நெய்தல் என்பது ஐவகைத் திணைகளில் ஒன்றாகும். கடலும் கடல் சார்ந்த இடமும்தான் நெய்தல் எனப்படும். அங்கு தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் நினைந்து இரங்கியிருப்பர். இப்பகுதில் உள்ள பத்துப் பாடல்களும் அவர்கள் இரங்கி இருக்கும் நிலையினைக் கூறுவதால் இப்பகுதி நெய்தல் பத்து எனப்பட்டது.
நெய்தல் என்பது ஒருவகைத் தாவரமாகும். அது நீரில் வாழக் கூடிய கொடிவகையைச் சார்ந்தது. அதன் மலர்கள் நீல நிறம் உடையவை. இது விடியலில் மலர்ந்து, மாலையிலே கூம்பும் தன்மையதாகும்.
நெய்தற் பத்து—1
நெய்தல் உண்கண் நேரிறைப் பணைத்தோள்
பொய்தல் ஆடிய பொய்யா மகளிர்
குப்பை வெண்மணற் குரவை நிறூஉம்
துறைகெழு கொண்கண் நல்கின்
உறைவினி தம்ம இவ்அழுங்கல் ஊரே
[இறை=முன்னங்கை; பொய்தல்=சிறு மகாளிர் ஆடும் ஒரு வகை ஆடல்; குரவை=தெய்வத்திடம் வேண்டி ஆடும் ஆட்டம்]
அவ அவனைச் சந்திப்பது எல்லாருக்கும் தெரிஞ்சு அவங்க பழிச் சொல் சொல்லும் நிலக்கு ஆளாகக் கூடாதேன்னு அவ வருந்தறா. அப்ப அவ தோழி வந்து அவன் கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டான்னு சொல்றா . அதை கேட்ட அவ மிக மகிழ்ச்சியோட சொல்ற பாட்டு இது.
”நெய்தல் நெலத்தைப் போல அங்க இருக்கற சின்னப் பொண்ணுங்க எல்லாரும் அழகா இருக்காங்க. அவங்க கண்ணுக்கெல்லாம் மை பூசி இருக்காங்க; நீண்ட முன்னங்கையும் பருத்த தோளும் அவங்களுக்கு இருக்கு; அவங்க பொய்தல் என்ற சிறு மகளிர் ஆட்டத்தை விளையாடற மணல் மேட்டுல கடல் தெய்வத்தை வேண்டிக் குரவை ஆடறாங்க. அப்படிப்பட்ட எடத்தைச் சேந்தவன் அவன்; அவன் நீ சொன்ன படியே செஞ்சுட்டா இவ்வூரு நான் இங்கியே இருக்க நல்லா இனிமையா இருக்கும்டி”
அவன் வந்து கல்யாணம் செஞ்சுகிட்டா ஊரார் பழி சொல மாட்டாங்க; அதால இனிமையா இங்கியே இருக்கலாம்னு சொல்றா; பொய்தல் விளைய்யாட்டுன்றது ஒளிந்து பிடித்து ஆடும் ஆட்டம்னு வச்சுக்கலாம். பொய்கையில் மூழ்கிப் பிடிச்சு ஆடற ஆட்டமுன்னும் வச்சுக்கலாம்
நெய்தற் பத்து—2
நெய்தல் நறுமலர் செருந்தியொடு விரைஇக்
கைபுனை நறுந்தார் கமழும் மாஅர்பன்
அருந்திற்ற் கடவுள் அல்லன்
பெருண்துறைக் கண்டிவள் அணங்கி யோனே
அவன் இப்ப அவளைப் பாக்கறதுக்கு வருவதே இல்ல; அதால அவ ஒடம்பே மெலிஞ்சு போச்சு. அவ அம்மா எல்லாரும் அது ஏதோ தெய்வக் குத்தம்னு நெனச்சுக்கிட்டு கடவுள் கிட்ட பூசை போட் ஏற்பாடு செய்யறாங்க. அப்ப அவ தோழி அவனோட அவ தொடர்பு வச்சிருக்கறதைச் சொல்லி அவனோட மட்டும்தான் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யச் சொல்ற பாட்டு இது.
”இவளைப் பாத்து வருத்தம் குடுத்து ஒடம்பு மெலியச் செய்தது கடவுள் இல்ல. நெய்தல் பூவோட செருந்திப் பூவையும் சேத்துக் கலந்து கட்டிய மாலையோட வாசனை மார்பில எப்பவும் இருக்கற அவன்தான் பாருங்க”
நெய்தல் அதோட செருந்திப் பூவைச் சேத்துக் கட்டிய மாலைன்னு சொல்றது அவன் எவ்வளவு பணக்காரன்னு காட்டறதுக்காம்; மார்பைச் சொன்னது அதை அணைச்சுத்தான் அவ இன்பம் அனுபவிச்சான்னு குறிப்பா காட்டறதுக்காம்.
நெய்தற் பத்து—3
கணங்கொள் அருவி கான்கெழு நாடன்
குறும்பொறை நாடன் நல்வய லூரன்
தண்கடற் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டையிற்
கடும்பகல் வருதி கையறு மாலை
கொடிங்கழி நெய்தலும் கூம்பக்
காலை வரினும் களைஞரோ இலரே
[கணங்கொள் அருவி=திரட்சியான அருவி; கான்கெழு=காட்டை உடைய; வயலூரன்=மருதத் தலைவன்;
அவன் கல்யாணம் செய்யறதுக்கு ஏற்பாடு எல்லாம் செய்யப் போயிருக்கான்; அதால அவ அவனைப் பிரிஞ்சு இருக்கா; அவ அவனையே நெனச்சு மனம் வருந்தறா; அப்ப அவ மாலைப் பொழுதைப் பாத்துச் சொல்ற பாட்டு இது.
”பிரிஞ்சவங்களுக்குத் துன்பம் வரக் காரணாமாயிருக்கற மாலைப் பொழுதே! அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா? அடர்த்தியான அருவி எல்லம் விழற தண்ணி வளம் உள்ள காடு இருக்கற நாட்டை உடையவன்; சின்ன சின்னதா மலையெல்லாம் உடையவன்; நல்ல நெல் விளையற வயலிருக்கற நாட்டை உடையவன்; குளிரான கடலிருக்கற நெலத்தையும் உடையவன்; அவன்தான் இப்ப என்னைப் பிரிஞ்சு இருக்கான்; அதால காட்டில உச்சிப்பொழுதில இருக்கற வெப்பத்தை விட அதிகமா சூடு காட்டறையே; கடல் கரையில கழியில் நெய்தல் பூவெல்லாம் மாலையில இதழ் சுருங்கிக் காலையில அழகா வருவது போல நீ வந்தாலும் என் துன்பத்தைப் போக்க என்கிட்ட யாரும் இல்லியே”
இந்தப் பாட்டுல குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எல்லாத்தையும் சொல்லிப் பாலையை மட்டும் சொல்லலை; பாலைக்குரிய பிரிவை அவனே செஞ்சு இருக்கறதால அந்தக் கொடுமையைச் சொல்லலையா
நெய்தற் பத்து—4
நெய்தல் இருங்கழி நெய்தல் நீக்கி
மீனுண் குருகிளங் கானல் அல்கும்
கடலணிந் தன்றவர் ஊரே
கடலினும் பெரிதெமக் கவருடை நட்பே
[இளங்கானல்=கடற்கரைப் பக்கமிருக்கும் கானற் சோலை; கடல் அணிந்தன்று=கடலாலே அழகடைந்திருப்பது]
அவகிட்ட அவன் தூது அனுப்பறான். தூதாப் போனவங்க, “அவன் ஒங்கிட்ட எவ்வளவு அன்போட இருக்கான். அதால அவனை நீ ஏத்துக்கோ”ன்னு அவள்கிட்ட சொல்றாங்க. ஆனா அவளோ அவன் வேற ஒருத்திகிட்டப் போய் இருந்ததாலே வருத்தப்பட்டவ. அதால அவங்களை மறுத்துச் சொல்ற பாட்டு இது.
”நெய்தல் நெலத்துல இருக்கற குருகு அங்க இருக்கற நெய்தல் பூக்களை நீக்கிட்டு அதுக்குப் பதிலா அங்க இருக்கற மீனைத்தான் தின்னும். அவ்வளவு அழகா இருக்கும் அவன் ஊரு. அவன்கிட்ட எனக்கு இருக்கற நட்புக் கடலைவிடப் பெரிசாகும்.”
எனக்குதான் அந்த நட்பு கடலைவிடப் பெரிசு. ஆனா அவனுக்கு இல்லியேன்னு சொல்லிக் காட்டறா. இருந்தாலும் அவ நட்பு எவ்வளவு பெரிசுன்னு சொல்றா. குருகு வாசனை உள்ள நெய்தல் பூக்களை உட்டுட்டு மீனைத்தின்றாப்ல அவன் அவள விட்டுட்டு வேற ஒருத்திகிட்டத் தங்கறான்னு மறைமுகமா சொல்லிக்காட்டறா.
நெய்தற் பத்து—5
அலங்கிதழ் நெய்தல் கொற்கை முன்றுறை
இலங்குமுத் துறைக்கும் எயிறுகெழு துவர்வாய்
அரம்போழ் அவ்வளைக் குறுமகள்
நரம்பார்த் தன்ன தீங்கிள வியளே
[அலங்கல்=அசைதல்; முன்றுறை=கடல் முகத்து நீர்த்துறை; இலங்கு முத்து=ஒளி வீசும் முத்து; துவர் வாய்=சிவந்த வாய்; குறு மகள்=இளைய மகள்; நரம்பு=யாழ்; கிளவி=பேச்சு]
அவன் மொதல்ல அவளைச் சந்திச்சு மகிழ்சியா கலந்துட்டான். அதுக்கப்பறம் அவகூட எப்பவும் அவளோட தோழிங்க நெறைய கூட்டமா இருக்காங்க. அதால அவளைத் தனியாப் பாத்துப் பேசவே முடியல. அதால அவன் எப்படியாவது பேச வேணுமேன்னு தோழிகிட்டச் சொல்றான். தோழியோ, “அந்தக் கூட்டத்துல ஒன் மனசுக்குப் புடிச்சவ யாரு”ன்னு கேக்கறா. அதுக்கு அவன் அவளைக் காட்டிச் சொல்ற பாட்டு இது.
”கொற்கை நகருல கடல் முகத்துவாரத்தில அசைகிற நெய்தல் பூ நெறைய இருக்கும். அவன், “முத்து போல பல்லெல்லாம் இருக்கற, செவந்த வாய் இருக்கற, அழகான வலைப் போட்டிருக்கற, இளமையானவளா இருக்கற யாழோட நரம்பு எழுப்பற இனிமையான பேச்சுப் பேசற அவளே”ன்னு பதில் சொல்றான்.
அவ அழகை ஏன் இவ்வளவு விரிவா சொல்றான்னா அவளோட அவன் கலந்து விட்டதை மறைவாச் சொல்றான். இதழோடு இதழ் வைத்ததைச் சிவந்த வாய் என்றும், தழுவியதை வளையைச் சொல்லியும், பேசியதை யாழோசை போன்ற பேச்சு என்றும் சொல்றான்
==============================================================================
நெய்தற் பத்து—6
நாரை நல்லினம் கடுப்ப மகளிர்
நீர்வார் கூந்தல் உளரும் துறைவர்
பொங்குகழி நெய்தல் உறைப்ப, இத்துறைப்
பல்கால் உரூஉம் தேர் எனச்
செல்லா தீமோ என்றனள் யாயே
[கடுப்ப=போல; உளரும்=காயவைக்கும்; உறைப்ப=துளிப்ப; பல்கால்=பல நேரங்களில்]
அவனும் அவளும் தனியாச் சந்திச்சு ஒருவரோட ஒருவர் கலந்துடறாங்க. இதே மாதிரி இருக்கக் கூடாது; சீக்கிரம் ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சுக்கணும்னும்னு தோழி நெனக்கறா. அதால ஒரு நாளு தோழி மட்டும் அவனை வழக்கமாச் சந்திக்கற எடத்துக்கு வரா. அவனைப் பாத்து சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்கணும்னு வற்புறுத்தறா. அவ சொல்ற பாட்டு இது.
”தண்ணியில குளிச்ச பொண்ணுங்க எல்லாரும் தங்கள் கூந்தல் முடியை விரிச்சுப் போட்டு அதைக் கோதியும், தட்டியும் உலர்த்தறது நாரைக் கூட்டம் போல இருக்கு. அப்படிப்பட்ட எடத்தைச் சேந்தவனே! இந்தக் கடற் கழியில இருக்கற நெய்தல்கள் எல்லாம் தண்ணித் துளி சிந்தறமாதிரி ஒரு தேரு பல நேரத்துல இங்க வருது. அதால அந்த எடத்துக்குப் போகாதீங்கன்னு எங்க அம்மா சொல்லிட்டாங்க”
வர்றது ஒன் தேரு, அது அவளை நாடித்தான் வருதுன்னும் எங்க அம்மாவுக்குத் தெரிஞ்சுடுத்து; அதால சீக்கிரம் கல்யாணம் செய்னு மறைவா சொல்றா. கூந்தல்ல இருக்கற தண்ணியை நீக்கற மாதிரி நீயும் இந்த ஊரார் பேச்சை சீக்கிரம் நீக்கணும்னு சொல்றா.
=========================================================================================
நெய்தற் பத்து—7
நொதும லாளர் கொள்ளா ரிவையே
எம்மொடு வந்து கடலாடு மகளிரும்
நெய்தலம் பகைத்தழைப் பாவை புனையார்
உடலகம் கொள்வோர் இன்மையின்
தொடலைக் குற்ற சிலபூ வினரே
[நொதுமலாளர்=அயலார்; பகைத்தழை=ஒன்றுக்கொன்று மாறுபட்டுத் தொடுத்த தழை; உடலகம்=உடலிடத்தே; தொடலை=மாலை]
அவன் அவகிட்ட வச்சிருக்கற தன் அன்பைக் காட்ட அவளுக்காக ரொம்ப ஆசையோட தழை ஆடை தைத்துக் கொண்டு வந்து தோழிகிட்டக் குடுத்து அவகிட்டக் குடுக்கச் சொல்றான். ஆனா அதைவேண்டாம்னு மறுத்துத் தோழி சொல்ற பாட்டு இது.
”ஐயா, இதை வெளிப்பொணுங்க யாரும் ஏத்துக்க மாட்டாங்களே! எங்க கூட வந்து கடல்ல ஆடற பொண்ணுங்களும் நெய்தல் தழையையே அதிகமா வச்சுக் கட்டிய இதைக் கட்டிக்க மாட்டாங்க; அது மட்டுமல்ல; அவங்க விளையாடறதுக்காக செஞ்ச மணலாலான பொம்மைக்குக் கூட இதைக் கட்டமாட்டாங்களே! ஒடம்புல இதைக் கட்டிக்கறவங்க யாரும் இல்லாததால மாலை கட்டி விக்கறவங்களும் இதுலேந்து கொஞ்சம் நெய்தல் பூவை எடுத்துத்தான் கட்டுவாங்க; அதால இது எங்களுக்கு வேண்டாம். எடுத்துக்கிட்டுப் போனா பாக்கறவங்க சந்தேகப்படுவாங்க”
இதுலேந்து என்னா தெரியுதுன்னா அந்தக் காலத்துல நெய்தல் தழையையே அதிகமா வச்சுக் கட்டியதை நெய்தல் நெலத்துப் பொண்ணுங்க ஆசைப்பட்டுக் கட்டிக்க மாட்டாங்கன்னு தெரியுது. கொஞ்சம் கொஞ்சமா நெய்தலை நடுவுல நடுவுல வச்சுக் கட்டியதைத்தான் அழகா இருக்குன்னு கட்டிப்பாங்க. அவன் குடுத்ததை வாங்கிக்கிட்டுப் போனா இது வேற யாரோ வெளியாள் தந்ததுன்னு சந்தேகப்படுவாங்களாம்.
========================================================================================
நெய்தற் பத்து—8
இருங்கழிச் சேயிறா இனப்புள் ளாரும்
கொற்கைக் கோமான் சொற்கையம் பெருந்துறை
வைகறை மலரும் நெய்தல் போலத்
தகைபெரிதுடைய காதலி கண்ணே
[இனப்புள்=பறவைகள்; வைகறை=விடியல்; தகை=பண்பு]
அவன் நெறைய பேரை அவகிட்டத் தூது விடுத்துப் பாத்தான். ஆனா அவ எதுக்குமே ஒத்து வரல; அதால அவன் விருந்தினர் கொஞ்சம் பேரைக் கூப்பிட்டுக்கிட்டு ஊட்டுக்குப் போறான். அவ விருந்தினரைப் பாத்ததும் ஆசையோட சிரிச்சுக்கிட்டு நல்லாவே உபசரிக்கிக்றா, அதைப் பாத்து அவன் சொல்றேஅ பாட்டு இது.
”கடற்கரைக் கழியில இருக்கற செவந்த எறாலைப் பறவையெல்லாம் பிடிச்சுத் தின்னும். அப்படிப்பட்ட கொற்கை அரசனோட கொற்கையில விடியல் காலத்துல பூக்கற நெய்தலைப் போல என் காதலியோட கண்கள் பெரிய பண்பைக் காட்டுது”
அவன் மேல வெறுப்பு இருந்தாலும் அதை மறைச்சுக் கோபமில்லாம் வந்தவங்களை நல்லா உபசரிச்சதோட அவங்க முன்னாடி அவனையும் வெறுக்காத அவளோட அன்பைப் பாத்து ஆச்சரியப்பட்டுத்தான் தகைபெரிதுடையன்னு சொல்றான்.
===============================================================================================
நெய்தற் பத்து—9
புன்னை நுண்டா துறைத்தரு நெய்தல்
பொன்மபடு மணியின் பொற்பத் தோன்றும்
மெல்லம் புலம்பன் வந்தென
நல்ல வாயின தோழி என் கண்ணே
[உறைத்தறும்=உதிர்ந்து கிடக்கும்; பொன்படு மணி=பொன்னிடையில் வைத்துக்கட்டிய நீலமணி; பொற்ப=அழகுற
அவளைக் கல்யாணம் செஞ்சுக்கப் பொருள் தேடி எடுத்து வரேன்னு அவன் போயிருக்கான். போனவன் ரொம்ப நாளு வராததால அவளும் தோழியும் கவலைப்படறாங்க. அப்ப ஒரு நாளு அவன் கல்யாண ஏற்பாட்டோட வரான். தோழிக்கு கண்ணுலெல்லாம் அதிகமா மகிழ்ச்சி வருது. அந்தத் தோழி அவகிட்டப் போறா. ”ஏன் நீ இவ்வளவு மகிழ்ச்சியோட இருக்கே”ன்னு அவ கேக்கறா. அப்ப தோழி பதில் சொல்ற பாட்டு இது.
”தோழி! புன்னைப் பூவோட தாதெல்லாம் நெய்தல் மலர் மேல படிஞ்சு கெடக்கு.அது பாக்கறதுக்கு பொன்னிடையில வச்சுக் கட்டிய நீலமணி போல இருக்கு. அப்படிப்பட்ட அழகான கடற்கரயைச் சேந்தவன் அவன். அவன் கல்யாண ஏற்பாட்டோட வரான். அதைப் பாத்து என் கண்ணெல்லாம் அழகாயிடுச்சு”
நெய்தல் நெலத்தைச் சேந்தவங்க புன்னைப் பூ பூக்கற காலத்துலதான் கல்யாணம் செஞ்சுக்குவாங்க. அதைச் சுட்டிக்கட்டறா. அவன் இத்தனை நாளு வராததால அழகா இல்லாம இருந்த கண்ணெல்லாம் இப்ப அவன் வந்ததால அழகா இருக்குதாம்.
=========================================================================================
நெய்தற் பத்து—10
தண்ணறும் நெய்தல் தலையவிழ் வான்பூ
வெண்ணெல் அரிநர் மாற்றினர் அறுக்கும்
மெல்லம்புலமப்ன் மன்ற—எம்
பல்லிதழ் உண்கண் பனிசெய் தோனே
[தளை=கட்டு; வான்பூ=பெரிய பூ; மாற்றினர்=ஒதுக்கித் தள்ளினர்; பனி செய்தல்=கண்களில் நீர் வருமப்டித்ந்துன்பம் செய்தல்]
அவளுக்கு வேற எடத்துல கல்யாணம் செய்யலாம்னு அவளோட அப்பாவும் அம்மாவும் பேசறாங்க. அப்ப தோழி அவளோட அவனுக்கு இருக்கற தொடர்பைச்சொல்லி அவனுக்கே அவனைக் கல்யானம் செய்யணும்னு சொல்ற பாட்டு இது.
”வெள்ளையான நெல்லை அறுக்கற ஒழவர்கள் எல்லாரும் நெய்தல் பூவானது அவங்களோட பெரிய அரிவாள் முனையில மாட்டாத மாதிரி தனியா ஒதுக்கிட்டு நெற் கதிரை மட்டும் அறுப்பாங்களாம். அப்படிப்பட்ட எடத்தைச் சேந்தவன்தான் பல இதழ்கள் கொண்ட பூப்போல இருக்கற மை பூசிய என் கண்ணுல தண்ணி வர்ற மாதிரி செஞ்சவன் ஆவான்.
அவன்தான் இவளைக் கல்யாணம் செஞ்சுக்கணும்னு குறிப்பா சொல்றா. அவங்களுக்குப் பயனுள்ள நெல்ல மட்டும் அறுக்கற ஒழவரைப் போல அவன் அழகான பண்புள்ள அவளை மட்டுமே கல்யானம் செஞ்சுக்க உறுதியா இருக்கான்னு மறைவா சொல்றா
=======================================================================================
[நிறைவு]
- மருத்துவக் கட்டுரை – கொலஸ்ட்ரால்
- நெய்தற் பத்து
- தமிழ் இலக்கியமும் மதவாதிகளும்
- கேள்வி – பதில்
- முன்பு விஞ்ஞானிகள் யூகித்த கரும்பிண்டம், கரும்சக்தி இல்லாத ஒரு மாற்றுப் பிரபஞ்சம் பற்றிப் புதிய ஆராய்ச்சி
- படித்தோம் சொல்கின்றோம் கோமகன் தொகுத்திருக்கும் “குரலற்றவரின் குரல்”
- தனித்துப்போன கிழவி !
- விவிலியம் உணா்த்தும் வாழ்வியல் தன்மைகள்
- தொடுவானம் 205. உரிமைக் குரல்.
- பொங்கல்