எஸ்.எல்.இ. நோய்

This entry is part 8 of 10 in the series 24 டிசம்பர் 2017

டாக்டர் ஜி. ஜான்சன்

எஸ் .எல். இ . என்பது ” சிஸ்டமிக் லூப்பஸ் எரித்திமேட்டோசிஸ் ” ( Systemic Lupus Erythematosis ) என்பதின் சுருக்கம் இதை பல உறுப்புகளின் அழற்சி எனலாம். இதில் செல்களின் நூக்கிளியஸ் என்பதற்கு எதிராக எதிர்ப்பு சக்தி அல்லது ” எண்டிபாடி ” என்பது இரத்தத்தில் உருவாகும்.
இது ஒரு வினோதமான நோய்தான். இது பெரும்பாலும் 20 முதல் 40 வ்யதுவரையுடைய பெண்களை அதிகம் தாக்குகிறது. உல கில் சுமார் 0.1 சதவிகிதத்தினர் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

நோய் உருவாகும் விதம்
இந்த நோய் எதனால் உண்டாகிறது என்பது சரிவரத் தெரியவில்லை. அனால் இது பல்வேறு காரணங்களில் உண்டாகலாம் என்றும் கருதப்படுகிறது. அவை வருமாறு:

* பரம்பரை- இது பரம்பரையில் வரக்கூடிய நோய்.
* மரபணு – மரபணுக்களில் சில மாற்றங்கள் காரணமாகவும் இந்த நோய் உண்டாகலாம்.
* பாலியல் ஹார்மோன் குறைபாடு – குறிப்பாக ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைபாடினாலும் இது உண்டாகிறது.
* மருந்துகள் – சில மருந்துகளும் இதை உண்டாக்கலாம். அந்த மருந்துகளை நிறுத்தினால் நோய் குறைந்துவிடும்.
* அல்ட்ராவயலட் கதிர்கள் தோலில் இந்த நோயை ஏற்படுத்தலாம்.
* வைரஸ் கிருமிகள் – எப்ஸ்டின் – பார் என்ற வைரஸ் கிருமியின் தாக்குதலால் இது உண்டாகலாம்.

அறிகுறிகள்

பல்வேறு உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதால் அறிகுறிகளும் அதற்கேற்ப தோன்றும். அவை வருமாறு:

* பொதுவான அறிகுறிகள் – களைப்பு, காய்ச்சல் , மனச் சோர்வு, எடை குறைதல்.
* தசை- எலும்பு மூட்டுகள் – சிறு எலும்பு மூட்டுகளில் வலி, தசை வலி, இடுப்பு – முழங்கால் எலும்புகள் பாதிப்பு.
* தோல் – கன்னங்களில் ( மூக்கு உட்பட ) வண்ணத்துப்பூச்சி போன்ற சிவந்த நிற மாற்றம், அரிப்பு, தலை முடி உதிர்தல். சூரிய ஒளியைத் தாங்க முடியாத உணர்வு.
* இரத்தம் – இரத்த சோகை, வெள்ளை இரத்த செல்கள் குறைவுபடுதல்.
* நுரையீரல் – நீர் தேக்கம், சுவாசிப்பதில் தடை.
* இருதயம் – இருதய தசையில் அழற்சி, நீர் தேக்கம், வால்வுகள் பாதிப்பு, இரத்தக் குழாய்களில் அடைப்பு,இரத்தக் குழாய்களின் சுவர்கள் தடிப்பு.
* சிறுநீரகம் – அழற்சியும் செயலிழப்பும்.
* நரம்பு மண்டலம் – வலிப்பு நோய், ஒற்றைத் தலை வலி, தலை சுற்று, தலை நரம்புகள் பாதிப்பு, மூலையில் அழற்சி.

பரிசோதனைகள்

* இரத்தப் பரிசோதனைகள் – இதில் இரத்த செல்களில் பல்வேறு மாற்றங்களும், இரத்த சோகையும் தெரியவரும்.
* இரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின் அளவுகள், சிறுநீரகப் பாதிப்பில் உயர்ந்து காணப்படும்.
* சுய எதிர்ப்பு எண்டிபாடிகள் இரத்தத்தில் காணப்படும்.
* தோல் மற்றும் சிறுநீரக பையாப்சி பரிசோதனையில் மாற்றங்கள் தென்படும்.

சிகிச்சை முறைகள்

அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிச்சை தரப்படும். பொதுவாக சூரிய ஒளியைத் தவிர்ப்பதும், இருதயத்தைப் பாதிக்கக்கூடிய புகைத்தலையும் தவிர்ப்பது நல்லது.
* வலி குறைக்கும் மருந்துகள்.
* ஸ்டீராய்ட் மருந்துகள்.
* குளோரோகுயின் மாத்திரைகள்
* சுய எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் மருந்துகள்.
இந்த வினோதமான நோய் திடீர் என்று தோன்றுவதும் குறைவதுமாக இருக்கும் தன்மை கொண்டது. அறிகுறிகளை கட்டுப்படுத்தும் மருந்துகளை உட்கொண்டு பயன் அடையலாம்.

( முடிந்தது )

Series Navigationதொடுவானம் 201. நல்ல செய்திஉன்னை ஊடுருவி நோக்குகிறேன்! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *