உடைந்த தேங்காய் ஒன்று சேராது

This entry is part 8 of 16 in the series 6 மே 2018

 

‘அவசரம். அரை மணி நேரத்தில் நீங்கள் இங்கிருக்க வேண்டும். இல்லாவிட்டால்..’ என்று தொடரந்த அந்த மனநல நோய் மருந்துவமனை தாதியை இடைமறித்தேன். ‘இருபத்தொன்பது நிமிடத்தில் அங்கிருப்பேன்’ என்று சொல்லி துப்பாக்கியில் விடுபட்ட குண்டானேன். பறந்தேன். இலக்கைத் தொட்டேன். படுக்கையில் அன்சாரி. இரண்டு கைகளிலும் தோள்பட்டையிலிருந்து மணிக்கட்டுவரை கட்டுப் போடப்பட்டிருந்தது. அவருடைய ரத்தம் தோய்ந்த பழைய சீருடை சுருட்டிக் கிடந்தது. புதிய சீருடையில் புதிய கட்டுக்களுடன் என்னைப் பார்ந்து சிரிக்கிறார். தாதி ‘ஆபத்து’ என்றார். இவரோ சிரிக்கிறார். தாதியே சொன்னார். ‘படிப்பதற்காக ஒரு புத்தகம் கொடுத்தேன். அதன் மையத்தில் இருந்த பின்னைக் கழற்றி நீட்டி தோள்பட்டையிலிருந்து மணிக்கட்டுவரை கிழித்துக் கொண்டு விட்டார்  அய்யா. நான் வந்து பார்த்தபோது எல்லா விரல் நுனிகளிலிருந்தும் ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. அவசரப் பிரிவிலிருந்து இப்போதுதான் வெளியே கொண்டு வந்தோம். ஏன் இப்படிச் செய்தார் என்று புரியவில்லை. நீங்களே கேளுங்கள் அய்யா’ நான் அன்சாரியைப் பார்த்தேன். அந்தச் சிரிப்பு இன்னும் அந்த உதடுகளில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. ‘அன்சாரி. ஏன் இப்படிச் செய்தீர்கள்.’

‘இரவு 12 மணிக்கு ஆரம்பித்த்து ரஜித். இன்று பகல் 12 மணிவரை சதா கேட்டுக் கொண்டே இருக்கிறது. ‘ரத்தம் தா. நிம்மதி தருகிறேன். ரத்தம் தா. நிம்மதி தருகிறேன்’ என்று

‘யார் கேட்டது?’

‘என் ஆவி கேட்டது. ஒரு நிமிடம் கூட தூங்கவில்லை.’

‘அந்தக் குரலை அடையாளம் காணமுடிந்ததா?’

‘நிச்சயமாக. அது என் குரல்தான். என் ஆவி என் குரலில்தானே பேசும்’

அந்தப் புன்சிரிப்பு மழைச்சத்தமாக மாறுகிறது. இரைச்சலாக மாறுகிறது. இடியாக மாறுகிறது. எல்லாரும் கலவரமாகத் திரும்பிப் பார்க்கிறார்கள். நான் அவர் வாயைப் பொத்தி அமைதிப் படுத்தினேன்.

எப்படி இருந்தவர் இந்த அன்சாரி. நான் இன்று சிங்கையில் இருக்கிறேனென்றால் அதற்குக் காரணம் இந்த அன்சாரிதான். இவர் ஆங்கிலத்தில் கடிதம் எழுதுகிறாரென்றால் நாவற்பழம் உருண்டு ஒடுவதுபோல் இருக்கும். ஒவ்வொரு வார்த்தைக் குள்ளிருந்தும் இரண்டு கரங்கள் வெளியே வந்து பூத்தூவும். அவர் கடித்த்திற்கு எதிர் முடிவு எடுப்பது எந்த அரசு அதிகாரிக்குமே சிரம்ம்தான்.என் குடியுரிமைக்காக அரசுக்கு பரிந்துரை செய்த ஒவ்வொரு கடிதமும் அன்சாரி எழுதியதுதான். நான் அடிக்கடி சொல்வேன். எனக்குக் குடியுரிமை கிடைத்தது என் படிப்புக்காக அல்ல. அன்சாரியின் கடித்த்துக்காகத்தான் என்று.  அப்பேர்ப்பட்ட அபூர்வ மனிதர்தான் இன்று மனநல மருந்துவமனையில் இரண்டு  கைகளையும் கம்பியால் கிழித்துக் கொண்டு கிடக்கிறார். எப்படி வந்தது இந்த நிலை?

கொஞ்சம் பின்னோக்கிப் பயணிப்போமா?

அன்சாரியின் தகப்பனார் யாக்கூபுக்கு கிளமெண்டியில் பணமாற்று வியாபாரம்.ஓஹோ என்ற வசதியில்லை. ஆனாலும் தன் தேவைக்குரிய வருமானம் இருந்தது. அன்சாரிக்குத் திருமணமாகி சில மாதங்கள் ஆகியிருந்தன. ஐரோப்பிய நாடுகளுக்கு தேன்நிலவு செல்ல ஏற்பாடுகள் ஆகிக் கொண்டிருக்கிறது. ஜெர்மனி, பாரீஸ், சுவீடன், நீயூசிலாந்து என்று பாதி உலகத்தையே பதினைந்து நாட்களுக்குள் சுற்ற ஏற்பாடுகள் நடக்கின்றன. விமான டிக்கட்டுகள் எல்லாம் வந்துவிட்டது. அப்போதுதான் நடந்தது ஒரு விபரீதம். அன்சாரியின் தகப்பனார் யாக்கூபின் கடையில் பல ஆயிரம் கள்ளப்பசசையை மாற்றிவிட்டு பறந்துவிட்டான் ஒரு திருடன். கள்ளப்பச்சை என்றால் கள்ள அமெரிக்க டாலர். யாக்கூபால் சமாளிக்க முடியாத ஒரு தொகை அது. ஒரே சமயத்தில் யாக்கூபின் தலையில் இரண்டு சுத்தியடி. பல ஆயிரம் பணத்தை இழந்தது ஒரு அடி. கள்ளப்பச்சையை மாற்ற முயன்றதாக காவல்துறை வழக்கு மறு அடி. பச்சைப் புல்லில் நெருப்பு மழை பொழிகிறது. தன் மனைவியின் பெயரைக்கூட அவரால் ஞாபகப்படுத்த முடியவில்லை.

அடுத்த நாள் இரவு. சாப்பாட்டு மேசையில் மூவரும். அன்சாரி. யாக்கூப், அன்சாரியின் தாயார் சஃபியா. யாக்கூப்தான் பேச்சைத் தொடங்கினார். ‘இப்போது நீ வெளிநாடு போகவேண்டாம். டிக்கட்டுகளைக் கான்சல் செய்துவிடு. நீ என் கூடவே இருக்க வேண்டும். ‘

‘முடியாதத்தா.  என் மேனேஜர் அலியிடம் சொல்லிவிட்டுப் போகிறேன். உங்களுக்கு எந்த உதவி தேவையானாலும் அவரைக் கேட்டுக் கொள்ளுங்கள்.’

‘இல்லை அன்சாரி. நான் இதுவரை உன் விருப்பங்களுக்குக் குறுக்கே நின்றதில்லை. உனக்குத் தெரியும். உன்னை இருக்கச் சொல்வதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இதுவரை நான் ஏமாற்றப்பட்டதில்லை. நான் போலிஸ் வழக்குகளையெல்லாம் சந்தித்ததே இல்லை. ரொம்ப பயமாக இருக்கிறது. பார். உன்னோடு பேசிக் கொண்டிருக்கும்போதே எனக்கு எப்படி வியர்க்கிறது பார்.’

‘அதெல்லாம் ஒன்றும் ஆகாதத்தா. என் மனைவியை என்னால் சமாதானப்படுத்த முடியாது.’

‘இதைவிடப் பெரிய சண்டையெல்லாம் நானும் உங்க அம்மாவும் போட்டிருக்கிறோம். இனிமேல் சேரவே முடியாது என்று கூட தீர்மானித்திருக்கிறோம். சரியாயிடும்பா. நீ போகாதே. ‘

‘சரியாகாதத்தா.எனக்குத் தெரியும். நான் அப்படிக் கான்சல் செய்தால் அவளிடமிருந்து டைவர்ஸ் நோட்டிஸ்தான் வரும். நிச்சயம் வரும்.’

‘வரட்டுமே. பிறகு பேசி சமாதானப்படுத்திக் கொள்வோம்.’

‘உடைந்த தேங்காய் ஒன்று சேராதத்தா.’

அதுவரை சும்மா இருந்த சஃபியா சும்மாவே இருந்திருக்கலாம். அவர் மட்டும் அப்போது சும்மா இருந்திருந்தால் இன்று கைகளைக் கிழித்துக் கொண்டு பைத்தியக்கார மருத்துவமனையில் அன்சாரி படுத்துக் கொண்டிருக்க மாட்டார்.

‘அவன்ட்ட ஏன் கெஞ்சுறீங்க. அவன் என்ன நம்ம பெத்த புள்ளயா. நாம சொல்றதக் கேக்கிறதுக்கு.’

இரண்டு கிலோ டுரியான் தலையில் விழுந்த்துபோல் விழி பிதுங்கி அதிர்ந்தார் அன்சாரி.

‘அப்ப நா ஒங்க புள்ள இல்லியா?’

கேட்ட மாத்திரத்தில் யாக்கூபும் சஃபியாவும் அங்கிருந்து அகன்று விட்டார்கள். காற்றில்லா மண்டலத்தில் மிதப்பதுபோல் இருக்கிறது அன்சாரிக்கு. உலகமே தீடீரென்று நிசப்தமாகிவிட்டது. ‘உண்மையில் நிசப்தமா. இல்லை என் காது செவிடாகிவிட்டதா? ‘ அன்சாரி விடுவதாக இல்லை. முதன்முறையாக அவரின்  கண்ணாடி மனத்திரையில் ஆணிக்கோடு விழுகிறது. அடுத்தடுத்து விழுகிறது. விழிகள் சிவப்பேறுகிறது. முரட்டுத்தனமாக அம்மாவின் அறைக் கதவைத் தள்ளுகிறார். அந்தத் தாழ்ப்பாள் உடைந்து டங்கென்று விழுகிறது. சஃபியா பயப்படவில்லை. ‘ஆமாண்டா. நீ எங்க புள்ள இல்ல. நீ என்ன செய்யணுமோ செஞ்சுக்கோ’  குடும்பமே கொதிக்கிறது. அவளக்கூட்டிக்கிட்டு ஊரச் சுத்துவானாம். போடா. போ. சுத்திட்டு வா. நாங்க உசுரோட இருந்தா வத்து பாரு.’

‘ஒரு பேச்சுக்குச் சொன்னேன்டா’ என்று அம்மா சொல்வார் என்று நினைத்த அன்சாரிக்கு கடுமையான ஏமாற்றம். அமைதியாகிவிட்டார். அறையிலிருந்து வெளியேறினார். இன்னும் ஆணிக்கோடுகள் அந்தக் கண்ணாடி மனத்திரையில் ஆழமாக விழுந்துகொண்டே இருக்கிறது. ‘இதை எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும். ‘ அன்சாரி சிறு பிள்ளளையாக இருந்த போது குடும்பத்துக்கு நெருக்கமாக இருந்தவர் சுல்தான் பாய்.இப்போது அவர் நாச்சியார் கோயிலில் இருக்கிறார். அவரைக் கேட்டால் தெரியலாம்.

சுல்தான் பாயை அழைத்தார். கடிதம் எழுதும் சாதுரியம் அன்சாரியின் பேச்சிலும் இருக்கும். மிக லாவகமாகப் பேச்சைத் தொடங்கினார். ‘என்னை யாரிடமிருந்தோ வாங்கியதாக அம்மா சொல்லிட்டாங்க. வாங்கினாலும் பெத்தாலும் அவங்கதான எனக்கு அம்மா. இருந்தாலும் யாருன்னு தெரிஞ்சுக்கணும்னு ஆசையா இருக்கு பாய். யார்ட்டயும் சொல்லமாட்டேன் பாய். இது நமக்குள்ள இருக்கட்டும். ‘

‘அட! சஃபியா சொல்லிட்டாளா. இந்தப் பொம்பளங்கள நம்பவே கூடாதுப்பா. யார்ட்ட சொல்லக்கூடாதோ அவர்ட்டேயே சொல்லிட்டா பாத்தியா’

‘அத விடுங்க பாய். ஒங்க மக மாதிரிதானே. மன்னிச்சிடுங்க. சொல்லுங்க பாய்.’

‘இப்ப இருப்பாங்களான்னு தெரியல அன்சாரி. சென்னையில காசிச் செட்டித் தெருவுல ஏலக்காய் ஜாதிக்காய் பாதாம், குங்கும்ப்பூன்னு வெல ஒசந்த சாமான்களை விக்குற கடை அது. அந்தக் கட மொதலாளி ஒரு சேட். அனுமந்தராவ் பேரு. அவர்தாம்பா ஒங்க அத்தா. அதவிடு. மறந்துரு. எப்போதும்போல இருந்துக்க. அந்த ஆளு ஒரு ஜோசியப் பைத்தியம். உன் ஜாதகப்படி நீ கூட இருந்தா அவன் செத்துருவானாம். அப்ப ஒங்க  அத்தா அவர் கடையிலதான் இருந்தார் . நா சிங்கப்பூருக்குப் போறேன். நானே வளக்குறேன்னு வாங்கிட்டு வந்துட்டாரு.’

சொல்லிமுடித்தார் சுல்தான்பாய்.

அடுத்த நாள். அந்தக் காசிச்செட்டித் தெருவில் அன்சாரி. அந்தக் கண்ணாடி மனத்திரையில் ஆணிக்கோடுகள் அடுத்தடுத்து கிறுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. விசாரித்ததில் அனுமந்தராவ் கடை அடையாளம் தெரிந்தது. எதிரே இருந்த பெட்டிக்கடைக்காரனிடம் பேச்சுக் கொடுத்தார். சேதிகளைக் கிரகித்துக் கொண்டார். அவரின் வீடு திருவல்லிக்கேணி நல்லதம்பி முதலித் தெருவில் இருக்கிறதாம். வீட்டின் அடையாளமும் வாங்கிக் கொண்டார். அந்த வீடுதான் அந்தத் தெருவிலேயே உயரமான வீடாம்.

மறுநாள் காலை அந்த வீட்டின் எதிரே அன்சாரி. அங்கிருந்த டீக்கடையில் உடகார்ந்துகொண்டு கவனிக்கிறார்.  ஒரு ஆள் தொளதொளக்கும் வெள்ளை ஜிப்பாவில் செக்கச்செவேலென்று  வெளியேறுகிறார். ஒரு பிஎம்டபிள்யூ எங்கிருந்தோ வருகிறது. அந்த வீட்டின் முன் நிற்கிறது. பின் சீட்டின் உலக அழகன் போன்ற் உடற்கட்டுடன் இரண்டு பேர்  ஏறிக்கொள்ள முன்சீட்டில் அந்த ஆள். ராஜபரம்பரைத் தோற்றம். கார் புறப்பட்டது. டீக்கடையில் அன்சாரிக்குக்கிடைத்த செய்தி. அந்த ஆள்தான் அனுமந்தராவின் மகன் ராம்தேவாம். இப்போது கடைக்குத்தான் போகிறாராம். அனுமந்தராவ் இறந்துவிட்டாராம். கடை ஒரு பேருக்குத்தானாம். சினிமாக்காரர்களுக்கு கந்து வட்டியில் பணம் கொடுக்கிறாராம். கோடிக்கோடியாய்ச் சேர்த்துவிட்டாராம்.

அந்தக் கார் கடை போய்ச்சேர்ந்த சில நிமிடங்களிலே அன்சாரியும் போய்ச் சேர்ந்துவிட்டார். ஒரு சினிமா தயாரிப்பாளராகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ராம்தேவை சந்திக்க அனுமதியும் வாங்கிவிட்டார். எந்த நிமிடமும் அழைக்கப்படலாம். என்ன பேசுவது, எப்படிப் பேசுவது. நூறாவது முறையாக தனக்குள் பேசிக்கொண்டார்.

உள்ளே சென்றார். ராம்தேவ் மட்டும் அந்தப் பெரிய மேசையில் ஒரு ராஜசிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். ஒரு புலித்தோல் சுவற்றில் தொங்கியது. அந்த இரண்டு பேர் அங்குதான். ஏதோ வேலை செய்துகொண்டிருப்பதுபோல் இருக்கிறார்கள்.

‘வாங்க. எங்கேருந்து வர்றீங்க. ‘

‘சிங்கப்ப்பூர்லேருந்து’

‘என்ன விஷயம்’

‘ஒரு முக்கியமான சேதி. ஒங்களுக்கு மட்டும்தான் தெரியணும். ‘

‘பரவாயில்ல. சொல்லுங்க. அவங்களுக்குத் தமிழ்த் தெரியாது’

‘உங்களுக்கு முன்னால ஒங்க அப்பாவுக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது உங்களுக்குத் தெரியுமா?’

‘ஆமா. தெரியும். அதுக்கு என்ன இப்ப.?’

‘அது நான்தான்’

ராம்தேவ் மேசையில் இருந்த அந்த பீடாவை லாவகமாக வாயில் திணித்துக் கொண்டார். ‘கொஞ்சம் வெளிய உட்காருங்க.அப்புறம் பேசுவோம்.’ என்றார்

அன்சாரி வெளியே வந்து அமர்ந்தார். யாரும் இவரைக் கண்டுகொண்டதாய்த் தெரியவில்லை. அரை மணி நேரம். ஒரு மணி நேரம். போகவும் முடியவில்லை. இருக்கவும் முடியவில்லை. அப்போதுதான் அந்த இரண்டு பேரும் கதவைத் திறந்துகொண்டு வெளியே வருகிறார்கள். அன்சாரியை எதிரே உள்ள ஒரு கொடோனுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அவர்களுக்குத்தான் தமிழ் தெரியாதே. ஆங்கிலத்தில் அன்சாரி கேட்டார். ‘எங்கே என்னை அழைத்துச் செல்கிறீர்கள்.’ . ஒரு முக்கியமான இடத்திற்கென்று அழகான தமிழில் சொன்னார். இங்கு எதுவுமே உண்மையில்லையே. என்ன நடக்கப்போகிறது. அன்சாரிக்கு பயரேகைகள் படர்கிறது. அந்த மனக்கண்ணாடி இன்னும் ஆழமாகக் கிழிக்கப்படுகிறது.

ஒரு நாற்காலியில் உட்கார வைத்தார்கள். இருவரும் இடுப்பிலிருந்த கூரான ஒரு முழக் கத்தியை உருவினார்கள். அந்தக் கத்தியை சுழற்றிக் கொண்டே ஒருவன் சொன்னான். ‘இந்தக் கத்தி ரத்தம் பார்த்து நாளாகிவிட்டது. நாளைக்காலை 10 மணிவரை உனக்கு அவகாசம். சென்னையை வீட்டு ஓடிவிடு. மீறி இருந்தால் உடனே கொல்லப்படமாட்டாய். கொஞ்சம் கொஞ்சமாக வித்தியாசமாகக் கொல்லப்படுவாய். நீ விமானம் ஏறும்வரை பல ஜோடி கண்கள் உன்னைப் பாரத்துக் கொண்டே இருக்கும். ஆனால் நீ யாரையும் பார்க்கமுடியாது.

அன்று இரவே சிங்கப்பூர் புறப்படுவதாக அன்சாரி என்னிடம் சொன்னார். அழைப்பதற்காக நான் விமான நிலையம் சென்றேன். அன்சாரி கொஞ்சம் சிதைந்திருந்தார். எதிரேதான் நிற்கிறேன். அவரால் என்னை அடையாளம் காணமுடியவில்லையா? அல்லது கவனிக்கவில்லையா? ‘அன்சாரி’ என்றேன். திடுக்கிட்டார். திருதிருவென்று விழித்தார். அந்த மனக்கண்ணாடி முற்றிலுமாகத் சிதைந்திருந்தது. நாங்கள் காரை நோக்கிச் சென்றோம். திடீரென்று பெட்டியை அப்படியே விட்டுவிட்டு மிக வேகமாக ஓடுகிறார். நானுப் பின்னாலேயே ஓடுகிறேன். தடுத்துவிட்டேன். எங்கே ஓடுகிறீர்கள் அன்சாரி. ‘அங்கே பாருங்கள். அந்தச் சாலையில் எத்தனை பேர்கள். கார்கள் வந்தால் அத்தனை பேரும் செத்துவிடுவார்கள். நான் அவர்களை போகச் சொல்லிவிட்டு வருகிறேன்.’ என்றார். அவர் சொன்ன திசையில் பார்த்தேன். அங்கு யாருமே இல்லை. ஆம் பயங்கரமான மனோவியாதி. அடுத்த நிமிடமே இங்கு கொண்டுவந்து அன்சாரியைச் சேர்த்துவிட்டேன்.

காலம்தான் எவ்வளவு  வேகமாக தன் அடையாளங்களை மாற்றிக் கொள்கிறது. கடையையும் வீட்டையும் வாடகைக்கு விட்டுவிட்டு கிடைத்த முன்பணத்தில் தன் பிரச்சினைகளை முடித்துக் கொண்டு யாக்கூபும் சஃபியாவும் நாச்சியார்கோவிலுக்கே சென்றுவிட்டார்கள். எப்போதாவது இனி வரலாம். வராமலும் போகலாம். அன்சாரியின் மனைவி விவாகரத்து பெற்றுவிட்டார். இப்போது வேறொரு ஆணோடு வாழ்கிறார். கணக்காயர் படிப்பில் ஆராய்ச்சிப் படிப்பை முடித்துவிட்டு, அமெரிக்காவின் நியூஜெர்ஸியில் சில ஆண்டுகள் வேலை செய்துவிட்டு இப்போது அன்சாரியில் அலுவலகத்தில் சேர்ந்திருக்கிறார் மகாதேவன். அவரோடு அன்சாரி சேர்ந்து தங்கிக் கொண்டிருக்கிறார். கடுமையான இருளை முடிவுக்குக் கொண்டுவந்த கதிரவனாக இன்று மகாதேவன் அன்சாரிக்குக் கிடைத்தார். மகாதேவன் தியானம், ஆன்மீகம் என்று தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர். ஒரு நாள் சொன்னார்

‘உறவுகள் எல்லாமே ஒரு நாள் விரிசலடையும் அன்சாரி. உங்கள் தகப்பனாரின் பிரச்சினைக்கு நீங்கள் எப்படிப் பொறுப்பாவீர்கள்? பிரச்சினையைத் தீர்க்க நீ கூட இருக்கவேண்டும், உன் விருப்பப்படி ஊர்சுற்றக் கூடாது என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? மகனாக இருந்தால் கேட்பானாம். நீ வாங்கிய பிள்ளைதானே என்று நினைக்கும் உங்கள் தாயாரின் நம்பிக்கை எவ்வளவு முட்டாள்தனமானது. நன்றாக யோசித்துப் பாருங்கள் அன்சாரி. இன்று நீ இப்படி வளர்ந்திருப்பதற்கு நாங்கள்தான் காரணம். என் தேவையை முடித்து விட்டுத்தான் உன் தேவையைப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதைத்தான் அவர்கள் சொல்லாமல் சொல்கிறார்கள். இது என்ன உறவா? உங்கள் மனைவியோ நீங்கள் பாதுகாப்பானவர் அல்ல என்று நினைத்து இன்று வேறொரு ஆணோடு வாழ்கிறார். இது என்ன உறவு? சென்னை வரை சென்றீர்கள். எதற்காக. ஆனால் அந்த ஆள் என்ன செய்தான். நீங்கள் சொத்தில் பங்குக்கு வந்துவிடுவீர்கள் என்று உங்களைப் போட்டுத் தள்ள முடிவு செய்துவிட்டான். இதெல்லாம் என்ன உறவுகள். உறவுகள் எல்லாமே என்றாவது ஒருநாள் உடைக்கப்படும் தேங்காய்தான். உடைத்த தேங்காய் ஒருபோதும் ஒன்று சேராது அன்சாரி. எவன் ஒருவனின் சேவையில் அடுத்த மனிதன் மகிழ்ச்சி அடைகிறானோ அல்லது அடுத்த உயிர் மகிழ்ச்சி அடைகிறதோ அந்தச் சேவைதான் ஆண்டவனுக்குச் செய்யும் சேவை. எத்தனை பேருக்கு இந்தச் சேவை புரிகிறது. தன்னைச் சுற்றி ஒரு பெரிய கோட்டையைக் கட்டிக் கொண்டு தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறான். அடுத்தவனைவிட தான் சிறந்தவன், பெரியவன் என்று காட்டிக் கொள்வதிலேயே அலன் வாழ்நாள் முடிந்துவிடுகிறது. இறைவனோடு உள்ள உறவு மட்டுமே பிறப்பதற்கு முன்னும் இருந்தது. வாழும்போதும் இருப்பது. இறந்த பின்னும் இருப்பது. அந்த இறைவன் நம் நெஞ்சில் ஏற்றிவைத்திருக்கும் அகல்விளக்கை எத்தனை பேர் அடையாளம் கண்டிருக்கிறார்கள். அந்த அகல்விளக்கால் எத்தனை லட்சம் விளக்குகளை ஏற்ற முடியும். ஏன் எவர்க்கும் இது புரியவில்லை? ‘

மகாதேவன் நிறுத்தி ஒரு பெருமூச்சு விட்டபோது, அன்சாரி அவரை அணைத்துக் கொண்டார். தன் அறியாமை அன்சாரிக்கு விளங்கியது. அந்தக் கண்ணாடி மனத்திரையில் இருந்த ஆணிக்கோடுகள் அழிந்து கொண்டிருக்கின்றன. பளபளப்பு கூடிக்கொண்டிருக்கிறது. மையத்தில் இணைக்கப்பட்ட கடிகார முள்களாக இன்று அன்சாரியும் மகாதேவனும். சுற்றி சுற்றி வந்தாலும் இருவரும் சேர்ந்து சரியான நேரத்தை எப்போதும் காட்டுகிறார்கள். வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்கிவிட்டது.

அன்சாரியின் அலுவலகத்தில் ஆண்டுக்கொரு முறை விருந்து நடக்கும். அப்போது வெளிநாட்டிலிருந்து சிறப்புப் பேச்சாளரை வரவழைப்பார்கள். இந்த ஆண்டும் ஏற்பாடு செய்யப்படுகிறது. மகாதேவன் சொன்னார். ‘இந்த ஆண்டு அன்சாரி பேசட்டும். ‘ அன்சாரியின் கண்களில் தெறித்த ஒளி மகாதேவனுக்கு அந்த நம்பிக்கையைக் கொடுத்தது. எல்லாரும் ஏற்றுக் கொண்டார்கள்.

விருந்து முடிந்து அன்சாரி பேச எழுந்தார். ஒரு புன்சிரிப்போடு தொடங்கிய அந்தப் பேச்சு பல தொடக்கூடாத இடங்களைத் தொட்டது. உருண்டோடும் நாவற்பழங்களாய் எழுதத் தெரிந்த அன்சாரிக்கு அதேபோல் பேசவும் தெரியும் என்று பல பேருக்கு அப்போதுதான் புரிந்தது. தன் பேச்சை அவர் இவ்வாறு முடித்தார். நம் அமைப்பு வெற்றி பெறுவது தம் கையில்தான் இருக்கிறது. உலகத்திலேயே மிகக் கடினமான வேலையும் மிக எளிதான வேலையும் என்ன தெரியுமா?  அந்தக் கேள்விக்கு பதில் சொல்லாமல் கொஞ்சம் அமைதியானார். ஒரே நிசப்தம். பிறகு தொடர்ந்தார். ‘மிகவும் கடினமானது தன் குறைகளைத் தோண்டிப் பார்த்துத் திருத்திக்  கொள்வது. மிகவும் எளிதானது அடுத்தவன் குறைகளைத் தோண்டிப் பார்த்து அனைவருக்கும் சொல்வது. நாம் எப்போதுமே கடினமான வேலையைச் செய்யத்தான் முயலவேண்டும். நம்மை நமக்குள் பார்ப்போம். நம்மைச் செதுக்குவோம். திருத்திக் கொள்ளும் மனிதன் தேவனாவான்.’ அந்தக் கூட்டத்திற்கு நியூஜெர்ஸியிலிருந்து வந்திருந்த ஒரு நண்பர் தங்கள் அமைப்பின் கூட்டத்திற்கு அன்சாரி வரவேண்டும் என்று அழைத்தார்.

அன்சாரியின் வாழ்க்கை ஆன்மீகப் பயணமாகிவிட்டது. தன்முனைப்புப் பயணமாகிவிட்டது. தொடர்ந்து ஏராளமான கூட்டங்கள். உலகம் முழுதும். பல நாடுகளில். அத்தனை கூட்டத்திற்கும் அன்சாரியோடு நானும் கூடவே சென்றேன்.

கும்பகோணம் ரோட்டரிக் கிளப் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. நாங்கள் இருவரும் கும்பகோணம் சென்றோம். அடேங்கப்பா! எத்தனை நாளாகிவிட்டது அந்த ஊரைப் பார்த்து. நாங்கள் ஒரு பெரிய பங்களா வீட்டில் தங்க வைக்கப் பட்டோம். வெளியே பெரிய கூட்டம் அன்சாரியைப் பார்க்கத் திரண்டது. அவர்கை வரிசைப்படுத்தும் வேலையில் பலர் ஈடுபட்டிருந்தார்கள்.500 ரூபாய் நுழைவுச்சீட்டு அத்தனையும் விற்றுத் தீர்ந்துவிட்டதாம். அன்று இரவுதான் கூட்டம். இப்போது காலைப் பொழுது. நான் மேல் மாடிக்குச் சென்று அந்த கூட்டத்தைக் கவனித்தேன். அந்த நீண்ட வரிசையில் யாக்கூபும் சஃபியாவும் நின்று கொண்டிருந்தார்கள்.

யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigationசெய்திமகிழ்ந்து விளையாடி ஆடிர் ஊசல்
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *