மீனாட்சி சுந்தரமூர்த்தி
1. நூல் அறிமுகம்:
வளையாபதி ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று.சமண இலக்கியமாகக் கருதப்படுகிறது.இந்நூலின் ஆசிரியர் யாரெனத் தெரியவில்லை.காலமும் அறியக்கூடவில்லை.
பெயர்க் காரணமும் புரியவில்லை.நூல் முழுமையும் கிடைத்திருந்தால் இக்கேள்விகள் எழ வாய்ப்பில்லை.
இந்நூலின் எழுபத்தியிரண்டு பாடல்களே நமக்குக் கிடைத்துள்ளன.அறுபத்தாறு பாடல்கள் பதினான்காம் நூற்றாண்டில்
தோன்றிய புறத்திரட்டிலிருந்தும், மூன்று பாடல்கள் சிலப்பதிகாரத்திற்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையில் மேற்கோளாகவும் ,இரண்டு பாடல்கள் பெயர் அறியப்படாத அறிஞர் ஒருவரின் யாப்பருங்கல விருத்தியுரையில் (நூற்பா-37) மேற்கோளாகவும்,எஞ்சிய ஒரு பாடல் இளம்பூரணரின் தொல்காப்பியஉரையில்(செய்யுளியல்-98) மேற்கோளாகவும் நச்சினார்க்கினியரின் தொல்காப்பிய உரையில் வளைபதிச் செய்யுள் என (செய்யுளியல்-348) மேற்கோளாகவும் கிடைத்துள்ளன.
2.கதைச்சுருக்கம்:
காவிரிப் பூம்பட்டினத்து வணிகன் ஒருவன்
பெயர் நவகோடி நாராயணன் என்பது, இவனின் கதையையே இந்நூல் பேசுகிறது. இவன் முதலில் தன் குலத்து மங்கை ஒருத்தியை மணம் செய்கிறான்.ஆண்டுகள் பல சென்றும் இவனுக்குக் குழந்தைப்பேறு கிட்டவில்லை.அதன்பின் இவன் வேறு குலத்தைச் சேர்ந்தப் பெண்ணொருத்தியை விரும்பி மணம் செய்து கொள்கிறான்.இவன் குலவழக்கம் மாறினான் என்று வணிகர்கள்இவனை . ஒதுக்கி வைத்து விடுவோம் என்று எச்சரித்ததால் இவன் அந்தப் பெண்ணைக் கைவிடுகிறான்.அதன்பின் நாராயணன் கடற்பயணம் மேற்கொண்டு வாணிகம் செய்து பெரும்பொருள் ஈட்டி மீள்கிறான்.தன் முதல் மனைவியோடு இனிது வாழ்கிறான்.
இவனின் இரண்டாம் மனைவி இவனைப் பிரியும் வேளையில் கருவுற்றிருந்தாள்.அழகிய மகனை ஈன்றெடுக்கிறாள்,நல்ல முறையில் வளர்த்து வருகிறாள்.சிறுவனான அவன் விளையாடும்போது மற்ற
சிறுவர்கள் இவனைத் தந்தை பெயர் தெரியாதவன் என எள்ளி நகையாடுகின்றனர்.அவன் தன் அன்னையிடம்
முறையிடுகிறான்.அவளிடம் தந்தை யாரென அறிகிறான்.அவன் தன் தந்தையைத் தேடிச் சென்று வினவுகிறான்.தன்னையும் தனது தாயையும் ஏற்றுக் கொள்ள வேண்டுகிறான்.வணிகன் .ஏற்க மறுத்து விடுகிறான்.
இவனுடைய அன்னை காளிக்கு வழிபாடு செய்து வேண்டி
வணிகர் குலத்தினருக்கு தன் கற்பின் திறத்தை மெய்ப்பிக்கிறாள்.அவர்களின் அனுமதி கிடைக்கிறது, நவகோடி நாராயணன் இவர்களை ஏற்கிறான்.தன் மகனுக்கு,வீரவாணிபன்`என்று பெயரிடுகிறான். அனைவரும் இனிது வாழ்கின்றனர்.
சமண சமய நூலில் காளி வழிபாடு மதநல்லிணக்கம் காட்டும் சிலம்பை நினைவூட்டும். இனி இந்நூலின் நயங்கள் காண்போம்.
.3.இலக்கிய நயம்:
செந்நெற் கரும்பினொ டிகலுந் தீஞ்சுவைக்
கன்னலங் கரும்புதான் கமுகைக் காய்ந்தெழும்
இன்னவை காண்கில னென்று பூகமு
முன்னிய முகில்களான் முகம் புதைக்குமே.(70)
இப்பாடலில் நாட்டின் வளமை சொல்லப்படுகிறது.
கழனிகளில் செந்நெல்லானது (நெல் வகைகளில் உயர்ந்தது.) அருகிலுள்ள தோட்டத்துக் கரும்புகளோடு போட்டி போடுவது போல் உயர்ந்து வளர்ந்திருக்க,அக்கரும்புகளோ அயலில் உள்ள கமுகுகளோடு(பாக்கு மரங்கள்)முரண்பட்டு ,உயர்ந்து வளரும். இதன் செருக்கு காணப் பெறாது கமுகோ(பூகம்)
அங்கு குழுமிய கார்மேகங்களில் முகம் புதைத்துக் கொள்ளும்.
அதாவது நீர்வளம், நிலவளம் மிகுந்ததால் நெல் கரும்பின்
உயரமும்,கரும்பு பாக்கு மரத்தின் உயரமும்,பாக்கு வானின் மேகம் தொடும் உயரமும் வளர்ந்தன என்பதே
சொல்லும் செய்தியாம்.
இது கம்பர் தம் நூலில்,
நீரிடை உறங்கும் சங்கம், நிழலிடை உறங்கும் மேதி
தாரிடை உறங்கும் வண்டு, தாமரை உறங்கும் செய்யாள்
தூரிடை உறங்கும் ஆமை, துறையிடை உறங்கும் இப்பி
போரிடை உறங்கும் அன்னம்பொழிலிடைஉறங்கும்தோகை
(கம்பராமாயணம்-நாட்டுப்படலம்-37)
(இதன் பொருளாவது,நீர்நீலைகளில் சங்குகளும், மரங்களின் நிழல்களில் வயிறாரப் புல் மேய்ந்த எருமைகளும்,மலர் மாலைகளில் வண்டுகளும்,தாமரை மலர்களில் திருமகளும்,சேறு நிறைந்த இடங்களில் ஆமைகளும்,நீர்த்துறைகளில் முத்துச்சிப்பிகளும்,
நெற்கதிர் அறுத்துக் குவித்தப் போர்களில் அன்னங்களும்,
மலர்ச்சோலைகளில் மயில்களும் உறங்கிக் கொண்டிருந்தன.(அச்சமின்றி இவை உறங்கின என்பதன்
பொருள் செல்வம் எப்போதும் எங்கும் செல்லாது நிலை பெற்றிருந்தது என்பதாம்.)
என்று கோசல நாட்டின் வளம் சொல்லும் பாடலை நினைவூட்டும்.
இக்காப்பியங்களைப் போன்றே பின்னால் எழுந்த சிற்றிலக்கியங்களிலும் நாட்டு வளம் பேசப்பட்டது.
பெயர் அறியப்படாத கவிஞர் ஒருவரின் பள்ளர்களின் வாழ்வியல் பேசும் நூலின் இளைய பள்ளி தன் நாட்டு வளம் கூறும்,
பங்கயந் தலைநீட்டிக் குரம்பினில்
பச்சை இஞ்சியின் பார்சடை தீண்டும்.
தங்கும் இஞ்சியும் மஞ்சட் கழுத்தைத்
தடவி மெள்ளத் தொடும் அந்த மஞ்சள்
அங்க சைந்திடும் காய்கதிர்ச் செந்நெல்
அளாவி நிற்குமச் செந்நெல்லும் அப்பால்
செங்க ரும்புக்குக் கைதரும் போல்வளர்
சீவல மங்கைத் தென்கரை நாடே.(முக்கூடற் பள்ளு-26)
(இப்பாடலின் பொருளாவது,
தடாகங்களில் மலர்ந்துள்ள தாமரைப் பூக்கள் பக்கத்து வரப்பினில்(குரம்பை) உள்ள பருத்தசடை உடைய
இஞ்சியின் இலைகளைத் தொடும்.இஞ்சிச் செடியோ அருகில் உயர்ந்து வளர்ந்துள்ள மஞ்சளின் இலைகளைத் தொட முயன்று கழுத்தைத் (உச்சிக்குக் கீழே தண்டுப் பகுதி.)தொடும்.
அந்த மஞ்சள் செடியோ அயலில் உள்ள செந்நெற் கதிரின்
உயரம் தொட அதனோடு அளவளாவி நிற்கும். செந்நெல்லோ தூரத்தில் ஓங்கி வளர்ந்துள்ள கரும்புக்குக்
கை தருவது போல் உயர்ந்து வளர்ந்தசையும் மருத நிலங்கள் கொண்ட வளமான சீவலமங்கைத் தென்கரை
நாடு என்பதாம்)
எனும் பாடல் ஒன்றின் நயம் இங்கு எண்ணத்தக்கது.
இவ்வாறு இயற்கையில் மனம் தோய்ந்து நயம் மிகு பாடல்களை
இலக்கிய உலகிற்குத் தந்துள்ள வளையாபதியின் ஆசிரியரை வியவாமல் இருத்தல் அரிது.
- பாரதி யார்? – நாடக விமர்சனம்
- மொழிவது சுகம் டிசம்பர் 16 2017 டாக்டர் ஜேகில் (Dr.Jekyill) முதல் தஷ்வந்த் வரை
- தொடுவானம் 200. நாடக அரங்கேற்றம்
- அழுத்தியது யார்?
- ஒரு தமிழ்ச்சிறுகதை; ஒரு வாசிப்புணர்வு..
- ஜெயகாந்தன் மறுவாசிப்பு மெல்பனில் நடந்த வாசகர் வட்டத்தின் சந்திப்பில் படைப்பும் படைப்பாளியும் – காலமும் கருத்தும்
- வளையாபதியில் இலக்கிய நயம்.
- கடைசி கடுதாசி
- ஊழ்
- என்னோடு வாழ வந்த வனிதை மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
- எதிர்பாராதது
- பார்த்தேன் சிரித்தேன்
- கம்பராமாயண போட்டிகள்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூமியின் மர்மமான முணுமுணுப்பு ஓசை நாதம் முதன்முதல் கடலடியில் பதிவானது
- சூழ்நிலை கைதிகள்
- வலி
- இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகமும், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து நடத்தும் “இரா. உதயணன் இலக்கிய விருது” அயலகப்பிரிவில் இருவருக்கு அளிக்கப்படுகிறது.
- தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளுடன் வெளிவரவுள்ள ‘ஓவியம் 1000’ ஓவியப் பெருநூல்.
- நெய்தல்-ஞாழற் பத்து
- ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதை