தமிழில் – குமரி எஸ். நீலகண்டன்
லீலாக் என்ற புனைப் பெயரில் ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதிவரும் உபாசனா சிறந்த ஓவியரும் கூட. தனது ஒவியங்களையும் கவிதைகளையும் இரண்டு சிறகுகளாய் கொண்டு இலக்கிய உலகில் பயணிப்பவர். கலை ஆசிரியரும் கூட.
கவிஞரின் வாழ்த்துக்கள்
என் கவிதைகளுக்கு
எந்த விதிகளுமில்லை.
எழுதுவதற்கு எந்த
காரணங்களுமில்லை.
ஒவ்வொரு வரியும் சமமானது.
மென்மையானது.
ஒவ்வொரு வார்த்தையும்
ரகசியம் இழந்தது.
என் கவிதைகள்
செய்யுளாய் இருக்கும். திணறும்.
என் கவிதைகள் ஆடும். தடுமாறும்
மீன்களும் பறவைகளும்
காற்றைக் கடந்து,
உருளும் மேகங்களின்
அலைகளை உடைத்துக் கொண்டு
பறக்கும் மீன்களைப் பார்க்கிறேன்.
ஆழ்கடலினடியில் நீந்தும்
பறவைகளை பார்க்கிறேன்.
ஒளிக்கதிர்கள் பிரகாசிக்கின்றன
நீரின் நீல வானங்களையும்,
ஒரு குழந்தையின்
பிரதிபலிக்கிற கைகளையும்.
அப்பாலும் ஆழத்திலுமிருக்கிற
உயிரினங்களையும்.
சன்னலின் ஓரம் ஒரு
சாவித் துவாரத்தின்வழியாக
ஒரு உலகிற்கும்
இன்னொன்றிற்குமிடையே
ஆச்சரியமாய் வாயைப் பிளந்து
கண்களை அகல விரித்து
பறக்கும் மீன்களாய்
நீந்தும் பறவைகளாய்
கனவுப் பார்வைக்கு விருந்தூட்டுகிறேன்
லீலாக்கின் தோட்டம்
லீலாக் தோட்டத்திலிருக்கிறாள்.
அங்கே கிளைகளெங்கும்
தொங்கும் கவிதைகள்.
பசுமைக்குள் பூத்த வார்த்தைகளோடு.
தோட்டம் ஒரு ரகசியமானது.
அந்த ரகசியம் விதைத்த
விதையும் புனிதமானது.
அது உயர ஏறும். வளரும்.
கொடியாய் படரும்.
அமைதியான ஒரு
மூலையிலிருந்து தூரப் பரவும். படரும்.
அதன் மையத்திலிருந்து
தேன் சொட்டிக் கொண்டிருக்கும்.
இங்கே அன்பு மிருதுவானது.
அமைதியானது. வனாந்தரத்தில் பிறந்தது.
மடியாதது. லீலாக் என்பது
சூட்சுமமான உலகம்.
இதன் இதயத்தில்தான்
சொட்டிக் கொண்டிருக்கிறது
தூய வாழ்க்கையின் தேன்.
இதுதான் லீலாக்கின் தோட்டத்தின் கதை
புயல்
உன்னையே தேடிக்
கொண்டிருக்கிறேன்..
நகரும் நிழல்களில் ஒரு
குறிப்பின் பிரதிபலிப்பில்…
உன் இடி முழக்கத்திற்காக
ஏங்கிக் கொண்டிருக்கிறேன்
என் ரத்தநாளங்கள் வழி நர்த்தனமாட.
என் இதயத்தை நனை.
மண் காத்து கிடக்கிறது
வெடிக்கத் துடிக்கிற விதைகளை நிரப்பி.
அறியாக் கனவுகளின் ஒரு
தோட்டம் என்னோடு
அசைந்து அசைந்து
அலைகளாய் ஆடும்.
அது ஆர்வத்தின் ஆழத்தில்
துளைத்து தூரத்து
கரைகளுக்கு செல்லும்.
புயலே. நான் கைகளை ஏந்தி
உன் வருகைக்காக காத்திருக்கிறேன்.
உன் பேரொளியோடு பெருமுழக்கத்தோடு
உன்னை வரவேற்க காத்துக் கொண்டிருக்கிறேன்.
தங்கம்
நேரம் போய் கொண்டிருக்கிறது.
சட்டைப் பைத்துளையில்
தொலைகிற பத்து காசாய்.
தங்க கட்டிகளைப் போல் நான் நேரத்தை
தொலைத்துக் கொண்டிருக்கிறேன்.
தாகமுள்ள பயணியின்
தேவைகள் அதிகம்.
என் சட்டைப் பையினுள்
எங்கோ ஒரு துளை தொலைவின் தளமாய்…
விலைமதிப்பற்ற அதை
இழக்க இயலாது.
காதல் விவகாரம்
பகலின் விரல்கள் விலகி
இரவின் கன்னத்தை தழுவ
வீங்கிய இன்பம்
மாலை மேகங்களாய் வெடித்து உருள
அவர்களோடு ஒரு
இனிமையான வலி இரவுக்காக
இன்னும் இன்னுமென ஏங்க.
வெடித்துச் சிதறும் வண்ணங்களை
கடைந்து தருகிற
அதிர்ச்சி பயணியாய் முத்தம்.
ஒரு காதல் விவகாரத்திற்கு
மாலை மேகங்கள் இயற்கையின்
மறுக்க இயலாத சான்று
சந்தோஷ சவாரி
வருவதை எனக்கு பார்க்க
இயல்கிறது. அலைகள்
திரும்பிக் கொண்டிருக்கின்றன.
பருவம் முழுமையாய் கனிந்து விட்டது.
நம்பிக்கையெனும் கயிற்றில்
நான் தொங்கிக் கொண்டிருக்கிறேன்.
அது முடிவில்லாத
விண்மீன் திரள்களைக் கடந்து
தொலைவிலுள்ள விண்மீன்களுக்கும்
தூக்கிச் செல்லும் என்னை
சந்தோஷ சவாரியில்.
குறுகிய மாலைகள்
பாதித் திறந்த கதவுகளின்
முன் நின்று நீ
எவ்வளவு காலம்தான்
காத்திருக்க இயலும்.
இன்னொரு பகல் உதிக்க
இரவு வர வேண்டும்.
நூலிழைகளாய் இருக்கும்
அந்தி ஒளிக் கீற்றுகளில்
தொங்கிக் கொண்டிருக்க இயலாது.
எங்கோ மாலை முடிவுற வேண்டும்
மிகுதி
நூறு சூரியன்கள் மரணிக்கின்றன
ஆயிரம் சூரியன்களை ஜனனித்து.
ஆயிரம் சூரியன்கள் மரணிக்கின்றன…
இன்னும் லட்சக்கணக்கில் அவை பிறக்கின்றன.
இந்த பிரபஞ்சக் கணக்கு புரியுமா?
ஒரே வார்த்தையில் என்னால்
சொல்ல இயன்றது மிகுதி.
வழிதல்
கசப்பின் புளிப்பின்
அடுக்குகளின் அகத்தே
இலேசான இன்பத்தின் அழுத்தம்
புதையலாய் உள்ளது.
அன்பின் இலேசான சுரண்டலில்
அதைச் சொட்ட வைக்கத் தயாராகுங்கள்
ஆங்கிலத்தில் கவிதைகள் – உபாசனா என்ற லீலாக்
தமிழில் – குமரி எஸ். நீலகண்டன்
punarthan@gmail.com
- தமிழ்நாட்டில் சில நல்ல விஷயங்களும்
- பாகிஸ்தானில் விலைவாசி
- புத்தகங்கள் குறித்த அறிமுகக் குறிப்புகள்
- கள்ளா, வா, புலியைக்குத்து
- குழந்தைகளும் மீன்களும்
- திருப்பூரில் ஒரு நாள் திரைப்பட விழா 24/1/2020
- வன வசனங்கள் என்ற உபாசனாவின் ஆங்கில கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்
- வாழ்வை தேடும் கண்துளிகள்
- 2022 ஆண்டு இந்தியர் மூவர் இயக்கும் விண்கப்பல் பயணத்துக்கு நான்கு விமானிகள் ரஷ்யாவில் பயிற்சி
- சொல்வனம் இதழ் எண் 215 வெளியீடு பற்றி
- குடியரசு தின நல்வாழ்த்துக்கள்