கொங்குநாட்டின் பெருமையைப் பறைசாற்றும் துடும்பாட்டம்

author
0 minutes, 28 seconds Read
This entry is part 6 of 13 in the series 20 மே 2018

 

முனைவர் .கலைவாணி

உதவிப்பேராசிரியர்

தமிழ் ஆய்வியல் துறை

மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர்

மீனாட்சி பெண்கள் கல்லூரி பூவந்தி

 

அழகியல் வெளிப்பாடு கலையாகும். கலை என்பது பார்ப்போர் கேட்போர் மனத்தில் அழகியல் உணர்வைத் தோற்றுவிக்கும் வகையில் அந்தந்தப் பண்பாட்டுச் சூழலோடு வெளிப்படுத்தப்படுவது. இந்த அழகியல் உணர்வு வாழ்க்கை அனுபவத்திலிருந்து பெறப்பட்டுக் கலைத் தன்மையோடு நிகழ்த்திக் காட்டப்படுகிறது. உடல் உறுப்புகளை இயக்குவதில் நளினமும் ஒரு லய உணர்வும் (இசைவும்) மிளிர்வதைக் கண்ட மனிதன், அந்த நளினமான அங்க அசைவுகளை ஒருங்கிணைத்துக் கலை வடிவமாக்கி மகிழ்ந்தான், மகிழ்வித்தான். தொன்மையான இக்கலை மரபின் வளர்ச்சியும் தொடர்ச்சியுமாகவே நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் விளங்கி வருகின்றன. நாட்டுப்புற நிகழ்த்து கலைகளில் பெரும்பாலானவை வட்டாரத் தன்மை கொண்டவையாகும். வட்டாரத் தன்மை என்றால் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே அந்தக் கலைகளைப் பார்க்க முடியும். ஒரு கலை தமிழகம் முழுவதும் செல்வாக்குப் பெற்றிருக்கின்றது என்றோ, நிகழ்த்தப்படுகிறது என்றோ கூறிவிட முடியாது. குறிப்பிட்ட கலைகள் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே வழக்கில் இருக்கும். குறிப்பாகத் தெருக்கூத்து என்ற நிகழ்த்து கலையைத் தமிழகத்தின் வட பகுதிகளில் மட்டுமே காணமுடியும். அதேபோல வில்லுப்பாட்டு, கணியான் கூத்து, கழியலாட்டம் போன்ற கலைகளைத் தமிழகத்தின் தென் பகுதிகளில் மட்டுமே காணமுடியும். மேலும் துடும்பாட்டம் கொங்கு நாட்டிற்குரிய கலையாகும். வட்டாரத் தன்மையுடைய இக்கலைகள் அந்தந்தப் பகுதி மக்களால் நிகழ்த்தப் பட்டும், செல்வாக்குப் பெற்றும் விளங்கும். இந்நிகழ்த்துகலைகளில் கொங்கு நாட்டிற்குரிய கலையான துடும்பாட்டம் எனும் கலையை விளக்குவது இக்கட்டுரை.

கொங்குநாடு:

கொங்குநாடு பழம் பெருமைமிக்க வரலாற்றை உடையது. கொங்கு என்ற சொல்லுக்கு தேன், சாரல் என்று பொருள். மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் கிழக்குச் சரிவுப் பகுதியிலுள்ள வனப்பகுதியில் தேன் மிகுந்திருந்ததால் கொங்கு நாடு எனவும், குடநாட்டில் (கேரளாவின் வட பகுதி) மிகுதியாய் பெய்யும் மழையின் சாரல் மிகுந்து மழை பெய்வதால், கொங்கு நாடு எனவும், கூறுவார் உண்டு. ஆனால் மிகச்சரியானது முடியுடை வேந்தர்களான சேர, சோழ, பாண்டிய நாட்டின் வடமேற்கு எல்லை கங்கில்(ஓரத்தில்) அமைந்ததால் கங்குநாடு, என்று இருந்து காலப்போக்கில் கொங்குநாடு என மருவியது. சங்கப் பாடல்களில் கொங்குநாடு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே” (புறநானூறுபாடல்-373) என்றும்

கொங்கர் குடகட லோட்டிய ஞான்றை“(புறநானூறுபாடல்-160) என்றும் புறநானூறு கூறுகிறது. மேலும் கெழு கொங்கர் என்னும் பதிற்றுப்பத்து (22) பாடல் தொடர் ஆனிரைகளைப் பேணுவதில் கொங்கர்களுக்கு இருந்த ஈடுபாட்டைக் காட்டுகிறது.

பின்னர் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பாலக்காட்டுக் கணவாயின் அருகில் அமைந்துள்ளதால் தென்னகத்தின் பல அரசுகள் இப்பகுதியைக் கைப்பற்றச் சண்டையிட்டன. கரூரின்(வஞ்சி) சேரர், பின்னர் சங்கம் மருவிய காலத்தில், கங்க வம்சத்து மேற்கு கங்கர்கள் ஆகியோரின் ஆளுமையின் கீழ் கங்கவாடி  என்ற பகுதி இருந்துள்ளது. தஞ்சைச் சோழர்களான இராசராசன் மற்றும் இராசேந்திரன் ஆகியோர் ஆளுமைக்கீழும் இருந்துள்ளது. பின்னர், இப்பகுதி கொய்சாளர்களின் ஆட்சிக் கீழ் சென்றது. அவர்கள் கீழ்நிலை ஆட்சிக்கு, இங்கிருந்து வந்த கவுண்டர் ஆட்சி அமைப்பினையே பயன்படுத்தினர். கில்ஜி மன்னர்களின் படையெடுப்பு முறியடிக்கப்பட்ட பிறகு, விசயநகரப் பேரரசின் கீழ் நாயக்கர்களின் ஆட்சிக்கு வந்தது. கொங்கு நாடு, 17ஆம் நூற்றாண்டில், மதுரை நாயக்கர்களின் ஆளுமையின் கீழ் 1659 தொடங்கி 1672 முடிவடைந்தது. தொடர்ந்து பாளையக்காரர்களின் கீழ் கொங்டு நாடு இருந்து வந்துள்ளது. இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க கொங்கு நாட்டில் நாட்டுப்புற நிகழ்த்துகலைகள் பல உள்ளன. அவற்றுள் துடும்பாட்டத்தை இனம் காணலாம்.

நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் :

நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் நிகழ்த்திக் காட்டும் (நடத்திக் காட்டப்படும்) வகையில் அமைந்தவை. அவை ஆடலாகவோ, பாடலாகவோ, ஆடலும் பாடலும் இணைந்ததாகவோ, ஆடல் பாடல் உரையாடலுடன் கூடியதாகவோ நிகழ்த்திக் காட்டப்படும். இதில் ஒரு கலைஞரோ பல கலைஞர்களோ பங்கு பெற்று, ஒரு சம்பவத்தையோ, கதையையோ, கருத்தையோ ஆடல் பாடல் வழி, பார்வையாளர் முன் நிகழ்த்திக் காட்டுவர்.

 “நாட்டுப் புறங்களில் நிகழ்த்திக் காட்டப்படும் நாட்டுப்புற நிகழ்த்து கலைகளைப் பொறுத்தவரை ஆட்டங்கள் பலவாகவும் ஆடப்படும் சூழல் களம் வேறு வேறாகவும் இருந்தாலும் கூட அவற்றுள் சில பொதுக் கூறுகளும் இருக்கத்தான் செய்கின்றன. இவற்றைப் புரிந்து கொண்டால் மட்டுமே கலைகளையும் நம்மால் விளங்கிக் கொள்ள முடியும் (நாட்டுப்புறவியல் மரபுகள்.4) என்கிறார் முத்தையா.

நாட்டுப்புற நிகழ்த்து கலைகளுக்குச் சடங்குகளும், வழிபாடுகளும், வாழ்க்கை நிகழ்வுகளுமாகிய பண்பாட்டுச் சூழல்களே களம் அமைத்துக் கொடுக்கின்றன. வழிபாடின்றிக் கலைகள் இல்லை. கலைகள் இன்றி வழிபாடு இல்லை என்னுமளவிற்கு இரண்டும் இரண்டறக் கலந்துள்ளன. எனவே கலைகளை, நிகழ்த்தப்படும் பண்பாட்டுச் சூழலோடு இணைத்துப் புரிந்து கொள்வது அவசியமானதாகும். கலைகள் நிகழ்த்தப்படும் சூழலை அடிப்படையாகக் கொண்டு நிகழ்த்தப்படுகின்றன. அங்ஙனம் கொங்கு நாட்டின் கோவில் விழாக்களில் நிகழ்த்தப்படுவது துடும்பாட்டமாகும்.

துடும்பு :

துடும்பு என்ற பெயரின் தோற்றம் துடும்பர்களுக்கும், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கரமதாய், நீல்கிரிஸ் மற்றும் கோவை பகுதிகளில் வசிக்கும் பழங்குடி இனத்தவருக்கு வழங்கப்பட்டது. இந்த சமுதாயத்தின் உறுப்பினர்கள் சோழ, சேர மற்றும் பாண்டிய மன்னர்களுக்கும் நிலப்பிரபுக்களுக்கும்  காடுகளில் வனா போஜானாத்திற்காகச் சென்றபோது காட்டு விலங்குகளை துரத்துவதற்கு துணை சென்றவர்கள்  என்பர்.

துடும்பாட்டம் :

துடும்பாட்டம் என்பது ஒரு தமிழர் ஆடற்கலை வடிவம் ஆகும். இது பெரிய மேளங்களை அடுத்துக் கொண்டு ஆடப்படும் ஆட்டம் ஆகும். இது ஆடப்படுவது அருகி வந்தாலும், இதை பல குழுக்கள் இன்றும் இசைத்து ஆடி வருகிறார்கள். பொதுவாக இந்த துடும்பாட்டம் கோயம்புத்தூர் மாவட்டங்களில் மிக பிரபலமாக அடிக்கக்கூடிய ஒரு இசை நிகழ்ச்சி. ஆதிகாலத்தில் சமூகத்தினருக்கு வரும் ஆபத்துக்களை உணர்த்தும் விதமாக எழுப்பப்பட்ட ஓசையே துடும்பாட்டம்.

துடும்பு என்பது பெரிய இசைக் கருவியைக் குறிக்கிறது. அதாவது, ஆங்கிலத்தில் பேஸ் என்று அழைக்கப்படுகிறது. இதனை இசைக்கும்போது, துடும், துடும், துடும்… என்று இசை எழுப்புவதால் இதற்கு துடும்பு என்று பெயர் வந்தது. இதனோடு சேர்ந்து சிறிய வடிவில் உள்ள இசைக்கருவியை உருட்டு என்று அழைப்பர். அதாவது இந்த துடும் என்ற இசைக்கேற்றவாறு தொடர்ந்து இசைக்கக் கூடிய ஒரு இசை உருட்டு. இரண்டும் சேரும்போது துடும்பிசை உருவாகிறது. பல கலைஞர்கள் இந்த இசையை இசைக்க, இசைக்கு ஏற்றவாறு ஒரு குழுவினர் ஆடுவது துடும்பாட்டம். இந்த துடும்பாட்டம் கோயம்புத்தூர் திருவிழாக்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இசைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

துடும்புவானது விஜயநகர சாம்ராஜ்ஜியத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது என்ற கருத்தும் நிலவுகிறது. துடும்பாட்டம் கோயம்புத்தூர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் பிரபலமானது. மிருகம்மன், பேச்சியம்மன், மதுரை வீரன், அண்ணன்மார், பழனி, மருதமலை மற்றும் கரமடி ஆரண்நாதர் கோவில் ஆகிய இடங்களில் துடும்பாட்டம் ஆடுவர். இத்துடும்பாட்டத்தைப் பற்றி தி இந்து நாளிதழ் செய்தி ஒன்றை

“The origin of the name thudumbu has been attributed to the Thudumbars, a tribal community living in Pollachi, Mettupalayam, Karamadai, Nilgris and Kovai areas. It is learnt that the members of this community used to serve and entertain the Chola, Chera and the Pandya kings and feudal lords,who went for ‘vana bhojana’ in the forests. The thudumbu was also played to chase away the wild animals.According to another theory, thudumbu was introduced by the Vijayanagar empire and Thudumbattam became popular in Coimbatore and nearby areas” என்று வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனை பண்டைய காலத்தில் வெற்றி பெற்ற மன்னர்களின் தேரிற்கு முன், பின் ஆடப்படும் குரவை (முன்தேர்க்குரவை, பின்தேர்க்குரவை) என்பர். பெரிய வட்டவடிவ இசைக்கருவியை இரண்டுகால்களுக்கிடையில் வைத்துக் கொண்டு அடித்து இசை எழுப்புவர். இவ்விசைக்கு ஏற்றவாறு கலைஞர்கள் ஆடுதல் துடும்பாட்டமாகும்.

முடிவுரை:

கலைகள் சடங்கு மற்றும் வழிபாடு சார்ந்து நிகழ்த்தப்பட்டு வந்தன. ஆண்களால் மட்டுமே ஆடப்பட்டு வந்த  கலைகளில் துடும்பாட்டமும் ஒன்று எனலாம். தற்பொழுது பெண்கள் பயிற்சி பெற்றுத் (குறிப்பாகக் கல்லூரிப் பெண்கள்) திறமையாக நிகழ்த்திக் காட்டி வருகின்றனர். இந்நிலை நாட்டுப்புற நிகழ்த்து கலைகளின் வளர்ச்சி நிலையைப் புலப்படுத்துவதாக உள்ளது எனலாம்.

நாட்டுப்புற நிகழ்த்து கலைகளை வளர்த்தெடுப்பதில் குறிப்பிட்ட இனத்தார் ஈடுபட்டுவருவதையும் கலைஞர்களின் பங்களிப்பினையும் அவர்கள் காட்டும் ஆர்வத்தையும் முனைப்பையும் மேற்கூறிய கருத்துகள் எடுத்துரைக்கின்றன.

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கொங்கு நாட்டிற்கு உரிய நிகழ்த்து கலையாகிய துடும்பாட்டம் கொங்கு மண்டல மக்களின் பெருமையைப் பறைசாற்றும் நிகழ்த்து கலையாகும்.

 

Series Navigationகவிதைகள்சிறுபாணாற்றுப்படையில் பாணர்களின் வறுமைநிலை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *