மீனாட்சி சுந்தரமூர்த்தி
கடந்த செப்டம்பரில் ஜெர்மனி சென்றிருந்த போது இத்தாலியில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான,`பீசா கோபுரம்` பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. பீசா நகரின் அதிசயம் அதன் சாய்ந்த கோபுரம்.கி.பி 1152ல் தேவாலயத்திற்கான கட்டிடப் பணிகள் துவங்கப்பட்டது. தேவாலயத்தின் பின்புறம் மணிகூண்டைக் கட்டும்போது அடித்தளம் மென்மையாக இருக்கவே ஒருபுறம் சாய்ந்து (கீழிறங்கி விட்டது)
மிகவும் சாய்ந்திருந்த இது பல சீரமைப்புப் பணிகளுக்குப் பின்னர் இன்றுள்ள அமைப்பைப் பெற்றுள்ளது. பல ஆய்வுகளுக்குப் பின்னர் இதனை வடிவமைத்தவர்
டியோட்டி சால்வி எனும் கட்டிடக் கலைஞர் என முடிவாகியுள்ளது. இத்தாலியின் சுற்றுலாத் தலங்களில் அதிகமாக அனைவரையும் ஈர்ப்பது இதுவே.அதன்படி எனக்கும் என் கணவருக்கும் 18.09.17 அன்று காலை 9.45 மணிக்கு ஜெர்மனியின் லுப்தான்ஸா விமான சேவையில் பயணச் சீட்டு முன்பதிவு செய்யப்பட்டது. குறித்த நாளன்று ஹாம்பர்க் விமான நிலையத்திற்கு வந்தோம். சோதனைகள்
முடிந்து நாங்கள் எங்கள் வாயிலுக்கு வந்து விட்டோம். ஆனால் விமானம் ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்தது.பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்படும் போது சரியாக இரண்டு மணி நேரம் தாமதமாகி விட்டிருந்தது.சற்றேறக் குறைய 2.30 மணி நேரப் பயணம். பீசா விமான நிலையத்தில் இறங்கிய போது எனக்கு நல்ல பசி.வெளியில் வந்ததும் ஒரு வாடகைக் காரில் ஏறி ஏற்கெனவே முன்பதிவு செய்யப் பெற்றிருந்த, ’கலீலியா’ என்ற விடுதிக்கு வந்தோம்.அறைக்கு வந்து தயாராகி உணவு அறைக்கு வந்தோம். மேற்கத்திய உணவு வகைகளில் எனக்குப் பழகிப் பிடித்தும் இருந்தது பீட்சா மற்றும் சாண்ட்விட்ச்தான்.இத்தாலிதான் பீட்சாவின் கண்டு பிடிப்பு என்பதனால் நல்ல சுவையான பீட்சா கிடைக்கும்
என நினைத்தேன்.ஆனால் அங்கே அது இல்லை. என் கணவர் நூடுல்ஸ் வாங்கிக் கொண்டார்.அங்கிருந்த பெண்மணி உணவுத் தகவல் குறிப்பேடு தந்தார். எதுவும்
எனக்குப் பிடிக்கவில்லை.இறுதியாக ரைஸ் என்று பார்த்து
அது எப்படியிருக்கும் என வினவியபோது அவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை,இருந்தாலும் அவர் சொன்ன விதத்தில் எனக்குப் பிடிக்கும் என எண்ணி, கொண்டு வரச் சொன்னோம். அடடா ஒரு தட்டில் அரிசிச் சோறு வந்தது,ஆவி பறக்கும் என்று நினைத்தால் சில்லென பனிக்கட்டி போலிருந்தது. அதோடு உலர்ந்த திராட்சை மற்றும் செர்ரிப் பழத்துண்டுகள் கலந்த இனிப்பான சாதம்.இருந்த குளிருக்கு அது மேலும் நடுக்கம்தான் தந்தது.வேறு வழியில்லாமல் என் கணவரிடம் அதை மாற்றிக் கொண்டு நூடுல்ஸ் சாப்பிட வேண்டியதாயிற்று.சரி சூடாக ஒரு காப்பியாவது குடிக்கலாமென வாங்கி ( டிகாஷன் மட்டும் கிடைக்கும் தேவையெனில் பால் ,சர்க்கரை சிறிய பாக்கெட்டுகளில் கிடைக்கும் அவற்றைக் கலந்து கொள்ளலாம்) குடிப்பதற்குள் சில்லென ஆகிவிட்டது.ஒரு வழியாக உணவை முடித்துக் கொண்டு அறைக்கு வந்தோம்.பார்க்க வேண்டிய இடங்களை எங்கள் மகள் குறித்து வரைபடமே போட்டுக் கொடுத்திருந்தாள்.பீசா கோபுரம் தவிர தேவாலயம் ஒன்றும்,
அதே வளாகத்தில் அருங்காட்சியகம் ஒன்றும், நகரின் உள்ளே தாவரவியல் பூங்கா ஒன்றும், நா ன்கு பழமை வாய்ந்த அரண்மனை
போன்ற கட்டடங்கள் சதுர அமைப்பில் இருந்ததும், ஆர்னோ நதிக்கரையில் ஒரு பழமை வாய்ந்த தேவாலயமும்,பீசா நகரிலிருந்தது. முப்பது நிமிட இரயில் பயணத் தொலைவில் அமைந்த பிளாரன்ஸ் எனும் ஊரும் அதில் அடங்கும்.எங்களுக்கு 20.09.17 அன்று மாலை நான்கு மணிக்குதான் ஜெர்மனி திரும்புவதற்கான பயணச் சீட்டு முன்பதிவு செய்யப் பட்டிருந்தது.நாங்கள் மறுநாள் இவற்றைப் பார்த்துக் கொள்ளலாமென நினைத்து ஊரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம்.விடுதியின் வரவேற்பில் இருந்த பெண்ணிடம் பேருந்து நிறுத்தம் எங்கே உள்ளது? என வினவினார் என் கணவர்.அவள் பாதி இத்தாலியும் பாதி ஆங்கிலமும் கலந்து சொன்னதை ஒருவாறு புரிந்து கொண்டு வெளியில் வந்தோம். அது ஊருக்கு வெளியில் புறவழிச் சாலையில் அமைந்திருந்த நட்சத்திர விடுதி. காரில் பயணிப்பவர்களையே காண முடிந்தது. பேருந்து நிறுத்தம் அதனருகில் இல்லை.நாங்கள் நடந்த வழியில் தொழிற்சாலை ஒன்று இருந்தது.
நடைபாதையில் நடந்து ஒரு வழியாக ஊருக்குள் வந்து விட்டோம். ஒன்றிரண்டு கடைகள் கண்ணில் பட்டன.ஆனாலும் பேருந்து நிறுத்தம் தென்படவில்லை. வீதியொன்றில் திரும்பினோம்,அழகாக அமைதியாக இருந்தது.சற்று தொலைவில் பேருந்தின் படம் போட்ட அறிவிப்புப் பலகை ஒன்று தெரிந்தது.நிச்சயமாக பேருந்து நிறுத்தம்தான் என உறுதி செய்து கொண்டு நின்றோம். நல்ல வேளை எண்களில் மாற்றம் இல்லை.இத்தாலி மொழியில் பேருந்து அட்டவணை அது. நேரம் தெரிந்தது, ஆனால் இடங்களின் பெயர்கள் தெரியவில்லை. அதன் பின்புறம் ஒரு தொடக்கப் பள்ளி இருந்தது. அப்போதுதான் பள்ளி நேரம் முடிந்தது போலும்.பெற்றோர் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வந்தனர்.நம் ஊர் போலதான். ஆனாலும் ஆரவாரமே இல்லை.சிலர் நடந்து சென்றனர் ,சிலர் கார்களில் அழைத்துச் சென்றனர்.
சில குழந்தைகளை தாத்தா மட்டுமோ அல்லது பாட்டி மட்டுமோ அழைத்துச் சென்றனர். மொழி வேறு, நாடுவேறு, இனம் வேறு. ஆனாலும் கள்ளமில்லா பிள்ளைச் சிரிப்பிலும் கொஞ்சு மொழியிலும் மனம் பறி கொடுக்காதவர் எவரும் உண்டோ? சற்று நேரம் கழித்து ஒரு பெண்மணி பள்ளியிலிருந்து வந்தார். அப்பள்ளியின் ஆசிரியை போலும்,அவருக்கு வணக்கம் சொல்லி விட்டு கடைவீதி செல்லும் பேருந்தின் எண் என்னவென்று நான் ஆங்கிலத்தில் கேட்டேன்.அவருக்கு சத்தியமாகப் புரியவில்லை. ஆனாலும் இத்தாலி மொழியில் பொறுமையாகப் பீசா கோபுரம் (பீசா என்றதால் ஒரு யூகம்தான்)~பற்றி ஏதோ சொன்னார். எங்களுக்கும் புரியவில்லை.நன்றி சொன்னேன்,நேசமாகச் சிரித்து விட்டுச் சென்றார்.அதற்குள் சடசடவென மழை வந்து விட்டது. ஹாம்பர்கிலும்(ஜெர்மனி) இப்படிதான் மழை பெருந்தூறலாக அல்லது சிறு தூறலாக வந்து உடனே நின்றுவிடும்.பத்து நிமிடத்தில் மழை நின்றது.மாலை மணி ஐந்துதான் வீதியில் போவோர் வருவோர் எவருமில்லை.சரி எந்தப் பேருந்து வந்தாலும் ஏறி ஓட்டுநரிடம் கேட்டு இரயில் நிலையம் சென்று விடலாம் என்றார் என் கணவர்.
அந்த வேளையில் வேகவேகமாக வந்தார் ஒருவர். தோளிரண்டிலும் மாட்டி முதுகினில் ஏந்திய பையோடு.ஏறத்தாழ நாற்பது வயது இருக்கும்.அலுவலகம் முடிந்து வருபவரோ! மேற்கத்திய நாடுகளில் பெரும்பாலும் யாரும் மற்றவர்களை ஏறிட்டுப் பார்ப்பதோ உற்றுப் பார்ப்பதோ கிடையாது.அவரவருக்கு அவரவர் வேலை. ஒன்று புத்தகம்,இல்லாவிட்டால் அலைபேசி. இந்த மனிதர்
இரண்டாவதில். என் கணவர் அவருக்கு வணக்கம் சொல்லி
விட்டு, நாங்கள் இந்தியர்கள் சுற்றுலா வந்திருக்கிறோம் என்றார். அவரும் பொறுமையாகக் கேட்டார்.பின்னர் என்னவர் இரயில் நிலையம் செல்ல எந்த எண்ணுடைய வண்டி என்று வினவினார்.அவர் நாங்கள் அவ்வூருக்குப்
புதியவர்கள் என்று அறிந்து கொண்டார். ஆனாலும் கேள்வி
புரியவில்லை.சரி இந்த இடத்தின் பெயராவது அறியலாம் என வினவ அதுவும் அவருக்கு விளங்கவில்லை.கடைசியில்
சைகை மொழியைக் கையிலெடுத்தார் என் கணவர்.இவர்
அபிநயம் பிடித்து தரையைக் காட்டி சுற்றி கைகாட்டி அந்த இடத்தின் பெயர் கேட்டார்.அவர் வானத்தைக் காட்டி ஏதோ சொன்னார்.இப்படி ஐந்து நிமிடம் கடந்தது.என்னங்க
போதும் அவருக்கு நீங்க சொல்றது புரியல இரயில்
நிலையம் கேளுங்க என்றேன்.அந்த மனிதரும் அவர் மொழியில் ஏதோ சொல்லி தலையாட்டினார். பின்னர் இவர் மூன்றாம் பிறையில் இறுதிக் கட்டத்தில் ஸ்ரீதேவிக்கு கமலஹாசன் தன்னை நினைவூட்டச் செய்த முயற்சி போல
வாயில் கைவைத்து கூகூ எனச் சத்தமிட்டுக் கைகளால் சக்கரங்களை ஓட்டி பாவனைகள் காட்டினார்.எனக்குச் சிரிப்பு தாங்க முடியவில்லை.ஆனால் அந்த மனிதர் சிரிக்கவில்லை,புரிந்து கொள்ள முயற்சிக்கிறார் எனத் தெரிந்தது.பின்னர் அவர் இத்தாலியில் இரண்டு எண்களைக் காட்டினார்.சற்று நேரத்தில் ஒரு பேருந்து வந்தது.அவர் காட்டிய எண்ணில் ஒன்று.அவர் அதில் ஏறினார்,நாங்களும் ஏறுவதற்குச் சென்றோம்.உடனே அவர் எங்களைத் தடுத்து விட்டு தகவல் பலகையில் இன்னொரு எண்ணைக் காட்டினார். சரியென்றார் என் கணவர்.அவர் ஏறுவதற்காகப் பேருந்துக்குச் சென்றார், ஆனால் அதற்குள் பேருந்து புறப்பட்டுச் சென்றது.அந்த இத்தாலிக்காரர் கோபமாக ஏதேதோ சொல்லி விட்டு(எங்களைத் திட்டினாரா இல்லை ஓட்டுநரைத் திட்டினாரா தெரியவில்லை.) அங்கே நிற்கவே இல்லை வேகமாகச் சென்று விட்டார்.எங்களால் அவர் வண்டியைத் தவறவிட்டார் போலும்.அடுத்த பேருந்து வந்தது,ஏறினோம் இங்கெல்லாம் நம் ஊரைப் போலப் பேருந்துகளில் நடத்துநர் கிடையாது,முன் புறம் ஏறி ஓட்டுநரிடம் பயணச் சீட்டு வாங்கிய பின்னரே உள்ளே செல்ல வேண்டும்.அவரிடம் இரயில் நிலையம் என்று சீட்டு வாங்கினார் என் கணவர்.அவருக்குக் கொஞ்சம் ஆங்கிலம்
தெரிந்தது. இதற்கு முன் வந்த பேருந்து இரயில் நிலையம் செல்லுமா என்று கேட்டார் என் கணவர்.செல்லும் ஆனால் நிறைய இடங்களைச் சுற்றிக் கொண்டு போவதால் அதிக நேரம் எடுக்கும் என்றார்.
அதனால்தான் அந்த மனிதர் எங்களை அடுத்த வண்டியில் ஏறச் சொன்னார் போலும்! பதினைந்து நிமிடத்தில் இரயில் நிலையம் வந்து விட்டது.இறங்கும்போது என் கணவர் விடுதியின் பெயரைச் சொல்லி திரும்புவதற்கு விவரம் கேட்டபோது அவர் இதே எண்ணுடையப் பேருந்தில் இறங்கிய இடத்திற்கு எதிரில் ஏறுமாறும் விடுதிக்குச் செல்ல இறங்க வேண்டிய இடம் ஏறிய வீதிக்கு அடுத்த வீதி என அடையாளமும் சொன்னார்.
இரயில் நிலையத்திற்கு வெளியில் நீக்ரோ இன இளைஞர்கள்
சிலர் குடைகளையும்,விதவிதமான வண்ணப் பைகளையும் விற்பனை செய்து கொண்டிருந்தனர்.நல்ல ஆங்கிலம் பேசினர்.இதேபோல் பாரீசிலும் `ஈபில் டவர்` போன்ற முக்கிய இடங்களில் இவ்வினத்தார் பொருட்களை
விற்பதைக் கண்டிருக்கிறேன். இவர்களைக் காவல் துறையினர் துரத்துவார்கள், இவர்கள் கையிலகப் படாமல்
திமுதிமுவென ஓடுவார்கள்.அவர்கள் சென்றபின் விற்பனையைத் தொடருவார்கள்.இவர்கள் முறையான கடவுச்சீட்டு முதலான ஆவணங்கள் இல்லாமல் நுழைந்தவர்கள் என்றும் அவர்களை ஒன்றும் செய்ய இயலவில்லை எனவும் அறிந்தேன். சொல்லியிருந்தார்கள்.பாரீசிலும் சரி, பீசாவிலும் சரி,உடைமைகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மகள் கூறியிருந்தாள்.உண்மைதான் பாரீசில் டிஸ்னி வொர்ல்டில் நாங்கள் சந்தித்த கோவையைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகள் கடவுச்சீட்டு முதலான ஆவணங்களையும், வங்கிக் கணக்கையும்,பணத்தையும் பறி கொடுத்துவிட்டு
இந்திய தூதரகத்தின் உதவியால் மாற்று ஏற்பாடு செய்யப் பெற்று வந்திருந்தனர்.
இரயில் நிலையம் சிறியது, அதைச் சுற்றிப் பார்த்து விட்டு,
அதனை அடுத்திருந்த சாலையில் நடந்தோம்,நிறையக் கடைகள் இருந்தன.எப்போதும் சுற்றுலாத் தலங்களில் பொருட்களின் விலை அதிகம்தான்.இங்கும் அப்படியே, ஒரு ஆப்கானியர் இந்தியர் என அறிந்து அழைத்தார்.அழகாக இந்தி பேசினார்.(ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பஞ்சாபி அவர்) அவரது கடையில் பீசா கோபுரங்கள், பீசா கோபுர அமைப்பில் தேனீர்க் கோப்பைகள் வாங்கினேன்.
அந்த வளாகத்தில் இருந்த பல கடைகளை ஆப்கானியர்களே வைத்துள்ளனர் என்றார் அவர். சாலையில் இறங்கிக் காலாற நடந்தோம்.சிறிது நேரத்தில் சாரல் மழை வந்து விட்டது.ஒரு சிறிய பீசா ஹட்டில் (பீட்சா உணவகம்) நுழைந்தோம்.பெரிய அடுப்பில் தகதகவென நெருப்பு கனன்று கொண்டிருந்தது. நமது இந்தியத் தந்தூரி ரொட்டி போல பீட்சா செய்யும் அடுப்பு அது. சிறிய இடமானாலும் சுத்தமாக அழகாக இருந்தது.பாலாடைக் கட்டியும்,காய்கறிகளும் சேர்ந்த பீசா சுவையாக இருந்தது.கணவன் மனைவி இருவர் மட்டுமே, மனைவி தயாரிக்கிறார்,கணவர் பறிமாறுகிறார். வழக்கப்படி எனக்கு காபி தேவையாக இருந்தது.நல்ல காபி பால் சர்க்கரை எல்லாம் சேர்த்து சூடாக வேண்டும் என்றேன்.சிறிது நேரத்தில் ஒரு சிறிய கோப்பையில் ஓரு மேசைக் கரண்டி அளவு டிகாஷன் கொணர்ந்தார்,நான் பால் எங்கே என்றேன்.தலையாட்டி விட்டு போனவர் போனவர்தான்.இருபது நிமிடம் கழித்து வந்து ஏதோ சொன்னார்.நான் வேறு வழியில்லாமல் அதற்குள் சில்லிட்டுப் போன டிகாஷனை விழுங்கினேன். என் கணவர் இனி ஊர் திரும்பும் வரை காபியை நினைப்பாயா என்று சிரித்தார்.அந்த ஒரு விழுங்கு டிகாஷனுக்கும் மூன்று யூரோ கொடுத்ததுதான் ஆச்சரியம்.இருட்ட ஆரம்பித்தது.திரும்பி பேருந்து பிடித்து
ஓட்டுநர் சொன்ன இடத்தில்(என் கணவருக்கு ஏறிய வீதி அடையாளம் தெரிந்தது,அதற்கடுத்த வீதியில் இறங்க சிரமப்படவில்லை.) இறங்கி கலீலியா விடுதிக்கு வந்து சேர்ந்தோம்.
உலகமனைத்தையும் ஆளும் ஆங்கிலம் இது போன்ற ஐரோப்பிய நாடுகளில் உதவுவதில்லை.மெத்தப் படித்தவர்களும் ஆங்கிலம் அறிந்திருப்பதில்லை.தாய்மொழி மட்டுமே தனியாட்சி புரிகிறது,இடர்ப்பாடு நிகழ்ந்த போதும் அவர்களின் தாய்மொழிப் பற்று வாழ்க என்று மனம் நிறைய வாழ்த்தினேன்.
- பருவம்- என்னும் பொய்கைக்கரையில் எங்கள் பாவண்ணன்
- உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 7– கரோல்
- ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- முகங்கள் மறைந்த முகம்
- ‘பங்கயம்’ இட்லி!
- தொடுவானம் 223. இதையும் எதிர்கொள்வேன்
- படித்தோம் சொல்கின்றோம்: ஏ.கே. செட்டியார் (1911 – 1983) எழுதிய உலகம் சுற்றும் தமிழன்
- பீசா நகரில்
- பங்களா கோமானே !
- சூரியனை நெருங்கி ஆராயும் நாசா & ஈசா எதிர்கால விண்வெளி ஏவுகணைத் திட்டங்கள்
- உயர்த்தி
- டிரைவர் மகன்
- மருத்துவக் கட்டுரை – தசைப் பிடிப்பு
- மகிழ்ந்து விளையாடி ஆடிர் ஊசல்
- சூரியன் எரிவாயு தீர்ந்து மரித்தால் சுற்றும் கோள்களுக்கு என்ன நேரிடும் ?