கோ. மன்றவாணன்
நல்லமனம் படைத்த நண்பர்கள் நடத்தும் நவீன இலக்கியக் கூட்டம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். நவீன கவிதை குறித்த கலந்துரையாடல் என்று நிகழ்ச்சியைத் திட்டமிட்டு இருந்தார்கள்.
முதலில் ஒரு நண்பர் எழுந்தார். தலைப்பை உள்வாங்காமல் தன்கருத்துகளை- தன்கொள்கைகளை எல்லாம் ஜெயமோகனின் வெண்முரசு நீளத்துக்கு அவர் பேசினார். எந்தத் தலைப்பு என்றாலும் எல்லா நிகழ்விலும் இதையேதான் இவர் பேசுவார் என்று தோழர் ஒருவர் தோலுரித்துச் சொத்தைப்பழம் இதுவென்று காட்டினார். அவரால் அந்த நிகழ்வு திசைதொலைத்த பயணமாக மாறியது. இதை உணர்ந்து விழித்துக்கொண்ட சிலரால் கவிதை குறித்த விவாதம் சற்று நேரத்தில் மீட்டெடுக்கப்பட்டது.
மரபுக் கவிஞர்கள் மூவேந்தர் காலத்து வாளெடுத்து வீசினர். புதுக்கவிஞர்கள் கதிர்அறுக்கும் அறுவாளைத் தீட்டினார்கள். நவீன கவிஞர்கள் எந்திரன் கைகளில் துப்பாக்கி கொடுத்துச் சுழல விட்டார்கள். விவாதம் போர்க்களம் ஆனது. விழுந்து செத்தது கவிதை மட்டுமே!
பிறகு கவிதை விவாதம் மொழித்தூய்மை நோக்கிப் போனது. நடுக்கடலில் படகு வேறு திசைநோக்கி நகரும்போது உரிய திசைநோக்கி செலுத்த வேண்டியது மாலுமியின் கடமை. அதுபோல் நிகழ்ச்சி நடத்துபவர்கள் நிகழ்வின் போக்கைச் சரியான திசையில் செலுத்த வேண்டும். ஆனால் கூட்டத்தை நெறியுறுத்தப் போனால் இலக்கியவாதிகள் சிலரின் கோபத் தீயில் வெந்து தணிய வேண்டியதாகிவிடும் என்று வாளா இருந்தனர்.
தனித்தமிழை நையாண்டிச் செய்தனர் இலக்கிய மேதைகள் சிலர். ஆறுகளை உள்அணைத்துக்கொள்ளும் வங்கக் கடல்போல், அனைத்து மொழிச் சொற்களையும் தமிழ் உள்வாங்க வேண்டும் என்று தமிழ்ப்பேராசிரியர் ஒருவரே மடைதிறந்துவிட்டார். தமிழில் அது இல்லை இது இல்லை என்றெல்லாம் அவிழ்த்துவிட்டார் கண்டுபிடிப்பாளர் ஒருவர்.
கலப்புமொழி என்பது கவிதையில் மட்டுமல்ல கட்டுரை, கதை, பேச்சு உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் உள்ளது. அதை மொழித்தளத்தில் மட்டுமே ஆராய வேண்டும். அதற்காகத் தனித்தமிழ் இயக்கத்தை முற்றிலும் குறைசொல்ல முடியாது. அவர்களின் முயற்சியால்தான் நல்லதமிழ் மீட்டெடுக்கப்பட்டு அது நவீன கவிதையிலும் கொலுவிருக்கிறது. இல்லையேல் தமிழ்சிதைந்து மலையாளம், தெலுங்கு போல மற்றொரு மொழியும் பிறந்திருக்கும். தற்போது மெல்ல மெல்ல தமிங்கிலம் என்றொரு மொழி, நச்சுக்காற்று என நம்வீட்டுக்குள் நுழைந்து நிரம்புகிறது.
கவிதை விவாதம் திசைமாறி மொழித்தூய்மை குறித்து நீ…ண்…ட….நேரம் நீடித்ததை நிறுத்த பெருமுயற்சி தேவைப்பட்டது.
நவீன கவிதைகள் குறித்து பேசப்பட்டதைவிட நவீன கவிஞர்களைப் பற்றியே கவிதை விவாதம் சுழன்று சுழன்று வந்தது. உலகம் பிறந்தது எனக்காக என்று பாடும் கவிஞர்களிடம் குழுமனப்பான்மை கொழுந்துவிட்டு எரிவதைப் பார்க்க முடிந்தது. தங்களுக்கு வேண்டிய கவிஞர்களின் கவிதைகளைத் தூக்கிப் பிடித்தார்கள். வேண்டாதவர்களின் கவிதைகளைக் கவிதைகளே அல்ல என்று தீட்டுத்துணியைக் குச்சியால் தள்ளிவிடுவதுபோல் ஒதுக்கினார்கள். மொத்தத்தில் எதிர்தரப்பினர் பார்வையில் எல்லாக் கவிதைகளும் வெட்டுக் காயங்களோடு மூச்சிரைத்தன. நல்ல கவிதைகளை நாலாபுறமும் ஓடவிட்டுத் துரத்தித் துரத்தி அடித்ததுதான் கலந்துரையாடலின் விளைச்சல். கவிதையை யார் எழுதினார் என்று தெரிந்து விமர்சிப்பதில், நடுநிலை மறைந்து கெடுநிலை உதயமாகிறது, கனியிருப்பக் காய்கவரும் இலக்கியர்கள் வருகையால் தமிழ்ச்சபையின் நாற்காலிகள் உடைகின்றன.
விவாதம் முடியும் தறுவாயில் இருந்தபோது வீடு வா… வா… என்றது. அந்த நேரம் பார்த்து முதுஇளைஞர் ஒருவர் எழுந்து, பாரதிதாசன் எழுதியவை கவிதைகளே அல்ல. அவர் கவிஞரே அல்ல என்றார். அப்படிக் கருத்துரைக்க அதற்கான சான்றுகளைச் சொல்ல வேண்டும். முதலில் பாரதிதாசனை முழுமையாகப் படித்திருக்க வேண்டும்.
பாரதி, பாரதிதாசன் குறித்த பல விமர்சனங்களின் பின்னணியில் இலக்கிய நுட்பம் இருப்பதைவிட, அவரவர் அரசியல் கண்ணோட்டங்களே அதிகம். எதிர்தரப்பைத் தகர்த்தெறிய வேண்டும் என்ற வெறியே அவர்களில் பலருக்கு இருந்தது. ஆனால் பாரதியும் பாரதிதாசனும் நிலவும் வானும்போல்… வீரனும் போர்வாளும்போல் ஒற்றுமையாகத்தான் இருந்தார்கள்.
கவிதைகள் காலத்துக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். பாவேந்தரின் கவிதைகளை அவர் காலத்துப் பின்னணியில்தான் அணுக வேண்டும். இன்றைய நவீன கவிதையோடு அவர் கவிதையை ஒப்பிட்டுப் புறந்தள்ளுவது சரியல்ல. அவர் கவிதையைப் படித்துக் கவிஞரானவர்கள் அதிகம். அதில் புதுக்கவிஞர்களும் உண்டு. யாரையும் அவ்வளவு எளிதில் புறந்தள்ளிவிடக் கூடாது. இந்த உலகில் எத்தனை விதமான மலர்கள்? அதுபோல்தான் கவிதைகளில் பல ரகங்கள். அவரவருக்குப் பிடித்த ரகங்களை ரசியுங்கள். உணவகத்தில் அவரவர்க்கு எந்த உணவு பிடிக்கிறதோ அதை உண்ணுங்கள். அதற்காக எதிரில் அமர்ந்து உண்பவரின் உணவு சரியில்லை. அது உணவே இல்லை என்று வாதிடாதீர்கள். எல்லாமும் கவிதைகள்தாம். இவை கவிதைகள் அல்ல. கவிதை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று யாராவது சொன்னார்கள் என்றால் அது கவிதைக்கு இலக்கணம் வகுத்ததாகிவிடும். மேலும் நாளைவரும் புதுமையைத் தடுக்கின்ற முயற்சியாகவும் மாறிவிடும். கவிதை என்பது தன்விருப்பம் போல 360 பாகையிலும் சுற்றித் திரியட்டும். கட்டுப்பாடுகள் அதற்குத் தேவையில்லை. கவிதை ஒன்றாவது சுதந்திரமாக இருக்கட்டுமே!
மரபுக் கவிதை காலம் முடிந்து, புதுக்கவிதை காலம் மலர்ந்து தழைத்தபின், நவீன கவிதை அரும்பு விட்டிருக்கிறது. இது கவிதையின் வளர்ச்சிப் போக்கு. கவிதை என்பது காலம்தோறும் ஒரே மாதிரிதான் என்றால் சலிப்படையவே செய்யும். புதுமைகளே நம்மைப் புத்துணர்ச்சியோடு வைத்து அடுத்த நூற்றாண்டை வரவேற்கச் செய்யும்.
அச்சுத்தொழில் நுட்பம் இல்லாத காலத்தில் யாப்புக் கவிதைதான் சிறந்த கவிப்பாத்திரம். அதிலுள்ள சீர்கள் அமைப்பு, எதுகை, மோனை ஆகியவை ஒரு கவிதையை நினைவில் நிறுத்திக்கொள்ள ஏற்பட்ட வசதிகளே. அதனால்தான் பள்ளிப்பாடத்தில் அந்தக் கவிதைகளையோ செய்யுள்களையோ மனப்பாடப் பகுதிக்குள் வைத்திருக்கிறார்கள். உரைநடையை எளிதில் மனப்பாடம் செய்ய முடியாது. நவீன கவிதையையும் மனப்பாடம் செய்ய முடியாது. யாப்புக் கட்டமைப்பு மனப்பாடத்துக்கானது. அச்சுத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில் யாப்பு என்பது தேவையற்றதாகிவிட்டது. ஆனாலும் யாப்புக் கவிதைக்குள்ளும் கவிஞர்கள் விளையாடி இருக்கிறார்கள். சித்திரக் கவிதையென்றும் சித்துவேலை செய்திருக்கிறார்கள். அதைஅதை அந்த அந்தக் கோணத்தில் மட்டுமே பார்க்க வேண்டும்.
நவீனத்துவம், பின்நவீனத்துவம், சர்ரியலிசம் இன்னும் என்னென்னவோ இசங்களையும் பிறநாட்டு இலக்கிய முன்னேற்றங்களையும் நிரம்பப் படித்தவர் ஒருவர் நிறையச் சொன்னார். அதைக் கேட்கக் கேட்கப் பிரமிப்பாக இருந்தது. ஒவ்வொருவரும் ஓர் இசத்தை ஆதரிக்கலாம். பிறகு இசங்களுக்குள் இரணகளம் ஏற்படச் சாத்தியக் கூறுகள் உண்டு. இசங்களைப் பேசும் அளவுக்கு நாம் நிசங்களைப் பேசுவதில்லை. இசங்களுக்குள் கவிதை எழுதுவது என்பதும் இலக்கணச் சிறைதான். எழுதுங்கள் விதவிதமாக! எந்த இசமாவது கொலுவிருக்கட்டும்.
கவிதைக்குத் தலைப்புத் தேவையா என்றொரு கேள்வி எழுந்தது. சங்க காலக் கவிதைகளுக்குத் தலைப்பு இல்லை. தலைப்பு வைப்பதும் தவிர்ப்பதும் அவரவர் விருப்பமாகட்டும். சில நேரங்களில் தலைப்பு, கவிதையின் வாசலில் இருந்து நம்மை வசீகரித்து வரவேற்றுக் கைப்பிடித்து அழைத்துச் செல்லும். அடையாளம் காட்ட ஒவ்வொரு மனிதர்க்கும் பெயர் சூட்டுவதுபோல், கவிதைக்குப் பெயர்ச்சூட்டல் அமைந்திருக்கலாம். அட… அண்மைக் காலமாகப் புயல்களுக்கும் பெயர்சூட்டும் வழக்கம் வந்துவிட்டதே!
இன்னொருவர் எழுந்து புகழ்வாய்ந்த நவீன கவிஞர்களின் கவிதைகளைப் படித்தார். அவை யாருக்கும் புரியாது என்று நினைத்தாரோ என்னவோ… அந்தக் கவிதைகளின் பொருளழகை…. மேன்மைகளை எல்லாம் விளக்கி விரிவுரை ஆற்றினார்.
சங்க காலக் கவிதைகளுக்கு உரைநூல்கள் தேவைதான். நம் சமகால நவீன கவிதைகளுக்கு நம்மவர்கள் ஏன் உரைவாசிக்கிறார்கள்? நவீன கவிதைக்கும் வாசகருக்கும் இடையில் பாஷ்யக்காரர்களோ பூசாரிகளோ குறுக்கிட வேண்டியதில்லை. அடுத்த நூற்றாண்டில் வேண்டுமானால் இன்றைய நவீன கவிதைக்கு உரைநூல்கள் எழுதட்டும். மிகச்சிறந்த நவீன கவிதை என்று அறிமுகப்படுத்திப் பேசுபவர்கள் அந்தக் கவிதையை அப்படியே வாசித்துவிட்டுப் போகட்டுமே. ஏன் விளக்கமளிக்கிறார்கள்? அவ்வாறு விளக்கமளித்த பிறகே ஓகோ சிறந்த கவிதைதான் என எங்களை “ஆம்” போட வைக்கிறார்கள். அவர்கள் விளக்கத்துக்குள் எங்களைக் கட்டிப்போடுகிறார்கள். கவிதைக்குள் உண்டாகும் வாசகர் பங்கேற்பைத் தடுத்துவிடுகிறார்கள்.
மரபுக் கவிதை என்பது பன்னூறு ஆண்டுகாலம் ஆட்சி புரிந்து இன்றும் காட்சி தருகிறது. நூற்றாண்டுதோறும் காலத்துக்கேற்ப வடிவ மாறுதல்களையும் பாடுபொருள்களில் மாற்றங்களையும் சொல்லும் முறையில் புதுப்புது உத்திகளையும் கொண்டு வளர்ந்து வந்துள்ளது மரபுக் கவிதை. அதுவரை கோலோச்சிவந்த யாப்பதிகாரத்தை வீழ்த்தி, விண்ணுக்கும் மண்ணுக்குமான அவதாரம் எடுத்தது புதுக்கவிதை. புதுக்கவிதை தமிழுக்குள் நிகழ்த்திய புதுமைகளுக்கு அளவில்லை. ஐம்புலன்களையும் தாண்டி நுண்திறப்புகள் மூலம் விரியும் பிரபஞ்சப் பேரழகை… பெருவியப்பை நமக்குக் காட்டுகிறது நவீன கவிதை. எனவே, நவீனக் கவிதையாளர்கள் மரபுக் கவிதையை, புதுக்கவிதையை மட்டம் தட்டுவது நல்லதல்ல. அதுபோலவே மரபுக் கவிதையாளர்கள்- புதுக்கவிதையாளர்கள் நவீனக் கவிதையை எதிர்த்துப் போர்தொடுப்பதும் சரியல்ல. எல்லாவற்றிலும் அழகுண்டு. எல்லாவற்றிலும் சிறப்புண்டு.
நடுநிலையோடு இருப்பதுதான் கடினமான ஒன்று. எந்தக் கலந்துரையாடலிலும் மெய்கண்டறியும் நோக்கு இல்லாமல் போய்விடுகிறது. சார்பு எண்ணங்களைச் சற்று நேரம் தள்ளி வைத்துவிட்டு, மெய்தேடல்கள் நடந்தால்தான், கலந்துரையாடல்கள் பயன்தரும்.
நவீன கவிதைக்கும் பிற கவிதைகளுக்கும் இடையிலான சண்டையாகக் கலந்துரையாடல் முடிந்துவிட்டது.
நவீன கவிதையின் அழகியல் போக்கை- நுண்ணியல்பை- புதுவீச்சை வெளிப்படுத்தும் விதமாகக் கலந்துரையாடல் அமைந்திருக்க வேண்டும். அதில் பாதி கிணறு தாண்டிய அனுபவமே… ஆபத்தே மிஞ்சியது.
நம் எதிர்பார்ப்பெல்லாம் நவீன கவிதையையும் தாண்டி, நனிநவீன கவிதை உலகு ஒன்று உருவாக வேண்டும். அது நிறைவேறும். அதற்குமுன் நாம் கவிதையைக் காப்பாற்ற வேண்டும். அதற்காகத் தலைப்பைப் படிக்கவும்.
- கஜா புயல் பாதிப்பில் தமிழகம்- அனைவரும் உதவுவோம்
- கவிதைக்கு மரியாதை விவாத அரங்கிலிருந்து வெளியேறுவது
- குரக்குப் பத்து
- தி.தா.நாராயணனின் “அம்மணம்“ சிறுகதைத் தொகுப்பு விமர்சனம்