_ லதா ராமகிருஷ்ணன்
முன்பொரு நாள் யதேச்சையாக தொலைக்காட்சி ஆங்கில சேனலில் பார்க்கக் கிடைத்த படம் THE CONDEMNED.
கதாநாயகன் ஜாக் கான்ராட் மரண தண்டனைக் கைதியாக ஊழல்மிக்க சால்வடார் நாட்டுச் சிறையில் இருக்கிறான். (படம் பார்த்து நிறைய வருடங்களாகிவிட்டன என்பதால் கதையின் விவரங்களைத் துல்லியமாக நினைவிலிருந்து தர இயலவில்லை).
ஒரு தொலைக்காட்சி சேனல் உரிமையாளர் புதிய பரபரப்பான, ‘உலகெங்கும் முதல் முறையாக’க் காண்பிக்கப்படும் ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பி லாபம் தேடும் வியாபார நோக்கோடு ஜாக்கையும், அவனைப் போலவே வெவ்வேறு சிறைகளில் தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கும் வேறு சில கைதிகளையும் (அதில் ஒரு பெண் கைதியும் உண்டு) ’விலை’ கொடுத்து வாங்கிவருவான்.
ஒருவரையொருவர் எதிர்த்துத் தாக்கிக்கொள்ள வேண்டும் என்றும் இறுதியில் உயிரோடிருப்பவ ருக்கு நிறைய பணமும் தண்டனையிலிருந்து விடுதலையும் கிடைக்கும் என்றும் கூறப்பட்டு அவர்கள் ஏதோ காடு போன்ற பகுதியில் விடப் படுவர்.
அது ஒரு சட்டத்திற்குப் புறம்பான கொடூர விளை யாட்டு. எங்கே நடக்கிறதென்பதும், எங்கேயிருந்து படம் பிடிக்கப்படுகிறது, ஒளிபரப்படுகிறது என்பதும் ரகசியமாக வைத்துக் கொள்ளப்பட்டிருக்கும்.
தண்டனை யிலிருந்து விடுபடவேண்டி அந்தக் கைதிகள் ஒருவரையொருவர் கொடூரமாகத் தாக்கிக்கொள் வது இணையதளம் மூலம் காண்பிக்கப்படும்.
ஒவ்வொரு கைதியின் கணுக்காலிலும் ஒரு டைம்பாம் இணைக்கப் பட்டிருக்கும். 30 மணிநேரம் கடந்தால் அது வெடித்துவிடும்.
400 லட்சம் பார்வையாளர்களைக் கொண்ட போட்டி தொலைக்காட்சியைத் தோற்கடிப்பதே இந்த நிகழ்ச் சியை நடத்தும் தொலைக்காட்சி நிறுவன உரிமையா ளரின் நோக்கம். நிகழ்ச்சி பரபரப்பாகப் பார்க்கப்படும்.
அப்படிப் பார்ப்பவர்களில் கான்ராடின் காதலியும் ஒருத்தி. கான்ராட் உண்மையில் போர்க்கைதியாக சிறைத்தண்டனை அனுபவித்துக்கொண் டிருக்கும் விவரம் தெரியவரும்.
அந்தக் கைதிகள் தங்களுக்குள் கூட்டு சேர்ந்துக் கொண்டு மற்ற கைதிகளை ஒழித்துக்கட்டுவதும், அவர்களிடையே இருந்த பெண் கைதி மற்ற கைதி களை தன் வசப்படுத்தி அவர்களை வீழ்த்துவதும், இறுதியில் அவளும் கொடூரமாகக் கொலைசெய்யப் படுவதும் என்று எல்லாம் காண்பிக்கப்படும்.
இவற்றைப் படம்பிடித்துக்கொண்டிருப்பவர்களில் சிலருக்கு போகப்போக நிகழ்ச்சியின் குரூரமும், அதைத் தயாரிப்பவனின் குரூர மகிழ்ச்சியும் பிடிக்காமல் போகும். சிலர் நேரடியாகவே எதிர்ப்பு காட்டுவார்கள். அத்தகைய ஊழியர்களை நிகழ்ச்சித் தயாரிப்பாளன் பலவகையிலும் அச்சுறுத்தி, ஆசை காட்டி பணியில் தொடரச் செய்வான்.
ஒரு கட்டத்தில் கான்ராடுக்கு இந்த நிகழ்ச்சியின் அப்பட்டமான வியாபாரநோக்கம் புரியவர, அவன் காட்டிலிருக்கும் தகவல் தொடர்பு கோபுரத்திற்குச் சென்று தன் காதலியைத் தொலைபேசியில் அழைத்து தாங்கள் இருக்கும் இடத்தின் அடையா ளங்களை ஓரளவுக்குத் தெரிவித்து விடுவான்.
முடிவில் இரு கைதிகளுக்கு எதிராக கான்ராட் காட்டில் தனித்துவிடப்படுவான். அவனுக் கிருக்கும் எதிர்ப்புணர்வைப் புரிந்துகொண்டு அந்தத் தொலைக்காட்சித் தயாரிப்பாளரும் அவனை ஒழித்துக்கட்டப் பார்ப்பான். ஒரு கட்டத்தில் அவன் இறந்துவிடு வதாக முடிவுகட்டி மீதமிருப்பவன் வெற்றியாளனாக அறிவிக்கப் படுவான்.
ஆனால், வெற்றிப்பரிசுத்தொகையை அவனுக்குத் தராமல் ஏமாற்றுவான் நிகழ்ச்சித் தயாரிப்பாளன். கோபத்தில் அந்தக் கைதி தயாரிப்புக்குழுவைச் சுட அதில் சிலர் இறக்க, பணத்தாசை பிடித்த நிகழ்ச்சித் தயாரிப்பாளனே நிகழ்ச்சியை எதிர்க்கும் சக தொழில் நுட்ப வல்லுனர்கள் சிலரைச் சுட, இறுதியில் கான்ராட் வந்து நிகழ்ச்சித் தயாரிப்பாளனைச் சுட என்று பேரழிவு நிகழும்.
கான்ராட் தன் காதலியிடம் ஒரு சுதந்திர மனிதனாக வந்துசேர்வதோடு படம் முடியுமென்றாலும் அந்தப் படம் முழுவதும் வெளிப்படும் அப்பட்டமான தொலைக்காட்சி வர்த்தகப் போட்டியும், பணவெறி யும், குரூரங்களை ரசிக்க எப்படி இந்தத் தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் மக்களைப் பழக்கப்படுத்துகின் றன, ஊக்கப்படுத்துகின்றன என்பதும் நெடுநேரம் நம் மனதை அலைக்கழித்துக் கொண்டிருக்கும்; நம்மை அமைதியிழக்கச் செய்து கொண்டிருக்கும்.
கதாநாயகன் கான்ராட் வந்து அந்த தொலைக்காட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கும் போது அது நியாயமே என்று தோன்றும்.
வழக்கமான அடி தடி சண்டைப் படமாக இருந்தாலும் இந்தப் படத்தில் ஒளியூடகங்கள், அவை மக்களை எப்படி பாவிக்கிறது, அதன் விளைவுகள் என்ன என்பதைப் பற்றி சமூகப்பொறுப்போடு ஒரு ‘மெஸேஜ்’ உபதேசமாக அல்லாமல் கதைப்போக்கில் அழுத்தமாகத் தரப்பட்டிருக்கும்.
படுமோச மெகாத்தொடர்நாடகங்களுக்கும், அபத்த அரசியல் விவாதங்களுக்கும் மாற்றுவேண்டும் முனைப்பில், அப்படியொரு மாற்று இந்த நிகழ்ச்சி என்ற ஒருவித willing suspension of disbelief மனநிலையில் BIGG BOSS நிகழ்ச்சியைப் பார்க்கும்போதெல் லாம் இந்தப் படம் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வருகிறது.
- 2. கிழவன் பருவம் பாராட்டுப் பத்து
- சினிமாவிற்குப் போன கார்
- THE CONDEMNED (2007 American Action Film) and THE BIGG BOSS
- இந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய சந்திரயான் -2 விண்சிமிழ் தொடர்ந்து நிலவைச் சுற்றிவர, விக்ரம் தளவுளவி நிலவில் சாய்ந்து ஓய்வெடுக்கிறது.
- பாரதியின் கவிதைகளில் கிடைக்கும் வாசகப்பிரதிகள்
- உடல்மொழியின் கலை
- தண்டனை
- பூசை – சிறுகதை