Posted in

கவிதைகள்

This entry is part 5 of 13 in the series 20 மே 2018
வான்மதி செந்தில்வாணன்
1.
எல்லாமும் போய்விட்டது.
கடைசியாய்
எனக்கென எஞ்சியிருப்பது
 துண்டுபீடி மட்டுமே.
எவரேனும்
ஓசி தீப்பெட்டி தந்தால்
சற்று உபயோகமாய் இருக்கும்.
ஏனெனில்
பீடி பற்றவைக்கலாம்,
பீடிக்கடையையோ அல்லது
எதுவுமே புகைக்கத்தராத
வெற்று நாளையோ
ஒரு பிரார்த்தனையுடன் கொளுத்தலாம்.
2.
வீடுகட்டி விளையாடவென
தெர்மாக்கோல் அட்டைகளை
உப்பரிகைக்கு எடுத்துப்போனாள் பாப்பா.
என்ன நினைத்தாளோ தெரியவில்லை.
சிறிதுநேரத்தில்
முழு அட்டையையும்
பிய்த்துத் தூள்தூளாக்கிவிட்டாள்.
திடீரென்று வீசிய
வேகமான காற்றில்,
பனிச்சருகுபோல்
உருளைத்தனம் செய்த
தெர்மாக்கோல் உருண்டைகள்
ஒரு கட்டத்திற்குப் பிறகு
கீழ்த்தளம் நோக்கிப்
பறக்கத் துவங்கின.
பார்க்க பனிப்பொழிவு போலிருந்த
அம் மாலைப்பொழுதில்தான்
நாங்கள்
வெண்பிரதேசத்தில் உலவும்
பனிக் கரடிகளானோம்.
3.
தயவுசெய்து செவிகொடுங்கள்
கொஞ்சநேரம் பேசிக்கொள்கிறேன்.
உறுதியாக
ஒரு பாதிப்புமில்லாமல்
திரும்ப  ஒப்படைத்துவிடுகிறேன்.
வெறும்
காத்திரமான மௌனம் மட்டுமே
 பேசவேண்டும்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம்
என்னெதிரே
அமைதியாக அமர்வது  மட்டுமே.
உங்கள்போல் இல்லாவிடினும்
ஏதோ
சுமாராவாவது வாழ விரும்புகிறேன்.
அதற்காகவேனும் தயவுசெய்யுங்கள்.
நீங்கள்
நீண்டநேரம் எனக்கென செலவழிக்க அவசியமிருக்காது.
கடைசியாக
ஒன்றுமட்டும் சொல்லிக்கொள்கிறேன்
இடையிடையே  பேசினால்
கலையும் மௌனத்தை
மீண்டும் நான் முதலிலிருந்து தொடங்கவேண்டும்.
ப்ளீஸ் ……என் மௌனம் தீரும்வரை மட்டும் உடனிருங்களேன்.
ஹலோ ….
யாராவது இருக்கீங்களா ?
_ .
Series Navigationஈரமனம் !கொங்குநாட்டின் பெருமையைப் பறைசாற்றும் துடும்பாட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *