இந்திய புதிய கல்விக்கொள்கை – ஓர் சிங்கப்பூர் ஒப்புநோக்கு – அத்தியாயம் ஒன்று

author
0 minutes, 2 seconds Read
This entry is part 3 of 12 in the series 4 ஆகஸ்ட் 2019


அழகர்சாமி சக்திவேல்

கல்வி முன்னேற்ற விசயத்தில், பிஜேபி எடுக்கும் பல்வேறு முயற்சிகளை நிச்சயம் பாராட்டியாகவேண்டும். முந்தைய ஆட்சியில் பிஜேபி கொண்டுவந்த சாத்தியா என்ற பாலியல் கல்வித்திட்டம், இப்போதைய பிஜேபி ஆட்சியில் கொண்டுவரப்படும் புதிய கல்விக் கொள்கை இவை இரண்டுமே பாராட்டுக்குரியவைகள். கூடவே உலக அரங்கில் இந்தியா பெருமையுடன் நடைபோட, நிச்சயம் பிஜேபியின் இந்தக் கல்விக்கொள்கை உதவி செய்யும். ஆனால், பொருளியல் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த, மொழிவேற்றுமைகள் நிறைந்த இந்தியாவுக்கு ஏற்றவாறு, பிஜேபி சொல்லும் கல்விக்கொள்கையில் நிச்சயம் சில மாற்றங்களும் தேவை. இது குறித்த ஒரு ஒப்புநோக்குக் கட்டுரையே எனது இந்தக் கட்டுரை.
முதலில் தற்போதைய இந்தியக்கல்வி, உலக அரங்கில் எந்த நிலையில் இருக்கிறது என்று பார்ப்போம். கணினி அறிவியலில் நான் இரண்டு முதுகலைப்பட்டங்கள் பெற்று இருக்கிறேன். ஒன்று சென்னைப் பல்கலைக்கழகம். இன்னொன்று சிங்கப்பூரில் இருக்கும் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம். இதில் சிங்கப்பூரில் இருக்கும் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், இந்த வருட உலகத்தரவரிசையில், 11வது இடத்தில் இருக்கிறது. ஆனால், இந்தியாவின் ஆகத்தலை சிறந்த கல்வி நிறுவனம் என்று சொல்லக்கூடிய ஐஐடி (Indian Institute Of Technology), 152-ஆவது இடத்தில் இருக்கிறது. இதுவே இப்படி என்றால் சென்னைப் பல்கலைக்கழகம் போன்றவை எந்த இடத்தில் இருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள். இது மட்டுமில்லை. இந்திய பாலர் பள்ளிக்கல்வி, ஆரம்பப் பள்ளிக்கல்வி, உயர்நிலைப் பள்ளிக்கல்வி போன்ற அனைத்துநிலைக் கல்விகளையும் ஒன்று சேர்த்தும் இன்னொரு உலகத்தரம் நிர்ணயிக்கப் படுகிறது. இந்த உலகத்தரத்தில், சிங்கப்பூர் தலைசிறந்த 20 நாடுகளுக்குள் வந்துவிடுகிறது. ஆனால் இந்தியாவோ, கிட்டத்தட்ட 200வது இடத்தில் இருக்கிறது. இது இந்தியாவிற்கு பெருமையா என்பதை நாம் யோசிக்கவேண்டும். இந்தக் குறைவை போக்க வருவதுதான் பிஜேபி கொண்டு வரும் புதியக் கல்விக்கொள்கை என்பது ஒரு நல்ல விசயம்தான்.
ஆனாலும், இந்தியாவின் வறுமைச் சூழலுக்கேற்ப, இந்த பிஜேபியின் கல்விக்கொள்கை சற்றே மெருகேற்றப்பட வேண்டும் என்பதும் ஒரு முக்கியமான விஷயம்தான்.

உலகக் கல்வித்தரம் என்ன சொல்கிறது
மாணவர்களுக்கான சிறந்த கல்வி என்று, உலகம் எதை நினைக்கிறது என்பதை சற்றே ஆராய்வோம். “பிள்ளைகளுக்கு கொடுக்கப்படும் கல்விமுறை என்பது, பிள்ளைகளுக்கு கொடுக்கப்படும் உணவுமுறை போன்றே இருக்கவேண்டும்.” இதுதான் உலகத்தரம் சொல்லவரும் செய்தியின் முக்கிய சாராம்சம் ஆகும். எல்லாப்பிள்ளைகளின் உணவுமுறையும் ஒரே மாதிரி இருக்காது. ஒரு பிள்ளைக்கு கீரை பிடிக்கும். இன்னொரு பிள்ளைக்கு பருப்பு பிடிக்கும். இது நமக்குத் தெரிந்ததுதான். ஆனால், இந்த இரண்டு பிள்ளைகளுக்கும், இரண்டு தட்டுக்கள் வைத்து, இரண்டிலும் பாதி கீரை, பாதி பருப்பு என்று போட்டு, இருவரும் அந்த இரண்டு உணவுகளையும் முழுமையாய்ச் சாப்பிடச் சொல்லி அடம் பிடிப்பதுதான், தற்போதைய இந்தியக்கல்விமுறை. மாறாய், கீரை பிடிக்கும் பிள்ளைக்கு, அதிகக் கீரை குறைந்த பருப்பும், பருப்பு பிடிக்கும் பிள்ளைக்கு அதிக பருப்பு குறைந்த கீரையும் தட்டில் இட்டு, சாப்பிடச் சொல்வதுதான் உலகம் எதிர்பார்க்கும் புதுக்கல்விமுறை. இன்னொரு முறையில் சொன்னால், கல்விக்கேற்ப, எல்லா மாணவர்களையும் பொதுவாய்த் தயார் செய்வது தற்போதைய இந்தியக் கல்விமுறை. மாறாய், ஒவ்வொரு மாணவனுக்கும் ஏற்ப கல்விமுறையே மாறிக்கொள்வதுதான் உலகம் எதிர்பார்க்கும் புதுக்கல்விமுறை. “Subjest based banding” என்று சொல்லக்கூடிய, “மாணவனுக்குப் பிடித்த கல்வியில் அவனை முன்னேற்றி, கூடவே அவனுக்கு பிடிக்காத அல்லது அவனுக்கு வராத கல்வியில், அடிப்படை அறிவை மட்டும் கொடுப்பதுதான் உலகம் எதிர்பார்க்கும் புதுக்கல்வி முறை.

உதாரணமாக, கணிதம் மற்றும் அறிவியலை எடுத்துக்கொள்வோம். அறிவியல் அடிப்படை நிலை, அறிவியல் உயர்ந்த நிலை என்ற இரண்டு நிலைகளும் ஒவ்வொரு பள்ளி வகுப்பிலும் இருக்கும். அதே போல கணிதம் அடிப்படை நிலை, கணிதம் உயர்ந்த நிலை என்ற இரண்டு நிலைகளும் ஒவ்வொரு பள்ளி வகுப்பிலும் இருக்கும். கணிதம் மற்றும் அறிவியல் இரண்டும் பிடித்த மாணவன், கணிதம் உயர்ந்த நிலை, அறிவியல் உயர்ந்த நிலை எடுத்துப் படிப்பான். கணிதம் பிடித்து, அறிவியல் பிடிக்காதவன் தனக்கு நன்கு வரும் கணிதத்தில் உயர்நிலையும், அறிவியலில் அடிப்படை நிலையும் எடுத்துப் படிப்பான். அறிவியல் பிடித்து கணிதம் பிடிக்காதவன், அறிவியல் உயர்நிலையும், கணிதம் அடிப்படை நிலையும் எடுத்துப் படிப்பான். “இந்த முறைதான், இந்தியக் கல்லூரிகளில் ஏற்கனவே இருக்கிறதே” என்று நீங்கள் கேட்கலாம். ஒரு மாணவன், தனது கல்லூரிக் காலம்வரை, தனக்குப் பிடிக்காத கல்வியில், தனது கவனத்தைத் தேவையில்லாமல் செலுத்தி, நேரத்தை விரயப்படுத்தி, கூடவே தனக்கு மிகவும் பிடித்த கல்வியில் கவனம் செலுத்தமுடியாமல் போவதால், அந்த மாணவனுக்கு என்ன பலன், என்பது உலகம் நம் முன் வைக்கும் ஒரு முக்கியக்கேள்வி. ஆக, ஒருவன் எதில் திறமையாய் இருக்கிறானோ, அதில் மட்டும், அவனை அவன் ஆரம்பக்கல்வியில் இருந்து தயார் செய்வதுதான் உலகம் சொல்லும் புதுக் கல்விமுறை.

புதுக்கல்வி அடுக்குமுறை

சிங்கப்பூரின் தற்போதைய கல்விமுறை 3 + 6 + 4 (2) + 2  ஆகும். அதாவது, பாலர்கல்வி மூன்று வருடம், ஆரம்பக்கல்வி ஆறு வருடம், உயர்நிலைக்கல்வி நான்கு வருடம் (மெதுவாய்ப் படிக்க விரும்புவோருக்கு கூடுதலாக இரண்டு வருடம்), மேல்நிலைக்கல்வி இரண்டு வருடம் என்பதே சிங்கப்பூரின் கல்விமுறை. இந்தியாவின் புதியகல்வி முறை, கிட்டத்தட்ட இதே போன்ற, ஆனால் சற்றே மாறுபட்ட 5 + 3 + 3 + 4 கல்விமுறையாகும். அதாவது ஐந்துவருட பாலர்கல்வி (மூன்று வருட பாலர்கல்வியோடு சேர்த்த இரண்டுவருட ஆரம்பக்கல்வி), பின் இன்னும் மூன்று வருட ஆரம்பக்கல்வி, மூன்று வருட நடுநிலைக்கல்வி, இறுதியில் நான்கு வருட உயர்நிலைக்கல்வி என்பது இந்தியப்புதுக் கல்விமுறையின் நோக்கம். பாலர்கல்வி நீங்கலாக, மற்ற ஒவ்வொரு கல்வி அடுக்கைத் தாண்டும்போதும் ஒரு பொதுத்தேர்வை, சிங்கப்பூர் நடத்துகிறது. இன்னும் சொன்னப்போனால், சிங்கப்பூர் அதன் ஆரம்பக்கல்வி அடுக்கில், நான்காம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு என்று இரண்டுமுறை பொதுத் தேர்வு நடத்துகிறது. தேர்வின் முடிவில், மாணவர்களின் திறமை மட்டுமே மதிப்பிடப்படுவது இடுவதில்லை. மாறாய், மாணவர்களோடு, ஆசிரியர்களின் திறமையும் மதிப்பிடப்படுகிறது. அந்த அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரும், மாணவர்களின் பெற்றோர் மற்றும் மாணவர்களின் மூலம், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் திறமை குறித்து அளவிட, கல்விமுறை வழி செய்கிறது. ஆக, உலகத்தரத்தை எட்ட, மாணவர்கள் மட்டுமல்ல, ஆசிரியர்களும் ஏதாவது ஒரு வகையில் தங்கள் கல்வி அறிவை வளர்த்துக் கொண்டே இருக்கவேண்டும். இந்தியாவின் புதிய கல்வி முறை, இந்த எல்லா கல்வி வடிவங்களையும் தன்னகத்தே கொண்டு இருக்கும் என்பது கல்வியாளர்களின் எதிர்பார்ப்பு.

அப்புறம் ஏன் இந்த புதிய கல்வி முறையை எதிர்த்து இத்தனை களேபரம் என்றால், இந்தியாவின் புதிய வேலை வாய்ப்புகள் குறித்த அச்சமும், தற்போது வேலை செய்துகொண்டிருக்கும் ஆசிரியர்களின் “தங்களுக்கு கிடைத்த வேலை போய் விடுமோ” என்ற பயமும், “வேலைப்பளு கூடிப்போய் விடுமோ” என்ற அவர்களின் சந்தேகமும்தான், புதிய கல்விமுறையை எதிர்க்க ஒரு முக்கியக்காரணம் ஆகும். இந்திய மத, ஜாதி மற்றும் மத்திய மாநில அரசியல், எதிர்ப்பிற்கு இன்னொரு காரணம் என்று சொல்லலாம். இதையெல்லாம் தாண்டி, வறுமைக்கோட்டில் வாழுபவர்களுக்கு கிடைக்கும் கல்விச் சலுகைகள் மற்றும் கல்வி சார்ந்த வேலைவாய்ப்புச் சலுகைகள் போன்றவை காணாமல் போய்விடுமோ என்ற அச்சமும் ஒரு பிரதானக் காரணம் என்று நாம் கோடிட்டுக் காட்டலாம்.
இனி இந்திய புதியக்கல்விக் கொள்கைகளில் உள்ள பிரச்னைகளில் முக்கியமான சிலவற்றை அடுத்த அத்தியாயத்தில் ஆராய்வோம்.


Series Navigationபரவும் தொலைக்காட்சி நாடகங்கள் எனும் தொற்றுநோய்!நீ நீயாக இல்லை …
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *