டாக்டர் ஜி. ஜான்சன்
215. திருமண ஏற்பாடு
அமைதியான இரவு நேரம். ஊரார் பெரும்பாலோர் உறங்கிவிட்டனர். பால்பிள்ளையும் வீடு சென்றுவிட்டான். நாங்கள் மட்டுமே குடும்பமாக அமர்ந்திருந்தோம். அது போன்ற வாய்ப்பு கிடைப்பது கிராமத்தில் அபூர்வம். எப்போதுமே யாராவது உறவினர் வீட்டில் இருந்துகொண்டேதான் இருப்பார்கள். அதனால் முக்கியமான குடும்ப காரியங்களை அவர்கள் இல்லாமல் தனியே பேசுவது சிரமம். அப்படி வருபவர்கள் நாங்கள் என்ன பேசினாலும் அதில் தாங்களும் கலந்துகொள்ளவே விரும்புவர். அதைத் தவிர்க்கவும் இயலாது. இது கிராமப் புறங்களில் நிலவும் ஓர் அவலம்.
நான் கூடிய விரைவில் சிங்கப்பூர் செல்லவிருப்பதை அப்பாவிடம் கூறினேன். அவர் உடனடியாக அங்கே வேலை கிடைத்துவிட்டதா என்று கேட்டார். அவருக்கு எனக்கு அங்கும் மலேசியாவிலும் வேலை கிடைக்காதது பெரும் ஏமாற்றமாகவே இருந்தது. அதனால்தான் நான் சொன்ன மாத்திரத்தில் அவர் ஆர்வத்துடன் கேட்டார். நான் தேர்வு எழுதப்போவதாகக் கூறினேன்.அதோடு கலைமகளையும் உடன் கூட்டிக் செல்வதாகவும் கூறினேன். அவர் எதற்காக என்று கேட்டார்.
நான் கோவிந்தசாமி வந்து சென்றதையும் அவனின் கடிதம் பற்றியும் கூறினேன். அது கேட்டு சற்று நேரம் அமைதி நிலவியது. அவர் யோசிக்கட்டும் என்று காத்திருந்தேன்.
” அவன் நல்ல பையன்தான். கெட்டிக்காரன். சொந்தமாகப் படித்து தமிழ் ஆசிரியராகியுள்ளான். ” அப்பா மெளனம் கலைத்தார். அவரும் ஒரு தமிழ் ஆசிரியராக சிங்கப்பூரில் பணிபுரிந்தவர்தானே.
” அவ்வளவு தூரத்தில் கட்டிக் கொடுப்பதா? ” அம்மாதான் அப்படிக் கேட்டார். பெத்த மனம் அன்றோ!
” எனக்கு அங்கெ வேலை கிடைத்ததும் நானும் அங்கே இருப்பேனே? ” நான் அம்மாவிடம் கூறினேன்.” நான் அங்கு இருக்கப்போவதால்தானே நண்பனுக்கு மணம் முடிக்க விரும்புகிறேன். ” நான் தொடர்ந்தேன்.
” நிச்சயமாக வேலை கிடைத்துவிடுமா? ” அப்பா கேட்டார்.
” நன்றாக தயார் செய்து தேர்வு எழுதுவேன். நிச்சயம் பாஸ் செய்துவிடுவேன். ” நான் உறுதியாகச் சொன்னேன்.
மீண்டும் மெளனம்.
” மாமாவிடம் சொன்னாயா? ” அம்மா கேட்டார்.
” சொல்லிவிட்டேன்.அவர் சரியென்றார். ” என்றேன்.
” கலைமகளை செல்வராஜூவுக்கு கட்டிவைக்க மாமா ஆசைப்பட்டதே? ” அம்மா கேட்டார். செல்வராஜ் செல்லக்கண்ணு மாமாவின் மூத்த மகன்.
” ஆமாம். நான் கலைமகளை என் நண்பனுக்கு கட்டிவைத்துவிட்டு, கலைசுந்தரியை வேண்டுமானால் செல்வராஜூவுக்கு கட்டிவைத்து விடலாம் என்றேன். அவர் அதற்கு சம்மதம் தெரிவித்துவிடடார். ” என்றேன்.
” உம்? ….எனக்கு கல்யாணமா? ” கலைசுந்தரி விழித்துக்கொண்டாள்.
” அதில் என்ன தப்பு? உனக்கும் அவன் மாமன் மகன்தானே? ” நான் கலைசுந்தரியிடம் கேட்டேன்.
பதில் இல்லை.
” நான் கலைமகளுடன் சிங்கப்பூர் செல்லுமுன் உன் திருமணத்தையும் முடித்துவிட்டுச் செல்ல விரும்புகிறேன். இப்போது விட்டால் பின் நாங்கள் இருவரும் உங்கள் திருமணத்துக்கு வர முடியுமா என்பது தெரியவில்லை. அதனால் நாங்கள் இங்கே இருக்கும்போதே உன் திருமணத்தை நடத்திவிடலாம். ” நான் கலைசுந்தரியிடம் விளக்கினேன்.
” நீ எப்போது போகிறாய்? ” அப்பா கேட்டார்.
” அது அங்கு நடக்கவிருக்கும் தேர்வைப் பொறுத்துள்ளது. அநேகமாக மூன்று மாதங்கள் ஆகலாம். அதற்குள் நாள் பார்த்து இங்கே திருமணத்தை நடத்தி விடலாம். ” என்றேன்.
” ரொம்பவும் அவசரக் கல்யாணம் போல் உள்ளதே? ” அப்பா கூறினார்.
” இதில் நாள் கடத்த வேண்டியதில்லை. மாமாவிடமும் பேசிவிட்டேன். செல்வராஜ் கடலூரில்தான் மத்திய அரசின் வேலையில் உள்ளான். அவனிடம் சொல்லிவிட்டு திருமணத்தை தெம்மூரிலேயே வைத்துக்கொள்ளலாம். மாமாவிடம் பணம் இருக்கும். வேலுப்பிள்ளை மாமாவும், பாலமுத்து மாமாவும் நெய்வேலியில் வேலையில் உள்ளார்கள். குடும்பத்தில் முதல் திருமணம் என்பதால் அவர்களும் உதவுவார்கள். நாம் கலைசுந்தரிக்கு வேண்டிய நகைகளை வாங்கவேண்டும். வேறு அதிக செலவுகள் இருக்காது. ” நான் திருமணத்தை எளிமையாக முடிக்கலாம் என்பதை அவ்வாறு விளக்கினேன்.
அப்பா சம்மதிப்பது தெரிந்தது. பெண் பிள்ளைகள் என்றால் எப்போதாவது மணமுடித்துத் தரவேண்டியது அவருக்குத் தெரிந்திருக்கும். அம்மாவுக்கு கலைமகள் பற்றிய கவலை வந்துவிட்டது. அவர் ஏதும் பேசவில்லை. ஏதாவது சொன்னால் அப்பாவுக்கு உடன் கோபம் வரும் என்பது அவருக்குத் தெரிந்ததே!
கலைசுந்தரி என்னையே பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.
” நீ என்ன சொல்கிறாய்? செல்வராஜை திருமணம் செய்துகொள்ள சம்மதமா? ” நான் அவளிடம் கேட்டேன்.
” நீதான் முடிவு செய்துவிட்டாயே. பின் நான் என்ன சொல்வது? ” கேள்வி கேட்டாள்.
” உன் நன்மைக்குத்தான் சொல்கிறேன். உனக்கும் முறை மாப்பிள்ளைதான். நல்ல குணசாலி. அத்தை மகளான உன்னை நன்றாக வைத்துக்கொள்வான். மத்திய அரசாங்க வேலை. இருவரும் நன்றாக இருக்கலாம். நான் இங்கே இருக்கும்போதே கல்யாணத்தை வைத்துக்கொள்வது நல்லது. இப்போ நீ சொல். சம்மதம்தானே? ”
” நீ சொன்னால் சரிதான். ” அவளுக்கு தெம்மூரில் அப்பாவின் கண்டிப்பில் இருப்பது சிரமமாக இருக்கும். திருமணம் செய்துகொண்டு செல்வராஜுவுடன் கடலூர் சென்று விடலாம்.
எல்லாரும் சம்மதித்துவிட்டதால் உடனடியாக திருமண ஏற்பாட்டில் இறங்கினேன்.முதலில் தரங்கம்பாடி சென்று அண்ணனிடமும் அண்ணியிடமும் இதைச் சொல்லிவிடவேண்டும். அவர்களும் நிச்சசயம் சம்மதிப்பார்கள். அவர்கள் இருவரும் தரங்கம்பாடியில் பணியில் இருப்பதால் அடிக்கடி தெம்மூர் வருவதில்லை. தங்கைகள் இருவருக்கும் திருமணம் முடித்துவிடுவது நல்லது என்றுதான் நினைப்பார்கள்.ஆதலால் பிரச்னை இல்லை.
நாளைசெல்லக்கண்ணு மாமாவை மீண்டும் சந்தித்து திருமணத்துக்கு நாள் குறித்தாக வேண்டும். அதோடு கடலூருக்கு ஆள் அனுப்பி செல்வராஜைக் கூட்டிவரவேண்டும். அவனிடம் நானே சொல்லிவிடுவேன்.என் மீது அவனுக்கு மிகுந்த மரியாதை. நான் சொன்னால் கேட்பான்.
காலையில் பசியாறியபின் பால்பிள்ளையுடன் நான் மாமாவைப் பார்க்கச் சென்றேன். வழக்கம்போல், ” வாங்க தம்பி ” என்று வரவேற்றார்.அவர் உற்சாகமாகக் காணப்பட்டார்.
” தம்பி… ஒரு விஷயம்…. ” என்று இழுத்தார்.
” சொல்லுங்கள் மாமா. ” என்றேன்.எனக்கு கொஞ்சம் தடுமாற்றம் உண்டானது.
” செல்வராஜ் கல்யாணத்துடன் இன்பராஜ் கல்யாணத்தையும் ஒரே மேடையில் நடத்திவிடலாம் போல் எண்ணுகிறேன். ” என்றார் தயக்கத்துடன்.
இன்பராஜ் செல்வராஜின் தம்பி. அவனை தீனிப்பெட்டி என்று செல்லமாக அழைப்பார்கள். சிறுவயதில் அவனுக்கு எப்போதும் தீனிதான் தின்றுகொண்டிருக்கவேண்டும். அவனும் நெய்வேலியில் வேலையில் உள்ளான். அவனுக்கும் சேர்ந்தாற்போல் திருமணத்தை முடித்துவிடலாம். இரண்டு திருமணங்களையும் மாமா வீட்டில் சிறப்பாக நடத்தலாம்.
” அப்படியே செய்யலாம் மாமா. ” என்றேன்.
” அவனுக்கும் ஒரு அத்தை மகள் இருக்கிறாள். ” மாமா உற்சாகமாகக் கூறினார்.அவனுக்கு அம்மாவின் தங்கையான நெடுமூர் கனகு சின்னம்மாளின் மகள் சுசிலாவை கட்டிவைக்க மாமா ஆசைப்பட்டார்.
செல்வராஜூவுக்கும் இன்பராஜூவுக்கும் இரண்டு அத்தை மகள்களை திருமணம் செய்ய முடிவானது. கிராமத்தில் இதுபோன்ற திருமணத்தால் உறவைக் காத்துக்கொண்டனர். அத்தை மகளை, மாமன் மகளை விரும்பியே திருமணம் செய்துகொண்டனர்.
” சரிங்க மாமா. செல்வராஜை அழைக்க ஆள் அனுப்புங்கள். நாம் திருமண நாளைக் குறிப்போம்.” என்றேன்.
” நெய்வேலிக்கு காலையிலேயே பாச்சியை அனுப்பிவிடடேன். ” என்றவாறு சுவற்றில் மாட்டியிருந்த காலண்டரை எடுத்துவந்தார்.
பாச்சி என்பது அவரின் இன்னொரு மகன். தேவராஜ் என்ற பெயரை செல்லமாக பாச்சி என்று அழைக்கிறார்கள்.
காலண்டரைப் பார்த்து நாள் குறித்தோம்.அது ஒரு சனிக்கிழமை. திருமணத்தை காலையில் வைத்துக்கொண்டு மதிய விருந்துக்கு முடிவு செய்தோம். செல்வராஜ் கலைசுந்தரி திருமணத்தை அற்புதநாதர் ஆலயத்திலும், இன்பராஜ் சுசிலா திருமணத்தை மாமா வீட்டின் அருகிலுள்ள அவர்களின் குலதெய்வக் கோவிலில் நடத்திவிட்டு வரவேற்பை பந்தலில் ஒன்றாக நடத்தலாம் என்றும் முடிவு செய்தோம்.
திருமண வரவேற்பை எல்.இளையபெருமாள் தலைமையில் நடத்தவும் முடிவு செய்தொம். அவர் காட்டுமன்னார்கோவில் பாராளுமன்ற உறுப்பினர். பழுத்த காங்கிரஸ்வாதி. தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர். பிரதமர் இந்திரா காந்திக்கு மிகவும் நெருக்கமானவர்.அவரின் பூர்வீகம் தெம்மூர்.
இரண்டு திருமணங்களை நடத்த மாமாவிடம் பணம் இருந்தது. நாங்கள் கலைசுந்தரியின் திருமணத்துக்கு வேண்டிய பணத்தை தயார் செய்யவேண்டும்.
அன்று மதியம் செல்வராஜ் வந்துவிட்டான். நான் அவனிடம் பேசி சம்மதம் பெற்றேன்.அவனுக்கு கலைமகள் மீதுதான் ஆசை. இருந்தும் கலைசுந்தரியை மணந்துகொள்ள சம்மதித்தான்.
அன்று மதிய உணவை மாமா வீட்டில் முடித்துக்கொண்டேன். வழக்கம்போல் வாழை இலையில் உணவு பரிமாறினார்கள். மாமா மல்கோவா மாம்பழம் சீவி வைத்தார். மாமா வீட்டில் நான் சாப்பிடும்போதெல்லாம் எனக்கு மாமா அப்படி எனக்குப் பிடித்த மல்கோவா மாம்பழம் பரிமாறுவது வழக்கமானது.
அன்று மாலை நான் தரங்கம்பாடிக்குப் புறப்பட்டேன்.
( தொடுவானம் தொடரும் )
- விளக்கு விருது – 21 வருடங்கள்
- நியூட்ரினோ ஆய்வு மையம், ஸ்டெர்லைட் தொழிற்சாலை – தமிழகம் அழிவுத்திசையில் செல்கிறதா?
- புதுமைப்பித்தன் நினைவு விளக்கு விருது – 2016 | ச.தமிழ்ச்செல்வன் உரை
- புதுமைப்பித்தன் நினைவு விளக்கு விருது – 2016 | சமயவேல் உரை
- புதுமைப்பித்தன் நினைவு விளக்கு விருது – 2016 | ஸ்டாலின் ராஜாங்கம் உரை
- புதுமைப்பித்தன் நினைவு விளக்கு விருது – 2016 | எஸ். ராமகிருஷ்ணன் உரை
- ச தேவதாஸ் உரை – புதுமைப்பித்தன் நினைவு – விளக்கு விருது – 2016
- வ கீதா உரை – புதுமைப்பித்தன் நினைவு – விளக்கு விருது – 2016
- பொம்மைகள்
- யான் x மனம் = தீா்வு
- மூன்று முடியவில்லை
- தொலைந்து போகும் கவிதைகள்
- நீரிழிவு நோயும் கால்கள் பாதுகாப்பும்
- தொடுவானம் 215. திருமண ஏற்பாடு
- துரித உணவு
- புத்தகங்கள்
- இயற்கையை நேசி
- பொன்மான் மாரீசன்
- நெஞ்சுக்குள் எட்டிப் பார் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
- மொழிபெயர்ப்புத் திறனாய்வாளராக அறியப்படுவதற்கு ஒருவருக்கு இருக்கவேண்டிய முக்கியத் தகுதிகள்
- எத்தனையாவது
- விண்வெளியில் புதன் கோள்போல் சூடான, திண்ணிய உலோகக் கோளைப் புதியதாய்க் கண்டுபிடித்தார்.