மனித நேயம்

author
1
0 minutes, 1 second Read
This entry is part 8 of 15 in the series 14 ஜனவரி 2018

 

ரசிப்பு எஸ். பழனிச்சாமி

—————————————————————————————————————————————

இரண்டு நாட்களாக ரங்கனின் வாழைப்பழ வண்டியைக் காணவில்லை. ஆபீஸ் முடிந்து வீட்டுக்குப் போகும் வழியில் தினமும் அவரிடம்தான் பழம் வாங்குவேன். அவரைப் போலவே வண்டியில் வாழைப்பழம் விற்பவர்கள் இன்னும் இரண்டு பேர் இருக்கிறார்கள். ஆனால் ரங்கனிடம்தான் எப்போதும் கூட்டம் இருக்கும். அதற்குக் காரணம் அவருடைய தாராளம்.

இருபது ரூபாய் பழத்தை பதினைந்து ரூபாய்க்கு கொடுப்பார். அப்படியும் சிலர் இன்னும் ஒரு பழம் கொடு என்று கேட்பதுண்டு. அதெல்லாம் வராதும்மா என்று சொல்லிக் கொண்டே கேட்டபடி கொடுத்து விடுவார். சிலர் முப்பது ரூபாய் பழத்துக்கு இருபது ரூபாய் கொடுத்து இவ்வளவுதான் இருக்கு என்று பறித்துக் கொண்டு(?) போவார்கள். பழம் விக்கிற விலையில எப்படி கட்டுபடியாகும் என்று புலம்புவார். அவ்வளவுதான்.

எனக்கு ஆச்சரியமாக இருக்கும். எப்படி இவருக்கு இது கட்டுபடி ஆகிறது. மற்றவர்களிடம் இதுபோலக் கேட்டால் நிச்சயம் திட்டு கிடைக்கும். ஆனால் ரங்கனோ யார் எப்படிக் கேட்டாலும் கேட்டது போல் கொடுத்து விடுவார். இதெல்லாம் நான் தினமும் அவரிடம் வாழைப்பழம் வாங்கும்போது கவனித்தவை.

நீங்கள் தி. நகர் பஸ் ஸ்டான்ட் பக்கம் வந்திருந்தால் ரங்கனை நிச்சயம் பார்த்திருக்கலாம். அங்கே பாலத்துக்கு அருகில் ரோட்டோரத்தில் அவருடைய வண்டி நிற்கும். சுமார் ஐம்பது வயது இருக்கும். கொஞ்சம் குள்ளமாக ஒல்லியாக லுங்கி சட்டை அணித்திருப்பார். அந்த வண்டியை விட ஒன்றரை அடிதான் அவர் உயரம்.

ரங்கனின் வண்டி நிற்கும் இடத்துக்குப் பின்னால் எப்போதும் பூட்டிக்கிடக்கும் ஒரு மளிகைக் கடை. அதன் வாசலில் சாயந்திரமானால் இரண்டு மூன்று பேர் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களுடன் ரங்கனும் அவ்வப்போது பேசுவதைப் பார்த்திருக்கிறேன்.

ஒரு வயதான பாட்டி அங்கு ஒரு ஓரமாக பூ விற்றுக்கொண்டு உட்கார்ந்திருப்பார். சில சமயங்களில் பாட்டிக்கு ஒரு சில பழங்களை கொடுத்து சாப்பிடச் சொல்வார் ரங்கன். நான் அங்கு சில நிமிடங்களே நிற்பேன். அந்த நேரத்துக்குள் கவனித்த விஷயங்கள் இவை மட்டுமே. அதற்கு மேல் எதுவும் தெரியாது.

இரண்டு நாட்களாக ரங்கனைக் காணோம். ரங்கன் வண்டி நிற்கும் இடத்தில் அந்த பாட்டி மட்டும் உட்கார்ந்து இருந்தார். அருகில் இருக்கும் வண்டிக்காரரிடம் அதுபற்றிக் கேட்கலாமா என்று யோசித்தேன். வேண்டாம் என்று தோன்றியது. ஆனால் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு ரங்கனைக் காணவில்லை. பாட்டி மட்டும்தான். என்ன ஆச்சு ரங்கனுக்கு?

அன்று பக்கத்து வண்டிக்காரரிடம் பழம் வாங்கும் போது கேட்டேன்.

“எங்கே, ரங்கனை கொஞ்ச நாளாக காணோம்”

“உங்களுக்குத் தெரியாதா, ரங்கன் ஒரு விபத்தில் சிக்கி விட்டார்”

“அய்யய்யோ, என்ன ஆச்சு”

“வாழைப்பழம் வாங்க கொத்தவால் சாவடிக்குப் போனபோது, லாரி மோதி விட்டது”

“அய்யோ பாவம், அவருக்கு எதுவும் அடியா”

“ஆமாம், தலையில் அடிபட்டு விட்டது, ஜி. எச். சில் சேர்த்திருக்கிறார்கள்”

“இப்போ எப்படி இருக்கிறார்”

“பரவாயில்லை. ஆனால் ஆறு மாதம் ரெஸ்ட் எடுக்க வேண்டுமாம்”

“அவருக்கு எத்தனை குழந்தைகள்”

“இரண்டு பையன்கள். கல்யாணம் ஆகி தனியே போய்விட்டார்கள். இப்போது ரங்கன் தனிக்கட்டை”

எனக்கு வருத்தமாக இருந்தது. ஆறு மாதம் ரெஸ்ட் எடுத்தால் அவரை யார் கவனித்துக் கொள்வார்கள்.

ஒரு மாத காலம் ஓடி விட்டது. ஆனால் ரங்கன் கண்ணில் படவில்லை.

அன்று சாயந்திரம் ஆபீஸ் முடிந்து போகும் போது ரங்கனையும் அவருடைய வாழைப்பழ வண்டியையும் பார்த்தேன். தலையில் கட்டுப் போட்டிருந்தார். அருகில் போய் வண்டியை நிறுத்தினேன்.

“என்ன சாமி, எவ்வளவுக்கு பழம் வேணும்”

“என்ன ரங்கன், லாரி மோதி அடிபட்ருச்சாமே”

“ப்ச்… குடிச்சுட்டு வண்டி ஓட்றானுங்கோ. என்ன செய்றது”

“ரெஸ்ட் எடுக்க வேண்டாமா, உடம்பு சரியாகறதுக்குள்ளே இப்படி வரலாமா”

“என்ன செய்றது சாமி, பொழப்பு வேணும்ல”

“இந்தா, சீக்கிரம் வித்துப்போட்டு வீட்டுக்குப் போ” அந்தப் பாட்டி ரங்கனை விரட்டினாள்.

“ஏய், கம்முனு கிட. யாவாரம் பாக்க வேணாம்” என்றார் ரங்கன்.

“மகனுங்க வந்து பார்த்தார்களா” என்றேன்.

“ம், ஒரு நாள் ரெண்டு பேரும் வந்தானுங்க. பொண்டாட்டி தாசனுங்க” என்றபடி மீதி ஐந்து ரூபாய் காசை நீட்டினார். அதை வாங்கிக் கொண்டு,

“உடம்பை பாத்துக்கோங்க ரங்கன்” என்று சொல்லி விட்டு கிளம்பினேன். ரங்கனிடம் கிடைக்கும் சில்லறைகள் சில சமயம் ஆபூர்வமானதாக இருக்கும். ஒரு முறை சிங்கப்பூர் காசும், இன்னொரு முறை அமெரிக்க டாலரும் கூட கிடைத்திருக்கிறது. வேறு எங்கும் தள்ள முடியாத காசுகளை ரங்கனிடம் தள்ளி விடுவார்கள் சிலர்.

ஒரு முறை கால்வாசி கிழிந்து முக்கால் பகுதி மட்டும் உள்ள பத்து ரூபாய் நோட்டை மடித்து யாரோ அவரிடம் கொடுத்து ஏமாற்றி விட்டார்கள். மடித்த அளவிலேயே ரங்கனும் எனக்குக் கொடுத்து விட்டார். வீட்டில் வந்து பார்த்த பிறகே தெரிந்தது. மறுநாள் போய் சொன்ன போது கொஞ்சம்கூட முணுமுணுக்காமல் வேறு நோட்டைக் கொடுத்து விட்டார்.

“பரவாயில்லை நான் வேறு நோட்டு கொடுத்து வாங்கிக் கொள்கிறேன்” என்று சொன்னதற்கு, “நான் ஏமாந்ததற்கு நீ ஏன் நஷ்டப் படணும் சாமி” என்றார்.

வீட்டில் ஆபூர்வமான காசுகளை சேகரிக்கும் வழக்கமுள்ள என் மனைவியிடம் அந்த ஐந்து ரூபாய் காசைக் கொடுத்தேன். அதைப் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டாள். காரணம் அது இந்திரா காந்தி படம் பொறித்த காசாம். மிகவும் அபூர்வமானதாம்.

அடுத்த இரண்டு வாரங்களுக்கு ரங்கனையும் அவருடைய வண்டியையும் பார்க்க முடியவில்லை. பூக்கார பாட்டியையும் காணோம்.

ஒருநாள் மின் கட்டணம் கட்டிவிட்டுத் திரும்பி வரும்போது, ரங்கனும், அந்தப் பாட்டியும் ஒரு இட்லிக்கடையில் சாப்பிட்டு விட்டு வெளியே வருவதைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் சிரித்தார் ரங்கன்.

“என்ன ரங்கன், ரொம்ப நாளாக பார்க்க முடியவில்லையே”

“தலை ரொம்ப வலிக்குது சார். ஆஸ்பத்திரியில் போய் காண்பித்தால், ஸ்கேன் அது இது என்று எடுத்துப் பார்த்து சின்னதாக ஆபரேசன் செய்யணும்னு சொல்றாங்கோ. நாற்பதாயிரம் ஆகுமாம். அவ்வளவு ரூபாய்க்கு என்ன செய்யறது. வேலையும் செய்யக்கூடாதாம். ப்ச்… விடு சாமி, எல்லாம் தலையெழுத்து. நடக்கறது நடக்கட்டும்”

ரங்கனை நினைத்தால் பாவமாக இருந்தது. நம்மால் ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று யோசித்தேன். நாற்பதாயிரம் ரூபாய் எனக்கும் பெரிய தொகைதான். ஏதாவது அறக்கட்டளையின் உதவி கிடைக்குமா என்று விசாரித்தேன். அதற்கு வாய்ப்பில்லை என்று தெரிந்தது. மேலும் மற்றவரிடமிருந்து பண உதவியை ரங்கன் விரும்புவதில்லை என்றும் சொன்னார்கள். தன்னுடைய தொழிலையே ஒரு தர்மம் போல் செய்பவர் அவர். தர்மம் தலை காக்கும் என்று சொல்வார்களே.

என் மனைவியிடம் இருக்கும் அந்த ஐந்து ரூபாய் காசு திடீரென்று நினைவுக்கு வந்தது. மீதி சில்லறைக்காக ரங்கன் கொடுத்ததுதான். நெட்டில் புகுந்து அந்த ஐந்து ரூபாய்க்கு எவ்வளவு மதிப்பு என்று பார்த்தபோது ஆச்சரியம். முப்பதாயிரம் ரூபாயிலிருந்து ஐம்பதாயிரம் வரை விலை போகும் என்று தெரிந்தது. அதை விற்று ரங்கனுக்குக் கொடுத்தால் என்ன. அன்று வீட்டிற்குப் போய் என் மனைவியிடம் சொன்னேன். உடனே சரி என்று சொல்லி விட்டாள்.

இது போன்ற நாணயங்களை யார் வாங்குவார்கள் என்று இணையத்தில் தேடியபோது, பர்க்கிட் ரோட்டில் சம்பத் என்பவரது முகவரி கிடைத்தது. போனில் விசாரித்தால் காசு சரியான எடையில் தரமானதாக இருந்தால் மட்டுமே வாங்கிக் கொள்வதாகச் சொன்னார்.

பாட்டியின் மூலம் ரங்கனைக் கண்டு பிடித்து, சம்பத்திடம் அழைத்துச் சென்றேன்.

“என்ன சாமி விஷயம்” என்ற மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே வந்தார் ரங்கன். ஏதேதோ சொல்லி சமாளித்தேன்.

சம்பத் எங்களை வரவேற்று உட்காரச்சொன்னார். இந்திரா காந்தி படம் போட்ட காசை வாங்கி ஆராய்ந்தார். 18 கிராம் எடை இருந்தது. அதை பலவிதமாக ஆராய்ந்த அவரது முகம் பிரகாசமானது.

“சரி, இதை நான் வாங்கிக் கொள்கிறேன். முப்பத்தைந்து கொடுக்கிறேன் சரியா” என்றார்.

“எங்களுக்கு நாற்பது தேவைப் படுகிறது” என்றேன். ரங்கன் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

“இது அபூர்வமானதுதான். ஆனால் மற்றவர்கள் முப்பதுதான் கொடுப்பார்கள். நான் முப்பத்தைந்து கொடுக்கிறேன்”

“இவருக்கு தலையில் ஆபரேசன் செய்ய வேண்டி இருக்கிறது. அதற்குத்தான் நாற்பது தேவைப் படுகிறது”

சம்பத் கொஞ்சம் யோசித்தார். ஆனால் ரங்கனுக்கு இப்போது விஷயம் புரிந்து விட்டது. அதனால் இதற்கு ஒப்புக் கொள்ள மறுத்தார். “என் ஆபரேஷனுக்கு நீயேன் பணம் கொடுக்கிற சாமி. இந்த நாற்பதாயிரம் கடனை நான் எப்படி அடைக்கிறது. என்னால் முடியாது. அதனால் எனக்கு வேண்டாம்” என்றார் ரங்கன்.

“இது சில்லறைக்காக நீங்க கொடுத்தது. உங்களோட காசுதான் ரங்கன்”

“எப்போ அது உன்னிடம் போய் விட்டதோ. அது உன்னோட காசு சாமி”

இந்த வினோதமான வாக்குவாதத்தை ஆச்சரியமாகக் கவனித்துக் கொண்டிருந்தார் சம்பத். என்ன விஷயம் என்று விசாரித்தார். சின்னஞ்சிறு வயதில் வயதான கிழவர் வேஷத்தில் வந்து கரிகால் சோழ மன்னன் தீர்த்து வைத்த வழக்குப் போலல்லவா இருக்கிறது என்று யோசித்த சம்பத், “நான் ஒரு யோசனை சொல்கிறேன், கேட்பீர்களா” என்றார் எங்கள் இருவரையும் பார்த்து.

“சொல்லுங்கள். இவருக்கு ஆபரேஷன் நடந்து குணமாக வேண்டுமல்லவா”

“உண்மைதான். நான் இந்த காசுக்கு நாற்பதாயிரம் கொடுக்கிறேன். ஆனால் ஒரு கண்டிஷன். இவர் ஆபரேஷன் முடிந்து குணமாகி வந்த பிறகு தினமும் நீங்கள் இவரிடம் வாழைப்பழம் வாங்க வேண்டும். அதை இவர் இலவசமாகக் கொடுக்க வேண்டும். காசு வாங்கக்கூடாது” என்றார்.

“அது எப்படி முடியும். இலவசமாக நான் எதையும் வாங்க மாட்டேன்”

உடனே ரங்கன், “அதைத்தான் நானும் சொல்றேன் சாமி. ஐயா சொல்வது போல் இந்த ஏற்பாட்டுக்கு நீ ஒத்துக்கொண்டால் மட்டுமே இந்தப் பணத்தில் நான் ஆபரேஷன் செய்து கொள்வேன்” என்றார்.

இது போன்ற மனிதர்களும் இருக்கிறார்களே என்று நினைத்த எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

எப்படியோ ரங்கன் நல்லபடியாக குணமாகி வர வேண்டும். அதனால் சரி என்றேன். சம்பத் நல்ல மனிதர். மனிதநேயத்தோடு நடந்து கொள்கிறார். ரங்கனோ தன்மானத்துடன் இலவசம் வேண்டாம் என்கிறார். உலகில் மனிதம் இன்னும் வாழ்கிறது என்று நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால் இவர்களில் யார் மனிதநேயம் மிக்கவர் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.

மனிதாபிமானத்தோடு, ரங்கனுக்குத் தேவையான பணத்தைக் கொடுக்க முன் வந்த சம்பத்தா, அல்லது நன்றிக்கடனாக காலம் பூராவும் வாழைப்பழம் கொடுக்க நினைக்கும் ரங்கனா அல்லது விஷயத்தை சொன்னவுடனே ரங்கனுக்கு உதவுங்கள் என்று அந்த ஐந்து ரூபாயை எந்த தயக்கமுமின்றி எடுத்துக் கொடுத்த என் மனைவியா? யார் மனித நேயம் மிக்கவர்?

கதை சொல்லி விட்டு விக்கிரமாதித்தனிடம் கேள்வி கேட்ட வேதாளம் போல் என் மனம் என்னைக் கேட்டது. யோசித்துப் பார்த்தேன். மாலையில்தான் சரியான விடை கிடைத்தது. அன்று இரவு எனக்கு நிம்மதியான உறக்கம் வந்தது.

—————————————————————————————————————————————

 

Series Navigationஆண்டாள்ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்
author

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *