- குன்றக் குறவன் பத்து
இப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களிலும் குன்றக் குறவன்’ என்னும் பெயர் தொடர்ந்து வருவதால் இப்பகுதிக்குக் குன்றக்குறவன் பத்து என்று பெயர் வந்தது. குன்றக் குறவன் என்பவர் குன்றிலே பிறந்து பின் நிலம் சென்று வாழாமல் குன்றிலேயே வாழ்பவராவர்.
============================================================================
குன்றக் குறவன் பத்து—1
குன்றக் குறவன் ஆர்ப்பின், எழிலி
நுண்பல் அழிதுளி பொழியும் நாட!
நெடுவரைப் படப்பை நும்மூர்க்
கடுவரல் அருவி காணினும் அழுமே
[ஆர்ப்பின்=ஆரவாரம்; எழிலி=மேகம்; அழிதுளி=அழிக்கின்ற மழை; படப்பை=தோட்டம்; கடுவரல்=விரைவாக வருதல்]
இன்னமும் கல்யாணம் செஞ்சுக்காம வந்து வந்து போற அவனுக்குக் சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்கச் சொல்லித் தோழி சொல்ற பாட்டு இது.
”குறிஞ்சி நெலத்துல இருக்கற கொறவன் ஆரவாரத்துடன் மழை வேண்டிக் கேப்பான். ஒடனே மேகம் மழை பெய்யற நாட்டை ஒடையவனே! ஒன்னோட ஒசரமான மலையில தோட்டங்களோட இருக்கற நம்ம ஊர்ல அருவியெல்லாம் வேகமா கொட்டுது. அதைப் பாத்ததுமே அவ அழறாளே!”
அருவியைப் பாக்கும்போது அதுல ஒன்னோட சேந்து குளிச்சது அவளுக்கு நெனவுக்கு வருது. ஆனா இப்ப தனியா இருக்கமேன்னு அழுவுறா. அதால அவளைச் சீக்கிரம் வந்து கல்யாணம் செஞ்சுக்கன்றது மறைபொருளாம்.
====================================================================================
குன்றக் குறவன் பத்து—2
குன்றக் குறவன் புல்வேய் குரம்பை
மன்றுஆடு இளமழை மறைக்கும் நாடன்
புரையோன் வாழி, தோழி! விரைபெயல்
அரும்பனி அளைஇய கூதிர்ப்
பெருந்தண் வாடையின் முந்து வந்தனனே
[புல்=ஊகம்புல், [பஞ்சாய்க் கோரை]; குரம்பை=சிறு குடில்; மழை=மேகம்; புரையோன் உயர்ந்தோன்]
கல்யாணம் செஞ்சுக்கப் பணம் தேடிப் போனவன் சீக்கிரமே திரும்பி விட்டான். அது தெரிஞ்ச தோழி மகிழ்ச்சியா அவகிட்ட வந்து சொல்ற பாட்டு இது.
”குறிஞ்சி நெலத்துல வாழற கொறவனுடைய புல் வேஞ்சிருக்கற சின்ன வீட்டை மேகமானது வந்து மறைச்சிடும். அப்படிப்பட்ட நாட்டைச் சேந்தவன் ரொம்ப நல்லவன்; பனிக்காலத்துல நம்ம வருத்தற வாடைக் காத்து வர்றதுக்கு முன்னாடியே அவன் வந்துட்டான், அவன் வாழ்க”
அவன் வந்துட்டான்; அதால சீக்கிரமே ஒன் கல்யாணம் நடக்கும்னு மறைவா சொல்றா.
==============================================================================
குன்றக் குறவன் பத்து—3
குன்றக் குறவன் சாந்த நறும்புகை
தேம்கமழ் சிலம்பின் வரையகம் வாழும்
கானக நாடன் வரையின்
மன்றலும் உடையாள்கொல் தோழி! யாயே?
[சாந்தம்=சந்தனம்; சிலம்பின் வரை=மலையின் பக்கங்கள்; மன்றல்=திருமணம்; யாய்=தாய்]
அவன் கல்யாணத்துக்குப் பணம் சேத்துக்கிட்டு அதை எடுத்துக்கிட்டு, அவனைச் சேந்தவங்களோட அவளப் பொண்ணு கேட்டு வரான். அதைத் தெரிஞ்சுகிட்ட தோழி வந்து சொல்றா. அப்ப அவ சொல்ற பாட்டு இது
”தோழி! சந்தனக் கட்டை எல்லாம் கொறவங்க எரிக்கறாங்க; அந்த வாசனை தேனோட சேந்து வீசறாப்ல இருக்கற மலைப்பக்கம் இருக்கு. அந்த மலையைச் சேந்தவன் என்னைக் கேட்டு வந்திட்டா நம்ம அம்மா கல்யாணத்தைச் செஞ்சு வைப்பாளா?”
சந்தனமும், தேனும் கலந்து வீசறாப்பல அவனும் தானும் கலந்து இருப்போம்னு மறைவா சொல்றா
=====================================================================================
குன்றக் குறவன் பத்து—4
குன்றக் குறவன் ஆரம் அறுத்தென,
நறும்புகழ் சூழ்ந்து காந்தள் நாறும்
வண்டுஇமிர் சுடர்நுதல் குறுமகள்!
கொண்டனர், செல்வர்தம் குன்றுகெழு நாட்டே!
[ஆரம்=சந்தனம்; நறும்=நன்மணம்; காந்தள்=காந்தள் பூ;
குறுமகள்=இளையோள்]
அவனுக்கும் அவளுக்கும் கல்யாணம் செஞ்சு வைக்க அவ ஊட்ல ஒத்துக்க மாட்டாங்கன்னு தோழி நெனக்க்றா. அதால அவனோட ஊருக்குப் போயி நீ கல்யாணம் செஞ்சுக்கன்னு தோழி சொல்ற பாட்டு இது.
”வண்டெல்லாம் வந்து ஆரவாரிக்கற அழகான நெத்தியை உடையவளே! மலைல வாழற கொறவங்க சந்தன மரத்தைச் சுட்டுப் பொகை எழுப்பறாங்க; அந்தப் பொகை எல்லா எடத்திலேயும் பரவி காந்தள் பூவோட வாசனையிலும் சேந்து வீசுது. அப்படிப்பட்ட நாட்டுக்கு அவன் ஒன்னையும் கூட்டுக்கிட்டுப் போவான் பாரு”
சந்தன வாசனையும் காந்தள் வாசனையும் கலக்கறாப்பல அவனும் நீயும் சேந்து இருப்பீங்கன்றது மறைபொருளாம்.
==================================================== =================================
குன்றக் குறவன் பத்து—5
குன்றக் குறவன் காதல் மடமகள்
வரையர மகளிர்ப் புரையும் சாயலள்;
ஐயள்; அரும்பிய முலையள்;
செய்ய வாயினள்; மார்பினள், சுணங்கே!
[வரையர மகளிர்=தெய்வ மகளிர்; புரையும்=ஒக்கும்; சாயல்=மென்மைத் தன்மை; ஐ=அழகு; செய்ய=சிவந்த; சுணங்கு=தேமல்]
ஒன்னை இத மாதிரி மயக்கினது யாருன்னு அவன்கிட்ட அவன் தோழன் கேக்கறான். அப்ப அவன் சொல்ற பாட்டு இது.
”தோழனே! நான் காதலிச்சவ குன்றக் குறவனுடைய அன்புக்குரிய பொண்ணு. மலையில இருக்கற தெய்வப்பொண்ணு போல அவ இருப்பா; நல்ல அழகா இருப்பா; அவளுக்கு அரும்பு போல சின்ன மொலை இருக்கும். செவப்பா வாயிருக்கும். மாரில எல்லாம் தேமல் இருக்கும்”
ஏன் இந்த அடையாளத்தைச் சொல்றான்னா அவளப் பாத்தா எங்கிட்ட சொல்லுன்னு மறைமுகமா சொல்வது போலச்சொல்றான்.
===============================================================================
குன்றக் குறவன் பத்து–6
குன்றக் குறவன் காதல் மடமகள்
வண்டுபடு கூந்தல் தண்தழைக் கொடிச்சி;
வளையள் முளைவாள் எயிற்றாள்;
இளையள் ஆயினும் ஆரணங் கினனே!
[மடம்=இளமை; தண்தழை=குளிர்ச்சியான தழையாடை; கொடிச்சி=குறிஞ்சி நிலப் பெண். முளைவாள் எயிற்றள்=நாணல் முள் போல ஒளி பொருந்திய பல்லை உடையவள்; ஆரணங்கு=அழகு பொருந்திய வருத்தம் தரும் பெண்]
அவ இன்னும் சின்னப் பொண்ணு, ஒனக்கு வேண்டாம்னு தோழி சொல்றா. அப்ப இல்லன்னு சொல்லி அவளை அடையறதுக்கு அவ தோழிகிட்ட அவன் சொல்ற பாட்டு இது.
குறிஞ்சி நெலத்துல வாழற கொறவனோட அன்பான எளமையான பொண்ணு அவ. வண்டெல்லாம் வந்து மொய்ச்சுகிட்டிருக்கற கூந்தல் இருக்கு அவளுக்கு. அந்தக் கொடிச்சி குளுமையான தழையாடை போட்டுக்கிட்டு இருக்கா. நாணலோட முளைபோல இருக்கற வெள்ளையான பல் இருக்கறவ. வயசில சின்னவளா இருந்தாலும் பாக்கறவங்கள அழகாலயே வருத்தம் செய்யறவ அவ.
=====================================================================================
குன்றக் குறவன் பத்து–7
குன்றக் குறவன் கடவுள் பேணி,
இரந்தனன் பெற்ற எல்வளைக் குறுமகள்
ஆய்அரி நெடுங்கண் கவிழச்
சேயதால் தெய்யநீ பிரியும் நாடே!
[பேணி=வணங்கி; இரந்தனன்=வேண்டிப் பெற்ற; எல்=ஒளி; கலிழ=கலங்க; சேய்=தொலைவு]
கல்யாணம் செஞ்சுக்கறதுக்கு நான் போயி பனம் பொரட்டிக்கிட்டு வரேன்னு அவன் சொல்ல, தோழி நீ பிரிஞ்சு போகக்கூடாதுன்னு சொல்ற பாட்டு இது
”குன்றத்தில வாழற கொறவன் சாமிக்கிட்ட வேண்டிப் பெத்த பொண்ணு இவ. நல்லா ஒளி வீசற வளையல் எல்லாம் போட்டிருக்கற சின்னப்பொண்ணு. அழகான செவப்பா வரி ஓடற கண்ணெல்லாம் கலங்கிக் கண்ணீர் வர்ற மாதிரி நீ வேர ஊருக்குப் போறது சரியில்ல. அந்த ஊரு ரொம்ப தூரத்தில இருக்கு. அதால நீ போகக் கூடாது”
குன்றக் குறவன் பத்து—8
குன்றக் குறவன் காதல் மடமகள்
அணிமயில் அன்ன அசைநடைக் கொடிச்சியைப்
பெருவரை நாடன் வரையு மாயின்
கொடுத்தனெம் ஆயினோ நன்றே
இன்னும் ஆனாது, நன்னுதல் துயரே!
[கொடிச்சி=குறிஞ்சி நிலப் பெண்; அசைநடை=அசைந்து அசைந்து நடக்கும் நடை; கொடுத்தல்=மணம் செய்து கொடுத்தல்; ஆனாது=அமையாஅது; நன்னுதல்=அழகிய நெற்றி]
அவனுக்காகப் பொண்ணு கேட்டு வந்தவங்ககிட்ட, இல்லன்னு சொல்லிடறாங்க. அப்ப தோழி சொல்ற பாட்டு இது.
”குன்றக் கொறவனோட அழகான எளமையான பொண்ணு இவ. அசைஞ்சு அசைஞ்சு அழகா நடந்து போவா. இந்தக் கொடிச்சியை அவனும் பொண்ணு கேட்டு வந்தா கல்யாணம் செஞ்சுக் குடுக்கறதுதான் நல்லது. அவன்தான் கேட்டு வந்த பின்னாடியும் இவளொட வருத்தம் இன்னும் அதிகமாயிட்டே இருக்கே”
சீக்கிரம் அவனுக்குக் குடுக்காட்டா அவ துன்பம் அதிகமாகுன்னு மறைவா சொல்றா.
====================================================================================
குன்றக் குறவன் பத்து—9
குன்றக் குறவன் காதல் மடமகள்
மன்ற வேங்கை மலர்சில கொண்டு,
மலைஉறை கடவுள் குலமுதல் வழுத்தி
தேம்பலிச் செய்த ஈர்நறும் கையள்;
மலர்ந்த காந்தள் நாறிக்
கலிழ்ந்த கண்ணள்எம் அணங்கி யோளே!
[மன்ற வேங்கை=மன்றத்தில் இருக்கும் வேங்கை மரம்;வழுத்தி=துதித்து; தேம்பலி=இந்தான பலி; கலிழ்ந்த=கண்ணீர் சொறிகின்ற; அணங்கியோள்=அழகால் வருத்தியோள்]
கல்யாணத்துக்கு ஏற்பாடு எல்லாம் செஞ்சிட்டான், ஆனாலும் இன்னும் காலம் தாழ்த்தறான். அதால அவ வருந்தறா. அதப் போயி தோழி அவன்கிட்ட சொல்றா. அப்ப அவன் தனக்குள்ளியே சொல்ற பாட்டு இது.
”குறிஞ்சி நெலக் கொறவனோட அழகான பொண்ணு அவ. அவ வேங்கை மரப்பூவெல்லாம் கொண்டு வந்து, மலையில இருக்கற சாமியைக் கும்பிட்டு, தேனு, தெனை மாவு எல்லாத்தையும் படையலா போடறா. அந்த ஈரம் போகாத கை இருக்கறவளாகவும், காந்தள் பூவோட வாசனையும், கலங்கி அழற கண்ணும் இருக்கறவதான் என் மனசை ஆசையால வருத்தியவ.
=====================================================================================
குன்றக் குறவன் பத்து—10
குன்றக் குறவன் காதல் மடமகள்
மென்தோள் கொடிச்சியைப் பெறற்குஅரிது தில்ல
பைம்புறப் படுகிளி ஒப்பலர்;
புன்புல மயக்கத்து விளைந்தன தினையே!
[படுகிளி=தினைபயிரில் வந்து விழும் கிளி; புன்புல மயக்கம்=புன்செய்க் கலப்பு; ஒப்புதல்=விரட்டுதல்]
அவன் வழக்கம் போல் பகல்ல அவளப் பாக்கறதுக்கு வரான். ஆனா தெனையெல்லாம் முத்திப் போச்சு இனிமே அவ காவலுக்குப் பகல்ல வரமாட்டா. அதால பாக்க மூடியாது. சீக்கிரம் வந்து கல்யாணம் செஞ்சுக்கன்னு தோழி சொல்ற பாட்டு இது.
”புஞ்சை நெலத்துல தெனையெல்லாம் முத்திப் போச்சு. அதை இனிமே அறுத்து எடுத்துக்கிட்டுப் போறதுதான் வேலை. குன்றக் கொறவனோட அன்பான எளமையான இந்தப் பொண்ணு இனிமே கிளியை வெரட்டக் காவலுக்கு வரமாட்டா. அதால மெல்லிசான தோள் இருக்கற இவளை இனிமே பாக்கவே முடியாது.”
அவளப் பாக்கவே முடியாதுன்னு சொல்றதால நீ சீக்கிரம் வந்து கல்யாணம் செஞ்சுக்கணும்னு தோழி மறைமுகமாச் சொல்றா
================================நிறைவு============================================