இந்த மாமியார் கொஞ்சம் வித்தியாசமானவர்

This entry is part 9 of 22 in the series 22 ஏப்ரல் 2018

 

 

பாபுவின் மனைவி சசிகலா-சசி- கர்ப்பிணியாக இருந்தாள். அவளைப் பார்க்கும் சாட்டில் பாபுவின் பெற்றோர் பிறிதொரு மாநிலமான சிட்னியில் இருந்து வரவிருப்பதாக பாபு, தன் நண்பன் முகுந்தனிடம் சொன்னான். அவர்கள் வந்து போனதன் பிற்பாடு சசியின் பெற்றோர் வளைகாப்பு வைத்து, பிள்ளைபேற்றை ஒழுங்குமுறையில் கொண்டாட இலங்கையில் இருந்து வர இருக்கின்றார்கள் என்றும் சொன்னான்.

 

அவன் இந்தச் செய்தியைச் சொல்லி இரண்டுநாட்கள் இருக்கும், பாபுவின் தாயார் சிட்னியிலிருந்து முகுந்தனிற்கு ரெலிபோன் செய்தார்.

 

“தம்பி… வாறகிழமை மெல்பேர்ணிற்கு வாறம்.”

 

“ஓம் அனரி தெரியும். பாபு சொன்னவன்.”

 

“ஆனால் இது உமக்குத் தெரியாது. நாங்கள் உம்முடைய வீட்டிலைதான் தங்கப் போறம். இரண்டுகிழமைதான் நிற்போம்.”

 

முகுந்தனிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

 

“ஏன் அன்ரி. மகன்ரை வீட்டிலை நிக்கிறதுதானே முறை. அவைக்கும் மகிழ்ச்சியா இருக்கும்.”

 

“அதையேன் தம்பி கேக்கிறாய். எனக்கும் மருமகளுக்கும் ஒத்துவராது.”

 

மாமியார் மருமகள் சண்டை ஒண்டும் உலகத்திற்குப் புதிதல்லவே! முகுந்தன் ஓம் என்று சொல்லிவிட்டான்.

 

”அது சரி தம்மி… உம்முடைய மனிசிக்கு இப்ப எப்பிடி? கால் முறிஞ்சு ஆறுமாதம் இருக்கும் என்ன?”

 

“ஓம் அன்ரி… நொண்டி நொண்டித்தான் எல்லா வேலையும் செய்யுறா. இன்னும் தடியோடைதான்”

 

முகுந்தனின் மனைவி கடற்கரையில் விழுந்து, நடக்கமுடியாமல் கடந்த ஆறுமாதங்களாக ஊன்றுகோலின் (crutch) உதவியுடன் நடமாடித் திரிகின்றாள்.

 

பாபுவின் பெற்றோரைக் கூட்டி வருவற்காக பாபுவும் முகுந்தனும் மாலை நாலுமணியளவில் மெல்பேர்ண் விமானநிலையம் சென்றார்கள்.  மாமியார் 40 கிலோ இருப்பார் என்றால், அவர் கொண்டுவந்த பொதிகளோ 80 கிலோ இருந்தன. முகுந்தனின் வீட்டிற்குச் சென்றதும் பத்துநிமிடங்கள் இளைப்பாறிவிட்டு பொதிகளைப் பிரித்தார்.

 

முருக்கங்காய்க்கட்டு, பத்தியத்தூள், உப்பு, புளி, கருவாடு என்று ஏகப்பட்ட பொருட்கள் மருகமளிற்காகக் கொண்டுவந்திருந்தார். முகுந்தனின் மனைவி தேநீர் போட்டுக் கொடுத்தாள். மருமகளைப் பார்க்கும் அவசரத்தில் அவளைப் பற்றிய சுகங்களைக் கேட்கவில்லை.

 

உடனேயே சசியைப் பார்க்கச் சென்றுவிட்டார். ஒவ்வொன்றாக மருமகளின் கையில் தான் கொண்டுவந்த பொருட்களை எடுத்து வைக்க வைக்க மருமகள் குளிர்ந்துவிட்டார். அவளுக்கு மாமியார் வந்து தன்னுடன் தங்கவில்லை என்ற புளுகம்.

 

“மாமி… உங்களை எத்தினை தரம் இஞ்சை வந்து நில்லுங்கோ… இஞ்சை வந்து நில்லுங்கோ எண்டு கேட்டனான். கடைசிவரையும் நிக்கமாட்டன் எண்டு சொல்லிப் போட்டியள். எனக்குச் சரியான கோபம் மாமி உங்களிலை” மாமியார் மெச்சிய மருமகளாகத் திகழ்ந்தாள் சசி.

 

“நீயடி பாவம் பிள்ளை. பிள்ளைத்தாச்சியோடை சரியாய் கஸ்டப்படுவாய் எண்டு சொல்லித்தானே நாங்கள் முகுந்தன் வீட்டிலை நிக்கிறம். இந்த மனிசனுக்கு – உன்ரை மாமாவுக்கு – வேறை வித்தியாசம் வித்தியாசமான சாப்பாடு வேணும். இருந்த இரையிலை மருந்துக்குளிசையள் குடுக்க வேணும். அடிக்கடி ரீ, கோப்பி குடிக்க வேணும்” முகுந்தன் அங்கே இருப்பதையும் மறந்து சொல்லிக்கொண்டே போனார் அவர். பின் சசியின் தலைமயிரைப் பிடித்துப் பார்த்தார். அவளிற்கு நல்ல நீட்டுத்தலைமயிர்.

 

“என்ன சம்பூ பிள்ளை பாவிக்கிறனீர்?”

அவள் சம்பூப் போத்தலை எடுத்துவருவதற்காக பம்பரம்போல விரைந்து நடந்தாள்.

 

“பிள்ளை… கவனம் மெதுவா நடவும்.”

 

இந்த உரையாடல் இங்கு நிகழும்போது, முகுந்தனின் வீட்டில் அவனின் இளிச்சவாய் மனைவி தன் இரண்டு பிள்ளைகளையும் மேய்த்துக்கொண்டு நொண்டி நொண்டி வந்திருப்பவர்களுக்கு இரவு உணவு தயாரித்துக் கொண்டிருந்தாள்.

 

“இந்த மாமியார் கொஞ்சம் வித்தியாசமானவர்” என நினைத்தபடி முகுந்தன் வீட்டிற்குப் புறப்படத் தயாரானான். ‘ஒத்துவராதாம்” என்பதற்கு இப்படியும் ஒரு அர்த்தம் இருப்பதை முகுந்தன் அன்றுதான் அறிந்துகொண்டான்.

 

 

Series Navigationதிசைகாட்டிவள்ளல்
author

கே.எஸ்.சுதாகர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *