ஜோதிர்லதா கிரிஜா
பெரும்பான்மையினராக எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அக்கட்சி செருக்குடன்தான் செயல்படுகிறது. முந்தைய ஆட்சி பிடிக்காததால் மக்கள் தங்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்பதை அறவே மறந்து அவர்கள் தேன் குடித்த நரிகளாகிவிடுகிறார்கள். மக்களுக்குப் பிடிக்காதவற்றையும் அவர்கள் சற்றும் ஆதரிக்காத கொள்கைத் திணிப்பையும் செய்யத் தலைப்பட்டு விடுகிறார்கள். ஒரே நாடு, ஒரே மொழி எனும் பாரதிய ஜனதா கட்சியின் அறைகூவலும் அதன் விளைவுதான்.
“ஒரே மொழி” என்று கூவிவிட்டு அது இந்தித் திணிப்பன்று என்று கூறுவது இந்தி பேசாத மாநிலங்களின் மக்கள் காதுகளில் பூச்சுற்றுகிற வேலையல்லாது வேறென்ன? காலப் போக்கில் இந்தியை மட்டுமே நிலை நிறுத்துவதற்கான தந்திரமல்லால் இது வேறென்னவாம்? ஒரே மொழி என்பது நல்ல விஷயம்தான். ஆனால் அது ஆங்கிலமாக மட்டும் தொடர்வதே அனைத்து மக்களுக்கும் நியாயம் வழங்கும் ஏற்பாடாக இருக்கும். முதலிடமாய்த் தாய்மொழிக்கும், அனைத்து மொழியினர்க்குமான நியாயத்துக்காக ஆங்கிலத்துக்கும் மட்டுமே அனைத்துக் கல்விக்கூடங்களிலும் இடமளிக்க வேண்டும். தவிர, இந்தி 30% மக்களின் மொழி. அதைப் பெரும்பான்மையினர் மீது திணிப்பது அநியாயம்.
இந்தியை மக்கள் தாங்களாகவே கற்பார்கள். கற்றுத்தான் வருகிறார்கள். இந்தி பேசும் மாநிலங்களில் வசிக்க நேர்ந்தால் அது பயனுள்ளதாக இருக்கு மென்பது அவர்களுக்குத் தெரியும்.
இந்தி பொது மொழியாகக் கூடாது என்பதில் உள்ள நியாயத்தைச் சுட்டிக்காட்டிப் பல கட்டுரைகள் வந்த வண்ணம்தான் இருக்கின்றன. ஆனால் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் இருக்கிறது. பா.ஜ.கவினரும் திரும்பத் திரும்ப இந்தியைத் திணிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டே தந்திரமாகவும் மறைமுகமாகவும் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் நாமும் அடிக்கடி இது பற்றிய நமது மறுப்பைப் பதிவு செய்தவண்ணமே இருப்பதுதான் நல்லது. இல்லாவிடில், தமிழ் நாட்டினர் இந்திக்கு மறுப்புச் சொல்லவில்லை எனும் மாயத் தோற்றம் ஏற்பட்டுவிடும்.
மைய அரசு அலுவலகத்தில் பணி புரிந்தவள் என்கிற முறையில் இந்தியின் பெயரால் பல்லாண்டுகளாக எவ்வளவு பணமும், நேரமும் வீணாகிறது என்பதை அறிய வாய்த்துள்ளது. இதைப் பலர் அறிய மாட்டார்கள். எல்லாச் சுற்ற்றிக்கைகளின் இந்தி மொழி பெயர்ப்புகளும் அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இரண்டு பக்கங்களில் அடங்கும் ஆங்கிலச் சுற்ற்றிக்கையின் இந்தி மொழியாக்கம் நான்கு பக்கங்களை விழுங்கும். தாள்களுக்கான விலை, அச்சேற்றும் பணிக்கான செலவு, மொழிபெயர்ப்பாளர்களுக்கான சம்பளம் இவையெல்லாம் வீண் செலவுகள்தானே? தவிர இவற்றை யார் படிக்கிறார்கள்? இந்திக்கார்கள் கூட
2
இவற்றைப் படிப்பதில்லை என்று இந்திக்காரர் ஒருவரே கூறிச் சிரித்தது நினைவுக்கு வருகிறது. ஏனெனில் அந்த இந்தி அவர்களுக்குப் புரிவதில்லையாம். “ அது சான்ஸ்க்ரிடைஸ்ட் (சம்ஸ்கிருதச் சொற்களே நிறைய உள்ள) ஹிந்தி அம்மா! யாருக்குப் புரிகிறது ?” என்றார் அவர்.
இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள பா.ஜ.க வினர் அம்மாநில மக்களின் எதிர்ப்பை மேலிடத்துக்குத் தெரிவித்து எச்சரிப்பதில்லையா? இல்லையெனில், அவர்கள் கட்சித் தலைவர்களுக்குப் பிடிக்காததைத் தெரிவிக்க அஞ்சும் கோழைகள் அல்லது உண்மை நிலையை அவர்களுக்குத் தெரிவிக்க விரும்பாத தன்னலவாதிகள் என்றே நினைக்க வேண்டியுள்ளது.
மகாத்மா காந்தியும் சர்தார் வல்லபாய் படேலும் இந்தியின் ஆதரவாளர்கள் என்பதை அதற்குக் காரணமாய்க் காட்டும் ஆட்சியினர் மகாத்மா காந்தி ராஜாஜி தம் மனச்சாட்சியின் காவலர் என்று சொன்னதை அறிய மாட்டார்களா? தொடக்க காலத்தில் இந்தியைப் பெரிதும் ஆதரித்த ராஜாஜி அது இந்தி பேசாத மக்களுக்கு நியாயம் வழங்காது என்பதை உணர்ந்து பின்னாளில் அதைக் கை விட்டது அவர்களுக்குத் தெரியாதா, இல்லாவிட்டால் வசதியாக அது தெரியாதது போல் நடிக்கிறார்களா? ராஜாஜி தமது மனச்சாட்சியின் காவலர் என்று சொன்ன காந்தியின் குரல்தானே அது?
தவிர, காந்தி சொன்ன மற்றவற்றையெல்லாம் இவர்கள் செய்து முடித்து விட்டார்களாமா? முதலில் இவர்கள் மதுவிலக்கை நாடு முழுவதிலும் அமல் படுத்தட்டும். அதைச் செய்யாத வரையில் காந்தியைப் பற்றிப் பேசவோ, காந்தியின் பெயரை உச்சரிக்கவோ கூட இவர்களுக்கெல்லாம் கடுகளவும் அருகதை கிடையாது.
நம்மை ஆண்ட காலத்தில் வெள்ளைக்காரர்கள் பல்வேறு அட்டூழியங்களைப் புரிந்துள்ளார்கள்தான். ஆனால், அவர்கள் நம் நாட்டுக்குள் காலடி எடுத்து வைத்திருந் திருக்காவிட்டால் நாம் இன்னமும் கட்டைவண்டி யுகத்தில்தான் இருந்திருப்போம். முதன் முதலாய்ப் புகை வண்டியை அவர்கள் இந்தியாவில் அறிமுகப் படுத்திய போது அது ஏதோ பில்லி-சூனிய வேலை என்று சொல்லிக்கொண்டு பலரும் அதில் ஏறாமல் இருந்தார்களே! அப்படிப்பட்டவர்களின் வாரிசுகள் இன்று சந்திரனுக்கு ராக்கெட் விடும் அளவுக்கு முன்னேறி யுள்ளார்கள் என்றால் அதற்கு என்ன காரணம்? ஆங்கிலப் புலமையே அல்லவா? ஆங்கிலத்தின் உதவியின்றித் தகவல்-தொழில் நுட்பத்துறையில் பெரிதும் முன்னேறியுள்ள சைனா, ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளே அவற்றின் கல்விக்கூடங்களில் கடந்த சில ஆண்டுகளாய் ஆங்கிலத்தைப் புகுத்தியுள்ள நிலையில், நாம் அதை மூன்றாம் இடத்துக்குத் தள்ளுவது அறிவார்ந்த செயலாகுமா? ‘வசுதேவ குடும்பகம்’ எனும் தாரக மந்திரத்தைப் பெருமிதத்துடன் அடிக்கடி உச்சரித்து வரும் பா.ஜ.க. ஆங்கிலம் இன்று உலகப் பொது மொழியாகி அனைத்துலக நாடுகளையும் ஒரே குடும்பம் போல் ஒருங்கிணைத்து விட்ட உண்மையை – அது மொழிவெறியர்களுக்குப் பிடிக்காவிட்டாலும் – அது எவ்வளவு கசப்பாக இருந்தாலும் – ஏற்றுகொண்டுதானாக வேண்டும். ஆங்கிலம் இவ்வாறான தனி அந்தஸ்தைப் பெற்றது அதன் தனிப் பேறு. உலகத்தை ஒரே குடும்பம் போல்
3
இணைக்க முற்பட்ட கடவுளின் செயல். அதைப் புறக்கணித்து நம் தலையில் நாமே மண்ணை வாரிப்போட்டுக்கொள்ளக் கூடாது.
பசு வதைக்கு எதிராய் ஆங்காங்கு நடந்துவரும் அடித்துக்கொல்லும் குற்றம் வேண்டுமென்றே செய்யப்படும் கொலையாகாது என்று அண்மையில் அரசுத் தரப்பு வழக்குரைஞர் கருத்து வெளியிட்டது பற்றிய செய்தி பாதிக்கப்பட்டவர்களின் ஆத்திரத்துக்கு அடி கோலுவதாய் உள்ளது.
குடும்பக் கட்டுப்பாட்டை அவ்வளவாக ஆதரிக்காதவர்களின் தொகை உயர்ந்துகொண்டே போவதால் இந்துப் பெண்கள் பத்துக் குழந்தைகள் பெறவேண்டுமென்று ஈவிரக்கமின்றி முதலில் சொல்லிவிட்டு, அதற்குப் பெண்களின் எதிர்ப்புக் குரல் கிளம்பியதும், பின்னர் நான்கு என்று இந்துத் தலைவர் ஒருவர் இறங்தி வந்தது போன்ற செய்திகள் பா.ஜ.க. வுக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை.
சில பெண் பா.ஜ.கவினரும் வாய்க்கு வந்ததை யெல்லாம் பிதற்றிக்கொண்டிருந்ததையும் நாம் அறிவோம். இவற்றை யெல்லாம் உடனுக்குடனாய்க் கண்டிக்கத் தவறியதும் பிரதமரின் மதிப்புருவத்தைச் சற்றே சரியச் செய்துள்ளது என்பதில் ஐயமில்லை.
அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் நம் பிரதமரை “ இந்தியாவின் தந்தை ” என்று குறிப்பிட்டுப் புகழ்ந்ததற்குப் பிரதமரிடமிருந்தே கூட மறுப்புக் கிளம்பவில்லை. 1942 இல் பொறுமை யிழந்த காந்தியடிகள் “ வெள்ளையனே வெளியேறு ” எனும் புரட்சி இயக்கத்தைத் தொடங்கியதன் விளைவாகக் காங்கிரஸ் கட்சியின் அனைத்துத் தலைவர்களும் கைது செய்யப்பட்ட போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிங்கப்பூரில் இருந்தார். வெள்ளைக்காரர்க்கு எதிராய்ப் பெரும் படையை அவர் திரட்டியிருந்தார். காந்தியின் மென்மையான அகிம்சை வழிகளை அவர் ஆதரிக்காவிட்டாலும் அவர் காந்தியின் மீது பெரு மதிப்புக் கொண்டிருந்தார். காந்தி தொடங்கிய “ வெள்ளையனே வெளியேறு ” எனும் போராட்ட இயக்கம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. 1943 ஆம் ஆண்டில் அக்டோபர் 2 இல், காந்தியடிகளின் பிறந்த நாளை நேதாஜி கொண்டாடினார். அதன் பிறகு சிங்கப்பூர் வானொலியில் உரையாற்றிய நேதாஜி மகாத்மாவின் “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தைப் பாராட்டிய பின் காந்தியை “தேசத்தந்தையே” என்று உணர்ச்சி பொங்க அழைத்துப் பேசினார். இவ்வாறு நேதாஜியே தேசத் தந்தை என்று காந்தியை அழைத்ததைப் புறந்தள்ளிவிட்டு, அந்த நேதாஜியையே தேசத்தந்தை என்று பா.ஜ.க. சொல்லத் தொடங்கியிருப்பதும் அக்கட்சிக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை. காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேயை இவர்களில் சிலர் கொண்டாடி வருவதோ காந்தியை அவமதிப்பதன் உச்சம்.
பகவத் கீதையைச் சென்னைப் பொறியில் கல்லூரிகளில் ஒரு பாடமாக வைக்கப் போவதாகவோ அல்லது வைத்திருப்பதாகவோ அண்மையில் வந்துள்ள செய்தி விரும்பத்தக்க நிலைப்பாடன்று. பகவத் கீதை ஒரு தத்துவார்த்த நூல். அது முதியோர்களுக்கானது. இவற்றையெல்லாம் ஒருவர் தானாகவே தேடிச் சென்று படிக்க வேண்டுமே தவிர, பாடத்திட்டத்தில் சேர்ப்பது நன்றன்று. மேலும் இதில் சில நல்லுரைகள் இருப்பினும் இது பெரும்பாலும் ஓர் இந்து மத நூலாகும். இந்து மதம் சார்ந்த சாங்கியங்களை விளக்கும் நூலுமாகும். இது பிற மதத்தினரின் வெறுப்பையே பா.ஜ.க. வுக்குப் பெற்றுத் தரும்.
பல்வேறு மொழிகளும் மதங்களும் புழக்கத்தில் உள்ள ஒரு நாட்டில் “வசுதேவ குடும்பகம் ” என்று வாய்க்கு வாய் புலம்பிக்கொண்டே குறிப்பிட்ட மொழியையோ மதத்தையோ முன்னிறுத்துவது மாபெரும் தீங்கை ஏற்படுத்தக்கூடிய தவறாகும்.
அடுத்து, இவர்கள் யாரும் பேசாத – வேத காலத்து மொழியான – சம்ஸ்கிருதத்தைத் தூக்கி நிறுத்தும் வேண்டாத வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏராளமானோர் பேசும் மொழி என்று சொல்லிக்கொண்டு இந்தியை அரியணையில் ஏற்றப் பார்க்கும் இவர்கள் யாருமே பேசாத சம்ஸ்கிருதத்தைப் புகுத்துவதற்கு என்ன நியாயத்தை வைத்திருக்கிறார்களாம்? சம்ஸ்கிருதத்தை மேனாட்டினர் கூடக் கற்று வருகிறார்கள் என்பதெல்லாம் ஒரு சமாதானம் ஆகாது. விரும்புபவர்கள் அம்மொழிக்கென்று உள்ள கல்விக்கூடங்களில் சேர்ந்தோ தனிப்பட்ட முறையிலோ அஞ்சல் வழியிலோ அதைத் தாங்களாகவே கற்றுக்கொள்ளுவார்கள். கிடப்பதெல்லாம் கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மணையில் வை எனும் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.
இன்னொரு பயங்கரமான விஷயம் வாசகர்களுக்குத் தெரியுமா? சம்ஸ்கிருதத் தேர்வுகளை நடத்திவரும் ஒரு பெரிய அமைப்பு தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்குக் கேள்வித்தாள்களை முன்கூட்டியே அனுப்பிவருகிறது ! அம்மொழியைக் கற்றவர்களின் எண்ணிக்கையை மிகைப் படுத்திக் காட்டுவதொன்றே அவ்வமைப்பின் நோக்கம் என்று தோன்றுகிறது. ஒருவேளை அரசின் கட்டளைப்படி அவ்வாறு செய்கிறார்களோ என்னமோ ! யாருக்குத் தெரியும்?
காஷ்மீர் பிரச்னை கொழுந்து விட்டு எரியும் இந்நேரத்தில் களேபரம் ஏற்படுத்தக் கூடிய இவற்றையெல்லாம் பா.ஜ.க. கை விடுவதே இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியின் எதிர்காலம் சிறப்பாக இருப்பதற்கான அடித்தளத்தை அமைக்கும் !
…….
- தளை
- தமிழ் நாட்டில் இத்தனை மாவட்டங்கள் தேவையா ?
- கரிவாயுவை எரிவாயு வாக மாற்ற இரசாயன விஞ்ஞானிகள் ஒளித்துவ இயக்க ஊக்கியைப் பயன்படுத்துகிறார்.
- தலை தெறிக்க ஆடினால், விலை கொடுக்க நேரிடும் !
- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்