2019ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு – கலாப்ரியா, பேரா. க.பஞ்சாங்கம்

Spread the love

அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 24வது (2019) “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகளை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். எழுத்தாளர் திலகவதி, பேரா. சு. சண்முகசுந்தரம், கவிஞர் சமயவேல் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு 2019 ஆம் ஆண்டின் விருதுக்குரியவர்களாக கீழ்காணும் இரு எழுத்தாளர்களை ஒரு மனதாகத் தேர்வு செய்துள்ளது.

 1. கவிஞர் கலாப்ரியா    கவிதை, நாவல், வாழ்க்கை வரலாற்றுப் புனைவுகள்,     

                       கவிதை விமர்சனம், தமிழ்த் திரையுலகம் பற்றியும்

                       தமிழர் வாழ்வில் திரையுலகின் தாக்கங்கள் பற்றியும்  

                       ஏராளமான ஆவணப் பதிவுகள்.

 • பேரா. க.பஞ்சாங்கம்   கவிதை, நாவல், சங்க இலக்கியம் முதல் சமகால

                       இலக்கியம் வரை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட

                       ஆய்வுக் கட்டுரைகள், நவீனக் கோட்பாடுகளின்

                       அடிப்படையிலான விமர்சன ஆய்வுகள்,

ஒவ்வொன்றும் ரூ 1,00,000 மதிப்புள்ள இவ்விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி பற்றி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

விருதாளர்களைப் பற்றிய குறிப்புகளும், அவர்களின் பங்களிப்புகள் பற்றிய குறிப்புகளும், அவர்களின் படைப்புகளின் பட்டியல்களும் அடுத்த பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தச் செய்தியை தங்கள் தொலைகாட்சி, செய்தித்தாள், அல்லது பத்திரிகையில் விரிவாக வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

‘விளக்கு’ செயற்குழு

கவிஞர் கலாப்ரியா

கலாப்ரியாவின் இயற்பெயர் T.K.சோமசுந்தரம்.1950இல் திருநெல்வேலியில் நெல்லையப்பர்-காந்திமதியம்மன் ஆலயத்துக்குப் பின்புறம் இருக்கும் சுடலைமாடன் தெருவில் பிறந்தார். தந்தை கந்தசாமி, தாயர் கோமதி. தி.க.சி.யின் வீடு (கல்யாண்ஜி என்னும் வண்ணதாசனின் வீடும் அது தான்) இருந்த அதே சுடலைமாடன் தெருவில் கலாப்ரியாவின் வீடும் இருந்தது. திருநெல்வேலி ஷாஃப்டர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து, இளங்கலை கணிதவியல் படிப்பை நெல்லை ம.தி.தா இந்துக் கல்லூரியிலும், முதுகலை கணிதவியல் படிப்பை நெல்லை தூய யோவான் கல்லூரியிலும் படித்தவர். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிபுரிந்து, 2009ல் பணி ஓய்வு பெற்ற இவர் தற்சமயம் தென்காசி அருகில் உள்ள இடைகால் என்னும் அழகிய கிராமத்தில், மனைவி திருமதி சரஸ்வதி (ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை) அவர்களுடன் வசிக்கிறார்.

1968 இல் கவிதைகள் எழுதத் தொடங்கியவர், கடந்த ஐம்பது ஆண்டுகளாக 24 கவிதைத் தொகுதிகள், (மூன்று மொத்தக் கவிதைகள் –காவ்யா 1994. தமிழினி 2000, சந்தியா பதிப்பகம் 2010 நீங்கலாக)  இலக்கியக் கட்டுரைகள்(4),  தன் வரலாற்றுப் புனைவு(5) தமிழ்சினிமா வரலாறு(3)  என 12 உரைநடை நூல்கள், மூன்று நாவல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு என மொத்தம் 40 நூல்கள் எழுதி இருக்கிறார். இப்போதும் அதே இளம்பருவ ஊக்கத்துடன் தினமும் வாசிப்பு, எழுத்து, உரையாடல் என்று தொடர்கிறார். அண்மையில் எழுதி முடித்திருக்கும் “பேரருவி” என்னும் நாவல் இந்த மாதம் வெளியாக இருக்கிறது.

மிகச்சிறிய வயதிலேயே தமிழின் தீவிர இலக்கியத்துடன் உறவு ஏற்பட தி.க.சி., வண்ணதாசன், வல்லிக்கண்ணன் ஆகியோர் காரணமானார்கள். 1968ல் இருந்து கவிதைகள் எழுதத் தொடங்கிய கலாப்ரியாவின் முதல் கவிதைத் தொகுப்பான ‘வெள்ளம்’ ஒரு வித்தியாசமான குறுவடிவத்தில் 1973ல் வெளியாகியது. பதிப்பாளர் வண்ணதாசன். அடுத்த தொகுப்பு தீர்த்த யாத்திரையும் அதே ஆண்டு வண்ணதாசனால் கொண்டுவரப்பட்டது. அந்த சமயம் திருநெல்வேலியில் இருந்த வண்ணநிலவன், விக்ரமாதித்யன், மாலன், பக்கத்தில் இடைசெவலில் இருந்த கி.ரா., நாகர்கோவிலில் சுந்தர ராமசாமி, திருவனந்தபுரத்தில் நகுலன், ஆதவன் என ஒரு சீரிய சிற்றிதழ் வாசிப்பும் விவாதமுமாக, ஒரு காத்திரமான சூழல் உருவாகியிருந்தது.

1975ல் கவிஞர் உமாபதியால் கொண்டுவரப்பட்ட ‘தெறிகள்’ முதல் இதழில் கலாப்ரியாவின் குறுங்காவியம் சுயம்வரம் வெளியாகியது. அந்த சமயத்தில் சிற்றிதழ் பரப்பில் பலரையும் ஈர்த்த அற்புதமான கவிதைகளால் நிரம்பியது சுயம்வரம். முந்தைய சிறுகவிதைகளின் இளம்பருவத்தில் இருந்து கலாப்ரியாவின் அடுத்த கட்ட நகர்வாக சுயம்வரம் கவிதைகள் அமைந்தன. 1979ல் வெளிவந்த “மற்றாங்கே” கவிதைத் தொகுப்பு, கலாப்ரியாவைத்  தமிழின் மிக முக்கியமான கவியாக நிலைநிறுத்தியது.

கலாப்ரியாவின் கவிதைகள் குறித்து கவிஞர் சுகுமாரன் எழுதுகிறார்: “நிகழ் காலத்தின் நடவடிக்கைகளைக் கவிதை அனுபவமாக மாற்றுருவாக்குவதில் சமகாலக் கவிஞர்களில் எவரை விடவும் கணிசமாக வெற்றி பெற்றிருப்பவர் கலாப்ரியா…வாழும் காலத்தையும் எதார்த்தத்தையும் பற்றிய புரிந்து கொள்ளலுக்கு நம்மைத் தகுதிப்படுத்துவதே கவிதையின் பங்களிப்பு என்று கலாப்ரியா கவிதைகள் சுட்டுவதாக நம்புகிறோம்.

‘காலடியில் முட்கள்

வலியுணர்த்தி

வாழ்க்கை

வனமென்கும்’

இந்த உணர்த்தல்தானே கவிதை.” கலாப்ரியாவின் கவிதைகளின் திறவுகோல்களாக ‘சாதாரணனின் கலகம்’, ‘பார்வையாளனின் பதற்றம்’ என்ற இரு சூத்திரங்களை முன் வைக்கிறார் கவிஞர் சுகுமாரன். இந்த இரண்டு சொற்றொடர்கள் மூலம் நாம் கலாப்ரியாவின் பல கவிதைகளையும் முழுமையாக உள்வாங்கிக்கொள்ளலாம்.

கலாப்ரியா உணர்வுகள் வழியாகவே தன்னுடைய கவிதையின் போக்குகளை மிக இயல்பாகக் கட்டமைத்துக் கொண்டார். தத்துவம், தர்க்கவியல், அல்லது காலவெளிக் கோட்பாடு என்று இவருடன் பயணித்த கவிகள் வெவ்வேறு பாதைகளில் கிளம்பியபோதும், கலாப்ரியா, கவிதையின் நுண்ணிழைகளாக தொடர்ந்து வெவ்வேறு மனித உணர்வுகளையே  மனத்தடை இல்லாமல் முப்பட்டைக்கண்ணாடித் துண்டுகள் போன்ற சொற்களால் கவிதையாக்கினார். மரபின் வழியே பலகாலமாக அடக்கி வைக்கப்பட்டிருந்த உண்ர்வுகளை மிகக் குறைவான சொற்களில் நேரடிக் கவிதைகளாகவும் வெளிப்படுத்தினார். ஆண் மனதுக்குள் ஏற்படும் ரகசிய வேட்கைகளை மட்டுமல்லாமல் பெண் மனதின் சலனங்களையும் கலாப்ரியா கவிதைகளாக்கினார். முகமற்ற தனிமனிதர்களின் அந்தரங்கமான மெல்லிய அகக்குமுறல்களைப் பதிவுசெய்தார். மனிதரின் சின்னஞ்சிறு துயரங்களைக் கூட தனது கூர்மையான அவதானிப்பின் மூலம் ஓரிரு வரிகளில் பதிவு செய்துவிடும் கைநேர்த்தி கலாப்ரியாவிடம் மிக இயல்பாக இருந்தது. மொழியில், காலத்தால் உறைந்த அழகியலை உடைத்தெறிவதன் மூலம் மிகப்புதிய விடுதலை பெற்ற அழகியலை எட்ட முடியும் என்பதைத் தொடங்கி வைத்த முதல் நவீன கவி என்றே கலாப்ரியாவைக் குறிப்பிட முடியும். கவிஞர் விக்ரமாதித்யன், “தமிழ்க்கவிதை சரித்திரத்திலேயே கலாப்ரியா கவிதைகள் தனியானவை. இரண்டாயிரம் ஆண்டுத் தமிழ்க் கவிதையிலேயே காணக் கிடைக்காத உணர்வெழுச்சியும் துடியும் கட்டவிழ்ந்த மனவெளிப்பாடும் கொண்ட அபூர்வமான கவிதைகள். முற்றிலும் மனத்தடைகளை உதிர்த்து /உதறியெழுந்து நிற்கும் கவிதைகள். கலாப்ரியாவின் கவித்துவம் ஒப்பிட இயலாதது என்பது மட்டுமில்லை, ஒரு இனத்தில் / மொழியில் எப்பொழுதோ நிகழக்கூடியதுமாகும்.” என்று எழுதியிருப்பது வெறும் புகழ்ச்சி இல்லை. “கலாப்ரியா தனிமனிதன், குடும்பம், சமூகம், பாலியல் என சகலவற்றிலும் மனத்தடையில்லாது எழுதிவந்திருக்கிறார். இன்றைய தினம் கவிதையில் முழுக்கவும் மனத்தடையின்றி இயங்க வேண்டியிருக்கிறது. அப்பொழுதுதான் கவிதை வசப்படும். … கலாப்ரியாவின் மனத்தடையின்மையே அவருக்கு உச்சபட்ட கவித்துவம் நல்கியிருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுத் தமிழ்க்கவிதை மரபிலேயே இது போல மனத்தடையை உடைத்தெறிந்த கவிஞன் ஒருவனும் இல்லை.” என்று விக்ரமாதித்யன் போற்றுவதில் மிகையென்று எதுவும் இல்லை.

2009ல் வெளியாகிய “நினைவின் தாழ்வாரங்கள்” நூலில் இருந்து கலாப்ரியாவின் உரைநடை எழுத்து தொடங்குகிறது. தன்வரலாற்று அ-புனைவுகள் என்று ஒரு புதிய வகைமையில் ஐந்து நூல்கள் எழுதியுள்ளார். 2017ல் வெளியாகிய இவரது முதல் நாவல் “வேனல்” பலரது கவனத்தையும் பெற்றது. இந்த ஆண்டில் “பேரருவி” என்னும் புதிய நாவல் ஒன்றும் வெளிவர இருக்கிறது.

1980களில் குற்றாலத்தில் நடத்திய கவிதைப் பட்டறைகளை கலாப்ரியாவின் வாழ் நாள் சாதனைகளில் ஒன்றாகக் கருத வேண்டும். 1980களில் தமில் இலக்கியப் பரப்பில் பெரும் அலைகளை எழுப்பியவை இந்தப் பட்டறைகள். இளம் கவிகளுடன் தொடர்ந்த உரையாடலில் இருக்கும் கலாப்ரியாவை மூத்த கவி என சட்டென்று அழைத்துவிட முடியாதபடி இன்றும் துடிப்புடன் இயங்கிவருகிறார்.

தமிழின் மிக முக்கியமான,  ஒரு தவிர்க்கவே முடியாத அபூர்வமானதொரு நிகழ்வு கலாப்ரியா. தமிழ் கவிதைப்போக்கில், கவிதை மொழியில், அழகியலில், நவீனம் நோக்கிய பவகையான உடைப்புகளையும் திறப்புகளையும் ஏற்படுத்திய முதன்மைக் கவியான கலாப்ரியாவுக்கு அவரது கவிதைச் செயல்பாட்டையும் அண்மைக்கால உரைநடைகள் மற்றும், புனைவு முயற்சிகளையும் கௌரவித்துப் போற்றும் வகையில் மிகத் தாமதமாகவேனும், 2019ஆம் ஆண்டிற்கான ‘புதுமைப்பித்தன் நினைவு விளக்கு’ விருதினை அவருக்கு அளிப்பதில் ‘விளக்கு’ விருது நடுவர் குழுவும் ‘விளக்கு’ அமைப்பும் மனநிறைவும் மகிழ்வும் கொள்கின்றன.

கவிஞர் கலாப்ரியா நூற்பட்டியல்

கவிதைகள்

 1. வெள்ளம், 1973
 2. தீர்த்த யாத்திரை, 1974
 3. மற்றாங்கே, 1979
 4. எட்டயபுரம் (நெடுங்கவிதை), 1983
 5. சுயம்வரம், (நெடுங்கவிதை) 1985  
 6. உலகெல்லாம் சூரியன்,  1993
 7. கலாப்ரியா கவிதைகள், (தொகை நூல்), 1994.
 8. அனிச்சம், 2000 
 9. கலாப்ரியா கவிதைகள், (தொகை நூல்)
 10. வனம் புகுதல், 2003
 11. எல்லாம் கலந்த காற்று, 2007
 12. கலாப்ரியா கவிதைகள், (தொகை நூல்), 2010
 13. நான் நீ மீன், 2011
 14. உளமுற்ற தீ, 2013
 15. தண்ணீர்ச் சிறகுகள், 2014
 16. சொந்த ஊர் மழை, 2015
 17. தூண்டில்மிதவையின் குற்ற உணர்ச்சி, 2016
 18. பனிக்கால ஊஞ்சல், 2016
 19. மற்றாங்கே (செம்பதிப்பு), 2016
 20. பேனாவுக்குள் அலையாடும் கடல், 2017
 21. எட்டயபுரம் (காவியம்), 2018
 22. சொல்உளி, 2018
 23.  மௌனத்தின்வயது, 2019
 24. கலாப்ரியா கவிதைகள் (இரண்டாம் தொகுதி), 2020

நாவல்

 • வேனல், 2017
 • பெயரிடப்படாதபடம், 2019
 • பேரருவி (அச்சில்), 2020

சிறுகதைகள்

 • வானில்விழுந்தகோடுகள் (சிறுகதைகள்), 2018.

தன் வரலாற்று அ-புனைவுகள்

 • நினைவின் தாழ்வாரங்கள், 2009
 • ஓடும் நதி,, 2010
 • உருள் பெருந்தேர், 2011.        
 • காற்றின்பாடல், 2013
 • போகின்ற பாதையெல்லாம், 2016

கட்டுரைகள்

 • சுவரொட்டி, (தமிழ் திரைப்படக் கட்டுரைகள்), 2013.
 • மறைந்து திரியும் நீரோடை (இலக்கியக் கட்டுரைகள்), 2014  
 • மையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள் (இலக்கியக் கட்டுரைகள்), 2015
 • என் உள்ளம் அழகான வெள்ளித்திரை (தமிழ் திரைப்படக் கட்டுரைகள்), 2015
 • சில செய்திகள் சில படிமங்கள் (இலக்கியக் கட்டுரைகள் ), 2016
 • அன்பெனும் தனி ஊசல் (இலக்கியக் கட்டுரைகள் ), 2018  
 • பாடலென்றும் புதியது (திரைப்படக் கட்டுரைகள்), 2018

பேராசிரியர் க.பஞ்சாங்கம்

தமிழ்த் திறனாய்வு உலகில் ஒரு புதிய கோணத்தில், புதிய பகுதியில் தனது ஆய்வுகளை நகர்த்தியவர பஞ்சு என்னும் பேராசிரியர் க. பஞ்சாங்கம். பாண்டிச்சேரி தமிழ் ஆளுமைகளின் நெடும்பட்டியலில் பஞ்சாங்கத்தின் பெயரும் இணைந்து விட்டது. ‘ஒட்டுப்புல்’ என்னும் கவிதைத்தொகுப்போடு தனது இலக்கியப் பயணத்தைத் தொடங்கிய இவர் கவிதை, நாவல், திறனாய்வு, பெண்ணியம், தலித்தியம் முதலிய சமூக அரசியல் மற்றும் கலையிலக்கியக் கோட்பாடுகள் சார்ந்த ஆய்வு, கோட்பாட்டு மூல நூல்களின் மொழிபெயர்ப்பு என்று பன்முக ஆளுமையாக வளர்ந்தார். சுமார் 40க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான காத்திரமான நூல்களை எழுதியவர். தன்னுடைய மாணவர்களை நவீனத் திறனாய்வு முறைமைகளில் ஈடுபடுத்தியவர் பேரா. பஞ்சாங்கம்.

பேராசிரியர் க.பஞ்சாங்கம் அவர்கள் விருதுநகர் மாவட்டம் இராசபாளையத்தை அடுத்துள்ள புத்தூரில் 04.02.1949 இல் பிறந்தவர். இவர் தம் பெற்றோர் திருவாளர்கள் கனியப்பன், முத்தம்மாள் ஆவர். தந்தையாரை இளம் வயதிலேயே இழந்த இவர் தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர். கல்வியிலும், பொருளாதாரத்திலும் பின்தங்கிய சமூகத்தில் பிறந்த இவர், இராசபாளையம் அருகில் உள்ள புத்தூர் சரசுவதி ஆரம்பப் பாடசாலையில் தொடக்கக் கல்வியைப் பயின்றார். உயர்நிலைக் கல்வியைத் தளவாய்புரம் பு.மு.மா. மாரிமுத்து நாடார் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். விருதுநகர் செந்தில்குமார் நாடார் கல்லூரியில் புகுமுக வகுப்பை (1965-66) நிறைவுசெய்தார். 1967-70 வரை மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலையும் 1970-72 இல் சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலையும் பயின்றார்.

1972ல் நெல்லை மாவட்டம் சங்கரநயினார்கோயில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் உரையாளர் (டியூட்டர்) பணியில் இணைந்தார். 1973 இல் புதுவை அரசின் நேர்காணலில் கலந்துகொண்டு பேராசியராக அரசுப் பணி பெற்றார். 1983 முதல் 1988 வரை பகுதிநேர ஆய்வாளராக, முனைவர் ஔவை. நடராசன் அவர்களின் மேற்பார்வையில் “சிலப்பதிகாரத் திறனாய்வுகள்” என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். பாண்டிச்சேரி அரசின் பல்வேறு கல்லூரிகளில் பணிபுரிந்து 2011ல் பணி ஓய்வு பெற்றார்.

1979 இல் திருவாட்டி பிரபாவதி அம்மையாரை மணந்த இவர் குடும்பத்தாரோடு தற்சமயம் பாண்டிச்சேரியில் வசித்துவருகிறார்.

பேராசிரியர் க.பஞ்சாங்கத்தின் எழுத்துப்புலம்

ஒரு எழுத்தாளரின் எழுத்தும் வாழ்வும் வேறுவேறல்ல. ஒரு எழுத்தாளருக்கு வாய்க்கப்பெறும் பால்யம்; அவர் வளர வளர, கற்றலின் மூலம், உணர்தலின் மூலம் ஆழமான வாழ்பனுபவங்களின் மூலம் உருவாகும் அவரது மனோலயம், மனோபலம்; அவரைச் சுற்றி வளைத்திருக்கும் யதார்த்தத்தின் சூழல்; எல்லாம் இணைந்து வனைந்து வனைந்து உருவாக்கும் வாழ்க்கையே, எழுத்தின் பிரதானப் போக்கைத் தீர்மானிக்கிறது. தற்கொலையையும் ஒரு வாழ்வு முறையெனக் கருதியிருந்த கரிசல் பூமியில் மேற்குத்தொடர்ச்சி மலைகளின் அடியோரம் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்த இவரது பால்யம் வறுமை, நோய்மை, பசி  காரணமான மரணங்களாலும் தற்கொலைகளாலும் நிரம்பியது.

வாழ்க்கை ஒரு பெரும்புனைவு என்றும் புதிர்த்தன்மையோடு ஓடிக்கொண்டிருக்கும் பேராறு என்றும் அதன் பன்முகத்தன்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தொடர்ந்து கூறிவரும் பேராசிரியர் க.பஞ்சாங்கம், தனது ஆய்வுகளின் மூலம் அவற்றை நிரூபித்தார். கோட்பாட்டு ஆய்வுமுறைகளைப் பற்றிய இவரது கருத்தாக்கங்களைக் கட்டமைப்பதில் வாழ்க்கை பற்றிய இந்த அடிப்படைப் புரிதல்களே இவருக்குப் பெரிதும் உதவுகின்றன. இலக்கியம் போலவே திறனாய்வு என்பதும் ஒரு அரசியல் செயல்பாடு என்பதைப் புரிந்துகொண்டதால், படைப்பாளிகள் எப்போதுமே ஒடுக்கப்படவர்கள் பக்கமே இருக்க வேண்டும், அவர்கள் சார்பாக ஒரு இலக்கியப் பிரதியை அணுகித் தெளிவுபெற முடியும் என்பதைத் தனது திறனாய்வுகளின் வழியே நிரூபித்துவந்தார் என்பதே பேராசிரியர் பஞ்சாங்கத்தின் சிறப்பாக இருக்கிறது.

பேராசிரியர் க.பஞ்சாங்கத்தின் எழுத்துக்களைக் கீழ்க்கண்டவாறு ஐந்து பெரும் பகுதிகளாகப் பிரிக்கலாம்.

 1. கவிதைத் தொகுப்புகள், நாவல்கள் ஆகிய படைப்புகள்
  1. மார்க்சியத்தில் தொடங்கி அமைப்பியல், பின்-அமைப்பியல், பின் காலனித்துவம், பின் – நவீனத்துவம், எடுத்துரைப்பியல் போன்ற கோட்பாடுளைப் பயன்படுத்தி தமிழ் இலக்கியப் பிரதிகளைத் திறனாய்வு செய்தல்.
  1. சங்க இலக்கியத்திலிருந்து சமகாலப் படைப்புகள் வரை இடைவெளியின்றி எல்லாவற்றிலும், ஒடுக்கப்பட்டோருக்கும் பெண்களுக்கும் குரலற்ற எளியவர்களுக்கும் எதிரானவற்றை எல்லாம் தயங்காமல் வெளிப்படுத்தும் திடமான திறனாய்வுகள்.
  1. பெண்ணியம் சார்ந்த எழுத்துகள்; பெண்ணிய நூல்களை மொழிபெயர்த்ததோடு அது தமிழ்ப் படைப்புகளில் எவ்விதம் இயங்குகிறது என்று விளக்கும் முழுமையான திறனாய்வுகள்.
  1. சிலப்பதிகாரம் பற்றிய இவரது பிரத்யேகத் திறனாய்வு நூல்கள்.   

தொல்காப்பியரில் இருந்து சல்மா வரை, க.பஞ்சாங்கத்தின் வாசிப்பு மிகப் பரந்துபட்டது, அதே சமயம் மிக ஆழமானது. பண்டைய இலக்கண இலக்கிய நூல்களைத் திறம்படக் கற்றிருப்பதோடல்லாமல் அவற்றை அவர் அறிந்த, அனுபவித்த தமிழ் வாழ்வியலோடு பொருத்திப் பார்த்துப் புரிந்துகொண்டிருக்கிறார். தான் கற்ற மேற்கத்திய, ஐரோப்பியக் கோட்பாடுகளின் அடிப்படையில் அவற்றைப் பொருள்கொள்ளவும் அவ்வாறு பொருள்கண்டதையெல்லாம் தெளிவான முறையில் எடுத்துரைப்பதுமே இவருடைய எழுத்துக்களின் சிறப்பு எனலாம். எந்தக் குறிப்பிட்ட கோடபாட்டுக்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல் தனக்குத் தேவையானவற்றை, தேவையான முறையில் பயன்படுத்தி வந்திருக்கிறார்.

சங்க இலக்கியத்தில் அகப்பாடல்களில் பாலின அரசியல் எவ்வாறு பதிவாகியுள்ளது என்பதையும் புறப்பாடல்களில் அதிகார உருவாக்கம் எவ்வாறு நடைபெற்றதையும் மிக விரிவாக எழுதியிருக்கிறார். “நோம் சோம்ஸ்கி இன்று சொல்வது போல, மக்களை அதிகாரம் செய்வதற்கு, மக்களிடமே சம்மதத்தை வடிவமைக்கிற சொல்லாடலாகத்தான் புறநானூற்றுப் பாடல்கள் அமைந்துள்ளன.” என்று ஒரு நூலில் குறிப்பிடுகிறார்.

பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரானதல்ல என்னும் மிக எளிய புரிதல்கூட இல்லாத தமிழ்ச் சூழலில் பெண்ணியத்தின் அடைப்படைகளை மிகப்புதியதொரு வகையில் கட்டமைக்கும் ஹெலன் கீச்சுவின் நூலை மொழிபெயர்த்தார். ஆணுக்குள் பெண்ணும், பெண்ணுக்குள் ஆணுமாகக் கலந்து கிடக்கிற தன்மையை “இருபால் பாலியம்” (bisexuality) என்று குறிப்பிடும் ஹெலன் கீச்சுவின் சிந்தனைகளை இவரது ‘பெண்-மொழி-புனைவு’ என்னும் நூல் விரிவாகப் பேசுகிறது. உலகின் எல்லா சமூகங்களிலும் உள்ள கலாச்சாரங்கள், மதங்கள், அவற்றின் வேத நூல்கள், நீதிபோதனைகள், நெறிமுறைகள், பிறந்தநாளில் இருந்து தொடங்கும் பல்வேறு சடங்குகள் என்று எல்லாமே இன்று ஆண்-மையச் சிந்தனை வழிப்பட்ட பொதுப்புத்தியின் சொல்லாடலில் இயங்குகின்றன. ஒரு குழந்தை பிறந்ததிலிருந்தே, ‘அது என்ன குழந்தை?’ என்ற விசாரிப்புடன் தொடங்கும் பால்-கட்டமைப்பு வேலைகளைக் கேள்விக்குட்படுத்துகையில் நாம் மிகப்புதியதொரு பார்வையைப் பெறுகிறோம் என்பதை க.பஞ்சாங்கம் இந்த நூலில் விளக்குகிறார். இப்புதிய பெண்ணியத்தின் அடிப்படையில் மனிதம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் நாம் மறுவாசிப்புக்கு உடபடுத்த வேண்டிய ஒரு இடத்தில் நாம் இருக்கிறோம் என்று ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார் க.பஞ்சாங்கம். அத்துடன், சிமோன் தெ பெவோரின் ‘இரண்டாவது பால்’ தொடங்கி பெண்ணியச் சிந்தனைகளின் மூலநூல்கள் அனைத்தையும் தமிழில் மொழிபெயர்க்க வேண்டியிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

‘பெண்ணெனும் படைப்பு – சில மானுடவியல் குறிப்புகள்’ என்னும் எலிசபத் டெய்லரின் நூலையும் மொழிபெயர்த்திருக்கிறார்.

ஒரு சமயம் தமிழ்ப்பரப்பில், ‘நிறப்பிரிகை’ போன்ற இதழ்களின் வருகையால் தலித்தியம் பற்றிய உரையாடல் ஒரு தீவிரத்தன்மையை எட்டியது. அந்த உரையாடலில் கலந்துகொண்டு க.பஞ்சாங்கம் மிக விரிவான முறையில் தனது கருத்துக்களை முன்வைத்தார். தலித் கவிதைகள், நாவல்கள், அரங்கியல் குறித்த கட்டுரைகளை எழுதினார். இவரது ‘தலித்துகள்-பெண்கள்-தமிழர்கள்’ என்னும் நூல் தலித்தியத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. தலித் இலக்கியத்தை தலித்துகள்தான் படைக்க வேண்டும் என்று ஒரு குரல் ஏன் எழுந்தது என்றும் வரலாற்று ரீதியாக அதை எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தினார். புத்தன் காலத்திலிருந்து அறிவுப்புலம் யாருடையதாக இருந்தாலும் அதைத் தங்களுடையதாக மாற்றிக்கொள்ளும் உயர்சாதியினரின் தந்திரங்களைச் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் அத்துடன் நின்றுவிடாமல் தலித் படைப்பாளிகளுக்கும் ஒரு வேண்டுகோள் வைத்தார். “…அரசியலில் அதன் வீச்சு இருக்கிற அளவுக்கு இலக்கியத்தில் அது படைப்பாகப் பதிவாகியிருக்கிறதா என்பது இன்னும் சந்தேகமே. கடந்து செல்ல வேண்டிய தூரம் எல்லையில்லாத வெளியாக இருக்கிறது. தலித்திய இலக்கிய உலகம் இதை எண்ணிப்பார்க்க வேண்டும். மேலும், ஒரு கொள்கை, கோட்பாடு என்று இயங்கும் இலக்கியம், திரும்பத் திரும்ப ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் சிக்கி, ஒற்றைப் பரிமாணம் பெற்று, வாழ்க்கையின் பன்முகங்களைக் கண்டுகொள்ளத் தவறிவிடுகிற விபத்திற்குள் மாட்டிக்கொள்ளாமல் தன் பயணத்தைத் தொடர வேண்டும்” என்று எழுதுகிறார். இந்தப் பின்புலத்தில் தான் தனது ‘பின்காலனித்துவச் சூழலில் ஒரு நூற்றாண்டுத் தமிழிலக்கியம்’ என்னும் நூலில் என்.டி.ராஜ்குமார் போன்றவர்களின் அலாதியான மொழியழகியல் கவிதைகளைக் கொண்டாடுகிறார்.

தமிழில் பண்டைய இலக்கிய இலக்கணங்களில் இருந்து இன்றைய சமகாலம் வரையிலான எல்லா வகைப் பிரதிகளிலும் ஆழ்ந்த புலமையும், அவற்றை சமூகவியல் மற்றும் நவீன கலையிலக்கியக் கோட்பாடுகளின் அடிப்படையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆழமான கட்டுரைகளில் திறனாய்வு செய்து, தமிழில் தெளிவான திறனாய்வுப் பார்வைகளை உருவாக்கியிருக்கும் பேராசிரியர் க.பஞ்சாங்கத்தைக் கௌரவித்துப் போற்றும் வகையில் 2019ஆம் ஆண்டிற்கான ‘புதுமைப்பித்தன் நினைவு விளக்கு’ விருதினை அவருக்கு அளிப்பதில் ‘விளக்கு’ விருது நடுவர் குழுவும் ‘விளக்கு’ அமைப்பும் மனநிறைவும் மகிழ்வும் கொள்கின்றன.

பேராசிரியர் க.பஞ்சாங்கம் நூல்கள்

கவிதைத் தொகுப்புகள்

 1. ஒட்டுப்புல் (1997)
 2. நூற்றாண்டுக் கவலைகள் (1990)
 3. பயணம் (2001)
 4. ஒட்டுப்புல் (கவிதைகள், மொத்தத் தொகுப்பு), 2008

நாவல்கள்

 1. மத்தியிலுள்ள மனிதர்கள் (1982)
 2. ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம் (2005)
 3. அக்கா (2016)

மொழிபெயர்ப்புகள்

 1. இலக்கியத்தில் தொல்படிவம் (Archetypes in literature written by Northrop Fry) (1988)
 2. பெண்ணெனும் படைப்பு – சில மானுடவியல் குறிப்புகள் – (Women’s Creation: Anthropological Perspective, Written by Elizabeth Tailor) (1994)
 3. ஊடகமெனும் குருட்டு மகிழ்ச்சி  (பல்வேறு மொழிபெயர்ப்புக் கட்டுரைகளின் தொகுப்பு) (2010)
 4. நான் எப்படி எழுதுகிறேன் (‘How I am write?’ Essays by Umberto Echo – translated through English), (2018) 

ஆய்வு & விமர்சனம்

 1. தமிழிலக்கியத் திறனாய்வு வரலாறு (1990)  
 2. சிலப்பதிகாரத் திறனாய்வு வரலாறு(1993) (முனைவர் பட்ட ஆய்வேடு)
 3. மறுவாசிப்பில் கி.ராஜநாராயணன் (1995)
 4. தமிழா! – பாரதியுடன் ஓர் உரையாடல் (1999)
 5. பெண்-மொழி-புனைவு, (1999)
 6. மகாகவி பாரதியாரின் பெண்ணியல் கட்டுரைகள் (தொகுப்பாளர்), 2000
 7. இலக்கியத்தின் இருப்பியலும் திறனாய்வின் இயங்கியலும், 2000
 8. சிலப்பதிகாரம்: சில பயணங்கள் (2002)
 9. பாரதி – பன்முகப்பட்ட ஆளுமை (தொகுப்பு), 2003
 10. கி.ரா – 80 (தொகுப்பு), 2003
 11. நவீனக் கவிதையியல்: எடுத்துரைப்பியல், 2003
 12. ஒரு விமர்சகனின் பார்வையில், 2004
 13. தலித்துகள் – பெண்கள் – தமிழர்கள், 2004
 14. தொன்மத் திறனாய்வு, 2005
 15. ஹெலன் சீக்சு – புதிய பெண்ணியல் கோட்பாட்டாளர், 2006
 16. புனைவுகளும் உண்மைகளும், 2006
 17.  பெண்-மொழி-படைப்பு, 2007
 18. தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், 2008
 19.  பாரதியாரின் கலை இலக்கியக் கோட்பாடுகள், 2008
 20. சங்க இலக்கியம், 2009
 21. க. பஞ்சாங்கம் கட்டுரைகள் – I & II, 2009
 22. சிலப்பதிகாரத் திறனாய்வு வரலாறு, 2010
 23. மொழி தரும் வலியும் விளையாட்டும், 2010
 24. பின் காலனித்துவ நோக்கில் மனோன்மணியம், 2010
 25. இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும், 2012
 26. கி.ரா.வின் புனைகதைகளும் இற்கையை எழுதுதலும், 2012
 27. புதிய கோட்பாட்டு நோக்கில் சங்க இலக்கியம், 2013
 28. அழுததும் சிரித்ததும், 2014
 29. தமிழ்: ஒரு மொழி, ஒரு நிலம், ஒரு வாழ்வு (கட்டுரைத் தொகுப்பு)
 30. இன்றைய இலக்கியம் என்பது தலித் இலக்கியமே, 2015
 31. தமிழில் திறனாய்வுப் பனுவல் (தொகுப்பு)
 32. பின் காலனித்துவக் கோட்பாட்டு நோக்கில் ஒரு நூற்றாண்டுத் தமிழிலக்கியம், 2016
 33. புதிய வெளிச்சத்தில் தமிழிலக்கிய வரலாறு, 2017  
 34. ஆய்வு நெறிமுறைகள், 2017
 35. கவிதைக் கனியால் உண்ணப்பட்டவர் கவிக்கோ அப்துல் ரகுமான், 2017
 36.  சில நாவல்களும் என் வாசிப்புகளும், 2018
 37.  நவீனக் கவிதைகளும் என் வாசிப்புகளும், 2019
 38.  தமிழ்ச் சிறுகதைகளும் மனிதப் பெருவெளியும், 2019
 39. மொழியாக்கமெனும் படைப்புக்கலை (மொழிபெயர்ப்பாளர்களுடன் நேர்காணல்), 2019
 40. இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம் – இன்றைய உரைநடைத் தமிழில், 2019

மொத்தம் 51-நூல்கள்.

பேரா. க.பஞ்சாங்கம் பற்றிய நூல்கள்

 • க. பஞ்சாங்கத்தின் படைப்புலகம், கே. பழனிவேலு (தொகுப்பு) – மணிவிழா சிறப்பு வெளியீடு, 2008
 • க. பஞ்சு-வின் திறனாய்வுப் பார்வை, முனைவர் செந்தாமரை, 2014
 • க. பஞ்சுவின் பெண்ணிய, தலித்திய, மார்க்சியப் பார்வை, முனைவர் செந்தாமரை, 2014,
 • பேரா. க. பஞ்சாங்கம், முனைவர்தி. குமார்.,  2015
 • இயங்குநூல் செயவலர் முனைவர் க. பஞ்சாங்கம்,நாகரத்தினம் கிருஷ்ணா. 2015.

விருதுகள்

 1. புதுச்சேரி அரசின் ‘கம்பன் புகழ் விருது, 2000.  (இலக்கியத்தின் இருப்பியலும் திறனாய்வின் இயங்கியலும்’ நூலுக்காக )
 2. திருப்பூர் தமிழ் சங்கம் விருது, 2000. (பெண்-மொழி-புனைவு நூலுக்காக)
 3. கோவை காசியூர் ரெங்கம்மாள் விருது, 2002. (பயணம் கவிதைத் தொகுப்புக்கு)
 4. பேராசிரியர் கா.சிவத்தம்பி நினைவு கணையாழி இதழ் விருது, 2012. (சிறந்த திறனாய்வுக்கட்டுரைக்காக)
 5. மேலும் இதழ் விருது, 2015. (சிறந்த திறனாய்வாளர் விருது)

******

Series Navigationசிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை – 7கூகை