மருத்துவக் கட்டுரை பக்க வாதம்

This entry is part 11 of 19 in the series 8 ஏப்ரல் 2018

டாக்டர் ஜி. ஜான்சன்

பக்கவாதம் என்பது உடலின் ஒரு பக்கம் முகம், கைகள், கால்கள் செயலிழந்துபோவது. இது இன்னொரு நோயின் விளைவே. அந்த நோய்தான் ” ஸ்ட்ரோக் ” என்பது. இதன் பொருள் அடி என்பதுதான். உண்மையில் இது மூளையில் உள்ள இரத்தக் குழாயில் உண்டாகும் திடீர் விபத்து. இதை Cerebrovascular Accident என்பார்கள். இதை மூளை இரத்தக்குழாய் விபத்து என்னலாம். இங்கு இரத்தக்குழாய் என்பது தமனியைக் குறிப்பதாகும். இது 65 வயதுக்குமேல் உள்ளவர்களுக்கு அதிகமாக உண்டாகலாம். அதோடு இரத்தக்கொதிப்பு உள்ளவர்களுக்கும் இது வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
தமனியில் கொழுப்பு படிந்து அதன் சுவர்களை தடிக்கச்செய்கிறது. இதை Atherosclerosis என்பர். இது மூளையில் இரண்டு விதத்தில் விபத்தை உண்டுபண்ணுகிறது

* மூளைக்கு இரத்தக் குறைவு உண்டாகும் விபத்து.
* மூளையில் இரத்தக் கசிவால் உண்டாகும் விபத்து.
இந்த இருவகை விபத்தாலும் மூளை பாதிக்கப்பட்டு அதனால் பக்கவாதம் உண்டாகிறது. இந்த விபத்து மூளையின் இடது பக்கம் ஏற்பட்டால் உடலின் வலது பக்கம் வாதம் உண்டாகும். மூளையின் வலது பக்கம் விபத்து உண்டானால் உடலின் இடது பக்கம் வாதம் உண்டாகும்.
பக்கவாதம் திடீரென்று உண்டாகலாம். பாதிக்கப்பட்டுள்ள இரத்தக்குழாய் வெடித்து மூளைக்குள் இரத்தம் கசிந்து ஓடுவதால் இப்படி ஆகிறது.இது பெரும்பாலும் இரத்தக் கொதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு எளிதில் உண்டாகும்.இதுவே ஆபத்தானது. உடனடி சிகிச்சை செய்யாவிடில் மரணம் நேரலாம். தமனியில் அடைப்பு உண்டாகி இரத்தவோட்டம் தடைபடும்போது பக்கவாதம் மெதுவாக உண்டாகும்.
இந்த ” ஸ்ட்ரோக் ” என்னும் மூளையில் உண்டாகும் விபத்து வரப்போகிறது என்பதை சில அறிகுறிகள் மூலம் அறிந்துகொள்ளலாம்.இ ந்த இரண்டு விதமான விபத்துகளின் அறிகுறிகள் ஒரே விதமாக இருக்கலாம். ஆனால் மூளையின் எந்தப் பகுதியில் இது உண்டானது என்பதைப் பொருத்தும் அறிகுறிகள் மாறும். இரத்தக்கொதிப்பு அதிகம் உள்ளது தெரியாமல் இருந்தால் அல்லது தெரிந்தும் சரியாக வைத்தியம் செய்துகொள்ளாமல் போனால் அவர்களுக்கு அறிகுறிகள் இல்லாமல் திடீர் விபத்து நேரலாம்.
அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள், அதிகமான இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் பின்வரும் அறிகுறிகள் பற்றி எச்சரிக்கையாக உள்ளது நல்லது. அது ஒருவேளை ” ஸ்ட்ரோக் ” உண்டாவதின் அறிகுறியாகவும் இருக்கலாம். அதனால் அவர்கள் மருத்துவரை நாடுவது நல்லது.

* பார்வையில் மாற்றம் – திடீரென்று பார்வை மங்குதல், ஒரு பொருள் இரண்டாகத் தெரிவது அல்லது திடீரென்று ஒரு கண்ணில் பார்வையை முழுதும் இழந்துவிடுவது போன்றவை கண்ணுக்கு இரத்தம் கொண்டுசெல்லும் தமனியில் அடைப்பு உள்ளது என்பதைக் குறிக்கும். இது மூளையில் இரத்தக்குழாய் விபத்து உண்டாகப்போவதின் அறிகுறியாகும். இதை நாம் அதிக களைப்பு அல்லது அதிகம் படித்ததால் கண்ணுக்கு உண்டான சோர்வு என்று தவறாக எண்ணுவதுண்டு.

* தூங்கி எழும்போது ஒரு கை அல்லது கால் மரத்துப்போன உணர்வை நாம் அப்பகுதியில் நரம்பு அழுத்தமுற்றதாக எண்ணுவதுண்டு. அது தவறு. அந்த மதமதப்பு ஒரு சில நிமிடங்களில் மறைந்துபோகாவிடில் அதுவும் ஓர் அறிகுறி என்பதை உணரவேண்டும். முதுகுத் தண்டிலிருந்து மூளைக்கு இரத்தம் கொண்டு செல்லும் தமனி குறைவான இரத்தத்தை தலையின் பின்புறம் கொண்டுசெல்வதால் உண்டான மாற்றம் அது.

* நினைவின்மை – ஒரு பொருளின் பெயரை திடீரென்று நினைவு கூறுவதில் தடுமாற்றம் சில நேரத்தில் ஏற்படாலாம். ஆனால் நீண்ட நேரம் எது பற்றியும் எண்ண முடியாமலும் பேசமுடியாமலும் போவது மூளைக்கு இரத்தவோட்டம் தடைபட்டுள்ளதையே குறிக்கும். மூளையில் தமனி அடைப்புக்கு உள்ளாவதின் அறிகுறி இது.

* நடையில் தடுமாற்றம் – மது அருந்தியதால் நடை தடுமாறுவது இயல்பு. அனால் மது அருந்தாமலும் நடையில் தடுமாற்றம் உண்டானால் மூளைக்கு இரத்தவோட்டம் குறைவு பட்டுள்ளதாக பொருள். உடன் மருத்துவரை நாடுவதே நல்லது.

* பேச்சில் தடுமாற்றம் – திடீரென்று நா குழறி பேசினால் அதையே அறிகுறியாகக்கொண்டு உடன் மருத்துவரை நாடவேண்டும்.

* கடுமையான தலைவலி – இதை பலர் ஒற்றைத் தலைவலி என்பதுண்டு. அனால் ஒற்றைத் தலைவலி இல்லாதவர்களுக்கு திடீரென்று தலையின் ஒருபக்கத்தில் கடுமையாக வலிப்பது பாக்கவாதம் வரப்போவதின் அறிகுறியாகவும் இருக்கலாம். உடன் மருத்துவரைப் பார்ப்பதே நல்லது.

ஆகவே இத்தகைய அறிகுறிகள் உண்டானால் அது மூளையில் இரத்தக்குழாயில் விபத்து ( ஸ்ட்ரோக் ) நிகழ்ந்துள்ளது என்பதையும், அதனால் பக்கவாதம் உண்டாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதையும் அறிந்து எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

( முடிந்தது )

Series Navigationநான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்? திரு.மாரிதாஸின் நூல் குறித்த ஒரு சிறு அறிமுகம்தொடுவானம் 216. துரித பயண ஏற்பாடு
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *