பிரம்மராஜனின் இலையுதிராக் காடு

This entry is part 18 of 20 in the series 11 பெப்ருவரி 2018

 

(எதிர் வெளியீடு. முதல் பதிப்பு டிசம்பர் 2016. பக்கங்கள் 318. விலைரூ290. தொடர்புக்கு: 04259 226012, 99425 11302. மின்னஞ்சல்: ethirveliyedu@gmail.com

 

லக்கியத்திற்கான நோபெல் விருது, புக்கெர் விருது போன்ற விருதுகள் அறிவிக்கப்பட்டதும் விருது பெற்ற படைப்பாளியின் ஒருசில எழுத்தாக்கங்கள் மொழிபெயர்க்கப்படுவதும்,  இலக்கிய இதழ்களில் வெளியாவதும் வழக்கமாக இருந்துவருகிறது.. அப்படியில்லாமல் தொடர்ந்த ரீதியில் உலக இலக்கியங்கள், இலக்கியப் போக்குகளைப் பரிச்சயப்படுத்திக்கொள்பவர்களை, தான் பெற்ற அந்த அறிவை, அனுபவத்தை தமிழிலக்கிய வாசகர்களும் அறிந்துகொள்ள வழிசெய்யும் படியான  அறிமுகக் கட்டுரைகளைத், தொடர்ந்த ரீதியில் எழுதிவருபவர் களை மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்த ரீதியில் செய்துவருபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

 

அவர்களில் கவிஞர் பிரம்மராஜன் குறிப்பிடத்தக்கவர். தேர்ந்த வாசகர். தான் வாசித்த இலக்கியப்படைப்புகள் குறித்து, உலகத்தரமான படைப்பாளிகள் குறித்து அவர்கள் எந்தவிதத்தில் உலகத்தரம் வாய்ந்தவர்களாகிறார்கள் என்பது குறித்து கவி பிரம்மராஜன் எழுதிய கட்டுரைகள், அவை இடம்பெறும் தொகுப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. சமகால உலக இலக்கியப் போக்குகளை, படைப்புகளை தமிழ் வாசகர்கள் அறியச் செய்வதில் அவர் ஆற்றிவரும் எழுத்துப் பணியின் இன்னுமொரு மைல்கல்லாக இலையுதிராக் காடு என்ற கட்டுரைத்தொகுப்பினைக் கூறலாம்.

 

பிரம்மராஜன் – கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், விமர்சகர் மற்றும் இதழாசிரியர். இதுவரை ஆறு கவிதைத்தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. 1989ஆம் ஆண்டு வெளிவந்த ‘உலகக் கவிதை’ என்ற நூலின் தொகுப்பாசிரியர். 35 இதழ்கள் வெளிவந்த ‘மீட்சி’ என்ற இலக்கியச் சிற்றேட்டின் ஆசிரியர். கவிதைப் பட்டறைகள் சிலவற்றை நடத்திய அனுபவம் உண்டு. முதல் கவிதைத் தொகுப்பு ‘அறிந்த நிரந்தரம்’(1980). கடைசியாக வெளிவந்த கவிதைத் தொகுப்பு ‘ஜென் மயில்(2007).

எஸ்ரா பவுண்ட் குறித்து பிரம்மராஜன் எழுதிய அறிமுக நூல் 1985ஆம் ஆண்டு வெளிவந்தது. ப்ரக்ட் கவிதைகள் இவரால் மொழிபெயர்க்கப் பட்டு செறிவான அறிமுகத்துடன்1987ஆம் ஆண்டு வெளிவந்தது. தற்கால உலகக் கவிதை (2007) என்ற நூலின் தொகுப்பாசிரியர்.

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்க்கிறார். சித்தர் பாடல்களிலிருந்து அவர் தேர்ந்தெடுத்த 64 கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு சாகித்திய அகாதெமியின் இதழான இண்டியன் லிட்டரேச்சரில் (பிப்ரவரி 2000) வெளியாகியது.

போர்ஹே கதைகள்(2000) மற்றும் கால்வினோவின் சிறுகதைகள்(2007) ஆகியவை பிரம்மராஜனின் குறிப்பிடத்தக்க புனைகதை மொழிபெயர்ப்புகள்.

மியூஸ் இந்தியா (http://museindia.com) என்ற இணைய இலக்கிய மின் இதழுக்கு தமிழுக்கான சிறப்பாசிரியராக இருக்கிறார்.

1953ம் ஆண்டு சேலத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த பிரம்மராஜனின் இயற்பெயர் ஆ.ராஜாராம். ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர். கல்லூரிப்பணியிலிருந்து ஓய்வு பெற்று தன் பண்ணை வீட்டில் வசிக்கிறார்.

எதிர் வெளியீடு மூலம் பிரசுரமாகியுள்ள இந்த கட்டுரைத்தொகுப்பில் உலக இலக்கிய விரிவெளியில் பெயர்பெற்ற படைப்பாளிகள் – ஜோஸஃப் ப்ராட்ஸ்கி, டி.எஸ்.எலியட், ஆக்டேவியா பாஸ், அமி லோவல், பால் வலேரி, மிராஸ்லாவ் ஹோலுப், ஆந்தோனின் பார்த்துஸெக், சேஸரே பவேஸே,  சார்லஸ் புக்கோவ்ஸ்கி, இவான் கோன்ச்சரோவ், யாசுனாரி கவாபட்டா, காப்ரியல் கார்சியா மார்க்வெஸ், ஹெர்மென் ஹெஸ், ஆல்பெர் காம்யூ, சாமுவெல் பெக்கெட், வில்லியம் ஃபாக்னர்,  அலெக்ஸாண்டர் சோல்ஸெனிட்ஸின்,  ஆந்ரே  ழீத், ப்ரைஓ லெவி,  ழீன் ஜெனே, ஹென்ரிக் ப்யோல்,  சால்வடார் டாலி ஜேம்ஸ் ஜாய்ஸ், ஹூலியோ  கொர்த்தஸார், பிரான்ஸ் காஃப்கா, ஹோஸே சாரமாகவோவ்  ஆகியவர்கள் குறித்த அடர்செறிவான அறிமுகக் கட்டுரைகள், தவிர ஜாஸ் இசை குறித்த கட்டுரை ஒன்று, ஆர்தர் ரிம்பாட் எழுதிய ’கவிதையின் மரணமுவாழ்க்கையின் சாகசமும்’ என்ற கட்டுரையும் இடம்பெற்றிருக்கின்றன. அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும்  கவிஞர்கள் எழுதிய கவிதைகளில் தேர்ந்தெடுத்த கவிதைகள் சிலவும் கவிஞர் பிரம்மராஜனால் ஆங்கிலம் வழியாக தமிழில் மொழிபெயர்க் கப்பட்டு அறிமுகக் கட்டுரைகளோடு தரப்பட்டிருப்பது இந்தத் தொகுப்பின் கூடுதல் சிறப்பு.

 

இந்நூலில் இடம்பெறும் கட்டுரைகளில் சில மிகக் கச்சிதமான அளவில் எழுதப்பட்டவை. பிறகு அவசியம் கருதி விஸ்தரிக்கப்பட்டவை. பெரும்பாலும் விஷயங்களின் பரபரப்புத்தன்மைக்காகவன்றி அவற்றின் நிலைத்த ‘க்ளாஸிக்’ தன்மைக்காக எழுதப்பட்டவை. மேற்கு நாடுகளில் 50 உலகக் கவிஞர்கள் (அ) 50 உலக நாவலாசிரியர்கள் போன்ற தலைப்பில் நூல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அத்தகைய தொகுப்பாசிரியர்கள் சிறந்த வாசிப்பனுபவம் மிக்கவர்களாகவும், உயர்ந்த ரசனை அளவுகோள்களைக் கொண்டவர்களாகவும் உள்ளனர். எடுத்துக்காட்டாக விமர்சகர் ஹெரால்ட் ப்ளூம். நீங்கள் நல்ல வாசகராக இருந்தால் அவரது The Anxiety of Influence என்ற கிளாஸிக்கை மறந்திருக்க முடியாது. அவர் எழுதிய ‘ஜீனியஸ்’ போன்ற நூல்கள் தமிழில் வரும் காலம் எப்போதென்று மட்டும் தெரியவில்லை” என்று  தனது ‘முன்னுரைக்கு பதிலாக’ எனத் தலைப்பிட்ட பகுதியில் குறிப்பிடும் கவிஞர் பிரம்மராஜன் இந்தக் கட்டுரைத் தொகுதியில் தன்னால் சேர்க்கவியலாமல் போன படைப்பாளிகள் குறித்த கட்டுரைத்தொகுதியையும் கொண்டுவரவேண்டும் என்ற ஆர்வத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

.இந்த நூலில் இடம்பெற்றுள்ள ’கவிஞர்களும், காதலர்களும், பைத்தியக்காரர்களும்’ என்ற தலைப்பிட்ட கட்டுரை யார் எழுதியது என்பது குறிப்பிடப்படவில்லை கவிஞர் பிரம்மராஜன் எழுதிய கட்டுரை இது என்று நினைக்கிறேன். ஒவ்வொரு படைப்பாளியையும் அவர்களின் படைப்பாற்றலின் சீரிய அம்சங்களை, தனித்துவங்களை எடுத்துக்காட்டி அறிமுகப்படுத்தியுள்ளதும், அவர்களுடைய கவிதைகளை அற்புதமாக தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருப்பதுமாக, சிறந்த வாசிப்பனுபவத்தையும், சிறந்த கற்றல் அனுபவத்தையும் வாசகர்களுக்குத் தரும் இந்த நூல் இலையுதிராக் காடு என்ற கவித்துவமான தலைப்புக்குத் தகுதி வாய்ந்த தாகிறது!

p;

Series Navigationகவிஞர் பழனிவேளின் தொகுப்பு “கஞ்சா” குறித்து…..பூதக்கன கழுகு ராக்கெட் டெஸ்லா ரோடுஸ்டர் காரை ஏந்திக் கொண்டு சூரியனைச் சுற்றிவர அனுப்பும் முதல் விண்வெளிச் சோதனை
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *