தலைவன் பொருள்தேடப்பிரிந்து போனதால் தலைவி அவனையே நினைத்து வருந்துகிறாள். தனக்கு இன்பமும், தாய்மைப் பேறும் தந்த அவனையே எண்ணி உருகும் அவளின் துயரையே இப்பகுதிப் பாடல்கள் விளக்குவதால் இப்பெயர் பெற்றது.
====================================================================================
தலைவி இரங்கு பத்து—1
அம்ம வாழி! தோழி! அவிழ்இணர்க்
கருங்கால் மராஅத்து வைகுசினை வான்பூ
அருஞ்சுரம் செல்லுநர் ஒழிந்தோர் உள்ள
இனிய கமழும் வெற்பின்
இன்னாது என்பஅவர் சென்ற ஆறே!
[அவிழ்இணர்=முறுக்கவிழ்ந்த பூக்கள் விளங்கும் பூங்கொத்து; கால்=அடிமரம்; மராஅம்=கடம்ப மரம்; வான்பூ=வெண் பூ; உள்ள=நினைய; வெற்பு=மலை; இன்னாது=கொடியது; ஆறு=வழி]
அவன் போயி ரொம்ப நாளாச்சு. ”அவரு போன வழி ரொம்பவும் கொடுமையானதாச்சே! ஒரு வேளை நம்ம நெனச்சுத் திரும்பி வந்திடுவாரோ”:ன்னு அவ நெனக்கறா. ஆனா ஊர்லேந்து போனவங்க திரும்பி வந்து அவளோட தோழிக்கிட்ட அவன் போய்ச் சேந்து விட்டான்னு சொல்றாங்க. தலைவியோட அறியாமையை நெனச்சு அவ சொல்ற பாட்டு இது.
”தோழி! கேளு! கருப்பான அடிமரம் உள்ள மராமரத்துல கட்டவிழ்ந்து போன பூங்கொத்தெல்லாம் வெளங்குது. அந்த மரத்தோட கணுவுல வெள்ளையான பூக்கள் இருக்குது. அந்த வழியில போறவங்க வீட்ல விட்டுட்டு வந்த தலைவியை நெனக்கற மாதிரி அங்க பூவெல்லாம் வாசனை வீசுது. அப்படிப்பட்ட மலை இருக்கற வழி ரொம்பவும் கொடுமையானதுன்னு சொல்வாங்க”
===================================================================================
தலைவி இரங்கு பத்து—2
அம்ம வாழி! தோழி! என்னதூஉம்
அறன்இல மன்ற தாமே விறல்மிசைக்
குன்றுகெழு கானத்த பண்பில் மாக்கணம்
‘கொடிதே காதலிப் பிரிதல்;
செல்லல் ஐய’ என்னா தவ்வே.
[விறல்=வெற்றி; மாக்கணம்=விலங்கினம்; என்னதூஉம்=சிறிதும்; விறன்மிசைக் குன்று=உச்சிகளாற் சிறந்த குன்று; செல்லல்=செல்லாதீர்; என்னாதவ்வே=என்று கூறாதனவே]
அவன் தன்னைப் பிரிஞ்சுக் காட்டு வழியைக் கடந்து போயிட்டான்ன்னுத் தோழி சொன்னதை கேட்டதும் அவ ரொம்பவும் வருந்தறா. காட்டு வெலங்கையெல்லாம் பத்திச் சொல்ற பாட்டு இது.
”தோழி! வாழ்க! கேளு! ஒசரமான உச்சி இருக்கற மலையில காட்டுல வாழற பண்பே இல்லாத வெலங்குங்க அவருகிட்ட, “ஐயா! தலைவியை உட்டுட்டுப் பிரிஞ்சு வர்றது ரொம்பக் கொடுமையான செயலய்யா! அதால நீ மேல செல்லாதே! திரும்பிடு”ன்னு சொல்லலயே! அதெல்லாம் ரொம்பவும் தருமமே இல்லாததுதான் போல இருக்கு.”
=====================================================================================தலைவி இரங்கு பத்து—3
அம்ம வாழி! தோழி! யாவதும்
வல்லா கொல்லா தாமே அவண
கல்லுடை நல்நாட்டுப் புள்ளினப் பெருந்தோடு,
‘யாஅம் துணைபுணர்ந்து உறைதும்
யாங்குப் பிரிந்து உறைதி’ என்னா தவ்வே?
[யாவதும்=யாதும்; வல்லா கொல்லோ=வல்லமை இல்லாதனவோ; கொல்=அசைச்சொல்; அவண=அந்தப் பகுதியில்; பெருந்தோடு=பெருந்தொகுதி; புள்=பறவை; யாங்கு=எப்படி; உறைதி=தங்குகிறாய்]
அவன் தன்னைப் பிரிஞ்சு காட்டு வழியிலப் போயிட்டான்னு அவ கேள்விப்பட்டா. அங்க இருக்கற பறவையெல்லாம் கூட அவனத் திரும்பி வருமாறு சொல்லவில்லையேன்னு வருந்தி அவ சொல்ற பாட்டு இது.
”தோழி! கேளு! அவரு போன வழியில மலையில இருக்கற பறவையெல்லாம் அவருக்கிட்ட, “நாங்களெல்லாம் எங்கத் துணையைப் பிரியாம இணைஞ்சுதான வாழறோம். நீ எப்படிதான் பிரிஞ்சு வரே”ன்னுக் கேட்டு அவரைத் திருப்பி அனுப்பலயே! அதுங்களுக்கெல்லாம் ஒண்ணுமே செய்யக்கூடிய தெறமை இல்லியா?”
====================================================================================
தலைவி இரங்கு பத்து—4
அம்ம வாழி! தோழி! சிறியிலை
நெல்லி நீடிய கல்காய் கடத்திடைப்
பேதை நெஞ்சம் பின்செல, சென்றோர்
கல்லினும் வலியர் மன்ற
பல்இதழ் உண்கண் அழப்பிரிந் தோரே.
[நெடிய=நீண்ட; கடம்=காடு; கல்காய்=கல்லும் காய்கின்ற; வலியார்=வலிமையுடையவர்]
அவன் பிரிஞ்சு போயி ரொம்ப நாளு ஆயிடுச்சு; அவ ரோம்ப்வும் வருந்தித் தோழிகிட்ட சொல்ற பாட்டு இது.
”தோழி! சின்னச் சின்னதா எலை இருக்கற நெல்லி மரங்கள் நெறய இருக்கறதும், கல்லும் வெயிலும் அதிகமா இருக்கறதுமான காட்டு வழியில் என் நெஞ்சு பின்னாடியே போக அதைப் பத்தியே நெனக்காதவராக அவரு போயிட்டாரு. பல இதழ் இருக்கற பூப்போல இருக்கற நல்லா மை பூசப்பட்ட நம்ம கண்ணெல்லாம் அழற மாதிரி வச்சுட்டு அவரு பிரிஞ்சு போனாரு. அந்தக் கல்லை விடக் கடுமையான மனசு அவருக்கு இருக்குது பாரு.
===================================================================================
தலைவி இரங்கு பத்து—5
அம்ம வாழி! தோழி! நம்வயின்
நெய்த்தோர் அன்ன செவ்விய எருவை
கற்புடை மருங்கில் கடுமுடை பார்க்கும்
காடுநனி கடிய என்ப,
நீடிஇவண் வருநர் சென்ற ஆறே.
[நெய்த்தோர்=குருதி; எருவை=ஒருவகை பிணந்தின்னிக் கழுகு; கற்புடை மருங்கு=கல் அடுக்குகளாலான இடம்; கடுமுடை=புலால் நாற்றம்; நனிகடிய=மிகக் கொடிய; நீடி=காலம் தாழ்த்தி; வருநர்=வருவாரா காதலர்; சென்ற ஆறே=சென்ற வழிதான்]
அவரு போன வழிபற்றி எல்லாரும் சொல்லச்சொல்ல அவ ரொம்பவும் வருந்தறா. அப்ப அவ தோழிகிட்ட சொல்ற பாட்டு இது.
”தோழி! கேளு! அவரு போன வழியில ரத்தம் போலச் செவந்த காது இருக்கற பிணந்தின்னிக்கழுகு எல்லாம் கல்லிடுக்குல ஒக்காந்துக்கிட்டு நாத்தம் அடிக்கற பொணத்தைப் பாத்துக்கிட்டு இருக்குமாம். அப்படிப்பட்ட கொடுமையான காடாம் அது. அந்த வழியிலப் போனவரு சீக்கிரம் திரும்பி வராம ரொம்ப நாளாச்சுதே! அந்த வழியைப் பத்தின நெனப்பெல்லாம் வந்து கவலையாயிருக்குது.
===================================================================================
தலைவி இரங்கு பத்து—6
அம்ம வாழி! தோழி! நம்வயின்
பிரியலர் போலப் புணர்ந்தோர் மன்ற!
நின்றதுஇல் பொருட்பிணி முற்றிய
என்றூழ் நீடிய சுரன்இறந் தோரே.
[பொருட்பிணி=பொருளின் மீதுள்ள பிடிப்பு; என்றூழ்=வெப்பம்; நீடிய=நீண்ட; சுரம்=காட்டுவழி; இறந்தோர்=கடந்தவர்]
அவனைப் பிரிஞ்சு அவ வருந்தறா. அப்ப அவனோட சேந்து இருந்தது எல்லாம் நெனவுக்கு வருது. தோழிகிட்ட சொல்ற பாட்டு இது.
”தோழி! கேளு! நம்ம உட்டுட்டுப் பிரிஞ்சே போகாதவர் மாதிரிக் கூடி இருந்த அவரு எப்பவுமே நெலச்சு இருக்காத பொருளு மேல மனசு அதிகமா ஆசை வச்சதால ரொம்ப வெப்பமான காட்டு வழியையும் கடந்து போயிருக்காரு.
====================================================================================
தலைவி இரங்கு பத்து—7
அம்ம வாழி! தோழி! நம் வயின்
மெய்உற விரும்பிய கைகவர் முயக்கினும்
இனிய மன்ற தாமே
பனிஇருங் குன்றம் சென்றோர்க்குப் பொருளே.
[நம்வயின்=நம்மிடத்தே; மெய்யுற=உடல் பொருந்த; கைகவர் முயக்கம்=கைகளால் தழுவிக் கொள்ளும் முயக்கம்; பனித்தல்=உடலும் உள்ளமும் நடுங்கச் செய்தல்]
அவன் பொருள் தேடப் பிரிஞ்சி போய்டிட்டான். அவ வருந்திக்கிட்டு என்னை விட அவருக்குப் பொருள் தேடறதே பெரிசாப் போச்சுன்னு தோழிகிட்ட சொல்ற பாட்டு இது.
”தோழி! கேளு! நம்ம தலைவரு நடுக்கம் உண்டாற பெரிய மலையைக் கடந்து போயிட்டாரு. ரெண்டு பேர் ஒடலும் நல்லாப் பொருந்தற மாதிரி கை சேத்து நம்ம கிட்ட இருந்த இன்பத்தை விட அவருக்குப் பொருள் தேடறதுதான் பெரிசா இருக்குன்னு தெரியுது.
தலைவி இரங்கு பத்து—8
அம்ம! வாழி! தோழி! சாரல்
இலைஇல மலர்ந்த ஓங்கு நிலை இலவம்
மலைஉறு தீயின் சுரமுதல் தோன்றும்
பிரிவுஅருங் காலையும், பிரிதல்
அரிதுவல் லுநர்நம் காத லோரே.
[சாரல்=மலைப்பக்கம்; சுரம்=காடு; ஓங்கு=உயர்ந்து]
அவன் பிரிஞ்சு போனதால வருந்தி அவ தோழிகிட்டச் சொல்ற பாட்டு இது.
”தோழி! வாழ்க! கேளு! மலைச்சாரல்ல எலையே இல்லாம பூக்கள் மட்டுமே இருக்கற எலவ மரம் நெருப்பு பத்தி எரிவது போல இருக்கும். அவரு பிரிஞ்சு போன இந்தக் கொடுமையான கோடைக் காலத்தை விட அவரு ரொம்ப மனசு வலிமையானவருதான்
=====================================================================================தலைவி இரங்கு பத்து—9
அம்ம வாழி! தோழி! சிறியிலைக்
குறும்சினை வேம்பின் நறும்பழம் உணிய
வாவல் உகக்கும் மாலையும்
இன்றுகொல் தோழியவர் சென்ற நாட்டே.
[குறுஞ்சினை=குட்டையான கிளைகள்; நறும்பழம்=இனிய வாசனை உள்ள பழம்; உணிய=உண்ணுவதற்கு; வாவல்=வௌவால்; உகக்கும்=விரும்பும்]
அவன் வரேன்னு சொன்ன நாளும் வந்திடுச்சு. அவனும் வரவே இல்ல. அப்ப அவ தோழிகிட்டச் சொல்ற பாட்டு இது.
”தோழி! கேளு! சின்ன எலைகளும் குறுகின கெளைகளும், இருக்கற வேப்ப மரத்தோடப் பழத்தைத் தின்றதுக்கு வௌவால்லாம் ஒசரத்துல பறந்து திரியற மாலைப் பொழுதே அவரு போன நாட்டில வர்றதில்லியோ?”
====================================================================================
தலைவி இரங்கு பத்து—10
அம்ம வாழி! தோழி! காதலர்
உள்ளார் கொல்?நாம் அருள்உற் றனம்கொல்?
விட்டுச் சென்றனர் நம்மே;
தட்டைத் தீயின் ஊர்அலர் எழவே.
[உள்ளார்=நினைக்க மாட்டார்; அர்றனம்கொல்=அருளை இழந்து விட்டோமா? மருள்=மயக்கம்; தட்டை=திஉனை, கம்பு; அலர்=பழிச்சொல்]
அவன் திரும்பி வருவான்னு அவ பொறுத்துக்கிட்டிருந்தா; ஆனா அவன் சொன்ன காலமும் போச்சு; அவளால அவன் பிரிவைத் தாங்க முடியல. அப்ப அவ தோழிகிட்டச் சொல்ற பாட்டு இது.
”தோழி! கேளு! தெனைத் தட்டையில பத்திக்கிட்ட நெருப்பு வேகமா பரவற மாதிரி ஊராருங்க பேசறப் பழிச்சொல்லு வேகமா பரவறதுக்கு வழி வகுத்துட்டு அவரு நம்ம விட்டுட்டுப் பிரிஞ்சு போயிட்டாரு. அவரு நம்ம நெனக்க மாட்டாரோ? நாம அவரோட அன்பையும் அருளையும் எழந்துட்டோமோ?
====================================நிறைவு====================================