துயரின் இதழ்களில் விரியும் புன்னகை THE SMILE ON SORROWS LIPS மிர்ஸா காலிப் மொழிபெயர்ப்பில்

This entry is part 2 of 6 in the series 23 டிசம்பர் 2018

மிர்சா காலிபின் 440 கவிதைகள் பாரசீகமொழியிலிருந்து திரு.மூஸா ராஜாவால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலத்திலிருந்து தமிழில் இப்போது வெளியாகியுள்ளன. வெளியீடு: கவிதா பதிப்பகம் : விலை: ரூ.275. தொடர்புக்கு : 044 2436 4243, kavithapublication@gmail.com)

மூஸா ராஜா:
அரபு, பாரஸீகம், உருது மற்றும் ஆங்கில மொழிகளின் வாழ்நாள் மாணவராக விளங்குபவர். இந்தியக் குடிமைப் பணியில் (IAS) தனி முத்திரை பதித்தவர். இவருடைய நாட்டுநலப்பணியைப் பாராட்டி, குடியரசுத் தலைவர் 2010இல் பத்மபூஷன் விருது வழங்கினார். இவருடைய மனதில் என்றைக்கும் இலக்கியத்திற்கும், கவிதைக்குமே முதலிடம்.

குடிமைப்பணியில் தன் தொடக்கநாட்கள் பற்றிய நினைவுக்குறிப்புகளை ‘’OF NAWABS AND NIGHTINGALES’ என்ற நூலாக எழுதியுள்ளார். இவருடைய பிற நூல்கள் ‘IN SEARCH OF ONENESS’ – மதங்கள் குறித்த ஒப்பாய்வு; ‘KHWAB-E-NATAMAM – (நிறைவேறாக் கனவுகள்) என்ற உருதுக் கவிதைத்தொகுப்பு.

இந்தியாவின் மிகச் சிறந்த உருதுக் கவிஞர் மிர்ஸா காலிப். பாரஸீக மொழியில் எழுதிய தன் கவிதைகளின் சிறப்பு குறித்து பெருமிதம் கொண்டிருந்தவர். அவர் பாரஸீக மொழியில் எழுதிய கவிதைகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகவும் அதிகம். எனினும், பாரஸீக மொழிக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு மிகவும் அரிது. இந்தக் குறையைக் களைய முயற்சி மேற்கொண்டுள்ளார் மூஸா ராஜா. மிர்ஸா காலிப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட 440 கவிதைகளை பாரஸீக மொழியிலிருந்து உருதுமொழியிலும் பின் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்துள்ளார். அவற்றின் தமிழாக்கமே இந்த நூல்.

காலிபின் பாரஸீகக் கவிதைகள் காதல், வேட்கை, பரவசம், தன்னையறிதல், வாழ்க்கை, மரணம், மதம், மறைபொருள் எனப் பல களன்களைத் தழுவியுள்ளன. சில சமயங்களில் பக்திசார் மரியாதை தவிர்த்தவையாகவும் வேறு சமயங்களில் தீவிரத்தன்மையும் பரவசமும் நிறைந்தவையாகவும் விளங்கும் காலிபின் கவிதைகள் அவருடைய சூஃபி சிந்தனைகளை துணிச்சலாக, துல்லியமாகப் பிரதிபலிக்கின்றன.

(* பல வருடங்களுக்கு முன் நஸ்ருதீன் ஷாவின் நடிப்பில் மிர்ஸா காலிப் அறிமுகமானார். அவர் மொழிந்த கவிதைகள் புரிந்தும் புரியாமலுமாய் மனதை நெகிழச்செய்தன. இப்போது தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு கணிசமாக மொழிபெயர்த்திருக்கும் குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்பாளரான டாக்டர். கே.எஸ்.சுப்பிரமணியனின் நெருங்கிய நண்பர் திரு.மூஸா ராஜா மிர்ஸா காலிபின் பாரசீகமொழிக் கவிதைகளை பாரசீக மொழியிலிருந்து உருது மொழிக்கும் ஆங்கிலமொழிக்கும் மொழிபெயர்த்திருக்கும் நூலான THE SMILE ON SORROWS LIPS என்ற தலைப்பிட்ட மிர்ஸாவின் 440 கவிதைகளடங்கிய தொகுப்பை தமிழில் மொழிபெயர்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் மொழிபெயர்த்தேன் என்பதைவிட டாக்டர்.கே.எஸ்.சுப்பிரமணியனும் நானும் மொழிபெயர்த்தோம் என்பதே சரி. இந்த நூலில் இடம்பெற்றுள்ள திரு மூஸா ராஜாவின் மிக விரிவான முன்னுரை மிர்ஸா குறித்தும், சூஃபி கவிதைகள் குறித்தும், அவற்றின் மொழி பெயர்ப்பு குறித்தும், பொதுவான மொழிபெயர்ப்புகள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைக்கிறது. கவிதா பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.
திரு.மூஸா ராஜாவின் இன்னொரு மிக முக்கியமான படைப்பு – IN SEARCH OF ONENESS – THE BHAGAVAD GITA AND THE QUARAN through SUFI EYES என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பது PENGUIN RANDOM HOUSE வெளியிட்டிருப்பது தற்போது என்னுடைய அன்பிற்குரிய தோழி தேவிகா அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன் அவர்களால் ‘எடிட்’ செய்யப்பட்டுவருகிறது. விரைவில் தமிழில் வெளியாகவுள்ள இந்நூல் மதங்களின் அடிநாதமாய் விளங்கும் மனிதநேயத்தை அழுத்தமாய் எடுத்துரைக்கிறது.

மிர்ஸா காலிபின் கவிதைகளடங்கிய தமிழ் மொழிபெயர்ப்புநூலில் என்னுடைய சுருக்கமான ‘சொல்லவேண்டிய சில’ என்ற தலைப்பிலான கட்டுரை இங்கே தரப்பட்டுள்ளது. ]

சொல்ல வேண்டிய சில….
லதா ராமகிருஷ்ணன்

நாம் 200 சதவிகிதம் அன்பைத் தந்தும் நமக்கு 20 சதவிகிதம் அன்புகூட சம்பந்தப்பட்ட மறுமுனையிலிருந்து பதிலுக்குக் கிடைப்பதில்லை என்பதாக மனிதமனங்கள் உணரும் தருணங்கள் அவர்கள் வாழ்க்கையில் இருந்தே தீரும். பெற்றோருக்கும் பிள்ளைக்கும் இடையில், நண்பர்களுக்கு இடையில், சகோதர சகோதரிகளுக்கு இடையில், தலைவர் – தொண்டருக்கும் இடையில் சு எல்லாவற்றிற்கும் மேலாக, அன்புவயப்பட்டிருப்பவருக்கும் அவருடைய அன்புக்குப் பாத்திரமானவருக்கும் இடையில். இந்தப் புறக்கணிப்பு ஏற்படுத்தும் வலியின் தாக்கம் அன்றும் இன்றும் பல அரிய படைப்புகள் உருவாகக் காரணமாக இருந்திருக்கிறது. பாராமுகத்தின் தீரா வலியை பேசிப்பேசி நிவாரணம் தேடிக்கொள்ளும் பிரயத்தனமாய்…

தான் நேசிப்பவர் தன்னை நேசிக்கவில்லையென்றால் அதற்காய் அவர் மீது அமிலம் கொட்டுவதா உண்மைக்காதல்? ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று மனதார வாழ்த்துவதே மெய்யன்பு. இது ஏமாளித்தனம் என்று எண்ணுவோர் உண்டு. அத்தகைய மனப்போக்கு உள்ளவர்களின் எண்ணிக்கை இப்போது அதிகமாகிவருவதுபோல் தோன்றுகிறது, ஆனால், உண்மையான அன்பு சு அது ஒருதலைக் காதலோ, இருதலைக் காதலோ, பொருந்தாக் காதலோ, பொருந்தும் காதலோ சு ஒருவரை ஏமாளியாக்கினாலும் பரவாயில்லை; எக்குத்தப்பான கிராதகராக்கிவிடலாகாது.

’மிர்ஸா காலிப்’-இன் கவிதைகளில் மேற்காணும் மெய்யன்பும், அதற்குப் பிரதிபலனாகக் கிடைக்கும் வலியும் மிக நுட்பமாக விரித்துவைக்கப்பட்டி ருக்கின்றன. காதலினூடாக இந்தக் கவிதைகள் வாழ்க்கையின் பல கூறுகளை, சமூகத்தை, மதத்தைப் பற்றியெல்லா காலத்திற்குமான, கேட்கப்படவேண்டிய கேள்விகளை எழுப்புகின்றன. மிர்ஸா காலிப்-இன் கவிதைகளுடைய தத்துவார்த்தப் பின்னணி, இறையியல் சார்ந்த கோணங்களை யெல்லாம் மிர்ஸாவின் பாரசீகக் கவிதைகளை பாரசீக மொழியிலிருந்து நேரடியாக உருது மொழியிலும் ஆங்கில மொழியிலும் THE SMILE ON SORROW’S LIPS என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ள திரு.மூஸா ராஜாவின் முன்னுரை (இந்த நூலில் தமிழாக்கம் செய்யப்பட்டு தரப்பட்டுள்ளது) விரிவாகப் பேசுகிறது.

மிர்ஸா காலிப் பாரசீகமொழியில் எழுதிய கவிதைகளை (இந்தத் தொகுப்பில் இடம்பெறுவது 440) ஆங்கிலத்திலும் உருதுமொழியிலும் மொழியாக்கம் செய்திருக்கும் திரு.மூஸா ராஜாவின் விரிவான முன்னுரை காலிபினுடைய கவிதைகள் தொடர்பாய் பல அரிய தகவல்களைத் தருவதோடு, மொழிபெயர்ப்பு சார்ந்த பல சீரிய கருத்துகளையும் முன்வைக்கிறது. காலிபை அவர் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் வாசித்திருப்பதை அவருடைய ஆங்கில மொழிபெயர்ப்புகளிலிருதும் அவருடைய அகல்விரிவான முன்னுரையி லிருந்தும் அறிந்துகொள்ள முடிகிறது. அந்த ஆழ்ந்த வாசிப்பும் அபிமானமும் அவருடைய மொழிபெயர்ப்பின் நேர்த்திக்குக் காரணமாக விளங்குவதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழிலிருந்து ஆங்கிலத்தில் எழுத்தாளர் ஜெயகாந்தனின் பல் நூல்களை மொழிபெயர்த்திருக்கும், பல நவீன தமிழ்க்கவிஞர்களின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மூன்று தொகுப்புகளாக வெளியிட்டிருக்கும், குறிப்பிடத்தக்க கவிஞர்களான சிற்பி பாலசுப்பிரமணியம், ஈரோடு தமிழன்பன், புவியரசு, , உமா மகேஸ்வரி ஆகியோரின் கவிதைத்தொகுப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும், மேலும் சங்கப் பெண் கவிஞர்களையும், பாரதியாரின் படைப்புகளில் பெரும்பகுதியையும், சமஸ்கிருதம்- தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் உள்ள அற்புத வரிகளை, அவற்றிற்கிடையேயான ஒற்றுமைகளை எடுத்துக்காட்டும் ’சிந்தனை ஒன்றுடையாள்’ என்ற அரிய நூலை எழுதியிருக்கும், உலகப்புகழ் பெற்ற டாக்டர் மணி பௌமிக்கின் CODE NAME GODஈ -ஐ தமிழில் மொழிபெயர்த்திருக்கும், மேலும் சமூகம், இலக்கியம் சார்ந்து சுயமாய் எழுதப்பட்ட தமிழ்க்கட்டுரைகளடங்கிய எட்டு பத்து தொகுப்புகளின் ஆசிரியருமான டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் திரு. மூஸா ராஜாவின் நெருங்கிய நண்பர். தனது நண்பரால் CONNOISSEUR OF TRANSLATION என்று அன்போடு பட்டம் சூட்டப்பட்டவர் டாக்டர் கே.எஸ்! அவரிடம்தான் தன்னுடைய மிர்ஸா காலிப்-இன் ஆங்கில மொழியாக்கத் தொகுப்பைத் தமிழாக்கம் செய்யத் தந்திருந்தார் திரு மூஸா ராஜா.

ONNOISSEUR OF TRANSLATION என்ற அடைமொழிக்கு முற்றிலும் தகுதிவாய்ந்த தன்னுடைய அன்பு நண்பர் டாக்டர் ஏ.எஸ்.சுப்பிரமணியன் தன்னுடைய மிர்ஸா காலிப் ஆங்கில மொழிபெயர்ப்பை தமிழாக்கம் செய்யவேண்டும் என்பதே திரு.மூஸா ராஜாவின் விருப்பமாக இருந்தது. டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் பிரதானமாக தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவர் என்றாலும் அவருடைய கட்டுரைத்தொகுதிகளும், உலகப்புகழ் பெற்ற டாக்டர் மணி பௌமிக்கின் CODE NAME GOD என்ற அற்புத நூலை ‘கடவுளின் கையெழுத்து’ என்ற தலைப்பில் டாக்டர் கே.எஸ். அத்தனை நேர்த்தியாக மொழிபெயர்த்திருப்பதும்(கவிதா பதிப்பக வெளியீடு) அவருடைய தமிழ்ப்புலமைக்குக் கட்டியங்கூறுபவை. அப்பொழுது அவர் வேறு மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததால் மூஸா ராஜா அவர்களின் THE SMILE ON SORROW’S LIPS என்ற நூலை, அதிலிருந்த மிர்ஸா காலிப் கவிதைகளை தமிழில் மொழிபெயர்க்கும் பணியை எனக்குத் தந்தார். கவிதைகள் மீது எனக்குள்ள ஆழ்ந்த ஈடுபாட்டைத் தெரிந்துகொண்டிருக்கும் காரணத்தாலும் இந்த மொழிபெயர்ப்புப் பணியை டாக்டர் கே.எஸ். எனக்குத் தந்திருக்கக்கூடும். ஆனாலும், இந்தத் தொகுப்பிலுள்ள 440 கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பிலும் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் ஆக்கபூர்வமான, சம அளவி லான பங்களிப்பு இடம்பெற்றிருக்கிறது என்பதே உண்மை.

Dr.K.S. சுப்பிரமணியன்

பொதுவாக நான் என்னுடைய மொழிபெயர்ப்புகளில் யாருடைய ஆலோசனை யையும் உதவியையும் கோருவதில்லை; அனுமதிப்பதில்லை. ஆனால், இந்த நூலைப் பொறுத்த வரை இது திரு ஊஸா ராஜாவின் ஆங்கில மொழியாக்கம் என்பதால், ஆங்கில நூல் என்பதால் – இதன் பிரதான மொழிபெயர்ப்பாளராக டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன்தான் இருப்பார், இருக்கவேண்டும் என்று எண்ணினேன். அதனால்தான் டாக்டர் கே.எஸ். என்னுடைய மொழிபெயர்ப்பை செம்மைப்படுத்த அனுமதித்தேன். அவருடைய பெயர் மொழிபெயர்ப்பாளர் களில் ஒருவராக முகப்பு அட்டையில் இடம்பெறுவதே முறை. அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தது எனக்கு மிகவும் வருத்தமளித்தது என்பதை இங்கே பதிவுசெய்ய விரும்புகிறேன். அத்தனை ஆர்வத்தோடு, முழுமுனைப்போடு இந்தத் தொகுப்பின் ஒவ்வொரு கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பிலும் டாக்டர் கே.எஸ்.ஸின் பங்களிப்பு இடம்பெற்றிருக்கிறது.

பல வருடங்களுக்கு முன் நஸ்ருதீன் ஷா மிர்ஸா காலிபாக நடித்த இந்திப் படத்தைப் பார்த்திருக்கிறேன். அற்புதமாக நடித்திருப்பார். அதற்குப் பின் இப்போது மிர்ஸா காலிப் அவருடைய பாரசீகக் கவிதையின் ஆங்கில மொழியாக்கம் மூலம் எனக்குப் பரிச்சயமானார். இந்தக் கவிதைகளை வாசிக்கும்போதும், மொழிபெயர்க்கும்போதும் பல நேரங்களில் மனம் நெகிழ்ந்து கண்களில் நீர் தளும்பியது. ஒருவித இஅகூஏஅகீகுஐகு உணர்வு மனதை ஆட்கொண்டது. வாழ்க்கை, காதல், தனிமை, மரணம், அந்நியமாதல், புறக்கணிப்பு போன்ற கருப்பொருள்கள் காலத்தால் அழியாதவை. படிக்கப் படிக்க அலுக்காதவை. நம்மை அந்த வரிகளில் இனங்காணச் செய்பவை; இடம்பெறச் செய்பவை.

இளந்தலைமுறைக் கவிஞர்களிடம் மூத்த எழுத்தாளர்கள் சிலர் ‘காதலைப் பற்றி எக்கச்சக்கமாக எழுதப்பட்டாயிற்று. அதையே நீங்களும் எழுதாதீர்கள் என்று அறிவுரை கூறுவார்கள். கேட்க வேடிக்கையாயிருக்கும். ‘உனக்கு முன் ஏராளம் பேர் உணவு சாப்பிட்டாயிற்று; நீர் அருந்தியாயிற்று. எனவே நீயும் அதையே செய்யாதே’ என்று சொல்வதா? அவரவர் காதல் அவரவருக்கானது. அதை எழுதாதே என்று எப்படிச் சொல்வது? எதற்குச் சொல்வது?

சிலர் எழுதும் காதற்கவிதைகள் சலிப்பூட்டும்; சிலர் எழுதும் காதற்கவிதைகள் எல்லோருக்குமானதாகிவிடுகின்றன; எல்லாக்காலத்திற்குமானதாகிவிடுகின் றன! மிர்ஸா காலிபின் கவிதை எல்லோருக்குமானது; எல்லாக் காலத்திற்குமானது! இந்தத் தொகுப்பில் இடம்பெறும் கவிதைகளெல்லாமே நான்கைந்து வரிகளுக்கு மிகாதவை. அந்த நான்கைந்து வரிகளுக்குள் அவை காட்சிப்படுத்தும் அக – புற வாழ்க்கை, மனித மனம், அதன் வலி, பரவசம் அற்புதமானவை. நம் அன்றாட வாழ்க்கையினுடைய சாதாரணத்தில் அதிசயங்களை உணரச்செய்பவை!

‘இளைப்பாற முற்படாதே, பயணியே.
இந்தப் பள்ளத்தாக்கில்,
உன் பாதத்திலிருந்த முள்ளை அகற்றக்கூட.
ஏனெனில், முள் வெளியே வந்துவிட்டால்
உன் பாதங்கள் நகர மறுக்கும்

_ என்று சர்வசாதாரணமாக வாழ்க்கைப்பயணத்தின் சாராம்சத்தைச் சொல்லிவிடுகிறார் மிர்ஸா!

அவருடைய கவிதைவெளியெங்கும் சுய விமர்சனமும், சுய அலசலும் தொடர்ந்துவரு கிறது. இந்த சுய அலசலும், சுய விமர்சனமும் இல்லாத நிலைதான் நம்மிடையே நிறைய பேரை அதிகாரக் கிறக்கத்திலாழ்த்தி, ஆக்கங்கெட்ட கிறுக்கர்களாக்கியிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.

தன் முனைப்பில் தொலைந்துபோன
ஒற்றைத்துளி நான்.
அந்த மாயையிலிருந்து மீண்டுவிட்டால்
பின் நானொரு சாகரமாய்!’

என்கிறார் மிர்ஸா!

தொகுப்பு முழுக்க தன் கவிதைகளில் தனியனாய், யாருமற்றதொரு அந்தரவெளிய்ல் போய்க்கொண்டேயிருக்கிறார் அவர். காலத்தை அளந்தபடி செல்பவர் என்றுமே கைத்தட்டலுக்காகக் காத்திருப்பதில்லையே!

நூறு பாலைகளின் விரிவெளியை
ஒரு தூசித்துணுக்கில் பரப்பிவிட்டாய்;
ஏழு சாகரங்களின் நீரையெல்லாம்
ஒற்றைத்துளியில் நிரப்பிவிட்டாய்’

என்றும்,

நீர்த்துளி, அலை, சுழல், நுரைவெள்ளம் எல்லா
ஒரே நதியின் முகங்களே.
இதில் நான் எனது என்று பீற்றிக்கொள்வது
நம்மிருவர்க்கிடையேயான முகத்திரை மட்டுமே

என்றும் தனது கவிதைகளில் மிர்ஸா காலிப் கூறுவதெல்லாம் காதலியிடமோ, கடவுளிடமோ, தன்னுள் குடிகொண்டிருக்கும். அல்லது, தானேயான அவர்களிருவரிடமுமோ…. காலிபின் பல கவிதைகளில் மேற்காணும் மூவரும் ஒருசேர இடம்பெறுகிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்களே நாமாகிவிடுகிறார் கள்!

என் எழுதுகோலிலிருந்து பெருகும்
ஒவ்வொரு கவிதையும் ஓர் அங்கலாய்ப்பு;
என் புல்லாங்குழலிலிருந்து கசியும்
ஒவ்வொரு சுருதியும் ஒரு காதற்பாடல்

என்றும்,

மகத்தான கவிஞனாக அறியப்பட
ஓ காலிப்,
எப்போதாகிலும் நான் விழைந்திருக்கிறேனா?
கவிதைதான் என்னைக்
கட்டாயப்படுத்தி
தழுவிக்கொள்ளச் செய்தாள்’

என்றும், தன் கவித்துவம் குறித்து கூறுபவர்,

ஓ, மண்ணோடு மண்ணாகிவிட்ட கவிஞர்களின்
வழிபாட்டாளர்களே,
‘காலிப்’ஐ வசைபாடாதீர்கள்.
அவன் உங்கள் காலத்தைச் சேர்ந்தவன்

என்று கூறுகையில் காலத்திற்கப்பாலேகி நம்முள் கலந்துவிடுகிறார். கவிதை யினுடைய நீள்தொடர்ச்சியின் அறுபடாக் கண்ணியாகப் பின்னிப்பிணைந்து விடுகிறார்!

மிர்ஸா காலிபின் பாரசீகமொழிக் கவிதைகளை ஆங்கிலத்தில் படிக்கவும், மொழிபெயர்க் கவும் கிடைத்த வாய்ப்பு நிறைவான அனுபவம். அதற்காக திரு. மூஸா ராஜா அவர்களுக்கும், டாக்டர் கே.எஸ். அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். துயரின் இதழ்களில் விரியும் புன்னகை என்ற தலைப்பிலான இந்த தமிழ் மொழிபெயர்ப்பு நூலை வெளியிடும் கவிதா பப்ளிகேஷனுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என் மொழி அறிந்தவர் இருந்தால்
அழைத்துவரவும் இங்கே.
ஊரிலோர் அந்நியன் நான்’
சொல்ல நிறைய உள்ளது என்னிடம்

என்கிறார் மிர்ஸா காலிப். மொழிமீறிய மொழியாய் அவருடைய கவிதைகள் நம் எல்லோருடைய மனமொழியாய், நம் ஒவ்வொருவருடைய தனிமொழியாய் நிறைய நிறைய சொல்லிக்கொண்டேயிருக்கின்றன; சொல்லிக்கொண்டேயிருக்கும்.

Series Navigationஎழுத்தாளர்கள் பா. வெங்கடேசன், ஆ. இரா. வேங்கடாசலபதி இருவருக்கும் 2017ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்புவழியில்
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *