வைரமுத்து எழுதிய “தமிழை ஆண்டாள் கட்டுரை தினமணி [08-01-18] இல் படித்தேன்.
நம்பிக்கையில்தான் ஒவ்வொருவரும் வாழ்வை நடத்தி வருகிறோம். அதன் அடிப்படையில் ஆண்டாள் கூறும் செய்தியாக நம்பிக்கை மீது நம்பிக்கை வைப்போம் என அவர் கட்டுரையைச் சிறப்பாகவே முடித்துள்ளார். ஆனால் இறைவனையும் இயற்கை இறந்த நிகழ்வுகளையும் கழித்துப் பார்க்க வேண்டும் என்கிறார். ஒரு நூலை அது எழுந்த காலத்தின் சூழலை வைத்துத்தான் ஆராய்ந்து பார்க்க வேண்டும் இப்போதைய கண்ணாடியை அணிந்து பார்த்தல் தகாது. நாலாயிரத் திவ்யபிரபந்த்த்தின் ஒருகூறான திருப்பாவையை இறைவனைக் கழித்து எப்படிப் பார்க்க முடியும். அஃது இறைவனைப் பற்றிப் போற்றுவது எனத் தெரிந்துதானே பேசத் துணிந்தார்.
அதுபோல ”கல்லான கடவுளே கண்ணனாகினான்” என்ற சொற்றொடரே பிழையானது. கல் என்று கடவுளைக் கருதும் போக்குடையவர் பக்தி நூல் பக்கமே வந்திருக்கக்கூடாது. அருமையான தமிழ் நூல் என்று பேச வந்தவர் கடவுள் பற்றிய கருத்தைச் சொல்லி அதை ஏற்க முடியாது எனப் புண்படுத்துகிறார். ஆண்டாள் எழுதி உள்ள தமிழ் இயற்கை வருணனைகள், அழகு தமிழ்ச்சொற்கள் நல்ல யாப்பமைதி போன்றவற்றைப் புலப்படுத்துவதோடு நிறுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
உயிரியல், வாழ்வியல், சமூகவியல் ஆகியவற்றைப் பாவை நோன்பு முன் நிறுத்துவதாக அவர் கூறுவது பாராட்டத்தக்கது. ஆனால் அக்கூற்றை நிலைநிறுத்த எந்தச் சான்றுகளையும் காட்டாதது பெருங்குறையாகும்.
”இறைவன் முன் எல்லாரும் சமம்” என்பது குறுகிய பரவசம் என்று ஓரிடத்தில் அவர் குறிப்பிடுகிறார். ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களில் பல்வேறு வர்க்க சாதிவகைப்படவர்களைப் பார்க்கமுடிகிறதே! இறைப்பற்று என்னும் ஒரே நேர்க்கோடு அவர்களைக் கட்டிப்போட்டிருக்கிறதே. அவன் சன்னதியில் ஒன்றாகச் சமமாகத்தானே எல்லாரும் நிற்கிறார்கள். இக்காலத்தில் வேண்டுமானால் இன்னும் சேரிக்குள் தேர் வராமல் இருக்கலாம். ஆனால் திருப்பாணாழ்வாரைத் தன் அர்ச்சாவதாரத்திலேயே ஏற்றுக்கொண்டானே கடவுள். அதைக் கண்டு அந்தணரான உலோமசாரங்க முனிவர் பரவசம் அடைந்தாரே; அது குறுகிய பரவசமா?
கடவுள், தெய்வம் என்னும் இரு சொற்களுக்கும் பொருள் சொல்வதிலும் குழப்புகிறார். இரண்டுமே ஒரு பொருள் குறித்த சொற்கள்தாம்.க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி தெய்வம் என்பதற்குக்”கடவுள், இறைவன்” என்றுதான் பொறுள் கூறுகிறது [பக்:576].
”நம்மாழ்வாருடைய உணர்ச்சியின் பிரவாகம் யாப்புக்குள் தடுக்கி விழுகிறது” என்கிறார். இதை விட நம்மாழ்வாருக்கு இழுக்கு தரும் சொற்கள் இருக்க முடியாது. நம்மாழ்வார் தடுக்கிவிழும் எந்த இடம் என்று கூறி இருக்கலாமே? நம்மாழ்வாரையும் அவர் முழுதும் வாசிக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. திருவாய்மொழியில் முதல் பாசுரத்தில் உள்ள ”துயரறு சுடரடி” என்பதில் உள்ள ஆழ்ந்த உணர்ச்சியை அனுபவிக்க அதனுடன் ஒன்றினால்தான் முடியும். திருவாய்மொழி முழுதுமே அந்தாதியாக எழுதி உள்ள மாமேதை அவர். வைரமுத்து இந்த இடத்தில், “திடீரென்று வைணவத்துக்கு மாறியவர் திருநீறு குழைத்துத் திருமண் இட்டுக்கொண்டதுபோல் என ஓர் உதாரணம் வேறு சொல்கிறார். அவருக்கு பக்தி நூல் பற்றி எழுதும்போது வேறு உதாரணமே கிடைக்கவில்லையா? இதன் மூலம் அவர் சைவம் வைணவம் இரண்டையுமே அவமதிக்கிறார்.
மேலும் ”ஆழ்வார் பாசுரமோ பெரும்பாலும் ஆற்றுப்படுத்துவது; ஆண்டாளுடையதோ ஐக்கியப்படுத்துவது” என்கிறார். ஆழ்வார் மற்றும் ஆண்டாள் பாசுரங்களுக்கு அவர் சொல்வதுபோல் வேற்றுமைகள் இல்லை. ஆற்றுப்படுத்தல் அதாவது வழிகாட்டுதல் மற்றும் ஐக்கியப்படுத்தல் அதாவது இறைவனிடம் சேர்தல் என்பவற்றை எல்லாப் பாசுரங்களிலும் காணலாம். ஆண்டாள் திருப்பாவை திருமாலிடம் ஐக்கியப்படுவதற்காகவே ஒவ்வொரு பெண்பிளையாக எழுப்பி ஆற்றுப்படுத்துவதேயாகும்.
”உரைகாரர்கள் இதற்கு வேறுபொருள் கூட்டித் தம் தீராப்புலமையின் திமிர் காட்டுவார்கள்” என் வைரமுத்து எழுதுவது பண்டைய நம் உரையாசிரியர்கள் அனைவரையுமே அவமானப்படுத்துவதாகும். சேனாவரையர், இளம்பூரணர், மணக்குடவர், காளிந்தியார் போன்ற உரையாசிரியர்களால்தாம் தமிழின் இலக்கண இலக்கிய வளங்கள் வெளித்தெரிந்தன் என்றால் அது மிகையாகாது. மேலும் வைணவத்தின் சிறப்பே அதற்கு வியாக்கியானம் எழுதிய உரையாசிரியர்கள்தாம். பெரியவாச்சான் பிள்ளை அவர்களை வியாக்கியான சக்கரவர்த்தி என்று தமிழ் கூறும் நல்லுலகம் புகழும். அவர் தொடங்கி அண்மையில் மறைந்த தி. வே. கோபாலையர் வரை வைணவம் மிக நீண்ட உரையாசிரியர்களைக் கொண்ட பாரம்பரியம் உடையது. ஈராயிரப்படி, ஆறாயிரப்படி, பன்னீராயிரப்படி, போன்ற உரைகள் புகழ் பெற்றவை.
வைரமுத்து, “கருப்பூரம் நாறுமோ” பாசுரத்திற்கு அதில் இல்லாதவற்றை உரையாக எழுதுவது எந்தத் திமிர் என்று கேட்கத் தோன்றுகிறதன்றோ? தான் மட்டும் இவ்வாறு எழுதலாம். கற்றுத்துறை போகிய உரையாசிரியர்கள் வேறு பொருள் கூறினால் அது அவர்தம் திமிரா?
ஆண்டாள் நாச்சியாருக்குக் கட்டுரையின் ஆகச் சிறந்த அவமதிப்பு என நான் எண்ணுவது அமெரிக்காவின் இண்டியானா பலகலைக்கழகம் வெளியிட்ட நூலில், “Andal was herself a devadasi who lived and died in the srirangam temple” என்று எழுதியிருப்பதைக் காட்டி இருப்பதாகும். ”பக்தர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; ஆனாணாதிக்க எதிர்ப்பாளர்களும் சமய சமூக மறுப்பாளர்களும் இதை எண்ணிப்பார்ப்பார்கள்” என்கிறார். இவர்களில் தான் எந்த வகையைச் சேர்ந்தவர் என்பதை வெளிப்படையாகச் சொல்ல அவரை எது தடுத்ததோ யாம் அறியோம் பராபரமே!
ஆக மொத்தத்தில் ”தமிழை ஆண்டாள்” என்னும் கட்டு உரை ஆண்டாளின் தமிழ் நயத்தையும் முழுதாய்ச் சொல்லாமல் நாச்சியாரின் மதிப்பைக் குறைப்பதாகவே இருக்கிறது என்று துணிந்து சொல்லலாம்.
வளவ. துரையன்
கடலூர்
=====================================================================
- எனக்குரியவள் நீ !
- பி.கே. சிவகுமாரின் ”உள்ளுருகும் பனிச்சாலை” கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு
- தொண்டிப் பத்து
- ஆண்டாள், அறிவீனம் வேண்டாள்…!
- மாட்டுப்பால் மூலம் எலும்புக்கு தேவையான சுண்ணாம்பு சத்து (கால்சியம்) கிடைக்கிறதா?
- மதுவும் கல்லீரல் செயலிழப்பும்
- ஆண்டாள்
- மனித நேயம்
- ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்
- அவர்
- கதிரியக்கம் இல்லாத எதிர்கால அணுப் பிணைவு மின்சக்தி உற்பத்திக்குப் போரான் – ஹைடிரஜன் புதிய எரிக்கரு பயன்படும்
- தொடுவானம் 204. மகிழ்வான மருத்துவப் பணி
- கண்காட்சி
- கோதையும் குறிசொல்லிகளும்
- தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் – ஜனவரி மாதக்கூட்டம்