செலேடார் ஆற்றின் சதுப்புநில யட்சிகள் – முதல் பாகம்
சிறுகதை – அழகர்சாமி சக்திவேல்
கி.பி 1896, மார்ச் 15
சிங்கப்பூரின் செலேடார் ஆறு, கடலோடு கலக்கும் அந்த ஆற்று முகத்துவாரத்தில், நான் என் சம்பன் படகில் இருந்து, கரை இறங்கினேன். கரையில் இறங்கிய உடன், நான், எனது கையில் இருந்த டீகம் ஈட்டியை, பாசத்துடன் முத்தமிட்டேன், காரணம், இன்று என் டீகம் ஈட்டி, செலேடர் ஆற்றுக்குள், வேட்டையாடி, வேட்டையாடி, நிறைய மீன்களைப் பிடிக்க, எனக்கு உதவியாய் இருந்தது. இன்றைய வேட்டையில் கிடைத்த அத்தனை மீன்களையும் நான் எனது லூக்கா மீன் கூடையில் நிரப்பினேன். டீகம் ஈட்டியை, படகின் ஓரத்தில் வைத்துவிட்டு நான் லூக்கா மீன் கூடையை ஒரு கையில் தூக்கிக் கொண்டேன். இன்னொரு கையில், மறக்காமல், எனது இன்னொரு நண்பனான சம்பிட்டை எடுத்துக்கொண்டேன். சம்பிட் எடுத்து வராமல், சதுப்புநிலக் காட்டுக்குள் நான் வருவதைப் பார்த்தால், அப்பா நிச்சயம் திட்டுவார். சம்பிட் என்பது மனிதனல்ல. அது ஒரு வெறும் ஊதுகுழல்தான். ஆனால் மனிதனைப்போல, எதிரிகளிடம் இருந்து, நிச்சயமாய் என்னைப் பாதுகாக்கும் ஒரு ஆயுதம். சம்பிட் ஊதுகுழலில் இருந்து, நான் அம்பை ஊதினால், எப்பேர்ப்பட்ட எதிரியும் பலத்த காயமடைவான் அல்லது இறந்துபோவான் என்பது உண்மை. நான், இப்போது, எனது சம்பிட் ஊது குழலுக்குள், கூர்மையான அம்பினை நிரப்பிக்கொண்டேன். கரையில் இருந்து, நான் சதுப்புநிலம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன். கரையோரம் இருந்த அடர்ந்த பாகாவ் மரங்கள் என்னை வரவேற்றது. மனிதனுக்கு இரண்டு கால்கள்தான் உண்டு. ஆனால், இந்த பாகாவ் மரங்களுக்கோ எண்ணற்ற வேர்க்கால்கள் உண்டு. கால்களை நீருக்குள் பரப்பி இருந்த அந்த மரங்கள், மனிதரைப் போல, காற்றடித்த பக்கம், அதன் கிளைகளை ஆட்டி, ஆட்டிக் கையசைத்த விதம், எனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்தது. நான், பாகாவ் மரங்களின் அழகை ரசித்துக்கொண்டே, சதுப்பு நிலத்தில் நடந்தேன்.
எனது பெயர் கோன் கோஹா. நான் ஒரு கடல் நாடோடிக் கூட்டத்தைச் சேர்ந்தவன். எனது அப்பாதான், எங்கள் நாடோடிக் கூட்டத்தின் பாட்டின் என்ற தலைவன். பாட்டின் தலைவன் கட்டளையை மீறி நடப்பவர், எங்கள் கடல் நாடோடிக் கூட்டத்தில், யாரும் இலர். இன்று, பாட்டின் ஆன எனது அப்பாவும், எங்கள் குல மாந்த்ரிக குருவான, பாவாங்கும், என்னை வரச்சொல்லித், தகவல் அனுப்பி இருந்ததால்தான், நான் இப்போது இந்த சதுப்பு நிலக்காட்டுக்குள், நடந்து போய்க்கொண்டு இருக்கிறேன். கடல் நாடோடியான எங்கள் வாழ்க்கை எப்போதும் கடலுக்குள்ளும், கடலை ஒட்டிய ஆற்று முகத்துவாரத்துக்கு உள்ளும்தான் இருக்கும். எப்போதாவது மட்டுமே, நாங்கள் இந்த நிலத்திற்கு வருவோம். மற்ற எல்லா நாட்களிலும், சம்பன் படகுகளையே, எங்கள் வீடாக்கி, அங்கேயே நாங்கள் எங்கள் வாழ்க்கையைக் கழிப்போம். நாங்கள் பிறப்பதும், மீன் பிடிப்பதும், உண்பதும், உறங்குவதும் எல்லாமே அந்த சம்பன் படகுக்குள்தான். ஏதாவது முக்கிய நாட்கள் என்றால், நாங்கள் நிலத்தில் இருப்போம். இன்று எங்கள் பாவாங் மந்திரவாதி குரு, என்னைக் கூப்பிட்டு அனுப்பி இருக்கிறார் என்றால், நிச்சயம் அதில் ஏதோ ஒரு முக்கிய விஷயம் இருக்கும் என்பதை நான் ஊகித்துக்கொண்டே நடந்தேன். வழியில், ஒரு சில மரங்களின் கிளைகளில், தொப்புள் கொடி மாலைகள் தொங்கிக் கொண்டு இருந்தன. பிள்ளைத்தாச்சியின் வயிற்றிலிருந்து. குழந்தை வெளிவந்த மறுகணம், கூடவே ஒட்டிக்கொண்டு இருக்கும், தொப்புள்கொடியை அறுத்து, மரங்களில் கட்டுதல் எங்களது மரபு. அப்படித் தொங்கவிடும் தொப்புள்கொடிகள்தான், எங்கள் குழந்தைகளை, ஹன்ட்டு யட்சிகளிடம் இருந்து காப்பாற்றுகிறது என்பது எங்கள் ஆழ்ந்த ஆன்ம நம்பிக்கை..
கி.பி 2019, அக்டோபர் 15
எனது பெயர் ஸ்டெப்னி வில்லியம்ஸ். அந்த சாயாந்திர வேளையில், நான், சிங்கப்பூர் லென்ட்டர் அவென்யூவில், சாலையின் ஓரமாக, மிதவேகத்தில் ஓடிக்கொண்டு இருந்தேன். ஆட்கள் நடமாட்டம் அவ்வளவாக இல்லை. ஆனால், பஸ்கள், கார்கள் என, இடைவிடாது, வண்டிகள், சாலையின் இருமருங்கிலும் ஓடிக்கொண்டு இருந்தன. சாலையின் ஒரு ஓரத்தில், எம்ஆர்டி புகைவண்டியும் அவ்வப்போது, தண்டவாளத்தில் பயணம் செய்துகொண்டு இருந்தன. “சர் சர்” என்ற வண்டிகள் சத்தத்திற்கும், “தடக் தடக்” என்ற எம்ஆர்டி சத்ததிற்கும் இடையில், நான் ஓடிக்கொண்டிருந்தேன். மேலே நான் அணிந்திருந்த டீஷர்ட், நான் ஓடும்போது, மேலே மேலே வந்ததால், எனது பளிச் என்ற இடைப்பகுதி, அவ்வப்போது வெளியே தெரிந்தது. கீழே, நான் போட்டிருந்த கால்சராயும், வியர்வையால், தொப்பையாய் நனைந்து போய், வெள்ளை வெளேர் என்று இருந்த எனது தொடைகளை உரசி, சங்கடப்படுத்திக் கொண்டிருந்தது.. தினம் நான் ஓடும்போது, ஏற்படும் சங்கடங்கள்தான் இவை. சிரமத்தை மறந்து ஓடி, நான் குடியிருக்கும் அபார்ட்மெண்டுக்குள் நுழைந்தேன். லிப்டில் ஏறி, எனது அறையை அடைந்தேன். அறையின் முன்னால், நான் ஸ்டெல்லாவின் செருப்பைக் கண்டேன். ஸ்டெல்லா, ஆபீஸில் இருந்து வந்துவிட்டாள் போலும். நான் அறைக்குள் போய், தொப்பென்று நாற்காலியில் உட்கார்ந்தேன்.
நான் ஒரு சிங்கப்பூர் குடிமகள். ஒரு பெரிய சிங்கப்பூரின், கணினி நிறுவனத்தில், ப்ராஜெக்ட் மேனேஜர் ஆக வேலை பார்க்கிறேன். எனது வயது முப்பது. எனது அப்பா, அம்மா ஈசூனில் வசிக்கிறார்கள். நான் சம்பாதித்து வாங்கிய காண்டோமினியம் இது. ஸ்டெல்லா ஜோன்ஸ், எங்கள் அலுவலகத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவள். மலேசியாவில் படித்து, சிங்கப்பூரில் வேலை வாங்கி, என்னோடு, தங்கி இருக்கிறாள். என்னை விட வயதில் இளையவள். அவள் என்னைப் போலவே அழகி என்றுதான் சொல்லவேண்டும். ஸ்டெல்லா குளிக்கப்போய் இருந்தாள். ஆபிசில் இருந்த வரும்போது, நூலகத்தில் இருந்து, ஏதோ புத்தகம் எடுத்து வந்து இருந்தாள்.. புத்தகத்தின் தலைப்பைப் பார்க்காமலே. நான் புத்தகத்தைத் திறந்து படிக்க ஆரம்பித்தேன். படிக்க, படிக்க, புத்தகம் எனது படிக்கும் ஆர்வத்தை கூட்டிக்கொண்டே போனது. அது “ஓராங் செலேடர்” என்ற, சிங்கப்பூரின் ஆற்று முகத் துவாரத்தில், பதினாறாம் நூற்றாண்டில் வசித்த, பழங்குடியினர் பற்றிய ஒரு புத்தகம் ஆகும். புத்தகம் சொன்ன விவரம் இதுதான்.
“ஓராங் அஸ்லி” என்பவர்கள் மலேசியா தீபகற்பத்தின் பழங்குடிகள் ஆவார்கள். இந்த பழங்குடிகளை, நாம் பதினெட்டு வகையாகப் பிரிக்கலாம். அதில் ஒரு வகையான, ப்ரோடோ மலாயா என்ற ஒராங் செலேடர் பழங்குடிகள், கடல் நாடோடிகள் என்று அழைக்கப்பட்டார்கள். இந்தக் கடல் நாடோடிகள், ஜோஹோர் நீரிணையை ஒட்டி இருந்த ஆற்று முகத்துவாரங்களில் வாழ்ந்து வந்தார்கள். இவர்களைப் பற்றித்தான், இந்தப் புத்தகம் விரிவாகப் பேசுகிறது”. நான் மணியைப் பார்த்தேன். “வாவ் மணி எட்டாகி விட்டதே.. இன்னும் நான் குளிக்கவேண்டும். ஸ்டெல்லாவுடன் சாப்பிடப் போக வேண்டும். நாளை, ஆபிஸ் ப்ராஜெக்ட் விசயமாக, சில டாகுமென்ட்ஸ் தயாரிக்கவேண்டும்.”. நான் புத்தகத்தை மூடினேன். குளிக்கக் கிளம்பினேன். .
கி.பி 1896, மார்ச் 15
கோன் போகாவான நான், இப்போது காட்டின் நடுவே வந்துவிட்டேன். அங்கே எங்கள் நாடோடிக்கூட்டம் ஒன்றாய்க் குழுமியிருந்தது. அப்பாவும், பாவாங் மந்திரவாதி குருவும், ஒரு கட்டை மேடையில் உட்கார்ந்து இருந்தார்கள். நான் பாவாங்கிற்கும், அப்பாவுக்கும் வணக்கம் சொன்னேன். அப்பா அருகில் உட்கார்ந்து கொண்டேன். அப்பா, கூட்டத்தின் உள்ளே இருந்த, எங்கள் நாடோடிக் கூட்ட நோயாளிகளை, உற்று கவனித்துக் கொண்டு இருந்தார். அவரது முகத்தில், கவலை, அப்பட்டமாய்த் தெரிந்தது. நடுவில் பெரிய படையல் படைக்கப்பட்டு இருந்தது. படையலில், உபிகாயு மரவள்ளி அவியல், லேமங் அரிசிப் புட்டு, உம்புட் பனங்கிழங்குக்கறி, கேடுபட் பனைக் கொழுக்கட்டை, போன்ற பல உணவுகள் படைக்கப்பட்டு இருந்தன. படையலின் முன்னால், சிலர் செவாங் நடனம் ஆடிக்கொண்டு இருந்தார்கள், ஓரத்தில் வரிசையாய் நின்றுகொண்டு இருந்த, எங்கள் செலேடர் பெண்கள், பதப்படுத்தப்பட்ட பூலு மூங்கில் கம்புகள் மூலம், கீழே தட்டித்தட்டி இசை எழுப்பிக்கொண்டு பாடினார்கள். அதற்கேற்ப ஆண்கள் கையில், நோய் தீர்க்கும் இலைகளை வைத்துக்கொண்டு, யட்சிகளை வேண்டிக்கொண்டு, செவாங் நடனம் ஆடினார்கள், ஆடுபவர்கள் நடுவில், எங்கள் நாடோடிக் கூட்டத்தில், நோய்வாய்ப்பட்டு இருப்பவர்களில், சிலர் உட்கார்ந்தும், சிலர் படுத்தும் இருந்தார்கள். அத்தனை நோயாளிகள் மேலும், செவாங் ஆடுபவர்கள், நோய் தீர்க்கும் இலைகளைத் தடவிக்கொண்டே இருந்தார்கள். ஆட்டம் முடிந்தது. இப்போது பாவாங் எழுந்துகொண்டார். மேல்வானத்தையும், சுற்றி இருந்த மரங்களையும் நோக்கி பற்பல மந்திரங்களைச் சொன்னார். அவர் மந்திரத்துக்குக் கட்டுப்பட்ட சில யட்சிகள், மரத்தில் இருந்து, கிளைகளை பலமாக ஆட்டுவதை நான் பார்த்து வியப்படைந்தேன். அப்பாவும், மற்ற மக்களும், பயபக்தியுடன் மரத்து யட்சிகளை வணங்கினார்கள். கூட்டம், யட்சிகளுக்குக் கொஞ்சம் படைத்துவிட்டு, மீதமிருந்த உணவுகளைச் சாப்பிட ஆரம்பித்தது.
நோயாளிகளில் பலர், நோய்வலி தாங்கமுடியாமல், பாவாங்கைப் பார்த்து கதறினார்கள். அப்பா, இப்போது பாவாங்கைப் பார்த்து, செலேடர் மொழியில் பேசினார். “ குருவே.. நம் இனத்தின் நோயாளிகள் கூடிக் கொண்டே போகிறார்கள். சிலருக்கு கைகள் போனது. சிலருக்குக் கால்கள் இல்லை. சிலர், அதீத டெமாம் காய்ச்சலால் துடிக்கிறார்கள்.ஏன் இவ்வாறு நடக்கிறது?”. கவலை தோய்ந்த, அப்பாவின் பேச்சுக்கு, பாவாங் புன்னகைத்தார். “நம் யட்சிகள்தான், இவ்வளவு நோய்கள் பெருகக் காரணம்.” என்றார் பாவாங். மறுபடியும் அவரே பேசிக்கொண்டு போனார். நான் அவர் பேசுவதைக் கூர்ந்து கவனித்தேன். “யட்சிகளில் நல்ல யட்சிகளும் இருக்கிறது. கெட்ட யட்சிகளும் இருக்கிறது சில யட்சிகள், நல்லவர்களாக இருந்தும், நாம் அவர்களுக்குக் கோபம் மூட்டும் செயல்கள் செய்வதால், அந்த நேரத்தில், கோபத்தில், நம் இனத்தைச் சபித்து விடுகிறார்கள். இப்படிப் பல வகைகளிலும், நம் இன மக்கள், யட்சிகளால் அழிந்து போகிறார்கள்” பாவாங்கின் குரலிலும், இப்போது கவலை இருந்தது. அப்பா குறுக்கிட்டார். “இதற்குப் பரிகாரம் ஏதாவது இருக்கிறதா? சொல்லுங்கள் குருவே. நீங்கள் சொல்வதை நாங்கள் செய்கிறோம்” அப்பாவின் குரல் மிகவும் இளகியிருந்தது. பாவாங் அப்பாவை இப்போது பார்த்தார். “வருத்தம் வேண்டாம் பாட்டின்.. நாம் சீக்கிரமே செமா பந்தாய்க்கு ஏற்பாடு செய்யவேண்டும். எல்லா யட்சிகளையும், அந்த செமா பந்தாய்க்குக் கூப்பிடவேண்டும். ஆண் யட்சிகள், பெண் யட்சிகள், ஆண் பெண் சாராத யட்சிகள், அத்தனையும் நாம் வரவேற்று உபசரிப்போம்.. நம் உபசரிப்பில், அவை மகிழ்ச்சி அடைந்தால், நோயாளிகளின் நோய்கள், தன்னால் மறைந்து போகும்” என்றார். அப்பாவின் முகத்தில், என்னால் இப்போது நிம்மதியைப் பார்க்க முடிந்தது. “ஆகட்டும் குருவே.. அப்படியே செய்கிறேன்” என்றார் அப்பா. அருகில் நின்றுகொண்டு இருந்த நானும், அதை ஆமோதித்துத் தலையாட்டினேன்.
பாவாங் இப்போது என்னைப் பார்த்தார். “எப்படி இருக்கிறாய் போகா?” என்றார். “நான் நலம் குருவே” என்றேன். பாவாங் சிரித்தார். “போகா.. உன்னை இங்கே வரச்சொன்னதன் காரணம், உன் அப்பாவையும், என்னையும் பார்த்து நலம் விசாரிப்பதற்காக மட்டுமே அல்ல.” என்றார். நான் சற்றே குழம்பினேன். பாவாங் தொடர்ந்தார். “உன் அப்பாவிற்கு வயதாகிறது. எனவே, நீ அடுத்த பாட்டின் ஆகும் நாள் கூடிய சீக்கிரம் வரும். அதற்கேற்ப, உன் அப்பாவிற்கு, இதுவரை நான் சொல்லித்தராத, சில பண்ட்டு வசிய மந்திரங்களை, உனக்குச் சொல்லித் தருகிறேன். இந்த மந்திரங்களைச் சொல்லி, நீ ஆண், பெண் யட்சிகளை முடிந்தவரை வசியப் படுத்தலாம்.”. நான் ஆச்சரியத்துடனும், மகிழ்ச்சியுடனும் குருவை வணங்கினேன். “ஆனால் ஒரு எச்சரிக்கை. இந்த மந்திரங்களால், யட்சிகளுக்கு எந்த வகையிலும் தீங்கு வந்துவிடக்கூடாது. அப்படி ஏதாவது கெட்டது நடந்தால், அதன் விபரீத விளைவுகளை, நீ சந்திக்க வேண்டி வரும். புரிகிறதா?” பாவாங்கின் எச்சரிக்கை வார்த்தைகள், “மந்திரம் கற்கப் போகிறோம்” என்ற மகிழ்ச்சியில் மிதந்துகொண்டு இருந்த எனது சிந்தனையில், ஓரளவு ஏறியது. பாவாங், அப்பாவுக்கு விடை கொடுத்து அனுப்பினார். இப்போது பாவாங் எனக்கு மந்திரங்கள் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார். நான் ஆர்வத்துடன், அதைக் கற்றுக்கொண்டேன்.
கி.பி 2019, அக்டோபர் 16
நானும், ஸ்டெல்லாவும் ஆபீசிற்குள் நுழைந்தோம். ஸ்டெல்லா என்னிடம் வேலை பார்க்கும் ஜூனியர். எனவே, அவள் வேலை பார்க்கும் இடத்திற்கு ஸ்டெல்லா சென்று விட்டாள். நான் எனது ப்ராஜெக்ட் மேனேஜர் அறைக்குச் சென்றேன். அங்கே, எனக்கு முன்னரே வந்து ஜெரால்ட் காத்துக்கொண்டு இருந்தான். ஒரு ஆண்மகனின் கம்பீரத்துக்குத் தேவையான கட்டுடல், சிவந்த மேனி, கருகரு மீசை, கீழே ஒரு அழகான குறுந்தாடி. டிப்டாப் ஆன பேண்ட் சர்ட், இதுதான் ஜெரால்டின் அழகு. என்னைப் பார்த்ததும், “வணக்கம்” எனக் கொஞ்சம் வழிந்தான். ஜெரால்டுக்கு, என் அழகின் மீது எப்போதும் ஒரு கண். என்னோடு, தனிமையில் பேசுவதற்காய், எப்போதும் ஏதாவது சந்தர்ப்பங்கள் கிடைக்காதா என்று ஏங்குவதை\, நான் பலமுறை பார்த்து இருக்கிறேன். “என்ன விசயம்” என்று நான் வினவினேன். “இன்று, அந்த ப்ராஜெக்ட் பிசினஸ் ஸ்பெக் முடித்தாகவேண்டும். ஏற்கனவே, உனக்கு நான் இமெயிலில் அனுப்பிவிட்டேன். அதை நீ பார்த்தாயா ஸ்டெப்னி? ஸ்பெக்கில், உனக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லையென்றால், நாம் கஸ்டமருக்கு அனுப்பி வைக்கலாம்.” ஜெரால்ட் பேசிக்கொண்டே போனான். அவன் பேசுகிற பேச்சில்கூட, ஆண்மை கொப்பளித்தது. நான் அவன் பேச்சை இடைமறித்தேன். “ஜெரால்ட்..இந்த விசயத்தை, நீ தொலைபேசியிலேயே பேசி இருக்கலாமே. இதற்காக, மெனக்கெட்டு, எனது அறைக்கு வரவேண்டும் என்ற அவசியம் இல்லையே?” என்று நான் கேட்டவுடன், ஜெரால்ட் சிரித்தான். “இல்லை உன்னைப் பார்க்கவேண்டும் போல இருந்தது. அதான்”. அவன் வழிந்தான். “சரி பார்த்து ஆகி விட்டதல்லவா.. கிளம்பு.. கொஞ்சம் நல்ல காற்று வரட்டும்” என்று நான் சொன்னவுடன், சிரித்துக்கொண்டே மிடுக்காய் நடந்தான் ஜெரால்ட்.
மதியம் நானும் ஸ்டெல்லாவும், சாப்பிடப் போனோம், நான் எனக்குப் பிடித்த, யங் டோஃபு வாங்கிக்கொண்டேன். ஸ்டெல்லா, அவளுக்குப் பிடித்த, ஹாக்கியேன் நூடில்ஸ் வாங்கிக் கொண்டாள். சாப்பிடக் குவிந்திருந்த அந்தக் கூட்டத்தில், அங்கும் இங்கும் அலைந்து தேடி, கடைசியில், இருவரும் ஒரு மேசையில் அமர்ந்தோம். ஸ்டெல்லாதான் முதலில் பேச ஆரம்பித்தாள். “இன்று காலையில் ஜெரால்ட், உனது மேசைக்கு வந்து இருந்தானே.. என்னவாம்” என்றாள். நான் ஆச்சரியம் அடைந்தேன். “ஒன்றும் இல்லை. ஸ்பெக் விசயமாகப் பேச வந்து இருந்தான். ஏன் ஸ்டெல்லா என்ன விசயம்? என்றேன் நான். “ஒன்றும் இல்லை.. சும்மாதான் கேட்டேன்.” என்றாள். நான் ஸ்டெல்லாவை இப்போது நோண்டினேன். “ஜெரால்ட் எப்படிப்பட்டவன் ஸ்டெல்லா?” என்று நான் கேட்டவுடனே, “ஐயோ.. அவன் பெரிய அறுவை ஆயிற்றே” என்று சொல்லிவிட்டாள் ஸ்டெல்லா.. நான் சிரித்தேன். “எப்படி அவன் அறுவை என்று சொல்கிறாய்” என்று நான் கேட்டவுடன், ஸ்டெல்லா ஜெரால்ட் புராணம் பாட ஆரம்பித்துவிட்டாள். “அவன் ஒரு மண்டை கர்வம் படித்தவன்” என்று ஆரம்பித்த ஸ்டெல்லா, ஜெரால்ட் பற்றி விடாது பேசிக்கொண்டு இருந்தாள். நாங்கள் சாப்பிட்டு முடியும் வரை, ஜெரால்ட் பற்றித்தான் பேசினாள் ஸ்டெல்லா. அவளுக்கு, சுத்தமாய் ஜெரால்டைப் பிடிக்கவில்லை என்பதை நான் உணர்ந்தேன். ப்ரொஜெக்டில், ஜெரால்ட், எந்தவாறெல்லாம், அவளைக் கஷ்டப்படுத்துகிறான் என்று ஸ்டெல்லா பேசிக்கொண்டே போனாள். உண்மையில், இப்போது ஸ்டெல்லாதான், என்னிடம், அதிகமாய் அறுப்பதுபோலத் தோன்றியது. நான், பெரிதாய் ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை. எனது அறைக்குள் வந்து, வேலையில் கவனம் செலுத்தினேன்.
வேலை முடிந்ததும் வீடு திரும்பினேன். வழக்கம் போல, நான் அன்றும் எனது மெது ஓட்டத்தை முடித்தேன். அசதியுடன் நாற்காலியில் சாய்ந்தேன். மறுபடியும் ஸ்டெல்லா எடுத்து வந்த அந்தப் புத்தகம், எனது கண்ணில் பட்டது. நான் புத்தகத்தின் பக்கத்தைப் புரட்டினேன். அதில், மலேசிய யட்சிகள் பற்றி எழுதி இருந்தது. “யட்சிகள் குறித்த ஆழ்ந்த நம்பிக்கை, மலேசியாவின், ஓராங் அஸ்லி நாடோடி இனத்தவரிடம் இருக்கிறது. ஹன்ட்டு என்று அழைக்கப்படும் இந்த யட்சிகளில் பல வகை உண்டு. ஹன்டு ஏர் என்ற நீர் யட்சிகள், ஹன்டு போகோங் என்ற இறந்தவர்களின் ஆவி யட்சிகள், ஹன்டு ராயா என்ற, மந்திரவாதிகளுக்கு அதிக சக்தி கொடுக்கும் யட்சிகள், ஹன்டு பெனங்கள் என்ற நடுநிசி யட்சிகள் போன்ற பல வகை யட்சிகளில், ஹன்டு ஏர் யட்சிகள்தான், ஜோகூர் நீரிணைகளிலும், செலேடர் ஆற்றுமுக துவாரங்களிலும், செலேடர் சதுப்புநிலக் காடுகளிலும் வாழ்வதாக, ஓராங் செலேடர் கடல் நாடோடிகள் நம்புகிறார்கள். யட்சிகள், மனித வடிவிலும் இருக்கலாம், பறவை, மரங்கள் வடிவிலும் இருக்கலாம். மேலும், இந்த யட்சிகள், ஆணாகவும் இருக்கலாம், பெண்ணாகவும் இருக்கலாம் அல்லது, இந்த இரண்டு இனங்கள் சாராத நிலையிலும் இருக்கலாம்”. புத்தகம், இன்னும் நிறையத் தகவல்களைச் சொன்னது. நான் கடிகாரத்தைப் பார்த்தேன். இரவுக்குளியல் குளிக்கப் போனேன்.
கி.பி 1896, மார்ச் 16
அடுத்த நாள் வந்தது. இரவும் ஆரம்பித்துவிட்டது. பிரகாசமான முழுநிலவின் வெளிச்சம் பட்டு, செலேடர் ஆறு பிரகாசித்துக்கொண்டு இருந்தது. நான் எனது சம்பன் படகில், நிலவை அண்ணாந்து பார்த்துக்கொண்டு படுத்து இருந்தேன். இப்போதெல்லாம், இரவுகளில், நான் எனது சம்பன் படகில், ஆள் அரவம் இல்லாத இடங்களுக்கு வந்துவிடுகிறேன். தனிமை எனக்குப்பிடித்து இருக்கிறது. இன்றும் அப்படித்தான். அந்த இரவில், நான், எனதருகில் எனது அன்புக்குரிய டீகம் ஈட்டி, இன்னும் கொஞ்சம் அருகில், எனது கெச்சாபி இசைக்கருவி, இவைகளுடன்தான், நான்,எனது நேரத்தைக் கடத்திக்கொண்டு இருந்தேன். எனக்குக் காதலி இன்னும் கிடைக்கவில்லை. கெச்சாபி இசைக்கருவிதான் இப்போதைக்கு என்னுடைய காதலி. ஒரு இடைமெலிந்த, அதேநேரத்தில் அழகிய பிருஷ்டங்களை உடைய ஒரு பெண்ணைப் போலவே, ,அடியில் பருத்து, வளைந்து, பின்னர் இடையில், குவிந்து வளைந்து, ஒரு பெண்ணின் நிர்வாண உடல் போல, அதற்கு மேல் என்னால் எனது கெச்சாபியைக் கற்பனை பண்ணிப்பார்க்க முடியவில்லை. நான் மெல்ல எனது கெச்சாபியைத் தடவினேன். காதலின் சுகத்திலும், காற்றின் குளிரிலும், எனது நரம்புகள் துடித்தன. இப்போது கெச்சாபியை வாயில் வைத்து வாசிக்கத் தொடங்கினேன். எனது, உதடுகள் பட்டு, கெச்சாபியின் மூங்கில் நரம்புகள் துடித்தது. அந்த நரம்புகளின் வெட்கத்துடிப்பு, இசையாய் மாறி, அந்த செலேடர் ஆறெங்கும் பரவத் துவங்கியது. நான் எப்போதாவது, சதுப்பு நிலத்தில் இருக்கும்போது, அங்கே எனது நில நாடோடியான, ஜாகுன் இன நண்பனை சந்திப்பதுண்டு. அவனிடமிருந்து, என்றோ நான் மனப்பாடம் செய்த மலாய்ப் பண்டுன் கவிதை, இன்று எனது கெச்சாபியில் இசையாய் மாறி, வடியத் தொடங்கியது. மலாய் பண்டுன் கவிதைக்கென ஒரு வரி இலக்கணம் உண்டு, அந்த வரி இலக்கணம் மாறாமல், நான் அதனை இசையாய் வடிக்க ஆரம்பித்தேன்.
நிலாப் பெண்ணே நிலாப் பெண்ணே
கனவு கண்டேன் நிலாப் பெண்ணே
காதலி வந்தென் காதைக் கடித்தாள்
கன்னத்தில் ஒன்று திருப்பித் தந்தேன்.
கனவு கண்டேன் நிலாப் பெண்ணே
காதலி மடியில் படுக்கக் கண்டேன்
கன்னத்தில் ஒன்று திருப்பித் தந்தேன்
கவிதை சொன்னேன் காதலைச் சொன்னேன்.
காதலி மடியில் படுக்கக் கண்டேன்
நிலாப் பெண்ணே நிலாப் பெண்ணே
கவிதை சொன்னேன் காதலைச் சொன்னேன்
காதலி வந்தென் காதைக் கடித்தாள்
நான் இசையில் என்னை மறந்தேன். என் சம்பன் படகு, இப்போது எனக்கு சொர்க்கமாய்த் தெரிந்தது. என் வாலிப உடலில், ஆண் தினவும், முறுக்கும் கூடிக் கொண்டே போனது. நான் எனது மீசையைத் தடவியபடி, இன்பக் கனவுகளில் மிதந்தேன்.
திடீரென்று இன்னொரு சத்தம். நான் சம்பன் படகில் இருந்து, திடுக்கிட்டு விழித்தேன். அது சத்தமல்ல. மாறாய், இனிய செருளிங் ஹிடங்கின், புல்லாங்குழல் இசை ஆகும். இந்த நள்ளிரவில், இப்படியொரு மனதை வருடும் இசையா?. யார், இந்நேரத்தில் இசைப்பது?. நான் அதிக ஆச்சரியம் அடைந்தேன். நான், அந்தத் தேன் இசையை, உற்று கவனித்தேன். அது.. அது.. நான் பாடிய அதே மலாய் பண்டுன் கவிதைதான். எனது செகாபியில் இசைத்த அதே பாட்டினை, இப்பொது யாரோ ஒருவர், செருளிங் புல்லாங்குழலில் வாசிக்கிறார்கள். “அவர் யாராக இருக்கும்?” தெரிந்துகொள்ள நான் இப்போது துடித்தேன். நான் எனது டாயங் துடுப்பு, எங்கே இருக்கிறது என அவசரமாகத் தேடினேன். ஓடிப்போய், துடுப்பை எடுத்து, நான் படகை, இசை வந்த திசை நோக்கி, வலிக்க ஆரம்பித்தேன். படகு போய்க்கொண்டே இருந்தது. ரொம்பதூரம் படகை வலித்துக்கொண்டு, நான் வந்துவிட்டேன். இன்னும், அந்த செருளிங் இசை வாசிப்பவரை, என்னால் நெருங்க முடியவில்லை. எனக்கு இப்போது களைப்பாய் இருந்தது. நான் படகு வலிப்பதை நிறுத்தினேன். அப்போதுதான், கூப்பிடு தூரத்தில் நான் அவளைப் பார்த்தேன். செருளிங் இசையை அவள் இன்னும் வாசித்துக் கொண்டுதான் இருந்தாள். என்ன ஒரு அழகு அவள். அவளைச் சுற்றி என்னவொரு ரம்மியமான காட்சி. செதுக்கிய யானைத்தந்தம் போல அவளது இரு கைகளில், செருளிங் கம்பீரமாக வீற்றிருந்தது. மூக்கில் இருந்து அவள் மூச்சுக்காற்று, செருளிங் மூங்கில் குழலில் இசையாய் மாறி வந்த விதம், திரண்டுவரும் கடல் அலைகள், பாறையில் மோதி, பின்னர், அதன் நீர்த்திவலைகளைச் சுற்றித் தெளிப்பது போல இருந்தது. அவள் அழகிய மார்புகளைத் தழுவி இருந்த இளம்பச்சைநிற கெபாயா ரவிக்கையும், அவள் மெல்லிய இடையைத் தழுவி இருந்த, தங்க நிற சாரோங்கும், அந்த நிலவொளியில், பளீர் என ஜொலித்தது. அவள் நீண்ட படகோ, வெள்ளி நிறத்தில் பிரகாசமாய் இருந்தது. இன்னும் அவள் இசைத்துக் கொண்டுதான் இருந்தாள். அவளைச் சுற்றிலும், வண்ண வண்ண மீன்கள், நீரில் மிதந்தபடியே, அவள் இசைக்கேற்ப ஆடிக்கொண்டே இருந்தன. அவள் மூக்கில் எழும் நாதம், என்னை எங்கெங்கோ கொண்டு சென்றது. நான் என்னையும் அறியாமல், மெய்மறந்து கைதட்டினேன். திடுக்கிட்ட அவள், பாட்டை நிறுத்தினாள். நான், இப்போது, எனது தவறை உணர்ந்து, நாக்கைக் கடித்தேன்.
கி.பி 2019, டிசம்பர் 16
ப்ராஜெக்ட் ஆரம்பித்து இரண்டு மாதங்கள் ஓடிவிட்டது. நான், ஸ்டெல்லா, ஜெரால்ட் எல்லோரும் ப்ராஜெக்ட் வெற்றிகரமாக முடிய, கடினமாய் உழைத்தோம். ஜெரால்ட் இன்னும் என்னைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டுதான் இருக்கிறான். அவன் என்னைத் தீவிரமாகக் காதலிக்கிறானோ என்ற ஐயம் எனக்கு வந்தது. நான் சந்தேகப்பட்டதை, உறுதிப்படுத்தும் வகையில், இன்று காலையில் ஜெரால்ட் என்னைப் பார்க்க வந்தான். “நேற்று சிங்கப்பூர் எக்ஸ்போவில் ஒரு கண்காட்சிக்குப் போய் இருந்தேன் ஸ்டெப்னி” என்று ஆரம்பித்தான். நான் அவன் முகம் பார்க்காமலே, “மேலே சொல்லு” என்றேன். “அங்கே இந்தக் கைக்கடிகாரம் வாங்கினேன். மிக அழகான கைக்கடிகாரம் இது. இந்தக் கடிகாரத்தின் அழகை, கண்காட்சியில் பார்த்ததுமே, எனக்கு உன் நினைவுதான் வந்தது. உடனே வாங்கினேன் ஸ்டெப்னி. இதை எனது அன்புப் பரிசாக வைத்துக்கொள் ஸ்டெப்னி”, என்றபடியே, அவன் முதுகுக்குப் பின்னால், மறைத்து வைத்து இருந்த, அந்தக் கைக்கடிகாரத்தை, என்னிடம் நீட்டினான். நான் இப்போது அவன் முகத்தைப் பார்த்தேன். களங்கமில்லாத அவன் முகத்தில், என் மீதான ஒரு அப்பட்டமான காதல், எனக்குத் தெரிந்தது. எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. “நன்றி ஜெரால்ட்” என்று பரிசை வாங்கி வைத்துக்கொண்டேன். அதன்பிறகு, அவன் முகத்தில் ஏற்பட்ட அந்தப் பிரகாசம், ஆண்மை நிறைந்த அவனது மீசை, அவனது அளவான உதடுகளுக்கு மேல் துடித்த துடிப்பு, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி என்று தெரியாமல், அவனது கைகளில் பரவியிருந்த, கை மயிர்களை அவன் தேய்த்த தேய்ப்பு, அத்தனை பித்தான்கள் போட்டும், போடாத அந்த ஒற்றைப் பொத்தானின் வழியே, அவன் உணர்ச்சி வசப்பட்டதால், கொஞ்சம் குத்திட்டு நின்ற அவனது நெஞ்சு முடிகள், ஒரு வித பதற்றத்தில், கைகளைத் தேய்த்துக்கொண்டு இருந்தவன், இப்போது தலைக்கு மாறி, அந்தத் தலையைக் கோதிக்கொண்டே என்னைப் பார்த்த பார்வை. எனக்கு, அவன் காதல் புரிந்துபோனது. ஆனால், நான் எதுவுமே சொல்லவில்லை. பரிசுப்பொருளை என் கைப்பைக்குள் வைத்துக்கொண்டேன். “சரி வேலை நிறைய இருக்கிறது, அப்புறம் பார்க்கலாம்” என்று நான் சொன்னவுடன், “ஒகே” என்று சந்தோசமாகச் சொல்லிக்கொண்டே, அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
அந்த இரவில், எனது வழக்கமான செயல்கள் முடிந்து நான் படுக்கப் போனேன். நான் செய்தித்தாள் பார்த்தேன். மலாய் பண்டுன் கவிதை பற்றி, அதில் எழுதியிருந்தது. “பண்டுன் கவிதை, மலாய் வடிவக் கவிதைகள் ஆகும். பண்டுன் கவிதைக்கு, சில இலக்கணம் உண்டு. ஒவ்வொரு பத்தியிலும் உள்ள, இரண்டாவது, மற்றும் நான்காவது வரிகள், அதன் அடுத்த பத்தியின், முறையே, ஒன்றாவது மற்றும் மூன்றாவது வரிகள் ஆக இருக்கும். கவிதையின், கடைசிப் பத்தியில் மட்டும், முதல் பத்தியில், மீதமிருக்கும், ஒன்றாவது வரியும், மூன்றாவது வரியும், கடைசிப் பத்தியின், முறையே, இரண்டாவது வரியாகவும், நான்காவது வரியாகவும் இருக்கும். இதுவே பண்டுன் கவிதையின் முக்கிய இலக்கணம் ஆகும்”. இப்போது, ஸ்டெல்லா எனது அறைக்கு வந்தாள். “உன்னிடம் கொஞ்சம் பேசவேண்டும் என்று தொண்டையைச் செருமினாள்”
(தொடரும்)
அழகர்சாமி சக்திவேல்