பாண்டித்துரை
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஆம்பலாப்பட்டு கிராமத்தில் பிறந்தவர். கடந்த 14 வருடமாக சிங்கையில் வசிக்கும் இவர், 13 சிறுகதைகள் அடங்கிய ‘உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 81’ என்ற இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு நூல் 2017 இல் ‘மோக்லி’ பதிப்பகத்தில் வெளியானது. சிங்கப்பூர் NAC நடத்திய தங்கமுனை விருதுகள் இவரது ராட்சசி (2015-இரண்டாம் பரிசு), ரகசியம் (2017/முதல் பரிசு) சிறுகதைகளுக்கு கிடைத்தது. இவரது சிறுகதை தொகுப்பிற்கு 2018 க.சீ.சிவக்குமார் நினைவு விருது கிடைத்தது. தற்போது நாவல் எழுதுகிறேன் என்ற புரளியை கிளப்பிவிட்டு நிம்மதியாக உறங்கிக்கொண்டிருக்கும் இவரை தட்டி எழுப்பி சில கேள்விகள் மட்டுமே கேட்க முடிந்தது.
‘மாயா’ இலக்கிய வட்டம் ஆரம்பித்ததின் நோக்கம் நிறைவேறி இருக்கிறதா? வாசகர்கள் ‘மாயா’ வை எப்படி பார்க்கிறார்கள்?
மாயா
ஆரம்பித்து ஆறு மாதங்கள் ஆகும் நிலையில் எங்களின் நோக்கத்தை நோக்கி நடக்க
ஆரம்பித்து உள்ளோம். எந்த அமைப்பின் நோக்கமும் அவ்வளவு எளிதில் நிறைவேறி
விடுவதில்லை, புது வாசகர்களை கண்டடைந்து அவர்களை குறிப்பாக சிங்கப்பூர்
கதைகளை படிக்க வைப்பது சவாலான ஒன்று, கடந்த மாதங்களில் அதில் வெற்றியும்
அடைந்துள்ளோம். வாசகர்கள் ஆவலுடன் வருகிறார்கள் தயக்கமின்றி தங்கள் கருத்தை
முன் வைக்கிறார்கள்.
‘மாயா’ விமர்சனங்கள் கட்டுரைகளாக வலைதளங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளதா?
இதுவரை
இல்லை ஆனால் எங்களின் நோக்கம் அதுவே . விரைவில் மாயாவிற்காக வலைதளம் ஒன்று
துவங்கி அதில் விமர்சனக் கட்டுரைகள் பிரசுரிக்கப்படும்.
‘மாயா’
வில் விவாதிக்க எடுத்துக்கொள்ளும் படைப்புகளுக்கான விமர்சனங்களை
சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர்கள் & அறியப்பட்ட எழுத்தாளர்களிடம்
பெற்று வாசிக்கவும் / வலைதளத்தில் பதிவிடவும் செய்யலாமே?
அதற்கான முயற்சிகள் நடந்துகொண்டு இருக்கிறது. விரைவில் மாயா இலக்கிய வட்டத்திற்கான வலைதளம் துவங்கி அதில் பதிவிடப்படும்.
ரமா சுரேஷ் எழுத்தாளர் ஆகிவிட்டாரா?
ஒரே ஒரு தொகுப்பை போட்டுவிட்டு நான் ரமாசுரேஷ் எழுத்தாளர் என்று கை குழுக்க கொஞ்சம் கூச்சமாகத்தான் இருக்கு.
உட்லண்ட்ஸ் ஸ்ரிட் 81 சிங்கப்பூர் பெண்கள் எழுதிய சிறுகதைகளிலிருந்து பெரிதும் மாறுபட்ட ஒன்று, எப்படி இப்படியான கதைமொழிக்குள் வந்தீர்கள்?
நான்
மனிதர்களின் செயல்பாடுகளை அதிகம் ரசிப்பவள் அதிலும் குறிப்பாக பெண்களை
அதிகம் ரசிப்பேன் நேசிப்பேன். என் கதைகள் பெரும்பாலும் பெண்களின் அக
வாழ்வை கொண்டவை.
2015
ல் ராச்சசி கதையை நான் எழுதும் போது எனக்கு நானே சில விசயங்களில்
கட்டுப்பாடுகளை வைத்துக்கொண்டேன் ஆனால் எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமார்
கதைகளை படிக்க ஆரம்பித்தபோது அந்த தடைகளை தகர்த்துவிட ஆரம்பித்தேன்.
என்னமாதிரியான
கட்டுப்பாடு என்று சொல்ல முடியுமா? லஷ்மி சரவணக்குமார் கதைகள் உங்களுக்கு
தந்த தரிசனத்தை இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்கள்?
விளிம்பு
நிலை மாந்தர்களின் கதையை தடையில்லாமல் எழுத எனக்குள் தைரியத்தை கொடுத்தது
உப்பு நாய்கள்தான். நிர்வாணம் என்ற ஒற்றை வார்த்தையே எனக்குள்
கட்டுப்பாடாகத்தான் இருந்தது ஆனால் லஷ்மியின் கதைகளில் நிர்வாணத்தையே
இரண்டு பக்கங்கள் எழுதி இருப்பார் அந்த மொழியை படிக்கையில் எனக்குள் நிறைய
மாற்றம். உடல் அரசியல் பற்றி எழுதுவதில் தவறில்லை அதை நாம் எழுதும்
விதத்தில்தான் உள்ளது என்பதை புரிந்துக்கொண்டேன்.
உங்களின் கதைகளைப் படித்த யாரேனும் எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமாரின் பாதிப்பு இருப்பதாக சொல்லியிருக்கிறார்களா?
அப்படி யாரும் இதுவரை என்னிடம் நேரடியாக சொன்னதில்லை.
நேரடியாக சொல்லலைனா எங்கோ சொல்லி கேள்விப்பட்ட மாதிரிதானே?
மொழியில் இருப்பது போல் எனக்கே சில நேரம் தோன்றும். நேரடியாக பேசத் தயங்குபவர்களை பற்றி நாம் ஏன் யோசிக்க வேண்டும்
உங்கள் கதைகளில் பூனைகள், குழந்தைகள் அதிகம் வருகிறார்கள். அதுபற்றியும், பெரியவர்கள் குழந்தைகளுக்கு இடையே ஊடாடும் மனநிலை இது பற்றிச் சொல்லுங்கள்?
வாஸ்தவம்தான்
என் கதைகளில் பிரதான பாத்திரங்களில் இவர்களின் ஆதிக்கம் அதிகமாகவே
இருக்கும் . சிங்கையில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு பார்த்தால்
இவர்கள் மட்டுமே நிறைந்து நிற்பார்கள். காலை பத்து மணி முதல் மாலை வரை
குடியிருப்பு பகுதிகள் அங்காடி கடை வீதி என்று மனிதர்கள் அதிகம் நடமாட
கூடிய பகுதிகளில் இவர்களின் சிரிப்பு சத்தமும் கேலியும் கிண்டலுமான
பேச்சும் அதிகமாக கேட்கும் அவர்களுடன் சக நண்பனை போல பூனைகளும் இருக்கும்.
மேலும் சிங்கப்பூர் களத்தில் பூனைகள்தான் நமக்கு கிடைத்த ஒரே விலங்கும்!
பெரியவர்கள்
(முதியவர்கள்) குழந்தைகள் இவர்கள் இருவரும் கிட்டதட்ட ஒரே மனநிலையில்
உடையவர்கள். பழகியவர்கள் புதியவர்கள் என்று பாராமல் பார்த்தவுடன் சிரித்து
பேச ஆரம்பித்து விடுவார்கள். ஒவ்வொரு மனிதனிடமும் பல சுவாரசியமான கதைகள்
இருக்கும் அதில் சில ரகசியங்கள் இருக்கும் அந்த ரகசியத்தை ஒரு குறிப்பிட்ட
வயதிற்கு பிறகே சுவாரசியமாக வெளி வரும். அப்படிப்பட்ட ரகசியங்களை
முதியவர்கள் குழந்தைகளிடம் மட்டுமே அடிக்கடி சொல்லி
சிலாயித்துக்கொள்வார்கள். தங்களுக்கு புரியுதோ இல்லையோ அந்த சுவாரசியம்
குழந்தைகளுக்கு பிடித்து விடும். உறவு பாசம் இதை தாண்டி ‘தனி கவனம்’ என்பதே
இவர்களுக்கு தேவை.
நேரடியாக பார்த்த / பாதித்த ஒன்றை எழுவது, கற்பனையாக ஒன்றை எழுதுவதை எப்படி பார்க்கிறீர்கள்?
நம் சொந்த கதை அல்லது நம்மை பாதித்த அல்லது கற்பனை கதை எதுவாக இருந்தாலும் சரி கதையின் உட்கரு எழுத்தாளனுக்குள் உயிர்ப்பிக்க வேண்டும் அந்த அதிர்வுதான் நம்மை கதை எழுத தூண்டுவதே.
சிங்கப்பூர் சிறுகதைகளில் ‘உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட்81 வித்தியாசமான கதைக்களம் கொண்ட சிறுகதை தொகுப்பு, இந்த தொகுப்பு பற்றி பரவலாக யாரும் பேசவில்லை என்று நினைக்கிறேன்?
உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 81 மட்டும் அல்ல சிங்கப்பூர் தொகுப்புகள் எதுவும் இங்கு பேசப்படுவது இல்லை. ஆனால் தமிழகத்தில் எனக்கு ஒரு அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது.
இந்த தொகுப்பிற்கு கிடைத்த சிறந்த பாராட்டு / சிறந்த விமர்சனம் யாரிடமிருந்து கிடைத்தது?
விமர்சனம்
என்றால் காரசாரமாக யாரும் இன்னும் முன் வைக்கவில்லை. எல்.ஜே.வயலட் ஒரு
விமர்சனம் எழுதி இருந்தார் அது எனக்கு பிடித்த ஒன்று.
பாராட்டு
நிறைய கிடைத்தது அதில் முதல் பாராட்டு கவிஞர் கரிகாலன் அவர்களுடையது,
அவரிடம் நான் பேசும் போதெல்லாம் அடுத்தகதையை எழுத ஆரம்பித்துவிடுவேன்
அந்தளவு ஊக்கப்படுத்துவார். சாரு அவர்கள் தொகுப்பை படித்துவிட்டு என்
கைபேசி எண்ணை தேடி பிடித்து பேசிய அந்த தருனம் நான் தேவதை ஆகிவிட்டேன்,
சமீபத்தில் கவிஞர் யவனிகா அவர்களின் பாராட்டு.
எனக்கு மிகப்பெரிய அங்கிகாரம் கொடுத்தது க.சீ. சிவக்குமார் நினைவு விருது.
யாதுமாகியில் நீங்களும் ஒரு கவிஞராக இடம் பெற்றிருப்பீர்கள் என்று நினைத்திருந்தேன்?
நான் கவிதை எழுதுவதில்லை.
எழுத்தாளர் பாலகுமாரன் ஒரு நிகழ்வில் உங்களது கேள்விக்கு நியாமான ஒரு பதிலைச் சொல்லாமல் அவமதித்ததை இப்போது எப்படி பார்க்கிறீர்கள்?
அப்போது
கோபமும் வருத்தமும் நிறைய இருந்தது. ஆனால் இப்போது நினைத்தால் கூட
சிரிப்பு வந்துவிடும். அன்று அவர் அந்த பதிலை கோபமாக சொல்லாமல் நிதானமாக
சொல்லி இருந்தால் அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் என்னை ரொம்பவே பாதித்து
இருக்கும். அதனால் அந்த கோபத்திற்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.
வாசிப்பதன் வழியே என்னமாதிரியான மாற்றத்தை வாசகன் அடையக்கூடும்?
வாசிப்பதின்
வாயிலாக மட்டும் அல்ல நாம் சந்திக்கும் பல சூழல்கள் நம்மை பல மாற்றங்களை
கண்டடைய செய்கிறது. இதில் வாசகர்கள் மற்றவர்களை விட கொடுத்து வைத்தவர்கள்
தனக்கு பிடித்த கதாப்பாத்திரமாக மாறி விடுவார்கள், சில நாட்களுக்கு முன்பு
வானவில் என்ற ரஷ்ய நாவல் ஒன்று படித்தேன் அதில் வரும் ஒரு பிணமாக மாறி
தவிக்க ஆரம்பித்துவிட்டேன் ஒரு கட்டத்திற்கு மேல் அந்த கதை நிகழும் களமாகவே
உருமாறி விட்டேன். ஏன் சில வாசகர்கள் தன் மானசீகமான எழுத்தாளர்களை போன்றே
வாழ ஆரம்பித்து விடுவார்கள் உதாரணத்திற்கு எஸ்.ரா , சாரு வின் தீவிர
வாசகர்களை பார்த்தீர்கள் என்றால் மிக இயல்பாக நாம் கண்டுபிடித்து விடலாம்
நான் சமீபத்தில் ரசித்த ஓஷோவின் வரிகள் “நீயாகப் படைக்கும் எதுவும் உன்னைவிட சிறியதாகத்தான் இருக்க வேண்டும்”
எழுத்தை விட எழுத்தாளன் சிறந்தவனாக விளங்க வேண்டும் அப்போதுதான் வாசகன் எழுத்தின் வாயிலாக மாற்றத்தை கண்டடைய முடியும்.
நேர்காணல்: எழுத்தாளர் ரமாசுரேஷ்
நேர்காணல் செய்தவர்: பாண்டித்துரை
- 5. பாசறைப் பத்து
- மீப்புனைவாளன்
- மாலை – குறும்கதை
- ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்-இலக்கிய இலக்கணங்கள்
- ஒரு சிற்பியின் சுயசரிதை – எஸ். தனபால் (காலச்சுவடு பதிப்பகம்)
- நேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்