முதுவை ஹிதாயத்
வந்தவாசி.மார்ச்.14. பரமக்குடி அரசு கலைக்கல்லூரியும் ‘வளரி’ கவிதை இதழும் இணைந்து
நடத்திய கவிப்பேராசான் மீரா விழாவில், தமிழில் ஹைக்கூ கவிதைகள்
குறித்த தொடர் செயல்பாடுகளுக்காக கவிஞர் மு.முருகேஷ்-க்கு கவிப்பேராசான் மீரா விருதுவழங்கப்பட்டது.
கடந்த 10 ஆண்டுகளாக மானாமதுரையிலிருந்து வெளிவரும் ‘வளரி’ கவிதை இதழ்
சார்பில், தமிழ்ப் படைப்புவெளியில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளைச்செய்துவரும் படைப்பாளிகளுக்கு கவிப்பேராசான் மீரா விருது வழங்கப்பட்டு வருகிறது.கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஜப்பானிய ஹைக்கூ வடிவக் கவிதைகளைத் தமிழில் பரவலாக அறிமுகம் செய்ததோடு, இளைய படைப்பாளிகளையும் ஒருங்கிணைத்து,அதனை ஒரு இயக்கம்போல் தமிழகம் முழுவதும் கொண்டுசென்ற பணிகளைப் பாராட்டி,
கவிஞர் மு.முருகேஷ்-க்கு இந்த ஆண்டு கவிப்பேராசான் மீரா விருது வழங்கப்பட்டது.
இந்த விருது வழங்கும் விழா பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் கடந்த திங்களன்று
(மார்ச்-11) நடைபெற்றது. இவ்விழாவிற்கு, தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மா.மணிமாறன்
தலைமையேற்றார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் சு.செல்வகுமாரன் அனைவரையும்
வரவேற்றார்.
எழுத்தாளர் சந்திரகாந்தன், கவிஞர் மு.முருகேஷூக்கு கவிப்பேராசான் மீரா விருதினை
வழங்கி, பாராட்டிப் பேசினார். விழாவில், ‘வளரி’ இதழாசிரியர் அருணாசுந்தர்ராசன், வழக்கறிஞர் தி.குமார், கவிஞர் இரா.சீ.இலட்சுமி ஆகியோர் உரையாற்றினார்.
கவிப்பேராசான் மீரா விருதினைப் பெற்ற கவிஞர் மு.முருகேஷ், வந்தவாசி நூலக
வாசகர் வட்டத்தின் தலைவராகவும், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின்
ஆலோசகராகவும் இருந்து சமூகம், கல்வி மற்றும் இலக்கியப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதுவரை 42-க்கும் மேற்பட்ட கதை, கவிதை , கட்டுரை, சிறுவர்
இலக்கியம், விமர்சன நூல்களை எழுதியுள்ள இவர், தனது நூல்களுக்காக25-க்கும் மேற்பட்ட பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவரது படைப்புகள் மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில்
மொழிபெயர்க்கப்பட்டு நூல்களாகவும் வெளிவந்துள்ளன. இலக்கிய மாநாடுகளில்
உரையாற்றுவதற்காக இலங்கை, சிங்கப்பூர், குவைத், மலேசியா ஆகிய நாடுகளிலுள்ள
அமைப்புகளின் அழைப்பின் பேரில் சென்று, உரையாற்றி வந்துள்ளார். மத்திய அரசின்
இலக்கிய அமைப்பான சாகித்திய அகாடெமி ஏற்பாட்டில், மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்,
கர்நாடகாவிலுள்ள மைசூரு, ஆந்திர மாநிலம் விஜயவாடா ஆகிய இடங்களில் நடைபெற்ற
தேசிய அளவிலான இலக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்றுள்ளார்.
இவரது படைப்புகளை இதுவரை 6 கல்லூரி மாணவர்கள் இளமுனைவர் பட்ட ஆய்வும்,
3 மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வும் செய்துள்ளனர். இவரது கவிதைகள் மதுரை காமராஜர்
பல்கலைக் கழக பாடத்திட்டத்திலும், விருதுநகர் வன்னியப் பெருமாள் மகளிர் கல்லூரிப்
பாடத்திட்டத்திலும், சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி பாடத்திட்டத்திலும்
இடம் பெற்றுள்ளன.
சமச்சீர் பாடத்திட்டக் குழுவில் இடம்பெற்று, 1-ஆம் வகுப்பு மற்றும் 6-ஆம் வகுப்பு பாட நூல்கள் உருவாக்கத்தில் பங்களிப்பு செய்துள்ளார். 2010- ஆம் ஆண்டு வெளியான இவரது ‘குழந்தைகள்
சிறுகதைகள்’ எனும் நூல், தமிழக அரசின் ’புத்தகப் பூங்கொத்து’ எனும் திட்டத்தில் தேர்வாகி,
தமிழகத்திலுள்ள 32 ஆயிரம் அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிறைவாக, உதவிப் பேராசிரியர் ச.இராமகிருட்டிணன் நன்றி கூறினார்.
இணைப்பு: படக்குறிப்பும் படமும்
பரமக்குடி அரசு கலைக்கல்லூரியும் ‘வளரி’ இதழும் இணைந்து
நடத்திய கவிப்பேராசான் மீரா விழாவில், தமிழில் ஹைக்கூ கவிதைகள்
குறித்த தொடர் செயல்பாடுகளுக்காக கவிஞர் மு.முருகேஷ்-க்கு கவிப்பேராசான்
மீரா விருதினை எழுத்தாளர் சந்திரகாந்தன் வழங்கினார். அருகில், (இடமிருந்து)கவிஞர் இரா.சீ.இலட்சுமி, வழக்கறிஞர் தி.குமார், தமிழ்த்துறைத் தலைவர் முனைவர்மா.மணிமாறன், ’வளரி’ ஆசிரியர் அருணாசுந்தர்ராசன், உதவிப் பேராசிரியர் சு.செல்வகுமாரன் ஆகியோர் உள்ளனர்.
- இலக்கியவாதிகள் இரண்டாந்தரப் பிரஜைகளா?
- புகுஷிமா விபத்துக்குப் பிறகு ஏழாண்டுகளில் உலக அணு மின்சக்தி இயக்கப் பேரவை வடித்த மேம்பாட்டு நெறிப்பாடுகள்
- ஜனநாயகம் – தமிழச்சி – குறிப்புகள்
- பாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த இந்து தலித் அமைச்சர் ஜோகேந்திர மண்டலின் ராஜினாமா கடிதம் – 1
- பாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த இந்து தலித் அமைச்சர் ஜோகேந்திர மண்டலின் ராஜினாமா கடிதம் – பகுதி 2
- பாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த இந்து தலித் அமைச்சர் ஜோகேந்திர மண்டலின் ராஜினாமா கடிதம் – 3 – இறுதி பகுதி
- கவிஞர் மு.முருகேஷ்-க்கு கவிப்பேராசான் மீரா விருது வழங்கப்பட்டது
- தமிழ் நுட்பம் – 10 பங்குச்சந்தையில் பாட்கள்.