ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
சென்னையில் வங்கி ஊழியராக இருக்கும் சம்யுக்தா மாயா [ கோ. உமா மகேஸ்வரி ] போடிநாயக்கனூரைச் செர்ந்தவர்; 1982 – இல் பிறந்தவர். இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு ‘ டல்கௌசியின் ஆரஞ்சு இரவு ‘ . உயிர்மை வெளியீடான இத்தொகுப்பில் 65 கவிதைகள் உள்ளன. இவர்
கவிதைகளைப் பற்றி மனுஷ்யபுத்திரன் தனக்கே உரிய நடையில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
தனிமையின் பெரு
நதியொன்றின் அடியாழத்தில்
யுகாந்திரங்களாய் கிடக்கும்
புராதன சிற்பமொன்றைப்
போல மௌனமாகத்
ததும்பிக்கொண்டிருக்கின்றன
சம்யுக்தா மாயாவின் கவிதைகள்
அவை முறிந்த கனவுகளோடும்
உடைந்த மனோரதங்களோடும்
மிக ஆழமான உரையாடல்
ஒன்றை வாசகனோடு
நிகழ்த்துகின்றன. இயற்கையின்
காலத்தின் , பருவநிலைகளின்
பல்வேறு உணர்வெழுச்சிகளை
இந்தக் கவிதைகள் மிக
ஆழமாகத் தீண்டுகின்றன
— என்று நூலின் சாராம்சத்தை முன்வைக்கிறார் மனுஷ்யபுத்திரன்.
மொழிநடையில் நுணுக்கம் , நல்ல கட்டமைப்பு , அதிகமாகச் சொற்களைப் பயன்படுத்துதல் , புதிய
சிந்தனைகள் , படிமங்கள் ஆகிய இயல்புகள் காணப்படுகின்றன. ஆழ்ந்த காதல் விரிவாகவும் ஒருவித
மனத்தவிப்புடன் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
என் பார்வையில் இத்தொகுப்பின் ஆகச்சிறந்த கவிதை ‘ நிரம்பும் வெளி ‘ எனலாம். காதலர்களுக்குள்
ஏற்பட்ட ஊடல் அல்லது இயல்பாக ஏற்பட்ட மௌனம் இடைவெளியாக உணரப்படுகிறது. இக்கவிதையின் கட்டமைப்பு நேர்த்தியாக உள்ளது.
நீ சொன்னது போலவே
இடைவெளிகள் தேவையானவை
இடைவெளிகள் இனிமையானவை
— என்று கவிதை தொடங்குகிறது. இடைவெளியின் சிறப்பைக் கீழ்க்காணும் வரிகள் விளக்குகின்றன.
எனக்குள் உன் நிகழ்வையும்
உனக்குள் உன் இருப்பையும்
நிச்சயம் செய்பவை !
— கவிதையில் நுணுக்கம் ஒரு நல்ல வெளிப்பாடு.
அனலில் முறியும் கருவேலங் கிளையினின்று
வழியும் பிசினென அடர்ந்து பிசுபிசுக்கும்
இருள் கவியும் – இப்புலனழி மாலையில்
— இவ்வரிகளில் தனிமையின் தகிப்பு புதிய உவமையால் விளக்கப்படுகிறது. இந்த இடைவெளி கவிஞருக்கு என்ன தருகிறது.
வேறொன்றும் தந்துவிடவில்லை எனக்கு
இட்டு நிரப்பும் கொஞ்சம் மௌனத்தையும்
ஒரு கவிதையையும் தவிர
— என்று கவிதை முடிகிறது.புதுக்கவிதைக்கு நல்லுதாரணமாகச் சொல்லலாம்.
ஓர் இயற்கைக் காட்சியை ரசிக்கிறார் கவிஞர். எளிய சிறிய கவிதை.ஒரு கோடு கிழித்ததுபோல்
நேர்படப் பேசுகிறது.
அசைவுகளற்ற குளத்தின் மேற்பரப்பை
உற்றுப் பார்த்தபடி மேலே வட்டமிடுகிறது
சட்டென்று நீருக்குள் மூழ்கி
அலகில் கவ்விக் கொண்டு எழும்புகிறது
சலனமுற்றுக் கலங்கும் குளத்தைக் குறித்து
யாதொரு அக்கறையுமில்லை பறவைக்கு
— சலனமில்லாத குளத்தின் அமைதியை ரசித்துப் பழகியிருப்பார் போலிருக்கிறது. சலனம் கண்டவுடன்
பறவை பற்றிச் சிந்திக்கிறார் கவிஞர்.
‘ புதிய மொழி ‘ என்ற கவிதை காதல் பிரிவை ஆழமாகப் பேசுகிறது. ஒரு சிறிய நீரோடையின் சலசலப்பு மொழிநடையில் தெரிகிறது.
யாரோ ஒருவர் வேறொருவருக்காக்
வனைந்திருந்த மொழியை – அதன்
அச்சின் சுழலிலிருந்து அபகரித்த
மேதைமையுடனும் சூதுடனும்
—அழகான சொல்லாட்சியில் நயமான வெளிப்படு.
அந்த மொழி என்ன மொழி என்ற விளக்கம் ஏதும் கவிதையில் இல்லை. வாசகன் யூகத்திற்கே விடப்பட்டுள்ளது.
பனிக்குடத்திலிருந்து வெளியேறும் சிசு
வெதுவெதுப்பான நீரில்
பிரசவிக்கப்படுவதைப் போல் – நம்
ஆன்மாக்களைப் பிடித்த முடிச்சுகள்
குருதி வழிய அறுத்தெறியப் படுவதை
அறியாமல் இருக்க – அந்தப்
புதுமொழியின் கதகதப்பான
அடுக்குகளைப் போர்த்திக் கொண்டோம்
ஈரம் உறிஞ்சும் ஒரு கம்பளியென
— என்ற வரிகளில் கவித்துவம் ஒளிர்கின்றது. அசாதாரண சிந்தனை கவிஞரை வெற்றியடையச் செய்து
விட்டது.
அந்த மொழி என்னவாக இருக்கும் ? ஆண் – பெண் மனமயக்கத்தில் பேசுவதுதான் என்று நான் நினைக்கிறேன்.
‘ நிழல் விழா உரையாடல் ‘ – இந்தத் தலைப்பே புதுமையாக இருக்கிறது; கவித்துவமானது. ‘ எந்த
முடிவுக்கும் வராத , நோக்கம் நிறைவேறாத என்று பொருள் கொள்ளலாம். வழக்கம் போல் கவிதையைப்
படித்து முடித்ததும் ஒரு பனிமூட்டம் தெரிகிறது. ஒரு மரத்தடியில் இருவர் அமர்ந்திருக்கிறார்கள் . அதாவது இந்தக் கவிதைக்குச் சொந்தக்காரரும் வேறு ஒருவரும் … வெயில் அடிக்கிறது. ‘ மெல்லிய வெயில் ஒரு நடன மாதென / நெளிந்து கொண்டிருக்கிறது வெளியெங்கும் ‘ என்கிறார்.
அடுத்து ஒரு நுணுக்கமான பதிவு …
வெயிலில் அசையும் காற்று
கிளைகளின் நிழல் இருப்பை
சதா இடமாற்றம் செய்து கொண்டிருக்கிறது
— இயற்கைக் காட்சி ! பாலுமகேந்திராவின் காமிரா போல சம்யுக்தாவின் எழுதுகோல் செயல் பட்டுள்ளது. கவிதையின் முடிவு சப்பென்றிருக்கிறது. கருப்பொருள் காய்ந்த இலைவிட எடை குறைவாக
இருக்கிறது. எதையோ சொல்ல நினைத்து , சரியாக எதையும் சொல்லாமல் போன நிலை தோன்றுகிறது.
மௌனத்தில் கரைந்து இவர்கள் காணாமல் போகிறார்கள்.
நம் மௌனத்தின் பரப்பெங்கும் பகற்பொழுது
பாத்திரத்தின் விளிம்பிலிருந்து வழியும்
ஒரு தேன் துளியென பிசுபிசுக்கிறது
— என்ன சொல்ல வருகிறார் ? இக்கவிதையில் வாசகன் பெறும் எதிர்பாராத மௌனங்கள் மனநிறைவைத் தரவில்லை.
புத்தகத்தின் தலைப்புக் கவிதை ‘ டல்கௌசியின் ஆரஞ்சு இரவு ‘ . டல்கௌசி ஹிமாசல் பிரதேசத்தின்
ஒரு குளிர் நகரம். இக்கவிதையில் ஓர் இரவு பேசப்படுகிறது. இரவின் விளக்கொளியைத்தான் ஆரஞ்சு இரவு என்கிறார்.
இந்த அறைக்குள் உஷ்ணம் கூட்டும்
ஆரஞ்சு வெளிச்சத்தை நோக்கி ஈர்க்கப்படும்
விட்டில்களின் இறகுகள் நாளைய் காலை
உதிர்ந்திருக்கும்
—என்ற வரிகள் யதார்த்தத்தைச் சுட்டுகின்றன.இரவு தனிமையில் கழிகிறது. கவிதைப் போக்கில் நுணுக்கமான சொல் நெருக்கத்தில் ஒரு பூடகத்தன்மைதவிர்க்க முடியாமல் தங்கிவிடுகிறது.
சில கவிதைகள் தனித்தனியாக எழுதப்பட்டாலும் ஒரே கவிதையின் நீட்சியாகவே பல கவிதைகள் காணப்படுகின்றன். ‘ அபூர்வ துளி ‘ கவிதையும் மேற்சொன்ன முறையில் அமைந்துள்ளது.
பொதுவாக இவர் கவிதைகளைப் படிக்கும் போது ஒருவித சலிப்பு தோன்றுகிறது. இப்போக்கு , கவிதைகளை வாசகர்களிடமிருந்து விலக்கும் அபாயத்தை
உருவாக்குகின்றது. எடுத்துக்காட்டாக …
‘ இரகசியமாய் புதைத்த நட்சத்திரங்கள் ‘ என்ற கவிதையைப் பார்ப்போம்.
தட்டான்கள் தாழப் பறந்தறியா நகரத்தின்
ஆரஞ்சு விளக்குகள் எரியும்
நடுசாமக் கனவுகளின் நாற்சந்தியில்
இறங்குகிறேன் எந்த முன்னறிவிப்புமின்றி
புறக்கணிக்கப்பட்ட வரலாற்றின் நினைவுகள்
பீளை வடியும் கண்களுடன்
தெருக்களெங்கும் நடமாடுவதை
இமை கொட்டாது வெறிக்கிறது
— கடைசி நான்கு வரிகளுக்கு என்ன பொருள் ? அந்த வாக்கியம் முடிந்துவிட்டதா இல்லையா ?
அவசியமான இடங்களில் பத்தி பிரித்திருந்தால் ஒரு வாக்கியம் முடியும் இடம் , அடுத்த வாக்கியத்தின் தொடக்கம் தெளிவாக இருக்கும்.
கவிதையில் , ‘ கால் மாற்றி நிற்கும் / சிலை வீரனின் போர்க்குதிரை ‘ என்ற வரிகளோடு வாக்கியம்
முடிகிறது என்று நினைக்கிறேன்.
வெளவால்கள் நெருங்கும் ஆகாயம்
தீர்க்கமாக கைவிடும் நட்சத்திரங்களை
வாதாம் மர இலைகள் – சிவக்கும்
நிலத்தின் ஆழத்தில் பத்திரமாய்
புதைத்துவிட்டு வெளியேறுகிறேன்
எந்த சுவடுகளுமின்றி
— என்று கவிதை முடிகிறது. இக்கவிதையின் கருப்பொருள் என்ன என்று யோசிக்கிறேன்.விடை தெரியவில்லை.
முடிவாக , சில நல்ல கவிதைகளும் , சில சுமாரான கவிதைகளும் , பல இருண்மைக் கவிதைகளும்
அடங்கிய தொகுப்பு இது !
…….
.