கவிஞர் பிறைசூடன்

This entry is part 1 of 8 in the series 10 பெப்ருவரி 2019

கவிஞர் பிறைசூடன் என்கிற திரைப்பட பாடலாசிரியரை பெரும்பாலான தமிழர்கள் அறிந்திருக்கமாட்டார்கள். அப்படியே அறிந்திருந்தாலும் ஃப்ராடுகளைப் போற்றிப் புகழுகிற, தலைமேல் தூக்கி வைத்து ஆடுகிற தமிழர்கள் அவருக்குரிய மரியாதையை இதுவரை அளிக்கவில்லை.

இளையராஜா, எம்.எஸ்.விஸ்வனாதன், ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற பிரபல இசையமைப்பாளர்கள் பணியாற்றிய, பல ஹிட்டான திரைப்படப் பாடல்களை எழுதியவர் கவிஞர் பிறைசூடன். உங்களுக்கு மிகவும் பிடித்ததொரு பாடலை அவர் எழுதியிருக்க வாய்ப்பிருக்கிறது என்றாலும் மிக ஆச்சரியமான வகையில் அதை எழுதியவர் பிறைசூடன் என்பதனை நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள் என்று உறுதியாகச் சொல்கிறேன்.

கண்ணதாசன், வாலி போன்றவர்களின் காலம் வேறு, இன்றைய காலம் வேறு. கவிதைக்கும், கவிஞர்களுக்கும் உண்மையான மதிப்பிருந்த காலம் அவர்களுடையது. இன்றைக்கு தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத, சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளாதவர்களை தமிழர்கள் பொருட்படுத்துவதில்லை. துரதிருஷ்டவசமாக பிறைசூடன் தன்னை முன்னிருத்தி டமாரமடித்துக் கொள்ளாததால் அவரை அதிகம்பேர் தெரிந்து கொள்ளவில்லை என்றாலும் கவிஞருக்கு இழப்பில்லை.

திரவிடப் புண்ணாக்குச் சிந்தனை கொண்ட குடும்பப் பின்னனியிலிருந்து, தனது கடின உழைப்பால் திரைப்படப் பாடலாசிரியாரக முன்னேறிய கவிஞர் நெற்றியில் நீறு துலங்காமல் வெளியில் செல்லாத ஆன்மீகர். வாழ்க்கை கடினமாயிருந்த ஆரம்ப காலத்தில் ஒரு பிரபல கவிஞரின் வீட்டிற்குப் பாட்டெழுதச் செல்கிறார். அப்போது இளவதுடையவராக இருந்த அந்த இசையமைப்பாளர் ஒரே திரைப்படத்தின் மூலம் உச்சத்திற்குச் சென்றிருந்தார். திறமையானவர் என்பதில் சந்தேகமில்லை.

குடும்பச் சூழ்நிலையாலோ அல்லது வேறு நிர்பந்தங்களாலோ அந்த இசையமைப்பாளரின் குடும்பம் வேறொரு மதத்திற்கு மதம் மாறியிருந்தது. அதனைக் குறித்து எனக்குப் பிரச்சினையில்லை. அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு. ஆனால் அந்த எண்ணம் எல்லார்க்கும் இருப்பதில்லை என்பதுதான் பிரச்சினை.

ஏதோ ஒரு பாடல் எழுதுவதற்கு அவர் வீட்டிற்கு வழக்கம் போல நெற்றியில் நீறு துலங்க சிவப்பழமாக பாடலெழுதச் செல்லும் கவிஞரை நோக்கி இசையமைப்பாளரின் தாய், “இந்த மாதிரி பொட்டெல்லாம் வெச்சிக்கிட்டு இங்க வரக்கூடாது” எனச் சொல்கிறார். இதனைக் கேட்டுக் கொண்டே அந்த இளம் இசையமைப்பாளர் ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடிக் கொண்டிருந்தார் என்கிறார் பிறைசூடன் (ஆதாரத்தோடுதான் சொல்கிறேன்).

இதனைக் கேட்கையில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதனையே இளையராஜாவா அல்லது எம்.எஸ்.வி.யோ சொல்லியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். சிரிப்புதான் வந்தது. இசை என்கிற மகாசமுத்திரத்தில் நீ இப்படி இருந்தால்தான் உனக்குப் பாட்டெழுத சந்தர்ப்பம் கொடுப்பேன் என்பது கீழ்மையின் உச்சகட்டம். ஆனால் அப்படித்தான் உலகம் இருந்திருக்கிறது. இருந்து கொண்டிருக்கிறது.

அப்படியான சிந்தனை கற்பனைகளைக் குறுக்கிவிடும். தனக்கென ஒரு வட்டம் வரைந்து அதிலேயே சுற்றிச் சுழல வைத்துவிடும். விடும் என்ன விடும்? அப்படித்தானே ஆகிப்போனது? அந்த ‘பிரபல’ இசையமைப்பாளரின் பாடல்களை ஒருதரம் கேட்டபிறகு மறுதரம் கேட்க யோசிக்க வேண்டியிருக்கிறது. இல்லையா? கட்டுப்பாடுகளற்ற காட்டாறுகளாக வாழ்ந்த, வாழும் எம்.எஸ்.வி.க்கும், இளையராஜாவும் இன்றைக்கல்ல என்றைக்கும் இனித்துக் கொண்டிருப்பார்கள்.

கலைஞர்கள் ஒருபோதும் தங்களை, ஜாதி, மத, இன உணர்வுகளுக்குள் குறுக்கிக் கொள்ளக்கூடாது. அப்படிக் குறுக்கிக் கொள்பவன் கலைஞனே அல்ல.

Series Navigation8. மகட்போக்கிய வழித் தாய் இரங்கு பத்து
narendran

பி எஸ் நரேந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *