ஜனவரியில் வெளிவர உள்ள ‘ இறந்த காலம்’ புதிய நாவலின் முதல் அத்தியாயம்
நாகரத்தினம் கிருஷ்ணா
——————————————————————————–
« ….. வரலாறு புனைவாகவும் புனைவு வரலாறாகவும் உணர்வுகளில் படர்ந்து தங்குகிறது. அவரது முதல் நாவலான நீலக்கடல் தொடங்கி இந்த ஆறாவது நாவல்வரை அனைத்திலும் பிரஞ்சுக் காலனித்துவத்தின் கொடூர முகத்தையும், ஐரோப்பிய வாழ்க்கையின் போதாமையையும் புலப்படுத்துகிற ஒரு முறைமையிலேயே கதையாடுகிறார் ; அதுவும் காலனிக்கால எளிய மக்கள் மேல் அவர் கொண்டிருக்கும் பரிவும் கருணையும், அதற்காக எழுத்தில் செலுத்துகிற இந்தத்தொடர் உழைப்பும், கீழைத்தேய மரபிற்கு ஏற்பத் தானொரு அறநெறிப்பட்ட கதைசொல்லி என்பதைச் சொல்லிய வண்ணம் இருக்கின்றன. இத்தகைய நாவல்களை இன்றைய பின்காலனித்துவக் கோட்பாட்டு நோக்கில் அணுகி ஆராய்ந்து ஒரு இணைப்பிரதியை உருவாக்கக் கூடிய சாத்தியங்கள் நிறைய இருக்கின்றன. அதற்கேற்ப இவர் நாவல்களை இணைக்கும் ஹரிணி இந்த நாவலிலும் வருகிறார்….. ». – அணிந்துரையில் பேராசிரியர் க. பஞ்சாங்கம்
——————————————————————————–
– என்ன செய்வதாகத் திட்டம் ? – இரண்டாவது முறையாக வினவுகிறது அப்பெண்குரல்.
மே25, 2018. இடம் : அமெரிக்கா,கலிபோர்னியா மாநிலம்,லாசேஞ்சலஸ் விமானதளம் , பயணிகள் சேவை முனையம் 2, வாயில் எண் 26, நேரம் பிற்பகல் நான்குமணி.
அருகில்தான் எங்கோ இருக்கிறாள். என்னைச் சுற்றிவளைத்துள்ள பரப்பில் ஏதோ ஒரு ஒற்றைப்புள்ளியில் காலூன்றி, எளிமையான சொற்களைக்கொண்டு கேள்விகளை எழுப்பும் பெண். நேரிடையான கேள்விகள், பதில் அளிக்க அவகாசம் வேண்டியதில்லை. உண்மையைச் சொல்ல அவகாசம் எதற்கு? பிரச்சினை கேள்விகளில்லை. அதைக் கேட்கிற தொனியில் உள்ளது. கால் போனபோக்கில், இலை தழைகளைத் தின்று சுற்றித்திரியும் காட்டுமான்களைக் குறிவைத்து எய்யப்படும் அம்புகளைப்போல எங்கிருந்து, எப்பொழுதென்று தெரியாது, என்னைக்குறிவைத்து வீசப்படும் குரலால் எழும் பிரச்சினை. ‘அவளை ‘, ‘நான்’ என்கிறாள். இல்லையென மறுத்தால், ‘நீ’யும் ‘நானும்’ வேறு வேறல்ல,இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமென்றால் நான் முதல், நீ முடிவு அதாவது நான் மீரா 1 என்றால் நீ மீரா-2. புரிகிறதா? எனக்கேட்டு ஓர் எள்ளல் சிரிப்பு.
மலைப்பாக இருக்கிறது. பகலில் கூட ஒளி பிரவேசிக்க இயலாத இடங்களைத் தேடிக் கழித்த வாழ்க்கை. இருட்டும், புதருமான பாதையில், சரளைக் கற்களையும், கூரான சில்லுகளையும் மிதித்துப் புண்ணும் சீழுமாகப் படித்தது அதிகம். இளம் வயதென்றாலும் மானுட வாழ்க்கையை ஓரளவு புரிந்துகொண்டிருக்கிறேன், பத்தோடு பதினொன்றாக பிறந்து வெகுசனவாழ்க்கைக்குரிய தடங்களில் பயணித்து, அந்திமக் காலத்தை நரைவழிய, கண்கள் மங்க, கடந்த காலத்தை மறதியில் தொலைத்து, ஒலிகளை இழந்து, உறவுகளை ஸ்பரிசங்களால் பார்த்து, வார்த்தைகள் இடற, சுவாசத்திற்கு வாய் பிளந்து, மலம் போவது கூட தெரியாமல், சாகப்போகும் மனித ஜீவன்களில் ஒன்றல்ல நானென நினைத்து உறங்கிய, வடகிழக்குப் பருவகாற்று தீவிரமடைந்திருந்த ஒரு பின்னிரவு கனவொன்றில் அக்குரலைத் திரும்பக் கேட்டேன்.
இருள்போல அடர்ந்த காடு. வெகுதூரம் நடக்கிறேன் வியப்பாக இருந்தது. தேன்கூட்டைப் பார்க்கவில்லை தேனீக்களின் ரீங்காரமில்லை. ஒரு கீச்சு கீச்சு, ம்க்கும் அக்கோவ், ர்ர்…, டிக் டிக், எதுவுமில்லை, எங்கும் நிசப்தம். அசைவற்ற கிளைகள், சலசலப்பை பறிகொடுத்த நதி. ஊசுட்டேரியில் மாதவனால் எனக்கு அறிமுகமான உள்ளான், கூழைக்கடா, பெலிக்கான், கொக்கு; ஆரோவில்லில் நான் கண்ட மைனா, குருவி, கருஞ்சிட்டு, காட்டுப்புறா, கிளி, மரங்கொத்தி இவைகளெல்லாம் என்னவாயின? என்று கேள்வி. அணைபோல ஒரு மண்மேடு, காட்டுச்செடிகளை விலக்கி, புதர்களைக் கவனமாகக் கடந்து, மெல்ல கால்வைத்து அதன் உச்சிக்கு வருகிறேன். இன்றைக்கும் அக்காட்சி ஒரு உயிர்ப்பற்ற நிழற்படம்போல மனதிற் பதிந்துள்ளது. திரும்ப அதைக் காண்கிறபோது, உடல் வெடவெடக்கிறது, இதய ஓட்டம் அதிகரிக்கிறது: பார்வை முடிந்த இடத்தில், காலொடிந்து படுக்கையில் கிடப்பதுபோல பாசிபடிந்த நதி, கரையோரம் அங்கொன்றும் இங்கொன்றுமாக பிணவாடையுடன் மயில்கள். பதைபதைக்கும் மனத்துடன் சரிவில் கால்வைத்து மூச்சிறைக்க அங்குமிங்குமாக ஓடி ஒவ்வொன்றையும் தொட்டுத்தூக்கி, அவற்றின் மரணத்தை உறுதிசெய்த மறுகணம் திரும்பப் போடுகிறேன், கலங்கியபடி நிற்கிறேன். வெப்பமான மூச்சுக்காற்றொன்று என் பின்கழுத்தை முட்டி, விசையுடன் தோள்பகுதியை உராய்ந்து கடக்கிறது. திரும்புகிறேன்,தலையோடு என் உடலும் திரும்புகிறது எனது முகத்தருகே இன்னொரு முகம், என் மார்புக் காம்புகளுக்கு இணையாக வேறிரண்டு. கைகால்களிலும் இதுதான் நிலமை, என்னைப் புணரமுற்படுவதுபோல ஒர் உடல், பெண்ணுடல், பலத்தையெல்லாம் ஒன்றுதிரட்டி அதனைத் தள்ளுகிறேன். காற்றில் எனது கைகள் அலைந்ததுதான் மிச்சம். ஒருவருமில்லை. ஆனால் என் கலக்கத்தைப் புரிந்துகொண்டதுபோல :
– பயப்படாதே, நான் யாரோ எவரோ அல்ல அன்றைக்கு உன்னிடம் முதன் முதலாக பேசிய அதேபெண். இறந்துகிடக்கும் மயில்களைக் கண்டு நீ படும் வேதனை எனக்குப் புரிகிறது. இன்றைய உலகில், கொல்லப்படுபவை அனைத்துமே குறி தவறியவை. தவறான வேட்டைகள். வேட்டையாடப்படவேண்டியவற்றை ஒருவரும் வேட்டையாடுவதில்லை. சாதுவான, எதிர்த்து நிற்க வலுவற்ற, பலவீனமான விலங்குகளை வேட்டையாடும் போக்கே அதிகம். வா ! இந்த நவீன வேட்டை விதியை மாற்றி எழுதலாம் » என்றது குரல்.
– எந்த வேட்டையென்றாலும் தப்பில்லையா ? » என்றேன்.
– மான் என்ற இனமே இல்லாதொழிந்துவிடும் அபாயம் இருக்கிறதெனில் ஒன்றிரண்டு புலிகளைக் கொல்வது தவறில்லை. மயிலுக்கும், கிளிக்குங்கூட கொடிய மிருகங்களின் உடலைக் கிழிக்க கோரைபற்கள் வேண்டும். போரினை, அமைதி வேட்டையாடுவதும் ; பகையை நட்பு வேட்டையாடுவதும் எப்படிப்பட்டத் தேவைகளோ, அவை போன்றதுதான் நம்முடைய இந்த வேட்டை என்ற பதில் திருப்தி அளிக்க அமைதியானேன்.
விடிந்தது. கனவும், கனவில் கண்டமுகமும் நினைவில் கரையொதுங்காவிடினும்; குரலும், வேட்டை என்ற சொல்லுக்குத் தந்த விளக்கமும் யோசிக்கக் கூடியவையாக இருந்தன. குரலுக்கும் எனக்குமான உறவு அன்றோடு முடிந்தது என்று நினைத்தேன். ஆனால் அது நீண்டதொரு சங்கிலியின் முதல் கண்ணி. வீட்டிலோ வெளியிலோ கேட்கும் குரல்களில் ஒன்றாக இருந்தால் காதில் வாங்கிய கணம், சம்மதித்தால் செயல்படவும், முரண்பட்டால் அலட்சியப்படுத்தவும் முடியும். இதுவோ பல நேரங்களில் எனது தலைக்குள் கேட்கிறது, குற்றவிசாரணை போலவும் இருக்கிறது.
ஒரு நாள் மாலை ஆரோவில் பாரவையாளர் மையத்திலிருந்த உணவு விடுதியில், கிரீன் டீ ஒன்றுக்கு ஆர்டர் செய்து காத்திருந்தேன். என்னுடைய ஆரோவில் சினேகிதி ஜெஸிக்கா திடீரென்று தன்னுடைய சொந்த நாட்டுக்குப் புறப்பட்டுப்போன மர்மத்தைப் புரிந்துகொள்ள இயலாமற் வருத்தமும் குழப்பமுமாக பல காரணங்களைச் சொல்லிப்பார்த்து யோசனையில் ஆழ்ந்திருந்த நாள் அது. எனது மேசைக்கு மறுபுறம் நாற்காலியை இழுத்துப்போட்டுக்கொண்டு யாரோ உட்காருவது போல இருந்தது. திரும்பினால், ஒருவருமில்லை. ஒருவேளை அருகிலுள்ள மேசைகளிலிருந்து சப்தம் வருகிறதா என்று பார்த்தேன். பெரும்பாலான மேசைகள் காலியாக இருந்தன.
– கப்பல் மூழ்கிவிட்டதுபோல அப்படியென்ன யோசனை ?
இப்படித்தான் தொடங்கியது முதன் முதலாக அப்பெண்ணுக்கும் எனக்குமான உரையாடல். சுற்றும் முற்றும்பார்க்கிறேன்.ஒருவருமில்லை. திரும்பவும் காப்பி பார் முழுவதிலும் பார்வையை அலைய விடுகிறேன். ம்… ஒருவருமில்லை. அநாமதேயக் குரல் வந்த திசையில் :
– நீ யார் ?
– நானா ? ‘நீ’தான் ‘நான், என்கிறாள். ‘இறந்த காலத்தின்’ நிழல் என சாதிக்கிறாள்.
உங்களுக்குக் குழப்பமாக இருக்கிறதா? இருக்கும். எனக்கும் இருக்கிறது, இன்றுவரை இருக்கிறது. இன்றைய எனது ‘நான் ‘இந்து மதம் தெரிவிப்பதுபோல எனது முந்தைய பிறவியின் வினைப்பயனா என்றெனக்குத் தெரியாது. ஆனால் எனது நிகழ்கால ‘நான்’, எனது இறந்தகால ‘நான்’களின் தொகுப்பென்று, என்னுள் ஒலிக்கும் குரல் சத்தியம் செய்கிறது, நேற்றைய ‘நான்’ களிலிருந்து விடுபடமுடியாமல் தவிக்கும் இலட்சோப இலட்சம் உயிர்களில் நானும் ஒருத்தி, ஒவ்வொரு நாளும் விடிகிறபோது இன்று நான் புதியவள் என்றே நினைக்கிறேன். இறந்தகாலத்திலிருந்து என்னை விடுவித்துக்கொள்வதாகவே நினைக்கிறேன். ஆனால் என்னைச் சுற்றியுள்ள உறவுகளும், மனிதர்களும் என்னை, இறந்தகாலத்தின் சாட்சியாக, அதன் தொடர்ச்சியாக பார்க்கிறபோது, எனக்கேது விடுதலை?
சமூகம் கட்டமைத்த போலி ‘நான்’ஐ சுமக்க எனது உண்மையான ‘நான்’ஐ ஒதுக்கி வாழ்கிறேன் என்று தொண தொணவென்று மூச்சுவிடாமல் என்னுள் உள்ள பெண்குரல் உளறிக்கொண்டிருக்கிறது. ஊரும் உலகமும் கட்டமைத்த பொய் ‘நானி’டமிருந்து என்னை விலக வற்புறுத்தி தினமும் நச்சரிப்பு. அது அவ்வளவு எளிதானதல்ல எனச்சொல்லிப் பார்த்தேன். எனக்கு நினைவு தெரிந்த நாட்களாக மற்றவர்கள் கட்டமைத்த இந்த ‘நான்’ உடன் வாழப் பழகிஇருக்கிறேன். வெகு சனத் தேர்வுக்கு மாறாக என்னை என் இறந்தகாலத்தை விட்டு வெளியில்வா என்றால் எப்படி ?
– உனக்கு நேரம் காலம் இல்லையா, எதற்காக இப்படி தொல்லை கொடுக்கிறாய், அமைதியாக இருக்க விடேன். என கோபத்துடன் ஒரு நாள் கேட்டேன்.
– இல்லை ! என்னுடைய கடமையை நான் செய்கிறேன், எனக்கூறிய வேகத்தில், « ஆனால் இதனை உனக்கு வேறுவகையில் புரிய வைத்திருக்கவேண்டும். என்னுடைய அணுகுமுறையில் தவறு இருக்கிறது. ‘என்ன தேடுகிறாய் ?’ என்பதுபோலக் கேள்வியைத் தொடங்கியிருக்கலாம். » என்ற குரலில் உண்மையில் வருத்தம் தோய்ந்திருந்தது.
– என்னுடைய உதவி உனக்குத் தேவை என்கிறபோது பக்குவமாக என்னை நெருங்கத் தெரிந்திருக்கவேண்டும். கால விரயமின்றி பிரச்சினைக்குத் தீர்வுகண்டு ஆளுக்கொரு திசையில் அவரவர் வழியில் மேற்கோண்டு பயணம் செய்திருக்க முடியும், – என்றேன்,கோபத்துடன்.
– சரி இப்போது என்ன கெட்டுப்போய்விட்டது, என்ன தேடற ! – விடாக்கண்டியாக அவள்.
– என்னன்னு தெரியல. ஆனால் சில நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருப்பதுபோல எனக்குத் தோணுது.
– எதுவென்று தெரியாமல் தேடுவாயா ? எனக் கூறிவிட்டு குரல் கைத்தட்டி சிரிக்கிறது. தொடர்ந்து, « கிடைத்திடுமா? » என்று கேள்வி.
என்னுடைய முட்டாள்தனத்தைச் சட்டென்று அவள் குரல் தோலுரித்து காட்டுமென்று எதிர்பார்க்கவில்லை. வெட்கமாக இருந்தது. குரலுக்குரிய பெண் எதிரில் நிற்பதுபோல, எள்ளிநகையாடும் அவள் கண்களைத் சந்திக்கக் கூச்சப்பட்டு தலைகுனிந்து சோபாவில் சில நொடிள் அமர்ந்தபடி இருந்தேன்.வீழ்த்தப்பட்டது, பெரும் சுவாசமாக வெளிப் பட்டது. எனது தோல்வியை ஏற்றுக்கொள்ள மனம் இடந்தரவில்லை. தலையை உயர்த்தி, கோபமும் வார்த்தைகளுமாய் :
– கிடைக்காதென்றால் ஒருவரும் உறக்கம் கலையமாட்டார், எழுந்திருக்க மாட்டார், சட்டையைப் போடமாட்டார், நடக்கமாட்டார், பேருந்துக்குக் காத்திருக்கமாட்டார். தேர்வு எழுதமாட்டார், வேலைக்கு அலையமாட்டார். ஒட்டுக் கேட்கமாட்டார். எஜமான் அல்லது எஜமானி காலில் விழமாட்டார், விலங்குகளில் ஒருவராக இருந்திருப்பார். தாவரத்தைத் தின்று, சாதுவான சக விலங்குகளைக் கொன்று, செரிக்கும்வரை அசைபோட்டு, ஒரு நாள் சாவார். ஆமாம் தேடுகிறேன். திருட்டுக் கொடுத்த பொருளை அல்ல, திருடனை. நினைவு குட்டையைக் கலக்கி நெஞ்சுக்குள் பின்னிய ஊத்தாவைக் குத்தி உயிர்ப்புள்ள அந்த முதலையைப் பிடித்துக் கரையில் போட்டுக் கல்லெறியவேண்டுமென்று ஒரு வெறி.
– ஆ ! இரண்டுபேரும் வரவேண்டிய இடத்திற்கு வந்திருக்கிறோம். முதலையைப் பிடிப்பதைக் கவனமாக செய்யவேண்டும். இல்லையென்றால் ஆபத்து.
அவள் எச்சரிக்கையை விளங்கிக்கொள்வதில் குழப்பம் இருந்தது. அலட்சியப்படுத்தக்கூடிய எச்சரிக்கையுமல்ல. காரணம் கனவிலும், வெகு நெருக்கத்திலும், எனக்குள்ளும் பலமுறைக் கேட்டுப் பழகிய அக்குரல் எனது குரல்போலவே இருக்கிறது, அக்குரலுக்குரிய அருவமான உடலும் கண்ணாடியில் என்னை நானே காண்பதுபோல ஒரு பிரமையை பல நேரங்களில் ஏற்படுத்துகிறது. அவளை வலிந்து அலட்சியப்படுத்திவிட்டு, என்னுடன் விமானம் ஏறவிருக்கும் சகபயணிகளின் முகங்களில் கவனத்தைச் செலுத்தினேன்.
——————————————————————–
இறந்த காலம் (நாவல்)
ஆசிரியர்
நாகரத்தினம் கிருஷ்ணா
வெளியீடு
சந்தியா பதிப்பகம்
சென்னை
- துணைவியின் இறுதிப் பயணம் – 5
- கழிப்பறைக்காக ஒரு பெண்குழந்தை நடத்திய போராட்டம்
- செலவுப் பத்து
- ‘ இறந்த காலம்’ புதிய நாவலின் முதல் அத்தியாயம்
- சுண்டவத்தல்
- விழித்தெழுக என் தேசம் – கவிதை நூல் வெளியீடு