ம.தேவகி
எங்கே போனது? என் கிராமம்
காலையில் எழுந்தவுடன்
சுப்ரபாதமாய் ஒலிக்கும்
குருவிகளின் மணிச்சத்தம் எங்கே?
சிறுமியர்களோடு சிட்டாட்டம்
ஆடிக் கொண்டு
குளிக்கச் சென்ற குளம் எங்கே?
வழி நெடுக என் அன்னையின்
சேலையைப் போலத் தழுவும்
தென்றல் எங்கே?
கலைமகள் மட்டும் குடியிருக்கும்
கல்விக்கூடம் எங்கே?
நிலத்தின் நிர்வாணத்திற்கு
பசும்பட்டு உடுத்தாது
போன உழவன் எங்கே?
மொத்தத்தில் என் கிராமம் எங்கே?
நகரத்தில் நான் தொலைந்த மாதிரி
என் கிராமமும் தொலைந்ததோ!
எங்கே தமிழ்? எங்கே தமிழ்?
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
என எக்காளமிகும் நாம்
என்ன செய்தோம் தமிழுக்கு?
சங்கம் வைத்து வளர்த்த தமிழை
சாய்த்து விட்டோம் நாம்
உலகளாவ புகழ் பெற்ற திருக்குறளை
திருத்தினோம் (புது) குறளாக!
கம்பீரமாக ஆண்மையாளனை
விதந்துரைத்த கம்பராமாயணத்தை
கற்காததால் பெற்றோம் எய்ட்ஸை!
மூவேந்தரின் ஒற்றுமைக்காக
படைக்கப்பட்ட சிலம்பினாலும்
இரண்டுபட்டோம்? பட்டிமன்றத்தால்!
கற்பில் சிறந்தவள் கண்ணகியா?
கற்பில் சிறந்தவள் மாதவியா?
பங்காளிச் சண்டை கூடாதென
படைக்கப்பட்ட மகாபாரதம்
பார்ப்பதற்கு நடந்தது(தொலைக்காட்சியில்)
மாபெரும் போர்.
தமிழுக்காக உயிநீத்த
நந்திவர்மனின் நந்திக்கலம்பத்தை
அறியவில்லை தமிழர்கள்!
எல்லாம் அறிந்தும் பாடினான்
முண்டாசுக் கவிஞன்
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே என்று!
‘தமிழ்’ என்பதை விடுத்து
‘தமில்’ என்று முழக்கமிடுகின்றனர் நவநாகரீகத்தினர்
நிசதர்சனமாக கூறுவேன் நானும்
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
என வாயளவில் எக்காளமிடும் நாம் – இனி
எங்கே தமிழ்? எங்கே தமிழ் – என
அலைவோம் மொழியைத் தேடி.
===
ம.தேவகி
தமிழ்த்துறைத் தலைவர்
நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
தேனி