4. தெய்யோப் பத்து

This entry is part 3 of 10 in the series 14 அக்டோபர் 2018

இப்பகுதில் உள்ள பத்துப் பாடல்களிலும் ‘தெய்யோ’ என்னும் அசைச்சொல் இறுதியில் வருவதால் இப்பகுதி தெய்யோப் பத்து என வழங்கப்படுகிறது. துன்பத்தில் உழன்று மீண்டவனை ‘நீ எப்படித் தாங்கினையோ தெய்ய’ என்பது போலப் பொருள் கொள்ளலாம். தெய்யோ என்பது பொருளில்லாத அசைச்சொல்லாகும்
====================

தெய்யோப் பத்து—1

யாங்கு வல்லுநையோ ஓங்கல் வெற்ப!
இரும்பல் கூந்தல் திருந்திழை அரிவை
திதலை மாமை தேயப்
பசலை பாயப் பிரிவு தெய்யோ?

[யாங்கு=எவ்வாறு; வல்லுநையோ=வல்லவன் ஆயினையோ?;
ஓங்கல்=மலை; வெற்ப=மலைநாட்டுத் தலைவன்; இழை=அணிகலன்; திதலை= தேமல்; மாமை=மாந்தளிர் நிற அழகு]
கொஞ்ச நாளு பிரிஞ்சி போயிருந்த அவன் இப்ப திரும்பி வரான். அப்ப தோழி அவனைப் பாக்கறா; நீ எப்படிப் பிரிஞ்சி இருந்தன்னு தோழி அவன்கிட்டக் கேக்கற பாட்டு இது.
“ஒயரமான மலை இருக்கற நாட்டுக்குத் தலைவனே! கருப்பான தலைமுடியும், அத்தோட நல்ல ஆபரணமும் போட்டிருக்கற இவளுடைய தேமலும் மாந்தளிரு போல இருக்கற அழகும் போயிப் பசலை வர மாதிரி செய்ய எப்படித்தான் பிரிஞ்சு போக முடிஞ்சது ஒன்னாலே?”
=====================================================================================
தெய்யோப் பத்து—2

போதார் கூந்தல் இயலணி அழுங்க,
ஏதி லாட்டியை நீபிரிந்த தற்கே
அழலவிர் மணிப்பூண் நனையப்
பெயல்ஆனா னாஎன் கண்ணே தெய்யோ!

[போதார்=மலர் பொருந்திய; இயலணி=இயற்கையழகு; அழுங்க=வருந்த; ஏதிலாட்டி=அயலவள்அழல்=ஒளி; ஆனா=நீங்கா; பெயல்=கண்ணீர் பெய்தல்]
பிரிஞ்சு போன அவன் திரும்பி வர்றான். அப்ப அவன் தோழியைப் பார்த்து, நான் பிரிஞ்சிருந்த அந்தக் காலத்துல நீயும் அவளும் எப்படி இருந்தீங்கன்னு தோழியைப் பாத்துக் கேக்கறான். அதுக்குத் தோழி சொல்ற பாட்டு இது.
”பூக்கள் நெறய வச்சிருக்கற கூந்தலைக் கொண்டவ அவ; அவ போட்டிருக்கற நகையெல்லாம் அழகு கொலைஞ்சு போற மாதிரி நீ அவள உட்டுப் பிரிஞ்சு போயிட்டே! அவ நல்ல ஓளி வீசக் கூடிய செவப்பு மணியெல்லாம் இருக்கற நகையை மாரில போட்டிருந்தால்ல; அதெல்லாம் நனயைற மாதிரி கண்ணீர் விட்டுகிட்டே இருந்தா.”
=====================================================================================
தெய்யோப் பத்து—3

வருவை அல்லை; வாடைநனி கொடியதே!
அருவரை மருங்கின் ஆய்மணி வரன்றி;
ஒல்லென இழிதரும் அருவிநின்
கல்லுடை நாட்டுச் செல்லல் தெய்யோ!

[வருவை அல்லை=வர மாட்டாய்; வாடை=வாடைக் காற்ரு; வரன்றி= வாரி அடித்துக் கொண்டு; செல்ல்ல்=செல்லாதே]
கொஞ்ச நாள் பிரிஞ்சு போயி சில காரியம் செஞ்சிட்டு வந்துதான் அவளைக் கல்யாணம் செய்ய முடியும்னு அவன் தோழிகிட்டச் சொல்றான். அப்ப தோழி சொல்ற பாட்டு இது.
”மலையிலே இருக்கற மணியெல்லாம் வாரி அடிச்சுகிட்டு சத்தம் போட்டுகிட்டு விழற அருவி இருக்கற ஒன் மலைநாட்டுக்குப் போகாதே! நீ போனா சீக்கிரம் திரும்பி வர மாட்டேன்ற; இந்தக் குளிரான வாடைக் காத்து ரொம்பக் கொடியது; எங்களைக் கொன்னு போட்டிடும்;
=====================================================================================
தெய்யோப் பத்து—4

’மின்அவிர் வயங்கிழை ஞெகிழச் சாஅய்,
நன்னுதல் பசத்தல் யாவது?’ ’துன்னிக்
கனவில் காணும் இவளே
நனவில் காணாள், நின் மார்பே தெய்யோ!

[மின்அவிர் வயங்கிழை=மின்னல் போல் ஒளி வீசும் அணிகலன்; சாஅய்=மெலிந்து; ஞெகிழ=நெகிழ; அவிர்=ஒளிர்கின்ற; துன்னி=நெருங்கி]
அவன் தெனம் வந்துட்டுப் போறான்; அப்ப ஒரு நாளு அவ ஒடம்பு ரொம்ப வாடியிருக்கு; அதைப் பார்த்துத் தோழிகிட்ட என்னா காரணம்னு கேக்கறான்; அதுக்குத் தோழி சொல்ற பாட்டு இது.
”மின்னல் போல ஒளி தர்ற இவ நகையெல்லாம் நெகிழ்ந்து போயிருக்கு; நெத்தியெல்லாம் பசலை பூத்திருக்கு: இதுக்கு என்னா காரணம்னு அவன் கேக்கறான். அவ கனவுல ஒன் மார்பைச் சேர்ற மாதிரி கனாக் கண்டாள்; முழிச்சுப் பாத்தா ஒன்னைக் காணோமாம். அதுக்காக இப்படி ஆயிட்டான்னு தோழி சொல்றா”
=====================================================================================
தெய்யோப் பத்து—5

கையற வீழ்ந்த மைஇல் வானமொடு
அரிது காதலர்ப் பொழுதே; அதனால்
தெரிஇழை தெளிர்ப்ப முயங்கிப்
பிரியலம் என்கமோ? எழுகமோ? தெய்யோ!

[கை=பக்கம்; மை=மேகம்; உற=சேர்ந்து; தெரியிழை=தேர்ந்தெடுக்கப்பட்ட அணிகலன்கள்; முயங்கி=தழுவி]
தன் ஊட்ட உட்டுட்டு அவனோட ராத்திரியோட ராத்திரியா போறதுன்னு அவ துணிஞ்சிட்டா. திட்டம் போட்டபடிக்கு அவனும் வந்திட்டான். அப்ப தோழி அவகிட்டச் சொல்ற பாட்டு இது.
”ஒரு பக்கமா போயி மழையெல்லாம் பெஞ்சிட்டதால மானம் கருப்பான மேகங்களே இல்லாம தெளிவா இருக்கு; அதால அவனோடு போகறதுக்கு இதை உட்டா வேற நேரம் கெடைக்காது. அதால போட்டு இருக்கற நகையெல்லாம் சத்தம் போடற மாதிரி அவனைத் தழுவுவோமா? அல்லது அவனோடயே போலாமா?”
நான் சொன்ன ரெண்டில ஏதாவது ஒண்ணைச் சீக்கிரம் முடிவெடுத்துச் செய்யின்னு தோழி மறைமுகமாச் சொல்றா
=====================================================================================
தெய்யோப் பத்து—6

அன்னையும் அறிந்தனள்; அலரும் ஆயின்று;
நல்மனை நெடுநகர் புலம்புகொள உறுதரும்
இன்னா வாடையும் அலையும்
நும்மூர்ச் செல்கம்; எழுகமோ? தெய்யோ!

[அலர்=பழிச்சொல்; ஆயின்று=உண்டாயிற்று; புலம்பு=தனிமை;
உறுதரும்=தீண்டும்; நெடுநகர்=நகரின் நடுவில் அமைந்த பெரிய இல்லம்; அலையும்=வருத்தும்]
அவனைப் பாத்த தோழி சீக்கிரம் வந்து அவளைக் கல்யாணம் செஞ்சுக்கன்னு சொல்ல நெனக்கறா. அவனைத் தனியா பாத்து ‘இப்பவே ஒன் ஊருக்குப் போயிடலாமான்னு கேக்கற பாட்டு இது.
”நீங்க ரெண்டு பேரும் அடிக்கடி சந்திக்கறது அம்மாவுக்குத் தெரிஞ்சிடுச்சு; ஊர்லயும் எல்லாரும் பேச ஆரம்பிச்சிட்டாங்க. நம்ம பெரிய ஊட்ல வர்ற வாடைக் காத்து ரொம்பவும்தான் வருத்துது, அதால ஒன் ஊருக்கு இப்பவே போயிடலாமா?”
நீ பிரிஞ்சு போனா வாடைக் காத்து துன்பப்படுத்தும். அதால சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்க; இல்லன்னா இப்பவே ஒன் ஊருக்குக் இவளக் கூட்டிக்கிட்டுப் போன்னு தோழி மறைவா சொல்றா
=====================================================================================
தெய்யோப் பத்து-7

காமம் கடவ, உள்ளம் இனைப்ப,
யாம்வந்து காண்பதுஓர் பருவமாயின்
ஓங்கித் தோன்றும் உயர்வரைக்கு
யாங்குஎனப் படுவது நும்மூர்? தெய்யோ

!
[காமம்=ஆசை வேகம்; கடவ=செலுத்த; இனைப்ப=வருத்த; வரை=மலை]
தெனம் வந்து சந்திக்கற எடத்துக்கு வர்ற வழியைத் தவற உட்டுட்டு அவன் அவளைப் பாக்க முடியாம திரும்பிட்டான். மறு நா வரான். அப்ப நேத்திக்கு அவன் வரலன்னு நெனச்சுகிட்டுத் தோழி சொல்ற பாட்டு இது.
”ஒன் மேல இருக்கற ஆசை ரொம்பவும் ஒன்னைப் பாக்கணும்னு சொல்லுது; எங்க மனசெல்லாம் வருந்துது. நாங்களே வந்து ஒன்னைப் பாக்கற நெலைமை வந்திடுச்சின்னா ஒன்னைப் பாக்கறதுக்கு ஒங்க ஊர்ல இருக்கற ஒசரமான மலைக்கு எந்தப் பக்கத்தில இருக்கு ஒன் ஊர்? சொல்லு”
=====================================================================================
தெய்யோப் பத்து—8

வார்கோட்டு வயத்தகர் வாராது மாறினும்
குரூஉமயிர்ப் புருவை ஆசையின் அல்கும்
மாஅல் அருவித் தண்பெரும்ஞ் சிலம்ப!
நீஇவண் வரூஉம் காலை
மேவரும் மாதோ இவள் நலனே தெய்யோ!

[வார்கோடு=நீண்ட கொம்பு; வயம்=வலிமை; தகர்=ஆட்டுக் கடா;
புருவை=பெண் ஆடு; மாறினும்=நீங்கிப் போனாலும்; குரூஉமயிர்=ஒளி பொருந்திய உரோமம்; அல்கும்=தங்கும்; மாஅல்=பெரிய; சிலம்பு=பக்கமலை; மேவரும்=சிறந்து தோன்றும்]
அவனைச் சீக்கிரம் வந்து அவளைக் கட்டிக்கணும்னு சொல்லறதுக்காக அவன்கிட்ட தோழி சொல்ற பாட்டு இது
”நீளமான கொம்பும், பலமும் இருக்கற ஆட்டுக் கடா வராம இருந்தாலும், நல்லா அழகான மயிரோட இருக்கற பெண் ஆடானது, ஆண் ஆடு நேரம் கழிச்சாவது வரும்னு ஆசையோட காத்திருக்கும். அத மாதிரி பெரிய அருவியெல்லாம் கொட்டற மலை இருக்கற நாட்டைச் சேந்தவனே! நீ இங்க வரும் போதுதான் இவளுக்கு அழகும் வந்து சேருது.
நீ போனா இவ அழகும் போயிடுது அதால சீக்கிரமா கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யின்னு தோழி மறைமுகமா சொல்றா. ஆட்டுக்கடா அவனையும் பெண் ஆடு அவளையும் குறிக்கும்.
=====================================================================================
தெய்யோப் பத்து—9

சுரும்புஉணக் களித்த புகர்முக வேழம்
இரும்பிணர்த் துறுகல் பிடிசெத்துத் தழூஉம்நின்
குன்றுகெழு நல்நாட்டுச் சென்ற பின்றை
நேர்இறைப் பணைத்தோள் ஞெகிழ
வாராய் ஆயின் வாழேம் தெய்யோ!

[சுரும்பு=வண்டு; புகர்=புள்ளி; வேழம்=யானை; களித்த=மதம் கொண்ட; இரும்பிணர்=சுரசுரப்பு; துறுகல்=குண்டுக்கல்; செத்து=நினைத்து; இறை=முன்கை; பணை=பருத்த; ஞெகிழ=நெகிழ]
கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யப் பிரிஞ்சு போகப்போறேன்னு அவன் சொல்றான். அப்ப தோழி சொல்ற பாட்டு இது.
”ஒன் நாட்ல வண்டெல்லாம் மொய்ச்சுத் தின்ற மதக்களிப்பையும், புள்ளிகளையும் உடைய ஆண்யானையானது சொரசொரப்பா இருக்கற குண்டுக்கல்லைப் போயி பெண் யானைன்னு நெனச்சு தழுவும். அப்படிப்பட்டமலை உள்ள நாட்டுக்கு நீ போன பின்னால இவளோட தோளெல்லாம் மெலிஞ்சு போயிடும். நீ வராட்டா நாங்களும் உயிரோட இருக்க மாட்டோம்.”
ஆண் யானை அறிவில்லாம பெண் யானைன்னு நெனச்சு கல்லைத் தழுவுற மாதிரி நீயும் வேற பொண்ணுங்களைப் போயித் தழுவிக் கெடப்பன்றது மறைஞ்சிருக்கற பொருளாம்.
=====================================================================================
தெய்யோப் பத்து—10

அறியேம் அல்லேம்; அறிந்தனம் மாதோ!
பொறிவரிச் சிதைய வண்டினம் மொய்ப்பச்
சாந்தம் நாறும் நறியோள்
கூந்தல் நாறும்நின் மார்பே தெய்யோ!

[பொறி=புள்ளிகள்; சிறைய=சிறகுகளை உடைய; மாதோ=[பொருள் இல்லாத] அசைச் சொல்; சாந்தம்=சந்தனம்; நாறும்=மணக்கும்; நறியோள்=பரத்தை;
அவன் வேற ஒருத்தியோட ஒறவு வச்சிருக்கான். அது தெரிஞ்ச அவ கோபமா இருக்கா; அவனோ இல்லன்னு மறுக்கறான்; அப்ப தோழி சொல்ற பாட்டு இது.
”புள்ளியும், சிறகுகளும் இருக்கற வண்டெல்லாம் மொய்க்கற சந்தனத்தின் வாசனை இருக்கற வேற ஒருத்தியோட கூந்தல் வாசனை ஒன் மாரில அடிக்கும்; அதால ஒன் ஒறவு எங்களுக்குத் தெரிஞ்சு போச்சு”
நீ வேற ஒருத்தியோட ஒறவு வச்சிருக்கறது எங்களுக்குத் தெரிஞ்சிடுத்து. அதால அதைச் சீக்கிரம் உட்டுட்டு வந்துடுன்னு மறைவா சொல்ற பாட்டு இது.
========================================================நிறைவு===================

Series Navigationசுண்டல்உங்களது ஏடிஎம் கார்டு, டெபிட் கார்டு, கிரிடிட் கார்டு, ப்ரீபெய்டு கார்டு போன்றவை தொலைந்து விட்டால்
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *