பி எஸ் நரேந்திரன்
பதினைந்தாம் நூற்றாண்டில் கோவா வெள்ளைக்கார கடற்கொள்ளையர்களின் (Pirates) தளமாக இருந்தது. அவர்களின் அட்டூழியம் கட்டுமீறிப் போவதனைக் கண்ட தக்காண சுல்தான்கள் அவர்களை அங்கிருந்து விரட்டினார்கள். அதற்குச் சில காலம் கழிந்து போர்ச்சுக்கீசியர்கள் அவர்களின் தளபதியான அல்பகர்க் (Albuquerque) தலமையில் கோவாவின் மீது படையெடுத்து அங்கிருந்த தக்காணத்து சுல்தானின் படைகளை விரட்டியடித்தார்கள். கோவா போர்ச்சுக்கீசியர்களின் காலனியாதிக்க நாடாக மாறியது. தனது நாட்டில் கால்காசுக்கும் பெறாத உபயோகமற்ற சோம்பேறிகள் கோவாவாசிளின் இரத்தத்தை உறிஞ்சி வாழ ஆரம்பித்தார்கள். “புனித” சேவியர் என்கிற தீவிரவாத கிறிஸ்தவனால் கோவாவில் தீவிரவாத கிறிஸ்தவம் (Inquisition) துவக்கப்பட்டு, மதம்மாற மறுத்த ஏராளமான அப்பாவி ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். கோவாவில் மட்டுமல்லாது மொகலாய சாம்ராஜ்யத்தின் அத்தனை பகுதிகளையும் கிறிஸ்தவ மயமாக்க அங்கிருந்த பாதிரிகள் கிளம்பினார்கள். ஆனால் அது அத்தனை எளிதான ஒன்றாக இருக்கவில்லை.
இருப்பினும், இஸ்லாமிய-மொகலாய சாம்ராஜ்யம் கிறிஸ்தவ-மொகலாய சாம்ராஜ்யமாக மாறுவதில் இருந்து மயிரிழையில் தப்பிப் பிழைத்த வரலாற்றுத் தகவல்களும் உண்டு. இந்திய வரலாற்றாசிரியர்கள் எவரும் அதிகம் ஆராயாத ஒரு பகுதி அது என எண்ணுகிறேன். முகலாய அரசர்களாலேயே அது ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.
அக்பரின் காலத்திலேயே கோவாவில் போர்ச்சுக்கீசியர்களின் கை ஓங்க ஆரம்பித்துவிட்டது. வெள்ளைக்காரர்களின் நடை, உடை, பாவனைகளில் அக்பர் அதிக ஆர்வமுடையவராக இருந்தார். கோவா பாதிரிகளின் ஒரு குழு என்னேரமு தில்லியில் அக்பரைச் சுற்று முகாமிட்டிருந்தது. மொகலாய அரசின் பகுதிகளின் கிறிஸ்தவ ஆலயங்கள் கட்டுவதற்கான அனுமதி வேண்டி அங்கு காத்திருந்தார்கள். எழுதப் படிக்கத் தெரியாதவரான அக்பர் பைபிளில் ஆர்வம் இருப்பது போலத் தன்னைக் காட்டிக் கொண்டதுவும் பாதிரிகளைக் கவர்ந்துவிட்டது. எனவே எப்பாடு பட்டாவது அக்பரை மதம்மாற்றுவது எனத் தீர்மானித்து அவரை நச்சரித்துக் கொண்டிருந்தார்கள். அரசனை மதம்மாற்றினால் அவன் குடிகளையும் மதம் மாற்றுவது எளிது என்பதால்.
எல்லா முகலாய அரசர்களைப் போலவே பெண்கள் விஷயத்தில் அக்பரும் பலவீனமானவராக இருந்தவர். எனவே மரியம் என்கிற ஒரு போர்ச்சுக்கீசிய வெள்ளைக்காரியை அக்பருக்கு மணமுடித்து வைத்தார்கள் பாதிரிகள். மரியம் அக்பரின் பட்டத்து அரசிகளில் ஒருத்தி (அதாகப்பட்டது குரான் அனுமதிக்கிற சட்டபூர்வமான நான்கு மனைவிகளில் அவளும் ஒருத்தி). மரியம் வந்தபின்னர் அக்பரின் பைபிள் ஆர்வம் பெருகிவிட்டது. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட பாதிரிகள் அவருக்கு ஒரு பைபிளைப் பரிசளித்தார்கள். பயபக்தியுடன் அதனைக் கையில் வாங்கிய அக்பர் தன்னருகில் இருந்த அவரது வரலாற்றாசிரியரான அபுல் ஃபசலிடம் கொடுத்து உடனடியாக அதனை பாரசீக மொழியில் மொழிபெயர்க்க உத்தரவிட்டார். அடுத்ததாக ஒரு சிலுவையையும், மேரி சிலையையும் அவரிடம் கொடுக்க அவரும் அதனை பக்தியுடன் முத்தமிட்டு அருகிலிருந்த இஸ்லாமிய அறிஞர்களை அதிர வைத்தார். அதற்குப் பின்னர் இரவெல்லாம் கண்ணுறங்காமல் பாதிரிகளிடம் பரமண்டலத்திலிருக்கும் பிதாவின் மஹிமைகளைக் குறித்துக் கேட்டு மகிழ்கிறார். அக்பரின் மகன்களின் ஒருவன் பாதிரிகளுடன் அனுப்பி வைக்கப்பட்டு அவர்களிடம் கல்வி பெற்றதாகக் வரலாற்றுக் குறிப்பு இருக்கிறது.
மரியம் மூலமாக அக்பருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தை ஆக்ராவில் கட்டுவதற்கான அனுமதியைப் பெறுகிறார்கள் போர்ச்சுக்கீசிய பாதிரிகள். அக்பர், ஆக்ராவின் மிகப் பெரும் பணக்காரராக இருந்த ஹிந்து வியாபாரி ஒருவரின் வீட்டைப் பிடுங்கி அதனை கிறிஸ்தவ தேவாலயமாக மாற்றுவதற்கு பாதிரிகளிடம் ஒப்படைக்கிறார். அந்த வீடு தேவாலயமாக மாற்றப்பட்ட பின்னர் அங்கு வரும் அக்பர், அங்கிருந்த ஏசு கிறிஸ்துவின் சிலையின் முன்னர் மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்வதனைக் கண்டு மிரண்டு போன அரசவை முல்லாக்கள் “பாதுஷா காஃபிராக” மாறிவிட்டதாக எண்ணி ஓலமிட்டார்கள். பின்னர் அந்தத் தகவலை அரண்மனையின் அந்தப்புரத்திலிருந்த அக்பரின் அன்னையான ஹமீதா பானுபேகத்திடம் தெரிவிக்கிறார்கள். பாரசீகத்தைச் சேர்ந்த அக்பரின் அன்னை தீவிர மார்க்கப் பற்றுடையவர். அவரின் கண்டிப்பான தலையீட்டால் மனம் மாறிய அக்பர் பாதிரிகளிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறார்.
வெள்ளைக்கார மனைவியான மரியத்திடம் மயங்கிக் கிடந்த அக்பர் ஏறக்குறைய கத்தோலிக்கராக ஞானஸ்னானம் செய்விக்கப்பட இருந்ததாகத் தெரிகிறது. அதுமட்டும் நடந்திருந்தால் இந்தியா ஒரு கத்தோலிக்க நாடாக ஆகியிருக்கலாம்.
அதற்குப் பிறகு மரியத்தைக் குறித்த தகவல்கள் எதுவும் முகலாய வரலாற்றில் காணப்படவில்லை. அனேகமாக அவள் இறந்து போயிருக்கலாம் அல்லது அக்பரால் விரட்டியடிக்கப் பட்டிருக்கலாம்.
அக்பருடன் அது நின்றுவிடவில்லை. ஜஹாங்கீரில் துவங்கி குஸ்ரூ, ஷா ஜஹான், தாராஷிகோ, அவுரங்கசீப் வரைக்கும் கிறிஸ்தவ தாக்கம் உண்டு. அதனைக் குறித்துப் பின்னர் பார்க்கலாம்.
References :
Tales from Indian History : Being the Annals of India retold in narratives – by Talboys Wheeler.
Who said Akbar is Great – by P.N. Oak.
- முகலாயர்களும் கிறிஸ்த்தவமும் 1
- எழுத்தாளர் பெருமாள் முருகனுடன் நியூ ஜெர்ஸியில் ஒரு வாசகர் சந்திப்பு:
- வேறென்ன வேண்டும்?
- மருத்துவக் கட்டுரை நோய்க் கிருமித் தொற்றுகள்
- தொடுவானம் 239. தோல்வியும் தீர்மானமும்
- பூமிக்கு அருகில் ஒன்றை ஒன்று ஒருநாளில் சுற்றி வரும் அபூர்வ இரட்டை முரண்கோள் கண்டுபிடிப்பு
- என் நாக்கு முனையில் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
- நல்லதோர் வீணை செய்தே….