விமர்சனங்களும் வாசிப்பும்

This entry is part 10 of 20 in the series 25 பெப்ருவரி 2018

நாகரத்தினம் கிருஷ்ணா

இலக்கியமோ, கலையோ இரண்டையும் குறித்து சுடச்சுடவிமர்சனங்கள் திறனாய்வுகள் வந்துவிடுகின்றன. மக்கட்பேறு போல இலக்கிய பேறும் பதினாறும் பெற்று பெறுவாழ்வு வேண்டிய நெருக்கடி. ஒரு படைப்பு குறித்து உடனடியாக விமர்சனங்கள் வைப்பது சரியா ? என்னுடைய தாழ்மையான கருத்து, கூடாது. எவ்வித முற்சாய்விற்கும் இடம் தராமல் ஒரு படைப்பை அணுகுவதற்கு வசதியாக, உரிய அவகாசத்தை வாசகர்களுக்கு அளித்த பின்னரே விமர்சனங்கள் வரவேண்டும்.

பண்டங்களின் தராதரத்தை அதன் உற்பத்தியாளர்கள் செய்கிற விளம்பரங்கள் எப்படி தீர்மானிக்க முடியாதோ, அதுபோன்றே விளம்பர உத்தியோடு அல்லது அத்தகைய நுட்பத்தோடு படைப்பிலக்கியத்திற்கு வைக்கப்படும் விமர்சனங்களை நம்பியும் ஒரு படைப்பின் தராதரத்தை தீர்மானித்துவிடமுடியாது. இன்று படைப்பு வெளிவந்த கணத்திலேயே விமர்சகர்களின் கைக்குப் பதிப்பகமோ, எழுத்தாளர்களோ காட்டும் அக்கறையினால் புத்தகங்கள் வந்து சேர்ந்துவிடுகின்றன. விமர்சகர்களுக்கும் புத்தகம் கிடைத்த குறுகிய காலத்திலேயே எதையாவது எழுதித் தரவேண்டிய நெருக்கடி. படித்து முடித்த படைப்பு உண்மையில் ஏற்படுத்தும் தாக்கமென்ன ? அனுபவமென்ன என்பதையெல்லாம் சிந்தித்து எழுத நேரம் கிடைப்பதில்லை. வாசித்த கணத்தில் எதை உணர்கிறார்களோ அதை உடனே எழுதிவிடுகிறோம். கலைப் படைப்பு என்பது கணத்திற்குரியது அல்ல, கணத்தைக் கடந்தது. காலத்தோடு எதிர் நீச்சல் போடுவது. வாசித்து முடித்தபின், தொடரும் கணங்களில், நாட்களில் நமக்குள் அப்படைப்பு என்ன நிகழ்த்துகிறது என்பது முக்கியம்.

மேற்குலகில் கலை இலக்கிய விமர்சகர்கள் ஊடகங்களில் ஊதியத்திற்குப் பணிபுரிகிறவர்கள். படைப்பாளிகளுக்கும், விமர்சகர்களுக்குமான இடைபட்ட தூரம் அதிகம். நெருக்கமிருந்தால்கூட பாவபுண்ணியம் பார்த்து விமர்சனங்களை வைக்கும் வழக்கம் அதிகமில்லை. பெரும்பான்மையான விமர்சகர்கள், சுதந்திரத்துடன், எவ்வித முன்முடிபுமின்றி செயல்பட வாய்ப்புண்டு. அப்படி இருந்தும்கூட ஒவ்வொரு வாரமும் ஏதாவதொரு நூலைக்குறித்து எழுதவேண்டிய நெருக்கடியில் சரியான, நியாயமான திறனாய்வுகளை எழுதத் தவறிவிடுகிறார்கள். இங்கு நமக்குக் கூடுதக் நெருக்கடி தமிழ்ச் சூழலில் ஓர் ஆயிரம் படைப்பாளிகள் இருப்பதாகக் கொள்வோம். படைப்பு குறித்து எழுதும் திறனாய்வாளரும் அப்படைப்பாளியும் ஒரே குழுவைச் சேர்ந்தவராக அல்லது எதிராளி அணியினராக இருக்கப் பெரிதும் வாய்ப்புண்டு. நண்பர்களாக, தெரிந்தவர்களாக் இருக்கிறபோது குறைகளைச் சுட்டிக்காட்த் தயங்குவது இயற்கை. அடுத்து குற்றங்கடிகிற பேர்வழிகளை பொதுவில் படைப்பாளிகள் வெறுக்கவே செய்வோம், கொண்டாடுகிற படைப்பாளிகள் எந்த உலகிலுமில்லை. இருந்தபோதிலும் மேலை நாட்டு விமர்கர்களில் பெரும்பான்மையோர் காய்தல் உவத்தலற்று ஒரு படைப்பை அணுகுகிறார்கள் என்பதால் படைப்பாளிகள் மனம் வருந்துவதில்லை.
புதுச்சேரி மொழியியல் ஆய்வு தமிழ் ஆய்வுமாணவர்களுடன், கலந்துரையாடலை நண்பர் பக்கதவச்சல பாரதி ஏற்பாடு செய்திருந்தார் அப்போது நோபெல் பரிசுபெற்ற எழுத்தாளர் லெ கிளேஸியொவின் குற்றவிசாரணை நாவலை வாசித்ததாகவும் அது தமக்கு நிறைவைத் தரஇல்லையென்றும், அதைவிட தமிழில் நல்ல நாவல்கள் வருகின்றன என்றும் கூறியவர், தாம் நாவல்கள் அதிகம் வாசிப்பதில்லை என்ற உண்மையையும் ஒளிக்காமல் தெரிவித்தார். நண்பர் பகதவச்சல பாரதி முதிர்ந்த சிந்தனையாளர். எனவே குற்றவிசாரணை நாவல் அவருக்கு நிறைவைத் தராதது அலட்சியப்படுத்தக்கூடியதல்ல. அதனை மறுக்கின்ற வகையில் அன்று என்னிடத்தில் பதிலொன்று இருந்தும் அதை நான் சொல்வது சரி அல்ல, அதனை ஒளித்து மழுப்பலாகத்தான் ஒரு பதிலைக் கூறினேன். அந் நாவல் வெளியீட்டின்போது காலச்சுவடு சார்பாக கலந்துகொண்ட கவிஞர் சுகுமாரன் நேர்மறையான சில கருத்துக்களை எடுத்துச் சொன்னார். புத்தக வெளியீடு நிகழ்வுகளில் பெரும்பாலும் நிறைகளைச் சுட்டிக் காட்டுவதே நமது மரபு. நண்பர் பக்தவச்சல பாரதி கருத்தின் அடிப்படையில் எழுதவேண்டும் என நினைத்தபோது தற்செயலாக திரு நெல்வேலி சதகத்துல்லாஹ் அப்பா கல்லூரியைச் சேர்ந்த முனைவர் ந.ஜிதேந்திரன் என்பவர் குற்றவாளி நாவலை தாம் படித்ததாகவும், தமக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் « லெ கிளேஸியோவின் குற்ற விசாரணையில் நுண்பொருள் கோட்பாட்டியல் » என்ற தலைப்பில் கட்டுரையொன்றை திருநெல்வேலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தாம் வாசித்ததாகவும் எனக்கு எழுதியிருந்தார், எழுதியதோடு கட்டுரையையும் அனுப்பியிருந்தார். குற்றவிசாரணை நாவலைப் பற்றிய எனது கருத்திற்கு இணக்கமாக அக்கட்டுரை இருந்தது.

நண்பர் பக்தவச்சல பாரதியின் எதிர்மறையான கருத்தும், முனைவர் ந.ஜிதேந்திரன் என்பவரின் ஒத்திசைவானக் கருத்தும் இரண்டுமே நாவல் எழுதப்பட்டு நான்கு ஆண்டுகள் கழித்து வந்திருக்கின்றன. இரண்டுமே கால அவகாசத்தை எடுத்துக்கொண்டு சொல்லப்பட்டவை. எதிர்மறையான விமர்சனத்தை வைத்த நண்பர் பக்தவச்சல பாரதியை அறிவேன். நேர்மறையான விமர்சனத்தை வைத்த திரு நெல்வேலி பேராசிரியரை அவர் எனக்கு எழுதியிருந்த கடிதம் மூலம் அண்மையில்தான் அறிவேன். இரண்டுமே காலத்தின் விமர்சனம். குற்றவிசாரணை நாவல், நண்பர் பக்தவச்சல பாரதியைப்போல பிரெஞ்சு மொழியில்கூடஒரு சிலருக்கு ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது, நாவலை எதிர்மறையாக விமர்சித்த பிரெஞ்சு வாசகர்கள் இருக்கிறார்கள். அதேவேளை வெளிவந்த காலத்தில் மகத்தான வரவேற்பை பெற்றபடைப்பு, பிரான்சு நாட்டின் மிகப்பெரிய படைப்பிலக்கிய விருதான ‘கொன் க்கூர்’ விருதைப் பெற்ற நாவல்.
ஆக ஒரு படைப்புக்கு இருவகையான கருத்துக்களுக்கும் வாய்ப்புண்டு. ஒரு படைப்பை ஒட்டுமொத்த மானுடமும் இசைந்து ஏற்றுக்கொள்ள வேண்டுமாயின், அதனைக் காலம் முன்மொழியவேண்டும், காலத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அது உடனடியாக சாத்தியமில்லை என்பதால்தான் ஆயிரமாயிரம் நடிகர்கள், ஆளுக்கொரு ரசிகர்மன்றங்கள். நாவிற்கு பல ருசிகளுண்டு என்பதாலேயே உணவகங்களில் நம்முன் ஒரு பெரிய பட்டியலை நீட்டுகிறார்கள்.
ஒரு வாசகனாக நண்பர்களுக்குச் சொல்லிக்கொள்வது எந்தப் படைப்பையும் முன் முடிபுடன் அணுகாதீர்கள். தேர்தல் நிற்கிற வேட்பாளரை ஆதரித்தும், எதிர்த்தும் சொல்லப்படும் கருத்துக்களை காதில் வாங்கவேண்டியதுதான், ஆனால் வாக்குரிமை நம்முடையது. அப்பாவுக்குப் பெண்பிடித்திருக்கிறது, அம்மாவுக்கும் பிடித்திருக்கிறது, தங்கைக்குப் பெண்ணின் மூக்கு கருடன் மூக்கு என்பதன் அடிபடையிலெல்லாம் எப்படி வாழ்க்கைத் துணையைத் தேடக்கூடாதோ அதுபோலத்தான் விமர்சனங்களின் அடிப்படையிலும் ஒரு புத்தகத்தைத் தேர்வுசெய்வது சரியாகாது. வாழ்க்கைக்கு மட்டுமல்ல வாசிப்பிற்கும் நம்முடைய மனம் என்ன சொல்கிறது என்பது முக்கியம்.
———————————————

Series Navigationநீரிழிவு நோயும் இருதய பாதிப்பும்பெண்
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *