அரிய செய்திகளின் சுரங்கம் – [“ராஜ்ஜா” எழுதிய “புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டரங்களும்” நூலை முன்வைத்து]

This entry is part 6 of 7 in the series 14 ஏப்ரல் 2019

  வளவ. துரையன் 

நம்முடைய பாரம்பரியமே கதை சொல்வதுதான். வியாசரோ, வால்மீகியோ, இளங்கோவோ, சாத்தனோ யாராக இருந்தாலும் சிறந்த கதைகளைச் சொல்லித்தான் வாழ்வைச் செம்மையாக்க முயற்சி செய்தார்கள். ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்த வடிவங்கள் வேண்டுமானால் வெவ்வேறு வகைகளில் இருக்கலாம். இந்நூலின் கட்டுரைகளும் அப்படித்தான். ஒவ்வொன்றிலும் பல கதைகள் உள்ளன. சில கட்டுரைகள் சிரிக்கச்செய்கின்றன. சில சிந்திக்க வைக்கின்றன. சில சிரித்துக் கொண்டே சிந்திக்க வைக்கின்றன. சிரித்தாலே நோய் தீர்ந்துவிடும் என்று அன்த்துவன் தெலா சால் என்பவர் பதினோராம் லூயியின் மனநோயைத் தீர்க்கப் பலான நகைச்சுவைக் கதைகள் சொல்லி வைத்ததிலிருந்து அறிய முடிகிறது.

இந்நூலில் பல நாட்டுப்புறக் கதைகளை ஆங்காங்கே காண முடிகிறது. நாட்டுப் புறக்கதைகள் நமக்கு வழிகாட்டிகள் என்று ராஜ்ஜா அழுத்தமாகக் கூறுகிறார். “இன்றையத் தொலைக்காட்சியில் திணறித் திணறிச் சொல்லப்படும் கவைக்கு உதவாத நீண்ட தொடர்கதைகள் அல்ல அவை” என்று ராஜ்ஜா எழுதும்போது அதில் உள்ள எள்ளலும் அங்கதமும் உண்மையே என்பதை நாம் உணர முடிகிறது.

இந்தியாவிலிருந்து வெளிவரும் ஆங்கில இதழ்கள் எல்லாவற்றையும் அந்தந்த இதழ்கள் பற்றிய ஒரு சிறு குறிப்புடன் ராஜ்ஜா அறிமுகம் செய்வது வரவேற்கக் கூடிய ஒன்று. இந்திய ஆங்கில இலக்கியத்தில் முதல் இதழ் புதுச்சேரியிலிருந்து வெளிவந்த ‘ஆர்யா’

[arya]

என்பது நாம் அறியாத செய்தி. மேலும் ஸ்ரீ அரவிந்தர் அதைத்தம் நாற்பத்து இரண்டாம் பிறந்த நாளில் [15-05-1914] தொடங்கி வெளியிட்டிருக்கிறார். எழுத்தாளர்களின் தனிமை குறித்து ஒரு கட்டுரை இருக்கிறது. நகைச்சுவையோடு கூடிய கட்டுரையானாலும் அதில் உள்ள செய்திகள் நம் சிந்தனையை அதிகம் தூண்டுகின்றன. 28 எழுத்தாளர்கள் தத்தம் தனிமையைப் பற்றி ஒளிவு மறைவின்றிப் பேசி இருக்கிறார்கள். அதில் ராஜ்ஜா சொல்வது மிக முக்கியமான ஒன்று. அவர் சொல்கிறார்.

“தனிமை கூட கவிதையைப் போலத்தான்; ஒவ்வொரு வாசகனும் ஒவ்வொரு விதமாகப் புரிந்து கொள்வதைப் போலத்தான். எல்லா வாசகர்களுக்கும் ஒரு கவிதை ஒரே மாதிரியான பொருள் கொடுத்தால் அது எப்படி கவிதை ஆகும்?” இன்றைய சில நவீன கவிதைகளில் இருண்மை அதிகம் என நினைக்கும்போது இக்கூற்று முக்கியமானதாகப்படுகிறது. மிகக்கனமான கருத்துகள் கூட மிகவும் புரிந்துகொள்கிற மொழியில் சொல்லப்பட்டிருப்பது இக்கட்டுரைகளின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று. அதுவும் நகைச்சுவையாகப் போய்க்கொண்டிருக்கும்போதே பட்டென்று செவியில் அறைவது போல் கூறும் கருத்து மனத்தைச் சரியான முறையில் தாக்கி  நிலைபெறுகிறது.

“பணக்காரர்கள் தலையின் மூலமாகவும், ஏழைகள் வயிற்றிலிருந்தும் சிந்திக்கிறார்கள்” எனும் கருத்து என்றும் மாறாத ஒன்று. அதைப்போகிற போக்கில் மொழிபெயர்ப்பு எவ்வளவு முக்கியம் என்று கூற வரும்போது ராஜ்ஜா சொல்லிச் செல்கிறார்.  உண்மையில் ஏழைகள் வயிற்றிலிருந்து சிந்தித்ததன் விளைவே பிரெஞ்சுப் புரட்சி, ருஷ்யப் புரட்சி நம் சுதந்திரப் போராட்டம் எல்லாமே. அதனால்தான் ஏழைகளின் வயிற்றை நிரப்ப இலவசங்களைக் கொடுத்து அரசாங்கம் அவர்களை அடிமையாகவே வைத்துக் கொண்டிருக்கிறது.

ஒரு படைப்பைப் படித்தால் புது செய்தி, அல்லது புது அனுபவம் கிடைக்கவேண்டும். அது இக்கட்டுரைகள்  எல்லாவற்றிலுமே கிடைக்கிறது. குறிப்பாக ஹெச்.ஜி.வெல்ஸ் பற்றிய கட்டுரையைச் சொல்லலாம். பிற்காலத்தில் என்னென்ன கண்டுபிடிப்புகள் வரும் என்பதை அவர் தம் கற்பனையில் ஊகித்து முன் கூட்டியே எழுதியுள்ளார் என்பது வியப்பான ஒன்றாகும். அவையும் நடந்திருக்கின்றன என எண்ணும்போது வெல்ஸ் அவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

இத்தனைக்கும் வெல்ஸ் ஒரு நாவலாசிரியர். அவர் தம் நாவல்களில் தானியங்கிக் கதவு, டி.வி.டி; வி.சி.ஆர்; எல்.சி.டிவி போன்றவை பின்னால் வரும் என்று நூற்றாண்டுகளுக்கு முன்னரே எழுதி உள்ளார். டி.வி ரிமோட் பற்றி 1903—ஆம் ஆண்டில் ‘தி லேண்ட் அயர்ன் கிளாட்ஸ்’ எனும் நாவலில் காட்டி உள்ளார். வெல்ஸ் எழுதிய நாவல்களை அவர் எந்த ஆண்டில் வெளியிட்டுள்ளார் என ராஜ்ஜா காட்டுவது கட்டுரைக்கு நம்பகத்தன்மை சேர்க்கிறது..

அலெக்சாண்டர் எங்கு சென்றாலும் அவருக்குக் காலை உணவே பல முட்டைகள்தானாம்; அவரது வீர்ர்களுக்கும் அப்படியே. அவர் காலையில் எழுந்ததுமே இடும் முதல் கட்டளையே “All eggs under the crate” என்பதுதானாம். அதைக் கொஞ்சம் வேகமாகச் சொன்னால் அலெக்சாண்டர் தி கிரேட் என்று ஒலிக்கும்.

அறிஞர் சாமுவேல் ஜான்சன் மிகவும் விரும்புவது கோழிக்கறியாம். முழுக்கோழி வறுவலை உணவகத்திலோ, அல்லது தன் வீட்டிலோ பார்த்து  விட்டால் அவர் நடனமாடத் தொடங்கி விடுவாரம் இப்படி நூலின் தலைப்புக் கட்டுரையில் ஆசிரியர் கூறுகிறார். இதன் மூலம் மூளை உழைப்பில் ஈடுபடுபவர்க்கே அதிக உணவு தேவைப்படுகிறது என்று உடற்கூறு வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனராம்.

“யார்தான் என்ன செய்ய முடியும்?” கட்டுரையில் பாரதி எழுதிய ஒரு நகைச்சுவைக் கதையை, மொழிபெயர்ப்பைப் பற்றிச் சொல்ல வரும்போது காட்டும் ராஜ்ஜா அக்கதையின் பெயரைக் குறிப்பிட மறந்து விட்டார். மாணவர்களின் கற்கும் திறனைவைத்து  அவர்களைக் கற்பூரம், கரித்துண்டு, வாழைமட்டை எனப் பிரிப்பதை நாம் அறிவோம். ஆனால் ’மிஷ்னா’ என்னும் இஸ்ரேல் கவிஞர் இப்படிக் கூறுகிறார். 

மாணவரிலே/

நான்குவகை; 

எல்லாவற்றையும்/

உறிந்து கொள்ளும்/

கடல் பஞ்சு;

ஒருவழி வாங்கி/

மறுவழி வெளியேற்றும்/

பெய்குழல்;

கள்ளைவிட்டு/

கப்பியைக்

கவ்வும் பன்னாடை;

கல்லைவிட்டு/

நெல்லைக் கவ்வும்/

சல்லடை

நாடுகள் பலதொலைவு ஆனாலும் எண்ணங்கள் ஒன்றாகச் சிந்தனையும் ஒன்றகத்தானே இருக்கிறது. ஆங்கிலப் பேராசிரியராக இருக்கும் ராஜ்ஜா அவர்களுக்கு இருக்கும் தீராத ஆசை ஒன்றும் ஓரிடத்தில் வெளிப்படுகிறது. நம்மைப் பற்றி நாமே எழுதி அதை நாமே படிப்பது என்ன பயன் என்று கேட்கிறார். அதை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்கிறார். அதை அவர் மொழியிலேயே பார்க்கலாம்.

”அதையும் ஆங்கில மொழியில்தான் செய்யணும். என்னால முடிஞ்சவரைக்கும் அதைச் செஞ்சுகிட்டுதான் இருக்கேன். ஆங்கிலமொழி அறிந்த பலரும் எனக்குத் தோள் கொடுத்தீங்கன்னா இந்தியத் தேரையும் தமிழ்த்தாயையும் சேர்த்து வெச்சு இழுத்துக்கிட்டு இமயமலையை இங்கிருந்தே தாண்டி விடலாம்”

உண்மைதான்; நம் ஞானத்தை நாமே பாராட்டிக்கொண்டிருப்பதைவிட மேனாட்டார் பாராட்ட வேண்டுமன்றோ? நாமும் தோள்கொடுப்போம்; பிறரையும் தோள் கொடுக்கச்  சொல்வோம்.

மொத்தத்தில் பலரும் அறிந்திராத அரிய செய்திகளின் சுரங்கம் இது என்று துணிந்து கூறலாம். நூலை நல்ல முறையில் வெளியிட்டுள்ள சந்தியா பதிப்பகத்தாருக்குப் பாராட்டுகள்.

[புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டாரங்களும்—ராஜ்ஜா—வெளியீடு: சந்தியா பதிப்பகம்; புது எண்:7; 53—ஆம் தெரு; 9-ஆம் அவென்யூ;  அஷோக் நகர்; சென்னை—600 083;  பேசி: 044-24896979—பக்: 160; விலை ரூ: 140]

Series Navigationதிமுக ஆதரவு என்னும் உளவியல் சிக்கல்.தமிழ் நுட்பம் 14 – திரைப்பட பின்னணி இசை
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *