இராவணன்களே…..

This entry is part 5 of 8 in the series 30 செப்டம்பர் 2018


பிச்சினிக்காடு இளங்கோ

அடிப்படையில் அனைவரும்
பத்துத்தலையோடுதான்
வடிவமைக்கப்படுகிறார்கள்

பத்துத்தலையில்
சிலவற்றைக்
குறைத்துக்கொண்டவர்கள்
தலைமுறைக்குத்
தேவைப்பட்டார்கள்

சிலவற்றில்
சிரத்தையும்
சிலவற்றைத்
தவிர்த்தும்
வாழ்ந்தவர்கள்
தலைவர்களானார்கள்
நமக்குத் தத்துவமானார்கள்
தத்துவம் தந்தார்கள்

தலைமுறைகள்
பேசவேண்டுமானால்
உங்கள் கவனம்
சில
தலைகளில் மட்டுமே

இராமராக
இராமனே இல்லை
ஏனெனில்
இராமனே இல்லை

தனக்கான
தமக்கான
பற்றுதலைத் தவிர்த்து
மானுடப் பற்றுதலைப்
பற்றினால்
பற்றுதலால் வரும்வினை
பற்றாது

இதயங்களிலெல்லாம் உங்களுக்கு
இடம்
ஒதுக்கப்பட்டிருக்கும்

வன்முறைக்கு எதிரான
கோபம்
வறுமைக்கு எதிரான
வேகம்
உயிர்கள்மீதான
ஈரம்
ஒற்றுமைமீதான
மோகம்
தவிர்க்கக்கூடாத தலைகள்

இந்தத்தலைகளால்
இவைபோல்
இன்னும்பலதலைகளால்
தலைக்கனம் கூடட்டும்
தளைகள் அகலட்டும்

ஓட்டைகளால் ஆன
புல்லாங்குழலாய்
இசைபட வாழ்வதிலே
இருக்கிறது எல்லாம்……

(23.9. 2௦18 இரவு எட்டுமணிக்கு ஆனந்த பவனில் டாக்டர் சபா இராசேந்திரன், கவிஞர் இக்பால் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது இராசேந்திரன் அவர்களின் குறிப்பிலிருந்து பிறந்தது)

Series Navigationமருத்துவக் கட்டுரை- தட்டம்மை ( MEASLES )2011 இல் ஜப்பான் புகுஷிமா அணுமின் உலைகளில் நேர்ந்த வெடி விபத்து விளைவுக் கதிரியக்க நோயால் முதல் ஊழியர் மரணம்
author

பிச்சினிக்காடு இளங்கோ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *