அழுத்தம் நிரம்பிய அடங்கிய குரல்

“இதுகள் ஸ்கூல் விட்டா வீடு, வீடு விட்டா ஸ்கூல்னு
தான்னு கிடக்குகள். வெளில போய் மத்த குழந்தைக
ளோட விளையாடலாம்னு பாத்தா அதுக்கும் இவரே
பெரிய எதிரி. ராத்திரி எட்டு மணிக்கு குடிச்சுட்டு வந்து
மாடிப்படில வாயிலெடுக்கறதும், வாசல்ல வந்து மயங்கி
விழுந்து கிடக்கறதும் மத்த குழந்தைகள் பாக்காமலா இருக்கா? மறுநாள் ஒவ்வொண்ணும் இதுகளைக் கேலி பண்றதே பெரிய விளையாட்டா எடுத்துண்டு.. எனக்குத்தான் பகவான்
நரகத்திலே விழுந்து கிடன்னு தலேல எழுதி அனுப்பிச்
சிட்டான், இந்த புஷ்பங்கள்எதுக்கு புழுதில கிடந்து புரளணும்?”

வாசல் திண்ணையில் ராமாமிர்தம் உட்கார்ந்திருந்தார்.மாலை வெய்யில் இறங்குமுகத் தண்மையை வெளியுலகு எங்கும் பரப்பியிருந்தது. முகத்தில் அடித்த ஒளிக்கற்றைகளின் ஜொலிப்பில் அவரது முகம் பளபளத்தது. வெள்ளை வெளேரென்று முகம். அதற்காக சுண்ணாம்பு வெள்ளை இல்லை. லேசான ரத்த ஓட்டம் பதிந்த ரோஜாப்பூ வெள்ளை. தலையில் அடர்த்தியாக இருந்த வெள்ளி மயிர் காற்றில் ஆடிற்று. புருவங்களிலும் அந்த வெள்ளி ஒட்டிக் கொண்டு பூனைக்
கண்களைத் தெளிவாகக் காட்டின. நல்ல உயரம். அவ்வளவாக மடங்காமல் நின்ற உடல். முந்தின தினம் வயல் காட்டிலிருந்து மேலே ஏறி ரயில் பாதையைக் கடக்கும் சமயம் கரடு முரடாய் வழி இருக்கிறதே என்று அவரது கையை அங்கிருந்த இளைஞன் ஒருவன் உதவும் பொருட்டுப் பற்றினான்.”நான் ஒண்ணும் நீ நினைக்கிற மாதிரி கெழவன் இல்லை” என்று கையை உதறினார். அறுபது வயது இளைஞர். அவன் சிரித்துக் கொண்டே போய் விட்டான்.

அவர் முந்தின இரவுதான் தில்லியிலிருந்து வந்து நண்பரின் வீட்டில் தங்கியிருந்தார். காலையில் மீனாட்சி அம்மன் கோயிலில் சிற்பங்களின் முன்னே மணிக் கணக்கில் நின்று, வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். தில்லியில் அவர் மாதம் ஒரு முறை வரும் பிரபல ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இருந்தார். கலை இலக்கியப் பகுதிகளுக்கான பக்கங்கள் அவரது மேற்பார்வையில் வந்தன. நம்பிராஜனை அன்று அவர் பேட்டி எடுப்பதாக இருந்தது.
நடந்தே போகலாமா என்று நினைத்தார். அவர் தங்கியிருந்த இடத்துக்குப் பத்து நிமிஷத்துக்கு ஒரு பஸ் பஸ் ஸ்டான்ட் போவதற்கு வரும். போய் இறங்கி அங்கிருந்து நம்பிராஜன் வீட்டுக்குப் போய் விடலாம் என்று தீர்மானித்தார்.

கிளம்பும் போது காற்சட்டைக்குள் கர்சீப்பையும் ரப்பர் பாண்ட் சுற்றி
யிருந்த கட்டையும் எடுத்து வைத்துக் கொண்டார். அவர் வசந்த நகர் பஸ் ஸ்டாப்பை நெருங்கும் போது ஒரு பஸ் வந்தது. ஏறிக் கொண்டார்.. உள்ளே ஒரே பெண்கள் கூட்டம். ஒரு மாறுதலைப் போல் ஆண்கள் சீட்டுகளை பெண்கள் அபகரித்திருந்தார்கள். புதுப் புடவைகளின் வித்தியாசமான மணம், மதுரை மல்லிகைப் பூவின் வாசனை.
நவராத்திரி வெள்ளியென்று கோயிலுக்குப் போகும் கூட்டம்.

பஸ் ஸ்டாண்டை அடைந்து இறங்கி நடக்கும் போது இருபது வருஷத்துக்கு முன்பு இந்த ஊருக்கு வந்திருந்தது நினைவுக்கு வந்தது.. அப்ப இந்த ஊர் பெரிய கிராமம் போலத்தான் இருந்தது. இப்பவும் கூட பஸ்ஸில் வந்த பெண்களையெல்லாம் பார்த்தால் ஏதோ திருவிழாவுக்கு கிளம்பிப் போகிறவர்கள் மாதிரிதான் இருந்தார்கள்.
அவர்கள் முகத்தில் கூட ஒரு மாதிரி வெகுளித்தனம் பரவிக் கிடந்தது போல அவருக்குத் தோன்றியது.. இல்லை, ஒரு வேளை டில்லியில் காலை வாருவதையும் முதுகில் குத்துவதையும் ஒரு நாளைப் போல் பார்த்து அவர்களுடன் கை குலுக்கிக் கை குலுக்கித் தனக்கு இப்படி
யெல்லாம் வித்தியாசமாகத் தோன்றுகிறதோ என்னமோ? வாஸ்தவம். தூரத்துப் பச்சை என்று தனக்குள் சிரித்துக் கொண்டார்.

டவுன் ஹால் ரோடில் நடந்து சென்றார். ஆட்டோ, டெம்போ, குதிரை வண்டிகள் , சைக்கிள் ரிக் ஷாக்கள் , சைக்கிள்கள் , நாலைந்து மாடுகள், பிளாட்பாரக் கடைகள் ஆகிய இவற்றுக்கு நடுவில் இருந்த சாலையில்
ஜனங்கள் நீந்திச் சென்றார்கள். நடக்கும் போது திடீரென்று ராமாமிர்தம் நின்றுவிட்டார். அவர் பார்வை சென்ற திக்கில் எதிர்ப்பக்கம் ஒரு கடைக்கு முன் நின்றிருந்த ஒரு காருக்குள் இருந்த மனிதர், நாய்க்கு பிஸ்கட்டை ஊட்டிக் கொண்டிருந்தார். காருக்கு வெளியே ஒரு சிறுமி கையை நீட்டி இறைஞ்சிக் கொண்டிருந்தாள். அவர் நாய்க்கு போடும் பிஸ்கட்டு ஒன்றை நடுவில் அந்த சிறுமியைப் பார்த்து எறிய அவள் பாய்ந்து சென்று அதைப் பிடித்துத் தின்றாள். அவர் நின்ற சில நிமிஷங்களில், காரிலிருந்தவர் நாய்க்கு இரண்டு மூன்று வாய் ஊட்டுவதும் ஒரு பிஸ்கட்டை சிறுமியைப் பார்த்து எறிவதுமா
யிருந்தார். ஒன்றிரண்டு தடவை தரையில் விழுந்ததை அந்தச் சிறுமி எடுத்து ஊதி விட்டு வாயில் போட்டுக் கொண்டாள்.

ராமாமிர்தம் கைகளைப் பிசைந்தவாறே அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கடையிலிருந்து வெளியே வந்த ஒரு பெண்மணி காருக்குள் ஏறிக் கொண்டதும் கார் நகர்ந்தது. ராமாமிர்தம் எதிர்ப்புறத்துக்குச் சென்று அந்தச் சிறுமியை மூலையில் இருந்த ஒரு கடைக்குக் கூட்டிச் சென்று அவள் தின்பதற்கு சில தின்பண்டங்களை வாங்கிக் கொடுத்து விட்டு மேலே நடந்தார். அவர் பார்த்ததையே இப்போது நம்பிராஜன் பார்த்திருக்க வேண்டும்.. டவுன்ஹால் ரோடு உலக மேப்பில் வந்து விடும்

ஆறரை மணிக்கு நம்பிராஜனை அவரது வீட்டில் சந்திப்பதாக ஏற்பாடு. நம்பிராஜன் ஓவியங்கள் இந்தியக் கலையுலகில் தனித்த இடத்தைப் பெற்றிருந்தன. இரக்கத்தையும், பரிவையும், நேசத்தையும் பின் புலமாகக் கொண்டு வந்த அவரது ஓவியங்கள் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திருந்தன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவர் ஓவியங்கள் வெளியுலகுக்கு வருவது நின்று போயிருந்தது.

அவர் நம்பிராஜனைப் பார்த்தும் சில வருஷங்கள் ஆகியிருந்தன.இதற்கு முன்னால் சென்னையிலும் தில்லியிலும் சந்தித்திருக்கிறார். பெரிய மேதை. அதனால் கொஞ்சம் கிறுக்கும் கூட என்றுதான் அவர் கணித்திருந்தார். கடைசியாக டில்லிக்கு நம்பிராஜன் வந்திருந்தது பிர்லா நிறுவனம் ஒன்று நடத்தவிருக்கும் ஒரு கண்காட்சியில் அவர் பங்கு பெறும் சாத்தியத்தைப்பற்றி விவாதிக்கத்தான். அவருடைய திறமையும் அதன் விளைவாக இயல்பில் ஒட்டிக் கிடந்த கர்வமும் எல்லோராலும் ஒத்துக் கொள்ளப்படவில்லை என்பது அவரது
வாழ்க்கையின் துரதிர்ஷ்டம் என்று ராமாமிர்தம் நினைத்ததுண்டு…
அந்த முறை டில்லிக்கு வந்திருந்த நம்பிராஜனுக்கு அவரை அழைத்திருந்த நிறுவனமே தங்குமிட வசதியையும் செய்து கொடுத்திருந்தது. இந்தியா இண்டெர்நேஷனல் சென்டரில் நம்பிராஜனுக்கு ரூம் போடப்பட்டிருந்தது. கனாட் பிளேஸில் இருந்த நிறுவனத்தில் நம்பிராஜன் பத்து மணிக்கு இருக்க வேண்டிய தினத்தன்று ராமாமிர்தம் தன் கரோல்பாக் வீட்டிலிருந்து எட்டு மணிக்கே கிளம்பி லோதி காலனிக்குப் போய்விட்டார். அங்கிருந்து நம்பிராஜனை அழைத்துச் செல்வதாக ஏற்பாடு. அங்கே போனால் ரூமில் நம்பிராஜன் இல்லை. ரிசப்ஷனில் கேட்ட போது அவர் காலை நடைப்பயிற்சிக்கு சென்றிருப்பதாகவும் சாவியை ரிசப்ஷனில் கொடுத்து விட்டுச் சென்றதாகவும் கூறினார்கள்.

நேரம் ஆக ஆக நம்பிராஜன் வரும் சுவடே இல்லை. ராமாமிர்தம் பொறுமையை இழக்கத் தொடங்கிய சமயம் நம்பிராஜன் வந்தார்.

“ஸாரி ஸாரி ” என்றார் ராமாமிர்தத்திடம்.

“எங்கய்யா போனீர்? நான் ஒம்பது மணிலேர்ந்து தவியா தவிச்சிண்டிருக்கேன்.”

“கார்த்தாலே எட்டு மணிக்கு வாக்கிங் போனேன். வரச்சே ஒரு பெரிய மரத்துக்கு கீழே ஒரு குருவிக் குஞ்சு விழுந்து கிடந்தது. உசிருக்கு மன்னாடற மாதிரி தலையையும் உடம்பையும் அது அசைச்சுண்டிருக்க
மரத்து மேலே இருக்கற கூடு அறுந்து தொங்கற மாதிரி நின்னிண்டு இருக்கு. குஞ்சோட பக்கத்தில அஞ்சாறு பெரிய குருவிகள் கீ கீன்னு கத்திண்டு சுத்தி சுத்தி வரதுகள். ரோட்டுல விர் விர்னு பஸ்ஸும் காரும் பைக்குமா போய் வந்திண்டிருக்கு. நான் கையை அசைச்சு நிறுத்துன்னா ஒருத்தனும் நிக்கல. கிட்டத்தட்ட ஒரு மணி கழிச்சு ஒரு சைக்கிள்காரன் நின்னு என்னன்னு கேட்டான். அப்பறம் அவன் சைக்கிளை விட்டு இறங்கி நின்னு பாத்தான். மரத்துக்கு பக்கத்ல போனா பெரிய குருவிகள் எல்லாம் எங்கள திரும்பித் திரும்பி பாத்துண்டு குஞ்சுக்கு பக்கத்துல போய் நின்னுண்டு சத்தமா கத்தறதுகள். சரின்னு சைக்கிள்காரன் செல்போனை எடுத்து போன் பண்ணி எஸ் பி சி ஏ லேந்து வண்டி வந்ததுக்கு அப்புறம் நான் கிளம்பி வரேன்”.

இந்த இரக்கத்தைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்று ராமாமிர்தம் ஒரு கணம் சந்தேகம் ஏற்பட்டது.

“சரி, சரி கிளம்பும். அடிச்சு புரண்டுண்டு போனாதான் அங்க சமயத்துக்கு போய் நிக்க முடியும்” என்றார் அவர் நம்பிராஜனிடம்.

‘ கிறுக்கு பெரிய மேதைன்னா இருந்தா சமாளிச்சிடலாம். ஆனா பெரிய மேதை கிறுக்கா இருந்தா கஷ்டம்;” என்று அவருக்கு அப்போது
தோன்றிற்று…

அவர் டவுன்ஹால் ரோடு முடியுமிடத்தில் மேல மாசி வீதியைக் கடந்து நேரே நடந்தார்.. மேற்குக் கோபுரத்தை ஒட்டிச் செல்லும் சித்திரை வீதி வழியாகப் போய் கோபி அய்யங்கார் ஓட்டலை நெருங்கிய போது வெள்ளையப்பத்தின் , வெங்காய பஜ்ஜியின் மூக்கைத் துளைக்கும் வாசனை காற்றில் வந்தது. ஓட்டலைத் தாண்டி இடப் பக்கம் சென்ற சந்தில் நம்பிராஜனின் வீடு இருந்தது.

அவர் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். ஆறரைக்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன. இரவு காதலுடன் பொழுதை அணைத்துக் கொண்டு உள்ளே வந்தது. சாலை விளக்குகள் பிரகாசமாக எரியத் தொடங்கியிருந்தன.நம்பிராஜனின் வீடு இரு மாடிக் கட்டிடத்தில் இருந்தது. பழைய கட்டிடம். முதல் மாடியில் இருந்த இரண்டு போர்ஷன்களில் ஒன்றில் அவர் குடியிருந்தார்.

ராமாமிர்தம் அந்தக் கட்டிடத்துக்குள் நுழைந்து இடது பக்கமிருந்த படிக்கட்டில் ஏறிச் சென்றார். விளக்குகளற்ற படிகளில் சற்று சிரமத்துடன்தான் போக முடிந்தது. ஒருவித துர்நாற்றம் காற்றில் பரவியிருந்தது. சரியான பராமரிப்பு இல்லாத இடத்தின் நாற்றம்.

நம்பிராஜனின் வீட்டுக் கதவு சார்த்தியிருந்தது சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது. விளக்கு வைக்கிற நேரத்தில்..?

ராமாமிர்தம் கதவைத் தட்டினார்,

“யாரு?” என்று உள்ளிருந்து குரல் வந்த சில வினாடிகள் கழித்து கதவு திறந்தது . ஸ்கூல் யூனிபாரமுடன் ஒரு சிறுமி நின்றாள். அவளுக்கு ஏழெட்டு வயதிருக்கலாம். அவளுக்குப் பின்னால் ஐந்தாறு வயது மதிக்கத் தக்க ஒரு சிறுவன்.

“நம்பிராஜன் ஸார் வீடு இதானே?” என்று அவளிடம் சிரித்துக் கொண்டே ராமாமிர்தம் கேட்டார்.

அவள் “ஆமா. நீங்க யாரு?” என்று கேட்டாள்.

உள்ளேயிருந்து “யாருடி கங்கா?” என்று ஒரு பெண்மணியின் குரல் கேட்டது.

“அம்மா, யாரோ அப்பாவ தேடிண்டு வந்திருக்கா” என்று குதித்துக் கொண்டே அந்தச் சிறுவன் உள்ளே சென்றான்.

உள்ளேயிருந்து நம்பிராஜனின் மனைவி வந்தாள். நாற்பது வயதிருக்கலாம். உள்ளே வேலை பார்த்ததால் நெற்றியில் வியர்வை மணிகள் படர்ந்திருந்தன. ஒரு காலத்தில் எவரையும் ஒரு முறையாவது திரும்பிப் பார்க்க வைக்கும் அழகில் அவள் இருந்திருப்பாள் என்று நினைத்தார். அணிந்திருந்த சாயம் எகிறிய புடைவையில் கையைத் துடைத்துக் கொண்டே வந்தாள்.

“நா ராமாமிர்தம். டில்லிலேந்து வந்திருக்கேன்.” என்று தான் வேலை பார்க்கும் பத்திரிகையின் பெயரைச் சொன்னார். அவள் முகம் சட்டென்று அடையாளம் கண்டு கொண்ட வெளிச்சத்தைக் காண்பித்தது. “ஆறரைக்கு நம்பிராஜன் வரச் சொல்லியிருந்தார்” என்றார் ராமாமிர்தம்.

“வாங்கோ. வாங்கோ. உள்ள வந்து உட்காருங்கோ.” என்று அழைத்தாள். சிறிய ஹாலில் இரண்டு நாற்காலிகள் இருந்தன. ஒன்றில் உட்கார்ந்து கொண்டார். ஒளி தர மறுப்பது போல விளக்கு மங்கலாக எரிந்தது. இருபத்தி ஐந்து வால்ட் பல்பாக இருக்கும்..சுவர்களில் வண்ணம் அழிந்து காரை உதிர்ந்து கிடந்தது. தரையில் இரண்டு பழைய ஸ்கூல் பைகள் கிடந்தன. படிக்கட்டில் வரும் போது தெரிந்த அழுக்கும் வாசமும் இங்கும் இருந்தன.

உள்ளே சென்று தம்ளரில் நீர் கொண்டு வந்தாள்.

“காபி?” என்று கேட்டாள். அவர் மறுத்தார். அவள் வற்புறுத்தவில்லை.

குழந்தைகள் இரண்டும் அவளுக்கு அருகில் நின்றன.

“சாயங்காலம் ஆறரைக்கா வரச் சொன்னார்?” என்று அவள் ஆச்சரியத்துடன் கேட்டாள்.

ராமாமிர்தம் அவளிடம் “நான் நாளைக்கு கார்த்தால மெட்றாஸ் போயிட்டு அங்கேர்ந்து டில்லிக்கு சாயங்காலம் ஃப்ளைட் பிடிக்கணும். அதனால அவர்கிட்டே இன்னிக்கு சாயங்காலம் வரேன்னேன். எங்களோட பத்திரிகைல அவர் இன்டெர்வியு வரணும்னு நான் இங்க வந்தேன்” என்றார்.

“அவரை யாரும் சாயங்காலம் பாக்க முடியாதே” என்று சற்றுத் தயங்கியபடி கூறினாள். “ஆனால் பாவம், உங்களுக்கு விஷயம் தெரியாது, நம்பி வந்துட்டேள்.”

“அப்படியா? ஸாரி, அடுத்த தடவை வரப்போ சரியா கேட்டுண்டு வரேன்” என்று ராமாமிர்தம் சிரித்தபடி கூறினார்.

அவள் சிரிக்கவில்லை.

“அவர் இங்க வர டயத்துக்கு உங்களாலே வர முடியாது” என்றாள்.

அவர் சற்றுத் திடுக்கிட்டு அவளைப் பார்த்தார்.

அவள் குழந்தைகளைப் பார்த்தாள். “கங்கா, நீ போய் மாடியாத்து மாமிய ரெடியா இருக்கச் சொல்லு. சின்னவனையும் கூட்டிண்டு போ. நான் இவாளோட பேசி அனுப்பிச்சிட்டு வரேன். நாம அப்புறமா சேர்ந்து கோயிலுக்கு போலாம்” என்றாள். குழந்தைகள் இரண்டும் வெளியே சென்றன.

“நா உங்கள முன்ன பின்ன பாத்ததில்லே. டில்லில இருக்கேள், பெரிய வேல, அவருக்கு ஸ்நேகம்னு எனக்கு தெரியும்.. வயசானவர் நீங்க. ஆனா உங்களை இந்த மனுஷன் இப்படி அலைக்கழிச்சிருக்காரேன்னு எனக்கு பதர்றது. வாய விட்டு சொல்லிடறேன். நீங்க என்னிக்கு வந்தாலும் அவர் பேச்சை கேட்டு அவரை பாக்க முடியும்னு எனக்கு தோணலை. இப்ப எங்க விழுந்து கெடக்காரோ எவளோட இருக்காரோ தெரியாது. நான் இப்படி பேசறது எனக்கே அவமானமா இருக்கணும். ஆனா இந்த நாலஞ்சு வருஷத்துல இருந்த மான அவமானமெல்லாம் காத்துல பறந்து போயாச்சு. அக்கம் பக்கம், சினேகிதா, மளிகைக்
காரன்னு நேர பாக்கறச்சே பரிதாபமா பாப்பா. பின்னாலே என்னவெல்லாமோ பேசுவா. இந்தக் குழந்தைகளுக்கோசரம் உசிரே வச்சுண்டு இருக்கேன். இப்ப கூட மாடியாத்துக்கு மனசே இல்லாமதான் ரெண்டும் போயிருக்கு. இருக்கிறதிலேயே கொஞ்சம் நல்ல மனசுக்காரி அந்தாத்து மாமி. அது இன்னும் எவ்வளவு நாளைக்கோ?” என்று நிறுத்தினாள்

என்ன சொல்வதென்று தெரியாதவராக ராமாமிர்தம் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவள் மறுபடியும் பேசத் தொடங்கினாள். இன்று எல்லாவற்றையும் கொட்டித் தள்ளி விட வேண்டும் என்று தீர்மானித்தவளைப் போல.”சாயந்திரம் ஆறு மணியாரச்சே அது ஏன் அப்படியே கார்த்தால ஆறு மணியா ஆயிடக் கூடாதுன்னு நெஞ்சு கிடந்தது அடிச்சுக்கும்.ஒரு நாள் ஒரு பொழுது கல்யாணம் கார்த்திகைன்னு சொந்தக்காரா ஜனத்தையோ சிநேகிதாளையோ போய்ப் பார்த்தோம்னு இந்த பதினஞ்சு வருஷத்திலே நடந்ததே இல்லை. அப்பிடி போறதுக்காணும் ட்ரெயின் டிக்கட் எடுக்கணும், போய் ஓதி இடணும்னு செலவு இருக்குன்னு தள்ளிப் போட சாக்கு சொல்லிக்கலாம். இந்த குழந்தைகள் ஸ்கூல்ல ஏதாவது பேரன்ட்ஸ் டே , ஆண்டு விழான்னு கூப்பிட்டா அதுங்க மூஞ்சிக்காவது நகர்ந்தோம்னு ஒரு பேச்சு? அதுகள் மூஞ்சியைத் தூக்கி வச்சுண்டோ, இல்ல தாடையைப் பிடிச்சு கெஞ்சிண்டோ கூப்பிட்டாலும் ‘ நோ ‘தான். ஆறு மணிக்குதான் கைகால் எல்லாம் பர பரன்னு ஆட ஆரமிச்சுடுமே.”

அவள் குரல் அடங்கியது போல இருந்தாலும் அதில் அழுத்தம் மிகுந்திருந்தது.

“இதுகள் ஸ்கூல் விட்டா வீடு, வீடு விட்டா ஸ்கூல்னுதான்னு
கிடக்குகள். வெளில போய் மத்த குழந்தைகளோட விளையாடலாம்னு பாத்தா அதுக்கும் இவரே பெரிய எதிரி. ராத்திரி எட்டு மணிக்கு குடிச்சுட்டு வந்து மாடிப் படில வாயிலெடுக்கறதும், வாசல்ல வந்து மயங்கி விழுந்து கிடக்கறதும் மத்த குழந்தைகள் பாக்காமலா இருக்கா? மறுநாள் ஒவ்வொண்ணும் இதுகளைக் கேலி பண்றதே பெரிய விளையாட்டா எடுத்துண்டு.. எனக்குத்தான் பகவான் நரகத்திலே விழுந்து கிடன்னு தலேல எழுதி அனுப்பிச்சிட்டான், இந்த புஷ்பங்கள் எதுக்கு புழுதில கிடந்து புரளணும்?

ராமாமிருதத்தின் கைகள் ஒன்றையொன்று பிசைந்து கொண்டிருந்தன..

அவள் கண்கலங்கியபடி “உலகம் பூரா பெரிய ஆர்ட்டிஸ்டுன்னு புகழறா. அவர் வரைஞ்ச படத்துல பரிவு இருக்கு பாசம் இருக்கு லவ்வு இருக்கு எரக்கம் இருக்குன்னு பேசறா. எழுதறா. போட்டோ போடறா. பத்தி பத்தியா எழுதறா. ரொம்ப கேவலமான விஷயம் என்னன்னா ‘அவர் எனக்கு ரொம்பப் பழக்கம், சிநேகிதர்’னு ஒருத்தன் இந்த ஆள் குடிச்சிட்டு விழுந்து கெடக்கறதும், கூத்தியாளோட படுத்துண்டு கிடக்கறதும் அவனை பெரிய கலைஞனா காமிக்கிறதுன்னு சொல்லிண்டு அலையறான். அவன் தம்பியோ அண்ணனோ இந்த மாதிரி நாறிண்டு தெருவுல கெடந்தா இப்படிச் சொல்லுவானா? ” என்று குமுறினாள்.

அத்தருணம் எது பேசினாலும் எடுபடாத சூழலாயிருந்தது. அவள் புடைவைத் தலைப்பால் முகத்தைத் துடைத்து விட்டு புன்னகை செய்ய முயன்றாள்.

“என்னென்னமோ பேசிட்டேன். ஏன்னு தெரியல. உங்களப் பாத்ததும் பேசணும் போல இருந்தது. தப்பா பேசிருந்தா மன்னிச்சுக்கணும்” என்றாள்.

ராமாமிர்தம் நாற்காலியை விட்டு எழுந்தார்.

“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலம்மா. இப்பிடி ஒரு பக்கம் நம்பிராஜனுக்கு இருக்குங்கிறதே எனக்கு பெரிய ஷாக்கா இருக்கு. ஒருத்தர் கஷ்டத்தை இன்னொருத்தர் வாங்கிக்க முடியாதபடின்னா நம்மள படைச்சிருக்கான்? நான் ஈச்வரன வேண்டிக்கறதெல்லாம் நீயும் குழந்தைகளும் ரொம்ப நாள் இந்த இருட்டுல தடுமாறாம இருக்க அவன் கண் தொறக்கணும்னுதான். நம்பிராஜனை பார்த்தாகூட இன்டெர்வியு எடுக்க முடியாது என்னாலேன்னுதான் எனக்குப் படறது. நான் வரட்டுமா?’ என்று விடை பெற்றுக் கொண்டார்.

கீழே இறங்கும் போது இருளும் நாற்றமும் நிரம்பிய படிகளைப் பற்றிய பிரக்ஞை அற்றவர் போல வேகமாக இறங்கினார். தெருவில் அதே வேகத்துடன் யாரோ அவரை விரட்டிக் கொண்டு வருவது போலவும் அவர் தப்பிக்க முயலுவது போலவும். எதிரில் வருபவர்களை இடித்துக் கொண்டு சென்றார். முகத்தில் பொங்கும் வியர்வையைத் துடைக்க அவர் கால்சட்டைப் பைக்குள் இருந்து கர்சீப்பை எடுக்கும்போது ரூபாய்க் கட்டு விரல்களை இடித்தது. நம்பிராஜனைப் பேட்டி கண்டபின் சன்மானமாகக் கொடுக்க இருபதாயிரம் ரூபாய் கொண்டு வந்திருந்தார். அதை அவளிடம் கொடுத்திருக்கலாம்..ஆனால் அழுத்தம் நிரம்பிய அடங்கிய குரல் அதை ஒரு போதும் ஏற்காது மறுத்திருக்கும் என்று புழுங்கியபடியே வேகமாக நடந்து சென்றார்.

author

ஸிந்துஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *