[1869-1948]
சி. ஜெயபாரதன், கனடா
[ சத்தியம், சுதந்திரம், சமத்துவம் ]
அறப் போர் புரிய மனிதர்
ஆதர வில்லை யெனின்
தனியே நடந்து செல் ! நீ
தனியே நடந்து செல் !இரவீந்திரநாத் தாகூர்
https://www.youtube.com/watch?
feature=player_detailpage&v= vLtvFirHT14 ++++++++++++++
சத்தியம், சுதந்திரம், சமத்துவம்.
[காந்தீயக் கோட்பாடு]
***********************
காந்தீயக் கோட்பாடு என்ன என்பதை முதலில் நான் விளக்கமாகக் குறிப்பிட வேண்டும்.
சத்தியம், சுதந்திரம், சமத்துவம் ஆகிய மூன்று கோட்பாடுகளும் பின்னிய தேசம், ஆட்சி, ஆணையகம், அரசாங்கம், அமைச்சர், அரசாங்கப் பணியாளர், நாடாளும் மன்றம், ஊராட்சி, பல்கலைக் கழகம், கல்விக்கூடம், துணை வேந்தர், கோயில் திருப்பணி, சமயத் திருப்பணி, சட்ட நீதி மன்றம், நீதிபதி, உயர்நீதி, உச்சநீதி மன்றம், காவல்துறை, தொழிற்சாலைகள், தொழிற்சாலை அதிபர், ஊழியர், சமூக சேவை, இல்லறம், துறவறம், மருத்துவக் கூடம், மருத்துவர், மருத்துவப் பணியாளி, சட்ட நிபுணர், வழக்காடுவோர் ஆகியோர் இந்தியருக்கு வேண்டும்.
சுதந்திரம் [உரிமைப்பாடு, விடுதலை உணர்வு] மனிதப் பிறப்புரிமை. சுதந்திரம் என்பது கட்டுப்பாடுள்ள சுதந்திரம். கட்டவிழ்த்தோடும் பூரண சுதந்திரமில்லை. சுதந்திரம் நடுவில் அடைபட, அதைக் கட்டுப்படுத்த ஒருபுறம் சத்தியம், மறுபுறம் சமத்துவம் உள்ளது.
சத்தியம் என்பது நேர்மை, மெய்ப்பாடு, உண்மை நெறி. சத்திய நெறியற்ற சுதந்திரம் தீவிர இன்னல் விளைவிக்கிறது. அதுபோல் சமத்துவம் இல்லாத சுதந்திரம் மேல்ஜாதி, கீழ்ஜாதி பிரிவுகளைப் பெருக்கிறது. நேர்மையில்லாத துணைவேந்தர் பதவிக்கு லஞ்சம் வாங்குகிறார்.
அறநெறி, உரிமை, சமநெறி என்ற முப்பெரும் ஒப்பிலாப் பண்புகளே காந்தீயக் கோட்பாடு. சத்தியம், சுதந்திரம், சமத்துவம் எந்த நூற்றாண்டுக்கும் ஏற்புடைதாகும்.
*****************************
பூமியில் பிறந்த எவனும் மரணத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. மரணம் நம் எல்லாருக்கும் நண்பன். நமது நன்றிக்கு உரியது. எனென்றால் அது எல்லா விதத் துயர்களிலிருந்தும் நமக்கு விடுதலை அளிக்கிறது.
மகாத்மா காந்திமுடிவிலாக் கீர்த்தி பெற்றார்! புவிக்குள்ளே முதன்மை யுற்றார்!
கி.மு.399 இல் கிரேக்க வேதாந்த ஞானி சாக்ரெடிஸ் [Socrates] எழுபதாவது வயதில் விஷம் ஊட்டப் பட்டுத் தன் இனத்தாரால் கொல்லப் பட்டார்! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏசு நாதர் தன் இனத்தாரால் காட்டிக் கொடுக்கப் பட்டு, ரோமானியரால் சிலுவையில் அறையப்பட்டு செத்து மடிந்தார்! அடிமை வாழ்வு ஒழித்த ஆப்ரகாம் லிங்கன் 1865 ஆண்டில் அமெரிக்கன், ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் சுடப்பட்டு உயிர் இழந்தார்! ஆஃப்ரிக்க அமெரிக்கர் விடுதலைப் பிதா, மார்டின் லூதர் கிங் வெள்ளைக் காரன் ஒருவனால் 1968 இல் சுடப்பட்டு மாண்டார்! மகாத்மா காந்தி 1948 ஜனவரி 30 ஆம் நாள் மாலை 5 மணிக்குப் பிரார்த்தனைக்குச் செல்லும் வழியில் இந்து மத வெறியன் ஒருவனால் கண்முன் நேரே சுடப்பட்டு “ஹே ராம்” என்று முணங்கிய வண்ணம் மடிந்தார்!
உலக வரலாறு மீள்கிறது [History repeats] ! பல நூற்றாண்டுகளுக் கிடையே அந்த ஐந்து பேர் வாழ்ந்த போதிலும், மனிதரால் கொல்லப்பட்ட அவர்களிடம் ஒளிர்ந்த ஓர் அரிய ஒற்றுமை என்ன ? அனைவரும் மனிதப் பணிபுரிந்த உயர்ந்த மனிதாபிமானிகள்! ஆயுள் உள்ள போது சாதித்ததை விட, அவர்கள் மரணத்தின் பின் உலகுக்குப் போதித்தவை, பிரமிக்கத் தக்கவை!
ஏசு மகான் சிலுவைச் சின்னம் இமயத்தளவு ஓங்கி வளர்ந்து, உலகிலே மாபெரும் கிறிஸ்துவ மதம் பரவ ஆணிவேரானது. மார்டின் லூதர் கிங் அமெரிக்காவின் மகாத்மா வானார்! மகாத்மா காந்தியைப் பற்றி, ‘முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்! புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்!’ என்று மகாகவி பாரதியார், காந்தி உயிரோடுள்ள போதே போற்றிப் புகழ்ந்தார். அவரது அமர வாக்கு காந்தியின் மரணத்துக்குப் பின், எத்தகைய மெய்மொழியாய் ஆகி விட்டது! ஆனால் கொலை மரணத்தில் இறந்தவர் எல்லோரும் முடிவில்லாக் கீர்த்தியும், புவிக்குள் முதன்மையும் அடைவ தில்லை! அந்தக் கோணத்தில் பார்க்கும் போது, கொலை செய்யப் பட்ட இந்திரா காந்தியும், அவரது மகன் ராஜீவ் காந்தியும், மகாத்மா காந்தியின் உன்னத மகிமையைப் பெற வில்லை!
அகால மரணத்திற்கு அபூர்வ இரங்கல் அறிவிப்புகள்!
மகாத்மாவின் மரணச் செய்தியைக் கேட்டு 1948 ஜனவரியில், “அகில உலகும் இந்தியாவுடன் சேர்ந்து வருந்துகிறது” என்று அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் அவலச் செய்தி அனுப்பி யிருந்தார். காந்தியின் முதற்போர்க் களமாகிய தென் ஆப்பிரிக்காவி லிருந்து, அவரை வெறுத்த தளபதி ஜான் ஸ்மட் “நம்முடன் இருந்த ஓர் இளவரசர் பிரிந்து விட்டார்” என்று ஒரு புகழுரையை அனுப்பினார். இத்தாலியில் வாட்டிகன் போப் பாண்டவர் பையஸ் XII தனது இரங்கல் மொழியில், “கிறிஸ்துவ மதத்தின் நண்பர், சமாதானத்தின் சீடர் ஒருவர் மறைந்தார்” என்று எழுதி யிருந்தார். சைனாவும் இந்தோனேசியாவும், “ஆசிய விடுதலையின் முதல் மூல கர்த்தா மாண்டார்” என்று கூறி அதிர்ச்சி அடைந்தன.
ஒன்றான பாரதத்தைத் துண்டு படுத்திய அரசியல் போட்டியாளர் மகமதலி ஜின்னா, தன் இரங்கல் உரையில், “இந்து இனம் உண்டாக்கிய உன்னத மனிதருள் ஒருவர், காந்தி” என்றார். மரணச் செய்தி கேட்டு, இங்கிலாந்தில் லண்டன் மக்கள் கண்ணீர் விட்டனர். காந்தியைப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் அவர்கள் நேராகப் பார்த்ததை நெஞ்சம் மறக்க வில்லை! உலக மகா யுத்தம் முடிந்த தறுவாயில் பல சம்பவங்களைக் கேட்ட பிறகு அவர்களை நிலைகுலையச் செய்த நிகழ்ச்சி காந்தியின் கோர மரணம்! காந்தியை வெறுத்த வின்ஸ்டன் சர்ச்சில், வருந்தற் கடிதம் அனுப்பி யிருந்தார். எல்லாருக்கும் மேலாக, நாடக மேதை பெர்னாட் ஷா கூறியது, சிந்திக்க வைப்பது ! “நல்லவராக இருப்பது எவ்வளவு ஆபத்தானது என்று காட்டுகிறது, காந்தியின் மரணம்” என்று ஷா கூறினார். ஜவஹர்லால் நேருவின் சகோதரி விஜய லட்சுமி பண்டிட், மாஸ்கோவில் புதிதாகத் திறக்கப் பட்ட இந்திய எம்பஸியில் வருந்தல் பதிவுப் புத்தகத்தை எடுத்து வைத்தார். ஆனால் ஸ்டாலின் வெளித்துறை உறுப்பினர் ஒருவர் கூடத் தன் பெயரை எழுதிக் காந்தியின் மரணத்துக்கு வருத்தம் தெரிவிக்க வில்லை!
நேர்வழி எதுவெனத் தெரிந்தபின் செய்யாமல் நழுவுவது கோழைத்தனம்
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை சமயத்தில், மனைவிமார் காமப் பலாத்காரத்திற்கு இரையாகும் போது, குழந்தைகள் கண்முன் கொலை செய்யப்படும் போது, உறவினர் தலைகள் சீவப்படும் போது, பழிவாங்க ஆய்தமோடு ஓடும் இந்துக்களைத் தடுத்துப் பொறுக்குமாறு, காந்தி அகிம்சா வேதம் போதித்தார். “அகிம்சா வழித் தூதரே! சொல்லுங்கள்! எப்படி இந்த நரகத்தில் வாழ்வது ? பஞ்சாபில் இந்துக்களைக் கண்டதும் முஸ்லீம் ஆட்கள் கொலை செய்யும் போது, ஆயுதத்தைக் கைவிட நீங்கள் எப்படிச் சொல்லலாம் ? கசாப்புக் கடை ஆடுகளைப் போல எங்கள் தலைகள் அறுபட்டுக் கூறுபட வேண்டுமா ?” என்று புலம்பெயர்ந்த கூட்டத்தார் யாவரும் கத்தினார்கள்! “காந்தி சாகட்டும்” என்று கூச்சலிட்டார்கள்!
டெல்லியில் வாழும் காந்தியின் முஸ்லீம் நண்பர்கள், “உயிருக்கு ஆபத்து என அறிந்தும் இந்தியாவிலே தங்குவதா ? அன்றி எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் பாகிஸ்தானுக்கு ஓடுவதா ?” என்று கேட்டால், “ஓடிப் போகாமல் தங்கி மரண ஆபத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்பது காந்தியின் பதிலாக இருந்தது! போகப் போக, காந்தியின் அறிவுரை, அவரைப் பின்பற்றியவருக்கும் பிடிக்க வில்லை! எப்போதும் இஸ்லாமியருக்குப் பரிந்து, அவர் பேசுவது பலருக்கு வெறுப்பூட்டின!
“முஸ்லீம்களுக்குப் பகைவன் எவனோ, அவன் இந்தியாவுக்கும் பகைவன். இந்தியா, பாகிஸ்தான் இரண்டிலும் ஒருங்கே அமைதி நிலவட்டும். நாம் ஒருவரை ஒருவர் பகைவராக எண்ணக் கூடாது. இந்துக்கள் குர்ரானைப் படிக்க வேண்டும். முஸ்லீம் பகவத் கீதையின் உட்பொருளை அறிய வேண்டும். நமது மதத்தை நாம் மதிப்பதுபோல், மற்றவர் மதங்களையும் மதிக்க வேண்டும். உயர்ந்த கருத்துக்கள் உருது மொழியில் இருந்தா லென்ன ? சமஸ்கிருதத்தில் இருந்தா லென்ன ? பார்ஸி மொழியில் இருந்தா லென்ன ? அவை எல்லாமே மெய்யான மொழிகள் தான்! நமக்கும் உலகுக்கும் கடவுள் நல்லறிவைத் தரவேண்டும்.” இவை காந்தியின் அழுத்தமான வார்த்தைகள்.
காந்தியைக் கொல்ல பலவிதச் சதிகள்
காந்தி இஸ்லமியருக்குப் பரிந்து பேசுவது, சிலருக்கு வேப்பங் காய்போல் கசந்தது! மகாராஷ்ட்ராவில் ராஷ்ட்ரிய சுவய சேவா சங்க [R.S.S.S] உறுப்பினர் பலருக்கு எட்டிக் காயாய் இருந்தது. அவர்கள் தூய இந்துக்கள்; மத வெறியர்கள். குறிப்பாக பூனாவைச் சேர்ந்த நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகிய இரு வாலிபருக்கு காந்தி பகைவரானார்! தென் ஆப்பிரிக்காவில் வேலை முடிந்து 1915 இல் பாரதம் திரும்பிய காந்தியை, விடுதலைப் போராட்டத்திற்கு இழுத்து வந்தவரும், ஒரு மராட்டியரே; அவர்தான் கோபால கிருஷ்ண கோகலே! 1948 இல் சதி செய்து அவரைக் கொன்றவனும் ஒரு மராட்டியனே! அவன்தான் நாதுராம் விநாயகக் கோட்சே! முதலில் கோட்சே முழுக்க முழுக்க காந்தியை பின்பற்றினான்! 1937 இல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டு, கைதி செய்யப் பட்டுச் சிறைக்குச் சென்றவன், கோட்சே! பிறகு கொள்கை பிடிக்காமல் அவரை விட்டுவிட்டு ராஷ்ட்ரிய சுவய சேவா சங்க இந்து போராட்டத் தளபதி வீர சாவர்க்கரைப் பின் பற்றினான். வீர சாவர்க்கர் இந்து மதத்தைக் காக்க வந்த கடவுளின் தூதராகப் போற்றப்படும் ஒரு பட்டாளிய இந்து [Messiah of Militant Hindu]. சாவர்க்கர் காந்தியின் கொள்கை எல்லாவற்றையும் எதிர்க்கும் ஓர் எதேச்சை அதிகாரி! மெளண்ட் பாட்டன் தனது இந்தியப் பிரிவினைத் திட்டத்தை, 1947 ஜூலை 3 இல் வெளியிட்ட போது, அதைப் ‘பாரதத்தின் இருண்ட நாள்’ என்று பறை சாற்றி, வீர சாவர்க்கர் தனது பூரண எதிர்ப்புத் தெரிவித்தார்!
40 கோடி [1948] இந்திய மக்களின் விதி, அப்போது காந்தியின் கையில் இருந்தது! பாரதக் கண்டம் இரு துண்டமாக வெட்டுப்படப் போவதை காந்தி எப்போதும் எதிர்த்தார்! ‘என் இறந்த உடம்பு மீதுதான், இந்தியா பிரிவுபட வேண்டும் ‘ என்று வெகுண்டார். ‘இந்தியா பிளவு பட்டால் ஒழிய, இந்து முஸ்லீம் தனித் தனியே சமரசமாய் வாழ முடியாது’ , என்பது வைஸ்ராய் மெளண்ட் பாட்டனின் உறுதியான எண்ணம். நேரு, வல்லபாய்ப் படேல், ராஜாஜி ஆகியோர் மூவரும் இந்தியா இரண்டாய்ப் பிரிவதைத் தவிர வேறு வழியில்லை என்று காந்தியுடன் வாதாடினர்.
காந்தி பாரதப் பிரிவினைப் போராட்டத்தில் தோல்வி அடைந்தார்! ‘இந்தியா இரண்டாகப் பிளக்கப் பட்டது. ஆனால் காந்தி உயிரைப் போக்கிக் கொள்ள வில்லையே’ என்று கோட்சே ஆங்காரம் அடைந்தான். ‘காந்தியின் அகிம்சா வேதம், இந்து மக்களைக் கோழையாக்கி, எதிர்க்கும் சக்தியை இழக்க வைத்து, எதிரிகள் முன் மண்டியிடச் செய்து விட்டது! மானத்தைக் காக்க இந்து மாதர்கள், காம பலாத்கார வேதனையிலிருந்து தப்பிக் கொள்ள, கிணற்றில் குதித்துத் தம் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்! பலியானப் பெண்களுக்கு அது ஒரு வெற்றி, என்று காந்தி அவர்களது சாவைப் பாராட்டுகிறார்! அப்படிப் பலியாகும் மாதர்களில் ஒருத்தி, அடுத்து என் தாயாக இருக்கலாம்’ என்று கொதித்தான் கோட்சே! ‘பாரத மாதாவின் சதையைப் பசிக் கழுகுகள் உயிரோடு கிழிக்கின்றன! நம் பெண்டிர் நடுத் தெருவில் கற்பழிக்கப் படுவதை, காங்கிரஸ் அலிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன! எத்தனை காலம் பொறுப்பது ? இதற்கு ஒரே முடிவு, காந்தியைக் கொல்ல வேண்டும்’ என்று கொதித் தெழுந்தான் கோட்சே. இந்து மகா சபையில் காந்தியைக் கொல்ல பலவித சதித் திட்டங்கள், வீர சாவர்க்கர் தலைமையில் உருவாகின! குழுச் சதியாளர்கள்: நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே, கோபால் கோட்சே, விஷ்ணு கார்காரே, மதன்லால் பாவா, இன்னும் சிலர்.
மகாத்மா காந்தியின் இறுதி உண்ணா விரதம்
பாரதப் பிரிவினை ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு ஈடாகத் தர வேண்டிய 55 கோடி ரூபாயை, பாரத அரசாங்கம் பிடித்து வைத்துக் கொள்ளப் போவதை, காந்தி அறவே வெறுத்தார். அவரது எதிர்ப்புத் தர்க்கம் நேருவையும், படேலையும் உடன்பட வைக்க முடியவில்லை! இறப்பதற்கு 17 நாட்களுக்கு முன், 1948 ஜனவரி 13 ஆம் தேதி காந்தி, அதற்காகத் தான் உண்ணா விரதத்தைத் தொடங்கப் போவதாக, பிர்லா மாளிகையிலிருந்து அறிவித்தார். ஓராண்டுக்கு முன்பு இந்து முஸ்லீம் படுகொலைக் கலகத்தை நிறுத்த, காந்தி நெளகாலி நோக்கித் தனியாகத் தைரியமாகப் பாத யாத்திரை செய்தார். அப்போது ரவீந்திர நாத் தாகூரின் ஒரு பாடலைப் [தலைப்பில் உள்ளது] பாடிக் கொண்டு தன் உண்ணா விரதத்தைத் துவங்கினார்.
சில நாட்கள் கழித்து இந்தியாவின் எல்லை மாநிலத்திலிருந்து, பாரதப் பிரிவினைக் கலகத்தில் பாடுபட்ட சில இந்துகளும், சீக்கியர்களும் கூக்குரலுடன் காந்தியைக் காண வந்தனர். ஆறுதல் மொழி கூறு வந்த காந்தியை, அவர்கள் யாவரும் உடனே திட்ட ஆரம்பித்தனர்! ‘இதுவரை எங்களைக் கொடுமைப் படுத்தியது போதும். முற்றிலும் எங்களை நாச மாக்கி விட்டார்! எங்களைத் தனியே வாழ விடு! இமயத்தில் போய் ஓய்வெடு! ‘ என்று காந்தியை நோக்கிக் கூச்சல் போட்டனர். இக்கடுஞ் சொற்கள் காந்தியின் நெஞ்சை ஊடுருவித் தாக்கின! அவற்றைக் கேட்டு கற்சிலையாய் நின்று விட்டார், காந்தி! அவரது மெலிந்த மேனி மீது ஒரு பெரிய பாறாங்கல் விழுந்து எலும்பு நொருங்கியது போல் உணர்ந்தார்! பிறகு சில நாட்கள் சென்றபின் வேறு ஒரு கூட்டம் வந்து, உண்ணா விரதத்தை நிறுத்துமாறுக் காந்தியைக் கெஞ்சியது. அந்தக் கூட்டத்தில் இஸ்லாமியர், சீக்கியர், இந்துக்கள் எல்லா இனத்தவரும் இருந்தனர்.
‘இந்தியாவுக்கு அகிம்சா வழி இனி தேவை இல்லை என்றால், நான் இங்கு உயிர் வாழ்வதிலும் பயனில்லை! பாரதத்தின் தலைவர்கள் ஒருநாள், இந்தக் கிழவனால் நாம் பட்டது போதும்! நம்மை விட்டு அவன் ஒழிந்து போக மாட்டானா ? என்று கூறினால் கூட நான் ஆச்சரியப் படமாட்டேன்’ என்று காந்தி ஒருதரம் சொல்லி யிருக்கிறார்.
மெளண்ட் பாட்டன் தம்பதியர் உண்ணா விரதத்தில் கிடந்த காந்தியைக் காண வந்தனர். ‘மலையை மகமதிடம் கொண்டு வர, நான் ஓர் உண்ணா விரதம் எடுக்க வேண்டி யிருக்கிறது! ‘ என்று காந்தி நகைப்பூட்டி அவர்களை வரவேற்றார். காந்தியின் மெலிந்து போன உடலைக் கண்டு, எட்வீனா பாட்டன் கண்களில் நீர் பெருகியது! ‘வருத்தப் படாதே, எட்வீனா, காந்தி எதைச் செய்ய விரும்புகிறாரோ, அதைச் செய்து கொண்டிருக்கிறார். அவர் மிகுந்த மனத்திட முடைய மெலிந்த மனிதர்’, என்று மனைவியைத் தேற்றினார் மெளண்ட் பாட்டன்.
கோபால் கோட்சே, தன் அண்ணன் நாதுராம் கோட்சேயிக்குக் கொடுத்த வாக்குப்படி, ஜனவரி 17 ஆம் தேதி காந்தியைக் கொல்ல .32 காலிபர் கைத் துப்பாக்கியுடன், டெல்லிக்கு வந்தான். ஆனால் அன்று அதை நிறைவேற்ற அவனால் முடியவில்லை!
கடேசியில் பெற்ற காந்தியின் வெற்றி!
இறுதியில் பாரத அரசாங்கம் 55 கோடி ரூபாயைப் பாகிஸ்தானுக்குக் கொடுக்க முன் வந்தது! காந்தி ஜனவரி 18 ஆம் தேதி உண்ணா விரதத்தை நிறுத்தினார். அன்றைய பிரார்த்தனை சொற்பொழிவில் நேரு பேசினார், ‘இந்திய விடுதலை நான் கண்ட ஓர் ஒளிக்காட்சி! ஆசியாவின் எதிர்காலத்தை என் மனதில் வரைந்து வைத்தேன். ஆனால் அந்த ஒளிக்காட்சியை அளித்தவர் ஓர் அரிய, எளிய மனிதர்! அவரைக் காப்பாற்றச் செய்யும் எந்தத் தியாகமும் அத்தனை பெரிய தல்ல! அவர் ஒருவர்தான் நம்மை மெய்யானக் குறிக்கோளை நோக்கி நடத்திச் செல்ல முடியும். அது நம் குருட்டு நம்பிக்கை இல்லை!’
அன்று கூட்டத்தில் காந்தி பேசினார், ‘பாரத நாடு இந்துக்களுக்கு மட்டுமே! அதுபோல் பாகிஸ்தான் இஸ்லாமியருக்கு மட்டுமே! என்று கூறுவது போல் முட்டாள்தனமான எண்ணம் எதுவும் இருக்க முடியாது! இந்தியா, பாகிஸ்தான் இரண்டையும் ஒருங்கே சீர்திருத்துவது என்பது மிகவும் கடின மானது! ஆனால் நாம் மனம் வைத்து செய்தால், எதுவும் நிச்சயமாக முடியும்!’
1947 ஜனவரி 20 ஆம் நாள் மிகப் பலவீனமுள்ள காந்தியை, பிர்லா மாளிகைப் பிரார்த்தனை மேடையில் ஒரு நாற்காலியில் வைத்துக் கொண்டு போய் அமர்த்தினர்! அப்போது இந்து மகா சபைச் சதியினர் கொலை ஆயுதங்களோடு கூட்டத்தினுள் நுழைந்தனர். மதன்லால் பாவா பற்ற வைத்த கைவெடி எதிர் பாராதவாறு கூட்டத்தில் வெடித்தது. ஆனால் காந்தி உயிர் தப்பினார். போலீஸ் பாவாவைத் தேடிப் பிடித்துக் கைதி செய்தனர்.
காந்தி இறப்பதற்கு முந்திய நாள் [ஜனவரி 29, 1948] வியாழக்கிழமை, அவர் அணு ஆயுதங்களைப் பற்றி இந்திரா காந்தியிடம் கூறியது: ‘அணுகுண்டை ஒருங்கே அமெரிக்கா தவிர்க்க வேண்டும். அகிம்சா வழிப் போராட்டம் ஒன்றை மட்டும் அணு குண்டுகள் அழிக்க முடியாது! அணுகுண்டு நம்மைத் தாக்கும் போது, அச்சமின்றி நிமிர்ந்து நின்று மேல் நோக்கிப் பார்த்து, விமானிக்காகப் பிரார்த்திக்க வேண்டு மென்று, என்னைப் பின்பற்று வோரிடம் நான் கட்டாயப் படுத்துவேன்.’ மற்றும் ஒரு சமயம், ‘அகிம்சா இயக்கம் ஒன்றுதான் மனித இனத்தின் கைவசமுள்ள மாபெரும் சக்தி பெற்ற ஓர் ஆயுதம். பேரழிவுச் சக்தியுடைய எந்த யுத்த ஆயுதத்தையும் விட பெரியது, அது!’ என்று சொல்லியிருக்கிறார்.
இரண்டாம் தடவை ஜனவரி 30 ஆம் தேதி மாலை ஆப்தே, கோட்சே இருவரும் கைத் துப்பாக்கியை மறைத்துக் கொண்டு, காந்தியின் பிரார்த்தனை மைதானத்தில் நடமாடிக் கொண்டிருந்தனர். அன்று கோட்சே வெற்றி அடைந்தான்! காந்தியைக் கொன்ற சதிகாரனாய்ச் சரித்திரத்தில் இடம் பெற்றான்! 1948 மே மாதம் 27 ஆம் தேதி நாதுராம் கோட்சே, ஆப்தே, கோபால் கோட்சே, சாவர்க்கர் உள்பட எட்டுப் பேர் கைதி செய்யப் பட்டு சதி வழக்குப் பல மாதங்கள் நடந்தது. முடிவில் நாதுராம் கோட்சே, ஆப்தே இருவரும் கொலைக் குற்றம் சாட்டப் பட்டு, நவம்பர் 15 ஆம் தேதி தூக்கிலிடப் பட்டனர்! கோபால் கோட்சே, கார்காரே, பாவா மூவருக்கும் 12 வருட சிறைத் தண்டனை கொடுக்கப் பட்டது! போதிய சாட்சி இல்லாது போனதால், சாவர்க்கர் உள்பட மற்றோர் விடுவிக்கப் பட்டனர்!
ஜாதி மதங்களைப் பார்ப்போம்! சகிப்போம் மதிப்போம்!
பாரத அரசியல் நிர்ணயச் சட்டப்படி, இந்தியா ‘மதச் சார்பற்ற [Secular]’ ஒரு குடியரசு. மகாத்மா காந்தி மதச் சார்பற்ற ஒரு பாரத நாட்டை உருவாக்கும் பணிக்கே உயிர் வாழ்ந்தார்; அதை இந்தியாவில் நிலைநாட்டப் போராடியதில் அவர் தோல்வியுற்று மாண்டார்! பாரதச் சட்டங்கள் வழக்கறிஞர் களுக்கும் நீதி மன்ற நீதிபதிகளுக்கும் மட்டுமே பயன்படும் கருவிகள்! பாமர மக்கள், அரசியல் வாதிகள், மதவாதிகள், மடாதிபதிகள் ஆகியோருக்கு, எழுதப் பட்டாலும் அவர்கள் சட்டத்தைப் பின்பற்றுவ தில்லை! இஸ்லாமிய மதம், கிறிஸ்துவ மதம், சீக்கிய மதம், புத்த மதம், ஜெயின மதம் இந்திய நாட்டில் பல நூற்றாண்டுகள் வேரூன்றி, இந்து மதத்துடன் இணைந்து உலவி வருகின்றன. ஆயிரக் கணக்கில் நம்மிடையே ஜாதிகள் உள்ளன! பல்லாயிரம் ஆண்டுக் காலம் வளர்ந்து வேரூன்றி விட்ட ஜாதிப் புற்றுநோயை எந்த அறுவை முறையிலும், எத்தனை ஆண்டுகள் முயன்றாலும், அவற்றைப் பாரத மண்ணிலிருந்து களை எடுக்க முடியாது! ‘எம்மதமும் சம்மதமே’ என்று காந்தியின் மரணம், நமக்கு அறிவுரை சொல்லட்டும்! பாரத நாடு இம்மதங்கள் ஒருங்கே தனித்து வாழப் பல நூற்றாண்டுகள் இடம் கொடுத்தது. எல்லோருக்கும் இணையான சமரச வாழ்வைத் தொடர்ந்து, ஏன் பாரதம் அளிக்கக் கூடாது ?
வட இந்தியாவில் இந்து மத வெறியர்கள், அடிக்கடிக் கிறிஸ்துவக் கோயில்களைத் தீயிட்டுக் கொளுத்தியும், அங்குள்ள பாதிரியார் களைக் கொலை செய்தும் வருகிறார்கள்! தாழ்த்தப் பட்ட ஏழை மக்களை, மேலினத்தார் வட நாட்டிலும், தென் நாட்டிலும் படாத பாடு படுத்தி வருகிறார்கள். பாரத்திலே பிறந்து வளர்ந்த புத்த மதத்தினரை, இந்து மதவாதிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நசுக்கி பாரத நாட்டிலிருந்து விரட்டி விட்டதால், மிஞ்சிய சிறுபான்மை யினர் இருக்குமிடம் தெரியாமல் முடங்கிக் கிடக்கிறார்கள்! சீக்கியர் தனி நாடு கோரிப் போராடித் தொல்லை கொடுத்துத் துன்புற்று, அவர்கள் கொட்டம் அடக்கப் பட்டு இப்போது சற்று அமைதி நிலவி வருகிறது.
காந்தி ஏசு நாதரை மிகவும் நேசித்தார். ‘ஏசு நாதரின் ‘மலைப் பிரசங்கம்’ [Sermon on the Mount] காந்தியைக் கவர்ந்த ஓர் அரிய வாக்குரை! இந்து வேதங்கள் மட்டுமே தேவ வாக்குகள் என்பதைக் காந்தி ஒருபோதும் ஒப்புக் கொண்ட தில்லை! அவை ஏன் பைபிளாகவும், கொரானாகவும் இருக்கக் கூடாது ? என்று கேள்வி எழுப்பினார். ‘நீங்கள் கிறிஸ்துவர் இல்லை’, என்று ஒருவர் குறிப்பிட்ட போது, காந்தி சொன்னார், ‘நான் ஒரு கிறிஸ்டியன்! நான் ஒரு இந்து! நான் ஒரு முஸ்லீம்! நான் ஒரு யூதன்!’ அந்த ரீதியில் அவர் மற்றவர்களை விடத் தான் ஒரு தகுந்த இந்தியன், என்று காட்டிக் கொண்டார்.
‘எனது ஆழ்ந்த நம்பிக்கை இதுதான்: இந்துக்கள், சீக்கியர், இஸ்லாமியர், கிறித்துவர் யாவரும் ஒரே பாரத மாதாவின் புத்திரர், புத்திரிகள். பாரதத்திலோ, பாகிஸ்தானிலோ நடக்கும் எந்த விதப் படு கொலையும் கண்டு பலிவாங்க முற்பட்டு, நம் மக்கள் கடமை யிலிருந்து பிறழக் கூடாது! பாகிஸ்தானில் உள்ள எல்லா இந்துக்களும், சீக்கியரும் கொல்லப் பட்டாலும், இந்தியாவில் உள்ள ஓர் இஸ்லாமியச் சிறு பிள்ளையைக் காப்பாற்ற நாம் முற்பட வேண்டும்!’ என்பது காந்தியின் வாக்கு!
இந்தியர் பலருக்குத் தேசப்பற்று குன்றி வருவதைக், காஷ்மீரிலிருந்து கன்னியா குமரி முதல் பயணம் செய்யும் எவரும் கண்டு பிடித்து விடலாம்! தேசப்பற்று என்றால், நாட்டு மக்கள், நாட்டு மொழிகள், நாட்டுப் பண்புகள், பழக்க வழக்கங்கள், நடையுடை பாவனைகள் மீதுள்ள சகிப்புத்தன்மை, மதிப்பு, நம்பிக்கை ஆகியவற்றின் மீது இந்தியர் காட்டும் மனிதத் தன்மை! அதற்கு மக்களிடம் மதச் சகிப்பு, இனச் சகிப்பு, ஜாதிச் சகிப்பு, மாநிலச் சகிப்பு, மொழிச் சகிப்பு மிக மிகத் தேவை! மதச் சார்பில்லாமை என்றாலும் இதுதான் அர்த்தம்! பாரதத்தின் பல பிரச்சனைகளுக்கு மூல காரணம், இந்தியரிடம் குறைந்துள்ள, இந்தச் சகிப்பற்ற தன்மைகளே !
‘ஜாதிகள் இல்லையடி பாப்பா! ஜாதி மதங்களைப் பாரோம்! மற்றும் செப்பும் மொழி பதினெட் டுடையாள், ஆயின் சிந்தை ஒன்றுடையாள்’ என்று பாரத மாதாவைப் பற்றிப் பாரதியார் பாடியதற்கும் இதுதான் அர்த்தம்! ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு’ என்றும் நமக்குக் கூறினார்! நாற்பது ஆண்டுகள் ஒன்றாக எல்லா ஜாதியினரும், எல்லா இனத்தவரும், எல்லா மதத்தினரும் பிரிட்டீஷ் சாம்ராஜியத்தோடு போராடி இந்தியா மகத்தான விடுதலைக் குறிக்கோளை அடைய வில்லையா ?
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே!
பிரிட்டீஷ் அரசாங்கம் பாரத நாட்டை அடிமைப் படுத்தினாலும், அது செய்த நல்ல காரியங்களும் உண்டு. துண்டுபட்டுப் போன பரத கண்டத்தை ஒன்றாக்கியது பிரிட்டீஷ் அரசு! ஆங்கில மொழி நம்மிடையே பரவி யிருந்ததால், பாரத நாடு கல்வி, தொழில், வாணிபம், விஞ்ஞானம், வேளாண்மை போன்ற எல்லாத் துறை களிலும் முன்னேறி இருக்கிறது. இந்தியாவின் பதினெட்டு மொழிகள் வளர்ச்சி பெற, ஆங்கில மொழி உதவியாக இருந்திருக்கிறது. இந்திய நகரங்கள், பெரும்பான்மை யான ஊர்கள் ரயில் பாதைகளில் இணைக்கப் பட்டு, ரயில்தொடர் வாகனங்கள் ஜாதி மதம் பாராது எல்லா இனத்தாரையும் ஒருங்கே ஏற்றிச் செல்கின்றன. இந்தியத் தபால், தந்தி நிலையங்கள் ஜாதி மதம் பாராது, எல்லா ஊர்களுக்கும் நமது கடிதங்களைப் பரிமாறி வருகின்றன. இந்திய ரயில்தொடர் வாகனங்கள், ஆகாய விமானங்கள் போன்ற சாதனங்களில் நாம் பயணம் செய்யும் போது, ஜாதி, மதம், இனம் எதையும் பார்க்காமல், ஒரு தேச மக்களாய் நடந்து வருகிறோம்! பன்மொழி பேசும் பல்வேறு இந்திய மக்களைப் பிணைக்கும் ஓர் இணைப்பு மொழியாய் ஆங்கில மொழியும் பாரதத்தில் பணி செய்து வருகிறது!
இப்போது அடிப்படைவாத இந்துக்கள் மதப் போர்வைக்குள் புகுந்து கொண்டு, இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர் ஆகியோர்க்குத் தொல்லை கொடுத்து வருகிறார்கள். அதனால் நாட்டில் மீண்டும் மீண்டும் எழும் கொலை பாதக எதிர்ப்புகளுக்கும் இந்துக்கள் ஆளாகி வருகிறார்கள். 16 ஆம் நூற்றாண்டில் பாபர் கட்டிய பாப்ரி மசூதியை அயோத்தியாவில் 1992 ஆம் ஆண்டில் இடித்துத் தரைமட்ட மாக்கிய பிறகு, அங்கே சில இந்துக்கள் ராமர் கோயில் கட்டப் புகுவது ஒரு மாபெரும் பிரச்சனைக் குரிய மதச் சம்பவம்! இராமர் பிறந்த புண்ணிய பூமியாகக் கருதப்படும் அந்தத் தளத்தில் இந்துக்களுக்கும் இஸ்லாமி யருக்கும் நிரந்தர மதப்போரை உண்டாக்கிப் பலரது குருதி வெள்ளம் ஓடி விட்டது! இதைப் பற்றி மத்திய அரசியல் மந்திரி, உமா பாரதி அழுத்தமாகச் சொன்னாராம், ‘பாப்ரி மசூதி தேசீய அவமானச் சின்னம்! ஓர் அடிமைச் சின்னம்! அது நமது தேசப்பற்றைப் பாதிக்கிறது! முகலாய சாம்ராஜியத்தைப் பாரத தேசத்தில் நிலைநாட்டிய ஓர் ஆக்கிரமிப்பாளன் பாபர், பெயரைத் தாங்கி நிற்கிறது! மசூதி இடிப்பில் எந்த விதச் சதித் திட்டமும் இல்லை! அது ஓர் அடிமைச் சின்னம், என்பது எனது உறுதியான நம்பிக்கை’ என்று முழக்கினாராம்!
அப்படிப் பார்க்கப் போனால், ஆக்ராவில் உள்ள ‘தாஜ் மஹால்’ ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? டெல்லியில் உள்ள ‘குதுப்மினார்’ கம்பம் ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? மொம்பையில் பிரிட்டீஷ் அரசாங்கம் கட்டிய, ‘இந்தியத் தலை வாசல்’ [Gateway of India] ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? சையத் அகமத் புகாரி உமா பாரதியைத் தாக்கி, ‘பாப்ரி மசூதியை ஓர் அடிமைச் சின்னம் என்பது இஸ்லாமியரை அவமானப் படுத்துவதாகும்! இஸ்லாம் மதத்தை எடுத்துக் காட்டும், ஓர் தனித்துவச் சின்னம் அது’ என்று சீறினார். இராமர் பிறந்த பூமிக்காக தீராத இந்து முஸ்லீம் சண்டைகள், கொலைகள், தீயெரிப்புகள் !
மீண்டும் வட நாட்டில் 2002 ஆம் ஆண்டில் ‘ராம் ஆலயப் போர்’ தலை தூக்கி யிருக்கிறது! இந்து முஸ்லீம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக், கொலை செய்து பலிவாங்கிக் கொண்டனர்! இறந்தவர்களில் முஸ்லீம் மக்கள் எண்ணிக்கை மிக அதிகம்! பெரும்பான்மையான அடிப்படை இந்து மத வெறியர்கள், தீங்கிழைக்காத சிறுபான்மை முஸ்லீம் மக்கள் இல்லங்களைத் தீயிட்டு, அவர்களை உயிரோடு கொளுத்தி யிருக்கிறார்கள்! காந்தி எந்த மதச் சண்டைகள் நிகழக் கூடா தென்று தன் ஆருயிரைக் கொடுத்தாரோ, அந்த மதச் சண்டைகள் பாரதத்தில் இன்னும் ஓயவில்லை ! இனியும் ஓயப் போவதில்லை!
கிறிஸ்துவ ஆலயங்களைத் தீயிட்டுக் கொளுத்திப் பாதிரியாரைக் கொன்ற போதோ, பாப்ரி மசூதியை இடித்துத் தரைமட்ட மாக்கிய போதோ, சங்கராச்சாரியார் போன்ற இந்து மதாதிபதிகள், இந்து மத வெறியர்களைக் கண்டிக்கவும் இல்லை! தண்டிக்கவும் இல்லை! ராம ராஜியத்தை ஆதரித்த மகாத்மா இருந்திருந்தால், ராம பூமிக்காக மசூதி தகர்க்கப் படுவதைத் தடுத்து நிறுத்திக் காப்பாற்றி யிருப்பார்! கிறிஸ்துவர் புனிதக் கோயில் எரிப்புகளையும், அருட் பாதிரியார் கொலைகளையும் தடுக்க அறப்போர் நடத்தி யிருப்பார்! ஆனால் காந்தி சீடர்கள் என்று சொல்லிக் கொள்பவரும், மதச் சார்பற்ற பாரத அரசின் ஆட்சியாளர்களும் கோரக் கொலைகளை, தீயெரிப்புகளை இன்னும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அநாகரீகம், அவமானம், அநியாயம், அறிவீனம்!
வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டில் எல்லாம்!
மகாத்மா காந்தி இன்னும் மாண்டு போகவில்லை! அவர் ஓர் உலக மனிதாபிமானி! ‘மகாத்மா’ என்னும் பட்டத்தை காந்திக்கு அளித்தவர், கவியோகி இரவீந்திரநாத் தாகூர். ‘உலக சரித்திரத்தில் மகாத்மா காந்தி புத்தர், ஏசுக் கிறிஸ்து ஆகியோருக்கு இணையான இடத்தைப் பெறுவார்’, என்று இந்தியாவின் கடைசி வைஸ்ராய் மெளண்ட் பாட்டன் கூறி யிருக்கிறார். ரஷ்ய மேதை லியோ டால்ஸ்டாய், விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் காந்தியின் ஆயுதமற்ற விடுதலைப் போராட்டத்தைப் பாராட்டியுள்ளார். ஆஃப்ரிக்க அமெரிக்கர் விடுதலைப் பிதா, மார்டின் லூதர் கிங், காந்தியின் அகிம்சாப் போராட்ட முறையைப் பின்பற்றினார். ‘வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டில் எல்லாம்’ என்று பாரதியார் பாடியுள்ளது போல், மகாத்மா காந்தி பிற நாடுகளில் ‘மாதிரி மனிதராய்’ மாந்தருக்கு வழிகாட்டியாய் மறைமுகமாகப் பணி செய்து கொண்டிருக்கிறார்! ஆனால் இந்தியாவை விட்டு, அவரது ஆத்மா என்றோ போய் விட்டது ! பாழ்பட்டுப் பரிதபிக்கும் பாரத தேசம் தன்னை, இனி வாழ்விப்பது எப்படி என்று விண்ணுலகிலிருந்து கவலைபட்டுக் கொண்டிருக்கிறார், மகாத்மா காந்தி!
https://www.youtube.com/watch?
feature=player_detailpage&v= vLtvFirHT14 ***************************
தகவல்:
1. Gandhi’s Truth By : Erik H. Erikson (1969)
2. Gandhi His Life & Message for the World By: Louis Fischer (1954)
3. The Life of Mahatma Gandhi By : Louis Fischer (1950/1983)
4. http://graysparks.
blogspot.com/2011/04/blog- post_18.html 5. http://en.wikipedia.org/wiki/
Mahatma_Gandhi 6. http://www.mkgandhi.org/
assassin.htm 7. http://en.wikipedia.org/wiki/
Assassination_of_Mahatma_ Gandhi 8. https://mail.google.com/
mail/u/0/#inbox/ 14b3e9d68711e1e0 ++++++++++++++++++
S. Jayabarathan [jayabarathans@gmail.com]
+++++++++++++++++
Mohandas Gandhi TimelineFrom the Website : http://www.sparknotes.com/
biography/gandhi/timeline.html https://mail.google.com/mail/?
hl=en&shva=1#all/ 13465cd01bf5bf45 Picture from Gandhi Movie with Ben Kingley as Gandhi [1982]
http://www.youtube.com/watch?
feature=player_embedded&v= 2GgK_Nq9NLw [Mahatma Gandhi Interview]
http://www.columbia.edu/cu/
weai/exeas/asian-revolutions/ pdf/gandhi-timeline.pdf https://mail.google.com/mail/
u/0/#inbox/14b3e9d68711e1e0 http://www.bbc.com/news/world-
asia-india-35259671 ++++++++++++++++++++++++
- நரேந்திரன் – வார குறிப்புகள் (செப்டம்பர் 30, 2018) இந்துக்கள், சிலைகள், ஜகதி ஸ்ரீகுமார்
- உன்னைக் காண மாட்டேன் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
- தொடுவானம் 242. கிராம வளர்ச்சியில் கல்வி
- மருத்துவக் கட்டுரை- தட்டம்மை ( MEASLES )
- இராவணன்களே…..
- 2011 இல் ஜப்பான் புகுஷிமா அணுமின் உலைகளில் நேர்ந்த வெடி விபத்து விளைவுக் கதிரியக்க நோயால் முதல் ஊழியர் மரணம்
- வாழ்க நீ எம்மான் வையத்து நாட்டில் எல்லாம்
- தால் தர்கா ( பருப்பு )