விளக்கு நிகழ்ச்சி ஏற்புரை

This entry is part 10 of 11 in the series 12 ஜனவரி 2020

எழுத்தாளர்களுக்கு விருதளித்து கெளரவிப்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு இயங்கிவரும் விளக்கு அமைப்புக்கும் இந்த மதுரை மாநகரத்துக்கும் விசித்திரமானதொரு உறவு உண்டு. அந்த உறவுக்கான விதை இருபத்தேழு இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே ஊன்றப்பட்டுவிட்டது. இதே மதுரையில்தான் காமராசர் பல்கலைக்கழகமும் தமிழ்ச்சிறுபத்திரிகைகளும் இணைந்து ‘எண்பதுகளில் கலை இலக்கியம்’ என்னும் தலைப்பில் மூன்றுநாள் கருத்தரங்கமொன்றை நடத்தினார்கள். இதற்குப் பின்னணியாக பெங்களூர் நண்பர்கள் வட்டம் இருந்தது. தமிழவன், காவ்யா சண்முகசுந்தரம், ஜி.கே.ராமசாமி, ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணன், மகாலிங்கம், முகம்மது அலி, நஞ்சுண்டன், கிருஷ்ணசாமி, கோ.ராஜாராம் ஆகியோரைக் கொண்ட ஒரு சிறிய வட்டம் அது. நவீன இலக்கிய உரையாடல்களுக்கு அது ஒரு நல்ல தொடக்கமாக இருந்தது.

கருத்தரங்கத்தின் இறுதி உரைக்கு முன்பாக நண்பர் கோ.ராஜாராம் ஓர் உரை நிகழ்த்தினார். சாகித்ய அகாதெமியின் விருதுத்தேர்வு எந்த அளவுக்கு ஒரு சடங்குபோல நிகழ்ந்து வருகிறது என்பதை ஆற்றாமையோடு குறிப்பிட்டார். சாகித்ய அகாதெமி போன்ற நிறுவனங்களால் தொடர்ச்சியாக புறக்கணிப்புக்காளாகும் படைப்பாளுமைகளைக் கண்டறிந்து உரிய கெளரவத்தை அளிப்பது ஒருவகையில் தமிழிலக்கிய உலகத்தின் கடமையென்றும் அக்கடமையிலிருந்து இக்கணம் பின்வாங்கினோமென்றால் பழிசுமந்தவர்களாக காலத்தின் முன்னால் நிற்கவேண்டிய சூழல் உருவாகுமென்றும் அவர் எச்சரித்தார். தமிழிலக்கியத்தின் வளர்ச்சிக்கு உண்மையிலேயே அரிய பங்களிப்பை நிகழ்த்திவரும் ஆளுமைகளை ஆண்டுதோறும் கண்டறிந்து புதுமைப்பித்தன் பெயரால் விருது அளிக்கப்படும் என்றும் அக்கடமையை விளக்கு அமைப்பு மேற்கொள்ளும் என்றும் அவர் மேடையிலேயே அறிவித்தார். அந்த அறிவிப்பு ஒரு பிரசுரமாகவும் அன்று விநியோகிக்கப்பட்டது.

அறிவிப்போடு நிற்காமல் அதை உடனடியாகச் செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் ராஜாராம் மேற்கொண்டார். பணியின் காரணமாக அவர் அமெரிக்காவுக்குச் சென்றார். தன்னைப்போலவே பணியின் பொருட்டு தமிழகத்திலிருந்து அமெரிக்காவுக்குச் சென்ற நண்பர்களில் ஒத்த சிந்தனை அலைவரிசை கொண்டவர்களை ஒருங்கிணைத்தார். இதற்கு சில ஆண்டுகள் அவருக்குத் தேவைப்பட்டன. இப்படித்தான் கனவு வடிவிலிருந்த விளக்கு உண்மையான  வடிவத்தில் சுடர்விடத் தொடங்கியது. ஒருபோதும் சாகித்ய அகாதெமியின் கவனத்துக்கு வரவேவராத பிரமிள், சி.சு.செல்லப்பா, கோவை.ஞானி போன்ற மகத்தான ஆளுமைகள் அனைவரும் விருதாளர்களாக அறிவிக்கப்பட்டு தொடர்ச்சியாக கெளரவிக்கப்பட்டார்கள். ஏறத்தாழ கால்நூற்றாண்டு காலமாக இந்த இலக்கியப்பணியை விளக்கு தொடர்ந்து செய்துவருகிறது. புதுமைப்பித்தன் விருதுக்கான விதை பதியப்பெற்ற இதே மதுரை நகரத்தில் நின்று விளக்கு வழங்கும் புதுமைப்பித்தன் விருதைப் பெற்றுக்கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

என்னோடு எல்லாக் காலத்திலும் இணைந்திருக்கும் பெங்களூர் நண்பர்கள் வட்டத்தைச் சேர்ந்த ஜி.கே.ராமசாமி, ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணன், தமிழவன், கிருஷ்ணசாமி, மகாலிங்கம், காவ்யா சண்முகசுந்தரம், முகம்மது அலி, தேவராசன், கிழார், நஞ்சுண்டன் அனைவரையும் இத்தருணத்தில் மகிழ்ச்சியோடு நினைத்துக்கொள்கிறேன். விளக்கு அமைப்பை ஓர் இயக்கம்போல தொடர்ந்து நடத்திவரும் நண்பர்கள் கோ.ராஜாராம், சுந்தரமூர்த்தி, கோபால்சாமி, வெற்றிவேல் உள்ளிட்ட அனைவரையும் மகிழ்ச்சியோடு நினைத்துக்கொள்கிறேன். இந்த ஆண்டின் தேர்வுக்குழு உறுப்பினர்களாகச் செயல்பட்டு என்னைத் தேர்ந்தெடுத்திருக்கும் திலகவதி, காவ்யா சண்முகசுந்தரம், சமயவேல் ஆகியோருக்கு என் அன்பார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மேடையில் என் எழுத்துகளைப்பற்றி உரையாற்றிய நண்பர்கள் புதுச்சேரி நாகராசன், உமா மகேஸ்வரி, எம்.கோபாலகிருஷ்ணன், ரவி சுப்பிரமணியன் ஆகியோருக்கும் நிகழ்ச்சியை சிறப்பான வகையில் ஒருங்கிணைத்துக்கொண்டிருக்கும் சிவக்குமாருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பள்ளிப்பருவத்திலிருந்து புத்தகவாசிப்பின் மீது பேரார்வத்தை எனக்குள் உருவாக்கி வளர்த்தவர்கள் என்னுடைய ஆசிரியர்கள். பள்ளிக்காலத்திலும் கல்லூரிக்காலத்திலும் எனக்கு ஆசிரியர்களாக இருந்தவர்களே என்னைச் செதுக்கிய சிற்பிகள். கண்ணன், தா.மு.கிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், ராமசாமி, ம.இலெ.தங்கப்பா என ஒவ்வொரு கட்டத்திலும் என்னை ஆற்றுப்படுத்திய ஆசிரியர்கள் அனைவரையும் இத்தருணத்தில் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். எங்கள் சிற்றூரில் இயங்கிய இலக்கிய அமைப்பான திருக்குறள் கழகத்தின் தூண்களாக இருந்து எனக்கு ஊக்கமளித்த சகோதரர்கள் அர.இராஜாராமன், வளவ.துரையன், சா.வே.ராமச்சந்திரன் அனைவரையும் இக்கணத்தில் மகிழ்ச்சியுடன் நினைத்துக்கொள்கிறேன். என் சிறுகதை முதன்முதலாக தீபம் இலக்கிய இதழில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஒவ்வொரு கட்டத்திலும் என் படைப்புகளை இடைவிடாது வாசித்து, எண்ணற்ற உரையாடல்கள் வழியாகவும் கேள்விகள் வழியாகவும் என்னைச் சிந்திக்கத் தூண்டி என் எழுத்தை மேம்படுத்திக்கொள்வதற்கு என் நண்பர்களே எப்போதும் எனக்கு உற்ற துணையாக இருந்து வந்திருக்கிறார்கள். பழனி, சிவக்குமார், அருணா, மகேந்திரன், மதியழகன், சூத்ரதாரி என்னும் கோபாலகிருஷ்ணன், மோகனரங்கன், ராஜேந்திரன், தேவராசன், நிர்மால்யா, ஜெயஸ்ரீ, நாகராஜன், நாகசுந்தரம், கே.பி.நாகராஜன், பிரபஞ்சன், சுந்தர ராமசாமி, வண்ணதாசன்,  ஜெயமோகன், சந்தியா நடராஜன் அனைவரையும் இம்மேடையில் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன்.

எழுத்தே என் வழி என நான் கண்டுணர்ந்த காலத்திலிருந்து ஒவ்வொரு படைப்பையும் எழுதி முடிக்கும் கணங்களில் நெஞ்சை நிரப்பும் நிறைவுணர்ச்சியையும் பரவசத்தையும் உணர்ந்துவந்திருக்கிறேன். ஊறிப்பெருகி நிறைக்கும் ஊற்றைப்போல, ததும்பி வழியும் உயிர்த்தேனைப்போல இனிமைமயமான அந்தப் பரவசமே மனத்தை இயக்கும் மாய விசை. நட்சத்திரத்தையும் நம்மையும் ஒன்றென எண்ணத் தூண்டும் அற்புதமான விசை. எழுத்தின் வழியாக நாம் தொடுவதற்குச் சாத்தியமான புள்ளி எது என்பதை அந்த விசையின் வழியாகவே நான் அறிந்துகொண்டேன். எழுத்து எனக்கு அருந்துணை. எழுத்து எனக்கு கைவிளக்கு.

எழுதத் தொடங்கி ஐந்தாண்டுகளுக்குப் பிறகுதான் என்னுடைய முதல் சிறுகதைத்தொகுதி வெளிவந்தது. அந்த மாதத்தில்தான் எங்களுடைய மகன் பிறந்தான். வேர்கள் தொலைவில் இருக்கின்றன என்னும் அந்தத் தொகுதியை காவ்யா பதிப்பகம் வெளியிட்டது. கண்காணிப்புக்கோபுரம் என்னும் என் பதினேழாவது சிறுகதைத்தொகுதியை சந்தியா பதிப்பகம் நடராஜன் வெளியிட்டுள்ளார். என் முதல் தொகுதிக்கு எழுத்தாளர் பிரபஞ்சன்  ஒரு நல்ல முன்னுரையை எழுதிக் கொடுத்தார். அந்தத் தொகுதியைப் படித்த நண்பர் புதுச்சேரியில் எல்.ஐ.சி.பணியாளராக இருந்த ஞானப்பிரகாசம் ஓர் அறிமுகக்கூட்டத்தை ஏற்பாடு செய்தார். ராஜேந்திரசோழன், ராஜ்.கெளதமன் இருவரும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உற்சாகமூட்டும் வகையில் அன்று உரையாடினார்கள். அந்த நினைவுகள் எல்லாம் என் மனத்தில் பசுமையாக உள்ளன. அந்த நிகழ்ச்சி என் எழுத்துக்காக நான் பெற்ற முதல் கெளரவம்.  அவர்கள் அனைவரையும் இத்தருணத்தில் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன்.

விளக்கு வழங்கும் புதுமைப்பித்தன் விருதை ஏற்றுக்கொள்ளும் இத்தருணத்தில் எண்ணற்ற மறக்கமுடியாத பலபழைய நினைவுகள் மனத்தில் பொங்கியெழுகின்றன. என் தம்பி பாரதிதாசன், ஆனந்தி, அருணா, சிவக்குமார் என என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் என் முக்கிய நண்பர்கள் விட்டல்ராவ், திருஞானசம்பந்தம், ரவி சுப்பிரமணியம், கவிஞர் வெயில், நரேந்திரகுமார், இராஜபாளையம் ஆனந்தி, மயிலாடுதுறை மருதசாமி, தஞ்சாவூர் மருத்துரை, சர்வோதயம் மலர்கிறது நடராஜன், மதுரை இராதாகிருஷ்ணன், பாலபுரஸ்கார் விருதாளர் கமலவேலன் என ஏராளாமானவர்கள் இந்த அரங்கத்தில் நிறைந்திருக்கிறார்கள். என்னுடன் விருதைப் பெறும் மூத்த ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியம் அவர்களும் அவருடைய நண்பர்களும் உறவினர்களும் இங்கே நிறைந்திருக்கிறார்கள். அனைவரையும் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். இதுவரையிலான என் எழுத்துக்கான அங்கீகாரமாகவும் இனி எழுதக்கூடிய எழுத்துக்கான உத்வேகமாகவும் நினைத்து இவ்விருதை நெகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன். என்னுடைய எல்லாச் செயல்களுக்கும் உற்ற துணையாக இருந்து தோள்கொடுக்கும் என் மனைவி அமுதாவின் ஆதரவு இந்த மண்மீது எனக்குக் கிடைத்திருக்கும் மாபெரும் பலம்.

(04.01.2020 அன்று மதுரையில் மெட்ரோபோல் விடுதியில் நடைபெற்ற சென்னை விருது வழங்கும் விழாவில் நிகழ்த்தப்பட்ட ஏற்புரை)

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 214 ஆம் இதழ் வெளியீடு பற்றிவிஷக்கோப்பைகளின் வரிசை !
author

பாவண்ணன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    வளவ. துரையன் says:

    பாவண்ணனி ஏற்புரை மனத்தை நெகிழ வைக்கிறது. சிலர் இறுதியில் சொல்லலாம் என எண்ணி உரையில் நன்றி கூறவே மறந்து விடுவார்கள். அப்படி இல்லாமல் தொடக்கத்திலேயே தன்னைச் செதுக்கியவர்கள் என்று ஒரு பட்டியலே சொல்லி அவர் அவர்களுக்கெல்லாம் ந்ன்றி சொல்லி இருப்பது அவர் முதல் சிறுகதை எழுதியதிலிருந்து பலகதைகள் எழுதி சிறந்த சிறுகதை எழுத்க்தாளராக, நாவலாசிரியாராக, குழந்தை எழுத்தாளராக, கட்டுரையாசிரியராக, மொழிபெயர்ப்புக்குச் சாகித்திய அகாதமி விருது பெற்றவராக விளக்கு விருது பெறும் இன்றைய நிலையிலும் மாறாமல் இருக்கிறார் என்பதையே காட்டுகிறது. இன்னும் மேலும் மேலும் பல விருது பெறவாழ்த்துகள்

  2. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    விளக்கு விருது பெறும் பாவண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *