தது. அதே போல், ‘யோக சித்தி’ என்கிற கடைசிக் காட்சியில் மடை திறந்த வெள்ளம் போல் வசனங்களை குரல்வளத்துடனும், முகபாவங்களுடனும் பேசி அவர் நடித்தது பார்வையாளர்களைப் பிரமிக்க வைத்தது. அனைவரும் கண்களில் நீர் மல்கக் கட்டுண்டு கிடந்தனர்.

முடிவாக, அந்த மஹாகவியின் மரணக்காட்சியில்,

“அவனுக்காகக் கொஞ்சம் அழக்கூடாதா …
புதை மணலில் சில விதைகள் தூவப் புறப்பட்டானே..
போகும் வழியிலெல்லாம் நெஞ்சு மிதிபட்டானே…
அதையும் மீறிச்சென்றே கனவுப் பயிர் வைத்தானே…
அதற்குத் தன்னை ஆகுதியாக்கி உயிர்விட்டானே…
அவனுக்காகக் கொஞ்சம் அழக்கூடாதா..”

என்ற வசனத்துடன் நெஞ்சம் கனக்க நம் கண்களைக் குளமாக்கி நாடகம் முடிவடைகிறது. ஆனால், அனைவரும் அதில் கட்டுண்டு அங்கிருந்து செல்ல மனமில்லாமல் நின்றிருந்தனர். இன்னும் ஒவ்வொரு வசனமும் காட்சிகளும் காதில் ஒலித்து கொண்டே இருக்கிறது.

நாடகத்தை முழுவதுமாகப் பார்த்த மக்களவை உறுப்பினர் திரு.இல கணேசன் அவர்கள், “இந்த நாடகத்தில் நடிப்பிற்காக யாருக்காவது முதல் பரிசு தரவேண்டும் என்றால் அது செல்லம்மாவாக நடித்த தர்மா ராமனுக்கு தான் தரவேண்டும்; இரண்டாவதாக குவளை கிருஷ்ணமாச்சார்யாராகவே மாறி விட்ட இசைப்பாடகர் விஜய் சிவாவுக்குத்தான்” என்றார்.

அனைவரும் இசைக்கவி ரமணனை விட்டுவிட்டாரே என்று எண்ணிக்கொண்டு இருக்கும் போதே, “பாரதி தான் இசைக்கவி ரமணனாக அவதரித்து இருக்கிறார். அவரை இனி ‘பாரதி ரமணன்’ என்று அழைப்பதே சாலப் பொருந்தும்” என்று பாராட்டிப் பேசினார். ஆம். உண்மை தான்! இசைக்கவி ரமணன் அவர்கள் நம்மை பாரதியை தரிசிக்க செய்து விட்டார். மேலும், இந்நாடகம் வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யபடவேண்டும் என்றும் நாடகத்தை போபாலிலும், டெல்லியிலும் அரங்கேற்றம் நடைபெறுவதற்கு உதவுவதாகவும் உறுதியளித்தார்.

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி அவர்கள் பேசுகையில் பாரதி எண்ணம் தமிழகம் முழுவதும் பரவ வேண்டும் என்றார்.

நாடகக் கலைஞர் ஒய்.ஜி மகேந்திரன் அவர்கள் பாராட்டிப் பேசும் போது ஒவ்வொருவரும் அந்தந்த பாத்திரங்களாவே மாறி நடித்தனர் என்றார். இந்நாடகத்தினை முதல் முறையாக அரங்கேற்றம் செய்யத் தன்னுடைய பாரத் கலாச்சார் அரங்கு கொடுத்து வைத்துள்ளது என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.

நல்ல கூட்டம் நிற்க கூட இடம் இல்லாத நிலையிலும் இரண்டு மணிநேரம் நின்று பொறுமையாக நாடகத்தைப் பார்த்துவிட்டு பிறகும் செல்ல மனமில்லாமலேயே கலைந்து சென்றனர் கூட்டத்தினர்.

இந்த நாடகத்தில் அருமையாக நடித்த கலைஞர்களுக்கும், நாட்டியம் ஆடிய நடனக் கலைஞர்களுக்கும், இசை அமைத்த பரத்வாஜ் ராமனுக்கும், இதைச் செம்மையாக இயக்கி நம் மனதை கொள்ளை கொள்ளச் செய்த எஸ்.பி.எஸ்.ராமன் அவர்களுக்கும், மஹாகவியின் வாழ்க்கைச் சரிதத்தை அற்புதமாகக் கதை வசனத்துடன் தந்த இசைக்கவி ரமணன் அவர்களுக்கும் தமிழ்கூறும் நல்லுலகு பெரும் நன்றிக்கடன்பட்டிருக்கிறது!

நாடகம் உலகெங்கும் செல்ல வாழ்த்துகிறேன்! பிரார்த்திக்கிறேன்!

Series Navigationமொழிவது சுகம் டிசம்பர் 16 2017 டாக்டர் ஜேகில் (Dr.Jekyill) முதல் தஷ்வந்த் வரை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *