- குடியுரிமை
கோவில் தேவாலயம் மசூதி என்று
எங்கும் காண முடியும் இவர்களை.
தங்கள் மதத்தினரா என்று பார்த்து
தர்மம் செய்பவர்கள் உண்டுதான்.
என்றாலும் பிச்சைக்காரர்கள் என்பதே
இவர்களது பொது அடையாளமும்
தனி அடையாளமும்.
இவர்கள் நம் நாட்டு மக்கள் என்பதைப் பற்றியோ
இவர்களுக்குப் பேச்சுரிமை கருத்துரிமை
வாக்குரிமை இல்லாதது பற்றியோ
மதவாதிகளோ அரசியல்வாதிகளோ
இலக்கியவாதிகளொ ‘இய’வாதிகளோ
பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை.
’ஒரு பிச்சைக்காரரிடம் குறைந்தபட்சம்
பத்தாயிரம் ரூபாய் இருக்கும்’ என்று
வீதியோரம் சுருண்டு கிடந்த ஒரு மூதாட்டிக்குப்
பத்து ரூபாய் கொடுக்கப்போன
வெள்ளைக்காரரிடம் சொன்ன
நம்மூர்க்காரர்
வழிகாட்டி என்ற போர்வையில்
வழிபறிப் பகற்கொள்ளைக்காரராய்
நடமாடிக்கொண்டிருப்பவர்.
பிச்சைக்காரர்களின் பாதாள உலகத்தைப்
பற்றிப் படமெடுத்தவருக்கு
விருதுகள் கிடைத்தன.
வருமானம் கிடைத்ததா தெரியவில்லை.
‘பிச்சைக்காரிக்கு கர்ப்பம் ஒரு கேடா’
என்று கேட்கிறார்
மாபெரும் மனிதநேயவாதி ஒருவர்.
இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் தெரியுமா
என்று கண்ணையுருட்டிக் கேட்டார்
இன்னொருவரை மொட்டையடித்து
விரைவில் திகில் படம் ஒன்றை
எடுக்கப் போகிறவர்.
திண்டுதிண்டாய்
கைகாலிருக்கு,
வேலை செய்தால் என்ன என்று
குண்டுசட்டியில் குதிரையோட்டுபவரும்
கேட்கத் தவறவில்லை.
’இறப்பதற்குள் ஒரு முறையேனும்
தேர்தலில் வாக்களித்துவிடவேண்டும்’
என்று கூறிய பிச்சைக்கார முதியவரின்
முகச்சுருக்கங்களுக்காகவாவது
ஏதேனும் ஓவியப்பள்ளி
மாடலாக அமர்த்திக்கொண்டு
அவருக்கு இருவேளை சோறுதந்தால்
எத்தனை நன்றாயிருக்கும்.
அன்ன சத்திரமா, எழுத்தறிவித்தலா
எது அதிகம் தேவை ஏழைக்கு
என்று பேச
பொன் மணி பட்டுப்புடவையில்
மின்னும் பலர்.
என்னவொரு மவுசு இங்கே
பட்டிமன்றத்துக்கும்
கண்டனக்கூட்டங்களுக்கும்!
உலகக்குடிகளாய்
பலதும் பேசியபடியே
வீதியோரம் நலிந்தழிவோரைக்
கண்டுங்காணாமல்
இன்னும் பல நாட்கள் இப்படியே
கடந்துபோய்க்கொண்டேயிருப்போமாக.
2.அன்புத் தமிழுக்கு என்றுமான நன்றி
(பிப்ரவரி 21, அனைத்துலகத் தாய்மொழி நாள்)
மொழியின் மீதுள்ள மாறாக்காதலைச்
சுமந்தபடி
வழிபோகிறேன்.
கைபர் கணவாய் எங்கிருக்கிறதென்று
எனக்குத் தெரியாது.
குமரிமுனையை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன்.
அடுத்தென்னவாகுமென்று அறியாத
அகால வாழ்விதில்
எனக்குத் தெரிந்ததெல்லாம் தமிழும்
கொஞ்சம் ஆங்கிலமும்.
தெரிந்த தமிழ் என்று நான் சொல்லக்கேட்டு
செல்லமாய்க் குட்டிச் சிரிக்கிறது
தமிழ்!
கற்றது கையளவு; கல்லாதது கடலளவு.
நான் வந்த வழியெங்கும்
வாழும் வழியெங்கும்
அன்புத் தமிழின் அரவணைப்பே
திசைகாட்டியாக
திக்கற்றவருக்கான பாதுகாப்பு
அரணாக….
தன் தாயை உத்தமியென்றபடி
இன்னொரு தாயை அவிசாரி என்று
நடுத்தெருவில் வசைபாடுபவருக்கொப்பாய்
என் மொழியைப் போற்றிய கையோடு
இன்னொரு மொழியைத் தூற்ற மாட்டேன்.
செத்த மனிதர்கள் உண்டு.
செத்தமொழி என்று எதுவுமில்லை.
அவரவர் அன்பு அவரவருக்கு.
அவரவர் மொழியின் அருமை
அவரவரே அறிவார்.
அத்தனை பேரின் தாய்மொழிகளுக்கும்
உரித்தாகட்டும் நம்
அன்பு வணக்கம்.
ஒரு கை பிடித்திருக்கும்
கூர்கல்லையே அவருடைய புகைப்படக்கருவி
திரும்பத்திரும்ப ZOOM செய்துகொண்டேயிருக்கிறது.
பின்னணியில் பேரோலம் கேட்டுக்கொண்டிருக்கிறது.
அவருடைய புகைப்படக்கருவியின் அண்மையிலேயே இருவருடைய கைகால்கள் முறிக்கப்பட்டு மண்டையோடு பிளந்து கிடக்கின்ற சடலங்களை அவர் ஏன் படம் பிடிக்கவில்லை என்று புரியாமல் குழம்பிய புகைப்படக்கருவிக்கு அந்தக்காட்சிகளையும் பதிவுசெய்ய விருப்பம்.
ஆனால் _
’ஒரு வட்டத்தின் இரண்டு அரைவட்டங்களைச் சேர்த்து முழுவட்டத்தையும் காட்டிவிட்டால், முடிந்தது எல்லாம்.
அரைவட்டத்தைக் காட்டி இன்னொரு அரைவட்டம் களவுபோய்விட்டது என்று கிளிப்பிள்ளைக்கு சொல்லிக்கொண்டிருப்பதைப்போல் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டேயிருக்கவேண்டும்.
முடிந்தால் இன்னொரு அரைவட்டத்தை இரண்டு கால்வட்டங்களாக்கிக் கிழித்தெறிந்துவிட்டால் நலம்.
வட்டத்தின் ஒரு துணுக்கைக் காட்டி பல விபரீதங்களை விளைவிக்கமுடியும்.
மறந்தும் முழுவட்டத்தை ஒரு ஃப்ரேமுக்குள் கொண்டுவந்துவிடலாகாது.
முழு நிலவைப் படம்பிடித்துக்காட்டலாம்; முழு நிகழ்வைக் காட்டலாகாது.
முயலுக்கு மூன்றே கால்கள் என்று எத்தனைக்கெத்தனை உரக்கச்சொல்கிறார்களோ அத்தனைக்கத்தனை அவர்களே அறிவுசாலிகள் அறிவோம்.’
மனிதநேயத்தோடு அத்தனை அழகாகப் பாடமெடுத்தும் புரிந்துகொள்ளாமல் தன்னுடைய அறம் சார்ந்த நம்பிக்கையுடன் தன் கண்ணில் பட்ட அந்த நொறுங்கிய வாழ்வுகளையும் பதிவுசெய்ய முற்பட்டது புகைப்படக்கருவி.
உயிரற்ற அடிமைக்கு சுயம் ஒரு கேடா என வெகுண்டெழுந்த
உடைமையாளர்
அதன் மீதும் ஒரு பெருங்கல்லை எடுத்துப் போட்டு அப்பால் செல்கிறார்.
4. நோஞ்சான் உண்மையிடம் இல்லாத ஒளிவட்டம்
நலிவடைந்து நோஞ்சானாய் நிற்கும் நிஜத்தைப் பார்க்கவோ பேசவோ
யாருக்கும் நேரமிருப்பதில்லை.
உலகம் உருண்டையானது என்று கூறியவருக்கு என்ன நேர்ந்தது நினைவிருக்கிறதா?
நினைத்த நேரத்தில் நினைத்த வடிவத்தில் உண்மையை வனைய முடியாது என்பதால்
யாருக்கு வேண்டும் இந்த உண்மை?
பொய்யின் பலவண்ணங்களோடு ஒப்பிட
உண்மையின் நிறமின்மையைை எப்படி
சிலாகிக்கமுடியும்?
தவிர, அதை அரசியல்வாதிகளுடைய வேட்டி சட்டையோடு
ஒப்பிட்டுக் கறைப்படுத்திவிடுவதும் எளிதுதானே.
பேருக்கு உண்மைவிளம்பிகளாக இருந்துகொண்டே
நூறுவிதமாகப் பொய்யை உயர்த்திப்பிடிப்பதில்தான் உயர்விருக்கிறது என்பதை அறிந்தபின்
கூறத்தகுமோ உண்மையை உண்மையாக?
’பாதி உண்மை’ என்று சொல்ல
பொய்க்கும் ஒரு ’பவுசு’ கிடைத்துவிடும்.
அயராமல் பொய்யுரைத்துக்கொண்டே அந்தப் பொய்களையெல்லாம்
உண்மையின் பன்முகங்களாகப் புரியவைப்பதில்
ஆளுக்கொன்றோ சிலவோ
ஒளிவட்டங்களும் கிடைக்க வழியுண்டு.
பின், வேறென்ன வேண்டும்?
5. மந்திரமாவது சொல்
’மந்திரமாவது சொல்’ என்று சொல்லிச் சென்றார்கள் நம் முன்னோர்கள்.
இங்கே சொல்லை வைத்து ஏவல் பில்லி சூனியம் செய்துகொண்டிருக்கிறார்கள் நிறைய பேர்.
[மந்திரத்தைப் பெரிதென்று முன்வைத்து பில்லி சூனியத்தை மதிப்பழிக்கும் மேட்டிமைத்தனம் உங்களுடையது என்று யாரேனும் மேற்படி வரிகளைப் பொருள்திரிக்கலாம். வெறுப்பு மண்டிய அவர்களிடம் உரையாடல் சாத்தியமில்லை என்ற உண்மையின் விபரீதம் அச்சுறுத்துகிறது]
சில வார்த்தைகளையே திரும்பத்திரும்பச் சொல்லி கேட்பவர்கள் மனங்களில் அவற்றை இரண்டறக் கலக்கச்செய்த பின் _
(குழந்தைகள் வளரிளம்பருவத்தினரெனில் இந்த வேலை வெகு சுலபமாகிவிடும்)
அன்போடு அருந்தச்சொல்வதாய் வெறுப்பையும் வன்மத்தையும் அவர்களுடைய குரல்வளைகளுக்குள் திணித்துவிட _
அட, நம்மைத் தேர்ந்தெடுத்துத் தருகிறார்களே என்ற நெகிழ்ச்சியோடு சிலரும்
அதன் மூலம் தனக்கொரு ஒளிவட்டம் கிடைத்த மிதப்பில் சிலரும்
அப்படி என்னதான் தனி ருசி யிதில் என்ற ஆர்வக்குறுகுறுப்போடு சிலரும்
அதை ஆற அமர மென்று தின்று அடுத்தவேளைக்கும் அது கிடைக்குமா என்று அலைபாய்கிறார்கள்;
அதற்காக தங்கள் அடிப்படை அன்பை தடியெடுத்து அடித்துத்துவைக்கவும் தயாராகிறார்கள்.
மற்றும் சிலர்
மூச்சுத்திணறலிலிருந்து தப்பிக்கவேண்டி வேகவேகமாக அவற்றை விழுங்கியும்
அவசரமாய் அருகிலிருக்கும் குடுவையிலிருந்து தண்ணீர் எடுத்துப் பருகி உள்ளிறக்கியும்
வாகாய் அவற்றால் நிரம்பிவிடுகிறார்கள்.
வன்மமும் வெறுப்பும் அவர்கள் அடியாழ மனங்களை இறுகப் பற்றிக்கொள்ள _
பின், அவர்களும் விரைவிலேயே சொற்களைக்கொண்டு செய்வினை செய்யும் பில்லிசூனியக்காரர்களாகிவிடுகிறார்கள்.
’இந்தப் பொதுவிதிக்கு படைப்பாளிகள் மட்டும் விதிவிலக்கா என்ன’ என்று அழுதுகொண்டே கேட்கும் அசரீரியின் குரலை என்ன செய்ய…..
- கோவிட் 19
- புத்தகங்கள்
- கைதட்டல்களில் முதல் ஓசை யாருடையது?
- நெம்பு கோல்
- திருப்பூர் சக்தி விருது 2020
- ஐரோப்பிய நாடுகளில் மாவட்டக் கணப்பளிக்க 300 MWe தொழிற்கூடக் கட்டமைப்பு சிற்றணுவுலை நிலையம் நிறுவத் திட்டங்கள்
- காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் – புதிய பரிமாணங்கள் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்க அறிவிப்பு மடல்
- ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்