மருத்துவக் கட்டுரை — சொறி சிரங்கு ( SCABIES )

This entry is part 3 of 7 in the series 5 ஆகஸ்ட் 2018


            சொறி சிரங்கு பெரும்பாலும் பிள்ளைகளிடத்தில் அதிகம் காணலாம். இதை ஆங்கிலத்தில் Scabies என்று சொல்வார்கள்.  இது சார்காப்டீஸ் ஸ்கேபி ( Sarcoptes Scabiei ) என்ற நுண்ணிய உண்ணி வகையால் உண்டாகிறது. இந்த நோய் உலகில் மிகப் பழைமையான நோயாகும். இன்றும் இது உலகின் எல்லா நாடுகளிலும் காணப்படுகிறது.  வருடந்தோறும் சுமார் 300 மில்லியன் பேர்களுக்கு இது உண்டாகிறது.  இது தோல் மூலம் பரவும். இது அதிகமான அரிப்பை உண்டுபண்ணும். இது சிறுவர் முதல் பெரியவர் வரை எந்த வயதினரையும் தாக்கலாம். குறிப்பாக பள்ளி விடுதிகள், மருத்துவமனை படுக்கைகள், சிறைச்சாலைகள், வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கும் அறைகள் போன்ற இடங்களில் இது அதிகம் காணப்படும். உடல் உறவு மூலமும் இது பரவலாம்.

இந்த உண்ணி மனிதர்களின் தோலில்தான் வாழ்ந்து பெருகும். புணர்தலுக்குப்பின் ஆண் உண்ணி இறந்துவிடும். கருவுற்ற பெண் உண்ணி தோலில் 2 முதல் 3 மில்லிமீட்டர் வரை தோலுக்கு அடியில் புகுந்து விடும். பகலில் முட்டைகள் இடும். ஒரு பெண் உண்ணி நாள் ஒன்றுக்கு 2 அல்லது 3 முட்டைகள் வீதம் சுமார் 2 மாதங்கள் வரை முட்டையிடும். அதன்பின் அது இறந்துவிடும். முட்டைகள் 72 முதல் 96 மணி நேரத்தில் போரித்துவிடும்.முதலில் புழுவாகத் தோன்றி பின் உண்ணியாக மாறிவிடும்.

                                                                                                         பரவும் விதம்
           இது தொடுவதின் மூலம் பரவும். சில உதாரணங்கள் வருமாறு:
           * இதனால் பாதிக்கப்பட்டவரைப் பராமரித்தல்.
          * பாதிக்கப்பட்ட குழந்தையுடன் விளையாடுதல்
          * ஒன்றாக படுத்து உறங்குதல்
          * விடுதிகளில் பலர் தங்கி நெருக்கமாக பழகுதல்.துணிமணிகள், படுக்கை விரிப்புகள், தலையணைகள், போர்வைகள் போன்றவற்றை பகிர்ந்துகொள்ளுதல்.

          * உடலுறவு

                                                                                                        அறிகுறிகள்

            * அரிப்புதான் மிக முக்கிய அறிகுறி. இது இரவில் கடுமையாக இருக்கும். பகல் நேரத்தில் இந்த அரிப்பு சுமாராக இருக்கும்.
            * சிறு கொப்புளங்கள் – இவை பெரும்பாலும் கை விரல்களின் இடுக்குகளில், மணிக்கட்டு, முழங்கை, இடுப்பு, தொப்புள். அக்குள் ,மார்புகள் , பாலுறுப்புகள் போன்ற பகுதிகளில் தோன்றி உடைந்து அதிலிருந்து நீர் அல்லது சீழ் வெளியேறலாம்.
            * ஒரே குடும்பத்தில் பலருக்கு உண்டாவது.
           மருத்துவர்கள இதைப் பார்த்ததுமே கூறிவிடுவார்கள்.

                                                                                                             சிகிச்சை

            சொறி சிரங்குக்கு சிகிச்சை மிகவும் எளிது. ஆனால் அதை தொடர்ந்து முறையாக பின்பற்றவேண்டும்.அரிப்பைக் குறைக்க மாத்திரைகள் உள்ளன.

          உண்ணியைக் கொல்லும் பென்சில் பெனசோஏட் ( Benzyl Benzoate ) , ஸ்கேபோமா  ( Scaboma ) போன்ற மருந்துகளை உடல் முழுதும் தடவி மறுநாள் குளிக்கவேண்டும்.இதுபோன்று தொடர்ந்து செய்யவேண்டும்.

                                                                                                     பின்விளைவுகள்

         சொறி சிரங்கு சாதாரண நோயாக இருந்தாலும் அது தோலில் புண் உண்டுபண்ணுவதால்,அங்கு கிருமிகள் உள்ளே புக ஏதுவாகிறது.குறிப்பாக தோலின் மேலுள்ள ஸ்டே பைலோகாக்கஸ் பேக்டீரியா கிருமிகள் இரத்தம்மூலம் சிறுநீரகம் சென்று அதைத் தாக்கும் ஆபத்து உள்ளது. ஆதலால் சொறி சிரங்கை உடன் சிகிச்சை மூலமாக குணப்படுத்துவது நல்லது.

          ( முடிந்தது )
Series Navigationபீட்டில்ஸ் இசைப் பாடல்கள்தொடுவானம் 233. லுத்தரன் முன்னேற்ற இயக்கம்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *