கோ. மன்றவாணன்
பதிமூணாவது சரியா… பதிமூனாவது சரியா என்று வளவ. துரையன் அய்யா அவர்கள் என்னிடம் கேட்டிருந்தார். 13 என்ற எண்ணே பலரைப் பயமுறுத்தக் கூடியது. அவர்களைக் கேட்டால் 13 என்ற எண்ணே சரியில்லை என்பார்கள்.
எழுத்து வழக்கில் மூன்று என்று எல்லாரும் எழுதுகிறோம். அதில் எந்தப் பிழையும் இல்லை. மேலும் இருசுழி ன்-க்குப் பிறகு று-தான் வரும்; றகர வரிசைதான் வரும். அதுபோல் முச்சுழி ண்-க்குப் பிறகு டகர வரிசைதான் வரும். எனவே “ன்”, “ண்” மாறிவந்தால் அதுவே தவறெனக் காட்டிக்கொடுத்துவிடும்.
நம் எழுத்தாளர்கள், பேச்சு வழக்கு உரையாடல்களைப் பதிவு செய்யும் போது, மூன்று என்பதைக் குறிக்க மூணு என்று எழுதுகின்றனர்.
இதில் மூணு சரியா? மூனு சரியா? என்ற இரு கேள்விகளில் ஏதேனும் ஒரு கேள்விக்கு உரிய விடையைக் கண்டறிந்தால் மேற்கண்ட பதிமூணாவது சரியா… பதிமூனாவது சரியா… என்பதற்குப் பதில் கிடைத்துவிடும்.
பேச்சு வழக்கில் ஒன்று என்பதை ஒண்ணு என்று மூன்று சுழி “ண்” போட்டு எழுதுகிறார்கள். ஏன் ஒன்னு என்று எழுதவில்லை? கன்றுக்குட்டி என்பதைக் கன்னுக்குட்டி என்றும் கண்ணுக்குட்டி என்றும்… எதுசரி என்று தெரியாமல் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு என்பதற்கு ரெண்டு என்று சரியாக மூணு சுழி “ண்” போடுகிறோம். இங்கே முச்சுழி “ண்” பக்கத்தில் “டு” என்று டகர வரிசை வந்துவிட்டதால் குழப்பம் நிகழவில்லை. ஆனால் மூன்று என்பதை மூணு என்று முச்சுழி போட்டு எழுதுகிறார்கள். இது ஏன்? நம் எழுத்தாளர்கள் இதழாளர்கள் தொடர்ந்து மூணு என்று எழுதி எழுதி அவ்வாறு நிலைத்துவிட்டதா? அல்லது அதுதான் சரியா? உச்சரிப்பில் இயற்கையாக எழும் மாற்றமா?
தோன்றுகிறது என்ற சொல், பேச்சு வழக்கில் தோணுகிறது என்று எழுதப்படுகிறது. தோன்றுகிறது என்ற சொல்லில் இரண்டு சுழி “ன்” தான் வந்துள்ளது. ஏன் இப்படி எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை.
தற்காலிக முடிவாக….
எழுத்து வழக்கில் இரண்டு சுழி “ன்” பயன்படுத்தப்பட்டிருந்தால், பேச்சு வழக்கில் இரண்டு சுழி னு-தான் பயன்படுத்தப்பட வேண்டும்.
எழுத்து வழக்கில் மூன்று சுழி “ண்” பயன்படுத்தப்பட்டிருந்தால், பேச்சு வழக்கில் மூன்று சுழி ணு-தான் பயன்படுத்த வேண்டும் என்று நாம் முடிவு எடுத்துக் கொண்டால் இந்தப் பிரச்சனை தீர்ந்துவிடும்.
பதிமூணாவதா… பதிமூனாவதா… என்பதற்கு இப்போது வருவோம்.
பதின்மூன்றாம் என்றோ பதின்மூன்றாவது என்றோ எழுதிவிட்டால் பிரச்சனை இல்லை. ஆனால் பேச்சு வழக்கு அவ்வாறு இல்லை. பதின்மூன்று என்னும் சொல்லின் பேச்சு வடிவே பதிமூன்று, பதிமூன் என்றாகிப் பின்னர் பதிமூனு, பதிமூணு எனத் திரிந்திருக்க வாய்ப்புண்டு. மூன்று என்ற சொல்லில் இரண்டு சுழி “ன்” தான் உள்ளது. அப்படிப் பார்க்கிற பொழுது, பதிமூனாவது என்ற சொல் சரியாக இருக்கும்.
இதை எழுதிவிட்டு…
நான் என் வாகனத்தை எடுத்துக்கொண்டு வெளியே போனபோது பஞ்சர் ஆகிவிட்டது. அருகில் இருந்த பஞ்சர் கடைக்குத் தள்ளிக்கொண்டு போனேன். அங்கிருந்த விளம்பரப் பலகையில் இரண்டு சக்கர வாகனங்களுக்கும் நான்கு சக்கர வாகனங்களுக்கும் பஞ்சர் ஒட்டப்படும் என்றிருந்தது. கவனித்துப் பார்த்தேன். இரண்டு சக்கரம் என்பதில் உள்ள இரண்டு என்பதில் இரன்டு என்று இருசுழி “ன்” போட்டிருந்தார்கள். நான்கு சக்கரம் என்பதில் நான்குசுழி போட்டிருந்தார்கள்.
- கரோனா வைரஸ் பற்றி என் மகள் உரையாடிய ஒளிப்படக் காட்சி
- பாற்கடல்
- தமிழின் சுழி
- ஆட்கொல்லி
- வதுவை – குறுநாவல்
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- கொரோனா
- கொரோனா – தெளிவான விளக்கம்
- ஒருகண் இருக்கட்டும்
- கொரோனா அச்சுறுத்தல்:திரு. மைக்கேல் லெவிட் இன் ஆறுதலளிக்கும் குரல்.
- மாயப் பேனா கையெழுத்து
- பார்வையற்றவன்
- நடு வீட்டுப் பண்ணை