அழகர்சாமி சக்திவேல்
திரைப்பட விமர்சனம் –
இரண்டாயிரத்துப் பதின்மூன்றில் வெளிவந்து கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பெருமை கொண்ட, ‘பாம்பே டாக்கீஸ்’ என்ற இந்த இந்தியத் திரைப் படத்திற்குள், நான்கு தனித்தனிக் கதைகள் இருக்கின்றன. நான்கு கதைகளையும் இயக்கியது, நான்கு புகழ் பெற்ற இந்திய இயக்குனர்கள் ஆகும். இந்தியப் பத்திரிகை உலகம், இந்திய சினிமா உலகம் போன்ற இந்திய ஊடகங்கள் சார்ந்த நான்கு கதைகளில், ஓரினத்தொடர் சார்ந்த, இரண்டு கதைகளை மட்டுமே நாம் இங்கே விமர்சனத்துக்கு எடுத்துக்கொண்டு இருக்கிறோம்.
ஒரு ஓர்பால் ஈர்ப்பு உள்ள ஒரு ஆணால், ஒரு பெண்ணோடு உடல் உறவு கொண்டு, அந்த பெண்ணைத் திருப்தி படுத்த முடியுமா? பலநேரங்களில் முடியலாம். ஏனென்றால், அந்த ஒர்பால் ஈர்ப்பாளனுக்கு பெண் ஆசையே இல்லாது இருந்த போதும், தனது மனம் கவர்ந்த இன்னொரு ஆணை காமத்துடன் நினைத்துக்கொண்டால், அந்தப் பெண்ணிடம் நிச்சயம் உடல் உறவு கொண்டு அவளை சந்தோசப்படுத்த முடியும். சரி.. அந்த ஆண் ஓர்பால் ஈர்ப்பாளனால் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டு, பிள்ளை பெற்றுக்கொள்ள முடியுமா? இதுவும் நடப்பதற்கான நிகழ்தகவு அதிகம் இருக்கிறது. ஏனென்றால் இயற்கையான கருத்தரித்தலுக்கு, நல்ல உடல் உறவும், நல்ல விந்தும் தேவை அவ்வளவே. ஒரு ஆணை மனதில் நினைத்துக்கொண்டு, பெண்ணிடம் உறவு கொண்டாலும், உடலுறவும், விந்தும் நல்ல படியாக இருந்தால், மற்ற ஆண்களைப் போலவே, ஆண் ஓர்பால் ஈர்ப்பாளர்களும் இயற்கையான முறையில் பிள்ளை பெற்றுக்கொள்ள முடியும். இந்தியாவில், பெண்களை அறிந்து ஏமாற்றியோ, அல்லது அறியாமல் ஏமாற்றியோ, திருமணமான ஆண் ஓர் பால் ஈர்ப்பாளர்கள் எத்தனைபேர் இருப்பார்கள்? நிச்சயம் லட்சோப லட்சங்களில் இருப்பார்கள். இவர்களில் பெரும்பானோர் பிள்ளை பெற்றவர்கள். ‘வெளிஉலகத்துக்கும், தனது மனைவிக்கும் ஒரு பிள்ளை பெற்ற ஆண். ஆனால் தனது தனி உலகத்தில், இன்னொரு ஆணின் உடலுறவுக்காய் எங்கும் ஓர்பால் ஈர்ப்பு ஆண்.’ இப்படி வாழும் திருமண ஆண்களில் பெரும்பாலோர் முகநூல்களில் இருக்கிறார்கள். தான் திருமணம் செய்துகொண்ட பெண்ணையும் ஏமாற்றி, தானும் நிம்மதி இல்லாமல் வாழும் இந்திய ஓரினச்சேர்க்கை ஆண்களின் பரிதாப நிலைமை ஒரு மிகப் பெரிய சமூகக் கொடுமை ஆகும். அப்படித் திருமணம் செய்துகொண்டு வாழும் ஒரு இந்திய ஆணின் கதையே, பாம்பே டாக்கீஸ் என்ற திரைப்படம், தனது நான்கு கதைகளில், முதல் கதையாகச் சொல்கிறது.
ஆணோ, பெண்ணோ, ஒரு குழந்தையின் பால்ஈர்ப்பை, பெற்றோர்கள் எந்த வயதில் தெரிந்துகொள்ள முடியும்? இதற்கான பதிலாய், தோராயமாய், பத்து வயதினைச் சொல்லலாம். பெண் போல பொம்மை வைத்து விளையாடுவது, பெண்களின் உடை அணிந்துகொள்ள ஆசைப்படுவது, பெண் போல நடனமாடுவது, பெண்களுடனே அதிக நேரம் இருப்பது, எனப் பல ஓர் பால் ஈர்ப்பு விசயங்களை நாம் உதாரணமாகச் சொல்லலாம். ஆணைப் போல வளர விரும்பும் பெண் குழந்தைக்கும், இது போன்ற விசயங்கள் உண்டு. சில ஆண் குழந்தைகளுக்கு, இது போன்ற பெண் உடை நடை விஷயங்களின் மீது ஆர்வம் இல்லாவிட்டாலும், ஆண்களின் மீதான செக்ஸ் உணர்வு போன்ற ஓர்பால் ஈர்ப்பினை, இரவுகளில் அல்லது மற்ற தனிமை நேரங்களில் வெளிப்படுத்த ஆரம்பிக்கும் வயதும் இந்த வயதுதான். பிள்ளைகளின் இந்த வயதில், பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளின் படிப்பார்வத்தை மட்டுமே கவனித்தால் போதாது. கூடவே, அவர்களது பாலியல் உணர்வு. மற்றும் ஈர்ப்பு குறித்த ஆர்வத்தையும் சற்றே உற்று நோக்க வேண்டும். அப்படி உற்று நோக்குகிற போது, ஏதாவது பாலியல் ஈர்ப்பு மாற்றங்கள் தெரிந்தால், அது குறித்த எதிர்மறை முடிவு எதுவும், உடனே எடுக்காமல், இதற்கென இருக்கும் மனநல மருத்துவர்களை அல்லது ஆலோசகர்களை அணுகுவது அவசியம் ஆகும். இந்திய மருத்துவ உலகம், ‘ஓர்பால் ஈர்ப்பு ஒரு நோய் அல்ல; என்று ஏற்கனவே அறிவித்து இருக்கிறது என்பது மகிழ்ச்சியான விஷயம். இதைக் கருத்தில் கொண்டு, இந்திய மனநல மருத்துவர்களும், காசு பார்க்கும் நோக்கில், குழந்தையின் பெற்றோர்களிடம் கண்டதைச் சொல்லி பயமுறுத்துவதைக் கைவிடவேண்டும். மாறாய், ஒர்பால் ஈர்ப்பு உள்ள குழந்தைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கும், அவர் சார்ந்த பெற்றோருக்கும், முறையான மனதைரியம் கொடுக்க வேண்டியது மருத்துவர்களின் கடமை ஆகும். சிறுவயதில், தனது பெண்தன்மையைப் புரிந்துகொண்டு, அதன்வழியே நடக்க நினைக்கும் ஒரு இந்தியச் சிறுவனின் கதையே, பாம்பே டாக்கீஸ் என்ற இந்தப் படத்தின் இன்னொரு கதையாகும்.
திரைப்படத்தின் கதையைப் பார்ப்பதற்கு முன்னர், ஓர்பால் ஈர்ப்பு குறித்த இந்திய ஊடகங்களின் பார்வை குறித்து சற்றே அலசுவோம். உலக சரித்திரத்தில் எத்தனையோ ராணுவப் புரட்சிகள் நடந்து இருக்கின்றன. மக்கள் புரட்சிகள் நடந்து இருக்கின்றன. மத ரீதியான புரட்சிகள், இன ரீதியான புரட்சிகள், அறிவியல் ரீதியான புரட்சிகள் என்ற இன்னபிற எத்தனையோ வகைப் புரட்சிகளில் சில புரட்சிகள் நல்லது செய்து இருக்கலாம். சில கெட்டது செய்து இருக்கலாம். ஆனால், அத்தனை புரட்சிகளுக்குப் பின்னால் இருக்கும் முக்கியக்காரணியை நாம் கவனித்தால், அது அந்தப் புரட்சியை மக்களிடம் கொண்டு போய் சேர்த்த கொள்கைப்பரப்பு ஆளுமைதான் என்ற உண்மையை, விஷயம் அறிந்த அனைவரும் ஒத்துக்கொள்ளுவர். ஹிட்லர், உலகத்தின் பெரும்பகுதியைத், தனது ஆட்சியின் கீழ் கொண்டுவருவதற்கு ஒரு முக்கிய காரணம், ஹிட்லரின் கீழ் வேலை பார்த்து, அவனது கொள்கைகளைப் பரப்பிய கோயபல்ஸ் என்பவன்தான் என்பது அனைவருக்கும் தெரியும். ஹிட்லர் என்ன சொன்னாலும், அவன் கருத்துக்களை, தனது மேடைப் பேச்சுக்கள், வானொலி ஒலிபரப்புக்கள், பத்திரிகைக் கட்டுரைகள் போன்ற பல ஊடகங்களை உபயோகப்படுத்தி ஜெர்மன் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்த கோயபல்ஸ், ஹிட்லரின் மிகப்பெரிய பலமாக இருந்தான் என்பது வரலாறு சொல்லும் ஒரு உண்மை. “ஓரினச்சேர்க்கை பாவமானது” என்ற விசயத்தை ‘கடவுள் சொன்னார்’ என்று பரப்புவதற்கு, கிறித்துவ மதம் உபயோகப்படுத்தியதும் மேற்சொன்ன ஊடகங்களையே.
இந்திய ஊடகங்களின் ஓரினச்சேர்க்கை குறித்த பார்வை குறித்து அலசினால், அங்கே நமக்கு ஏமாற்றமே மிஞ்சும். அதற்குக் காரணம், பல இந்திய ஊடகங்கள், பணத்திற்கும் இன்ன பிற ஆதாயத்திற்கும் பின்னிருந்து, எப்போதும் இயங்கிக் கொண்டிருப்பதுதான். மதங்களின் அரசியல் விளையாட்டுக்கும், பகுத்தறிவுக் கொள்கைகளின் போராட்டங்களுக்கும் இடையில் ஊஞ்சலாடும் இன்னும் சில பத்திரிக்கை ஊடகங்களோ, ஓரினச்சேர்க்கை குறித்த விசயத்தில் ‘ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்’ என்ற நிலையில்தான் இன்றளவும் இருந்து கொண்டு இருக்கின்றன. தமிழை எடுத்துக்கொண்டால், ‘திண்ணை’ போன்ற ஒரு சில பத்திரிக்கைகளே, ஓர்பால் ஈர்ப்பு குறித்த எழுத்துகளுக்கு சற்றே அதிக முக்கியத்துவம் கொடுத்து, அதை ஒரு சமூகப் பிரச்சினையாக, மக்கள் முன் நிறுத்தி வருகிறது என்று நான் உறுதியாய்க் கூறுவேன். சினிமா, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் நிலையோ இன்னும் கேவலமாய் இருக்கிறது. சினிமா, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் ஓர்பால் ஈர்ப்பு குறித்த விமர்சனங்கள், ஓர்பால் ஈர்ப்பாளர் உலகத்தை கேலி செய்வதாக இருப்பதோடு, அவர்களின் நடத்தையை, ஒரு நகைச்சுவை அல்லது வில்லத்தனம் கலந்த பாத்திரங்களாகவே மக்களுக்கு அறிமுகம் செய்துகொண்டு இருப்பதும் ஒரு காணச் சகிக்காத விஷயம்தான். ‘ஓரினச்சேர்க்கை ஒரு கிரிமினல் குற்றம் என்ற இந்தியச்சட்டம் தவறானது’ என்று 2009-இல், டெல்லி நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை, 2013-இல் உச்ச நீதிமன்றம் ‘செல்லாது’ என அறிவித்தபோது, அதை பல இந்தியப் பத்திரிக்கைகள் எதிர்த்து விமர்சனம் செய்தது பாராட்டுக்குரியது என்றாலும், அதே காலகட்டத்தில், வேறு சில பத்திரிகைகள், உச்சநீதிமன்றத்தின் ஆணையை, ஆதரித்து எழுதிய அறிவீனத்தை நினைத்தால், இப்போதும் என் மனம் கோபம் கொள்கிறது. சரி இனி மீண்டும் படத்துக்குள் போவோம்.
திரைப்படத்தின் நான்கு கதைகளுள், ‘அஜீப் தஸ்தன் ஹை யஹே’ என்ற முதல் கதையை இயக்கியிருப்பது, இந்திய சினிமா உலகில், தனக்கென ஒரு இடம் பிடித்து இருக்கும், பிரபல இயக்குனர் கரன் ஜொஹார் ஆவார். ‘அஜீப் தஸ்தன் ஹை யஹே(இது ஒரு விசித்திரமான கதை)’ என்ற பிரபல ஹிந்தி பாடலே, இந்த முதல் கதையின் தலைப்பு ஆகும். படத்தின் கதை, அவினாஸ் என்ற ஓர்பால் ஈர்ப்பாளனுடன் ஆரம்பிக்கிறது. அவினாஸின் ஓர்பால் ஈர்ப்பு, அவனது தந்தைக்கு தெரிந்து விடுகிறது. ‘ஓரினச்சேர்க்கை செய்பவர்கள் எல்லாருமே, பெண்தன்மை கொண்ட அலிகள் ஆக இருப்பார்கள்’ என்ற தவறான எண்ணத்துடன், அவினாஸினை ‘அலிப்பயலே’ என்று அடிக்கடி திட்டும் தந்தையுடன், ஒருநாள் அவினாஸ் சண்டை போடுகிறான். வீட்டை விட்டு வெளியேறும் அவினாஸ், காயத்ரி மேனேஜர் ஆக வேலை பார்க்கும், ஒரு பிரபல சினிமா பத்திரிகையில், வேலைக்குச் சேர்கிறான். ‘தான் ஒரு ஓர்பால் ஈர்ப்பாளன்’ என்று தன்னை அறிமுகப்படுத்திகொள்ளும் அவினாஸினை, மேனேஜர் காயத்ரிக்குப் பிடித்துப் போகிறது. அவினாசின் பிறந்தநாளுக்கு, தனது வீட்டு விருந்துக்குக் கூப்பிடும் காயத்ரி, அவினாஸ் வீட்டுக்கு வரும் முன்னரே, ‘அவினாஸ் ஒரு ஓர்பால் ஈர்ப்பாளன்’ என்று தனது கணவன் தேவ்விடம் சொல்லி வைக்கிறாள். பழைய பாடல்கள் மீது நாட்டம் கொண்ட தேவ்விடம், வீட்டுக்கு வந்த அவினாஸ் பேசும்போதெல்லாம், தேவ்வின் நடவடிக்கைகள் வித்தியாசப்படுவதை அவினாஸ் கண்டுகொள்கிறான். கூடவே, காயத்ரி, தேவ்வின் தாம்பத்ய வாழ்க்கை அவ்வளவு நன்றாக இல்லை என்ற விசயத்தையும் காயத்ரி மூலம் அவினாஸ் அறிந்து கொள்கிறான். அடுத்தநாள், காயத்ரி இல்லாத நேரம், தேவ்வினை பார்க்கப்போகும் அவினாஸ், “வெளியில் வாருங்கள்” என்ற வேண்டுகோளுடன், தேவ்வினை, தெருவில் பாடும் ஒரு சிறுமியிடம் கூட்டிச் செல்கிறான். ‘லக் ஜா கடே’ என்ற லதாமங்கேஸ்கர் பாடிய பாடலை, சிறுமி பாடுகிறாள். ‘இனி இது போல ஒரு தருணம் கிடைக்காது..எனவே என்னை அணைத்துக்கொள்’ என்ற அர்த்தம் உள்ள அந்தப்பாடலைக் கேட்டு மகிழும் தேவ் சிறுமிக்கு பணம் கொடுக்கிறான். ‘தேவ்வும் ஓர் ஒர்ப்பால் ஈர்ப்பாளனே’ என்பதை கண்டுகொள்ளும் அவினாசினை, அடுத்தநாள் அலுவலகத்தில் சந்திக்கும் காயத்ரி, ‘நேற்று எனக்கும் தேவ்வுக்கும் இடையில் ஆன தாம்பத்திய உறவு, என்றும் இல்லாத சந்தோசத்தைக் கொடுத்தது’ என்று சொல்ல, “தனது நேற்றைய அருகாமையே தேவ்விற்கு செக்ஸ் உணர்ச்சிகளைத் தூண்டி இருக்கிறது’ என்பதை உணர்கிறான் அவினாஸ். நேரே, தேவ்வின் அலுவலகம் செல்லும் அவினாஸ், அவனைக் கட்டி அணைத்து முத்தம் கொடுக்கிறான். அதிர்ச்சி அடையும் தேவ், அவினாசின் கன்னத்தில் அறைகிறான். காயங்களுடன் தனது அறைக்கு வந்து அழும் அவினாசினை, மறுபடியும் சந்திக்கும் தேவ், அவினாசுக்கு உதட்டு முத்தம் கொடுக்கிறான். அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லாத அவினாஸ், தேவ்வினை வெளியே போக, ஆத்திரத்துடன் பணிக்கிறான். மறுநாள், அவினாஸ் காயத்ரியிடம் நடந்ததைச் சொல்ல, காயத்ரி, தேவ்விடம் இருந்து நிரந்தரமாகப் பிரிகிறாள்.
இந்தக்கதை, இந்தியாவின், இன்றைய ஓர்பால் ஈர்ப்பாளர்களின் தயக்க நிலையையும், ‘பெண்ணோடு வாழ்ந்தால்தான் நமக்கு சமூக அங்கீகாரம் கிடைக்கும்’ என்ற எண்ணத்தில், மறைந்து மறைந்து வாழும் அவலத்தையும், தோலுரித்துக் காட்டி இருக்கிறது. “படத்தில் அவினாஸ், தேவ்விடம் பேசும் “வெளியே வாருங்கள்” (Come out) என்ற வசனம் , ஓர்பால் ஈர்ப்பாளர்களிடம் மிகவும் பிரபலமான வார்த்தை ஆகும். ஓர்பால் ஈர்ப்பாளர் சமூகம், நல்ல மதிப்பும் அங்கீகாரமும் பெற, மறைந்து மறைந்து வாழும் இலட்சோப லட்சம் ‘இந்திய ஓர்பால் ஈர்ப்பாளர்கள் தங்கள் ரகசியக் கூட்டை விட்டு வெளியே வர முன்வரவேண்டும்’ என்பதே, படம் சொல்லும் ஒரு கருத்து ஆகும்.
‘ஷீலாக்கி ஜவானி’ என்ற இன்னொரு கதையை இயக்கியிருப்பவர், பிரபல இஸ்லாமிய எழுத்தாளர் மற்றும் கவிஞருமான ஜாவீத் அக்தரின் மகள் ஆன, செல்வி ஜோயா அக்தர் ஆவார். கதையின் படி, விக்கி என்ற சிறுவனுக்கு, பெண்ணாய் வாழவதே மிகவும் பிடித்து இருக்கிறது. அக்காவின் பெண்ணுடையை உடுத்திக்கொள்ளுதல், அம்மாவின் உதட்டுச்சாயத்தை பூசிக்கொள்ளுதல், பெண் நடனம் ஆடுதல், இத்யாதி, இத்யாதி என்று பெண்களின் உலகத்துக்குள் எப்போதும் இருப்பதே சிறுவன் விக்கிக்கு பிடித்து இருக்கிறது. இதனைக் கண்டுபிடிக்கும் அம்மாவும், அப்பாவும் விக்கி மீது கோபம் கொள்கின்றனர். சிறுவன் விக்கியை விட, சில வயது மூத்த, அவனது அக்கா மட்டுமே விக்கிக்கு ஆதரவு. ஒரு நாள், நடிகை காத்ரீனா கைப், ஒரு தொலைக்காட்சிக்கு அளிக்கும் பேட்டியைப் பார்க்கிறான் சிறுவன் விக்கி. “சமூகம் எத்தனை தடைகளை இட்டாலும், நாம் நமது கனவுகளை நிஜமாக்க, சமூகத்தை எதிர்த்துப் போராடத்தான் வேண்டும். ஆரம்பக்கட்டத்தில் நமது கனவுகளை ரகசியமாய் வைத்துக்கொள்வது நல்லது” என்ற காத்ரீனா கைப்பின் அறிவுரைகள், விக்கியின் மனதில் ஆழமாகப் பதிகிறது. விக்கியின் பெண் ஆசையைப் புரிந்துகொள்ளும் விக்கியின் அக்கா, அப்பா தனக்கு வாங்கிக் கொடுத்த, காத்ரீனா கைப் பொம்மையை, தம்பி விக்கிக்கு பரிசாக அளிக்கிறாள். மகிழும் விக்கி, பதிலுக்கு தனது அக்காவுக்கு ஏதாவது செய்ய ஆசைப்படுகிறான். விக்கியின் அக்கா, பள்ளியில் நடக்கும் உல்லாசச் சுற்றுலாவில் கலந்துகொள்ள ஆசைப்படுகிறாள். அதற்காய், இரண்டாயிரம் ரூபாய் அப்பாவிடம் கேட்க, அப்பாவோ மறுக்கிறார். பார்த்துக்கொண்டு இருக்கும் விக்கி, தனது உண்டியல் பணத்தை அக்காவிடம் கொடுக்கிறான். விக்கியும் அக்காவும் சேர்ந்து தத்தம் உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை எண்ணுகிறார்கள். அக்கா சுற்றுலா செல்ல, உண்டியல்களின் பணம் போக இன்னும் 250 ரூபாய் தேவைப்படுகிறது. மீதமுள்ள பணத்தினைச் சேர்க்க, விக்கி, தாங்கள் வசிக்கும் தெருவில், ஒரு நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறான். அதன் மூலம் பணமும் சேர்க்கிறான். நடன நிகழ்ச்சியில், விக்கியே பெண்வேடமிட்டு ஆடுகிறான். ‘தான் பிற்காலத்தில் காத்ரீனா கைப் போல நடனம் ஆடவேண்டும்’ என்ற விக்கியின் கனவுடன் கூடிய ஆட்டத்தோடு படம் முடிகிறது.
ஆண் பெண்ணாகலாம். பெண் ஆணாகலாம். அது ஒருவரது தனிமனித உரிமை. அதை மதித்து நடந்து, அதன்வழி தங்கள் பிள்ளைகளை வளர்ப்பவரே அறிவான பெற்றோர்கள் என்ற கருத்து, இந்தப்படத்தில் மறைபொருளில் உணர்த்தப்பட்டு இருக்கிறது. இந்தியா, தனது நூற்றாண்டு சினிமா விழாவைக் கொண்டாடியபோது எடுக்கப்பட்ட படம், இந்தப்படம் ஆகும். ‘சினிமா உலகம் ஓர்பால ஈர்ப்பாளர்களின் சமூகப் பிரச்சினையை உணர ஆரம்பித்துவிட்டது’ என்ற கூற்று, பாம்பே டாக்கீஸ் என்ற இந்தப்படத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளதில் எனக்கு மகிழ்ச்சியே.
அழகர்சாமி சக்திவேல்
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 13 – பாம்பே டாக்கீஸ்
- தொடுவானம் 229. சினோடு தொடர்புக் கூட்டம்
- மருத்துவக் கட்டுரை நரம்பு நார்க் கழலை ( Neurofibroma )
- சூரிய குழுமக் கோள்கள் தோன்றிய பூர்வ காலப் பிரளயத்தில் பூமிபோல் இருமடங்கு பளுவுள்ள அண்டம் மோதியதால் யுரேனஸ் அச்சு பேரளவு சாய்ந்தது
- விடை பெறுகிறேன் !
- எழுதக்கூடாத அஞ்சலி பி ஆர் ஹரன்