பார்வையற்றவன்

author
2
0 minutes, 0 seconds Read
This entry is part 12 of 13 in the series 29 மார்ச் 2020

மனம் திறந்து படியுங்கள், மற்றவர்க்கும் பகிருங்கள்.

அன்புத் தோழமைகளே!

மனம் திறந்து படியுங்கள், மற்றவர்க்கும் பகிருங்கள்.

கடந்த 21 மார்ச் சனிக்கிழமையோடு சென்னைப் பெருநகர இரயில்கள் நின்றுவிட்டன. விடுமுறையோ, வீட்டில் இருந்தபடி பணியோ இன்னும் சில நாளைக்கு அன்றாட அலைச்சல் இல்லைதான். ஆனாலும், இந்த ஊரடங்கு அமைதியிலும் அந்த கடக் கடக் சத்தம் உங்கள் காதில் ஒலித்துக்கொண்டுதானே இருக்கிறது? பர்பிகள் விற்றுக்கொண்டும், பாடல்கள் பாடியவாறும் வந்த பல பார்வையற்றவர்கள் இன்னும் உங்கள் கண்களில் நிழலாடிக்கொண்டுதானே இருப்பார்கள். இரயில்சேவை நிறுத்தம் உங்கள் அன்றாட வாழ்வின் இன்னொரு முனையைத்தான் துண்டித்திருக்கிறது. ஆனால், இந்த இரயிலையே நம்பியிருந்த பல பார்வையற்றவர்களின் அன்றாட வாழ்வியலே துண்டிக்கப்பட்டிருப்பதை நீங்கள் அறிவீர்களா?

பொறிகள் ஐந்தும் பிழையில்லாத பொறியியல் பட்டதாரிகளே துப்புரவுப் பணிக்கு விண்ணப்பிப்பதான வேலையின்மைப்பிணி பீடித்திருக்கிற இந்த தேசத்தில், முதுகலை ஆராய்ச்சிப் பட்டம் பெற்ற பார்வையற்றோர், முதுகில் பத்திப்பைகள் தூக்கிச் செல்வதில் வியப்புக்கு ஒன்றுமில்லை, வேதனைக்கும் நேரமில்லை. என்றேனும் ஒருநாள், வாழ்வின் கதவுகள் தனக்காகவும் திறக்கும் என்ற நம்பிக்கையைச் சுமந்தபடி, சுயதொழில் செய்து வாழும் நாடெங்கிலும் உள்ள பார்வையற்றவர்களின் நம்பிக்கையைச் சுக்குநூறாக்கியிருக்கிற நடப்பிலுள்ள ஊரடங்கிற்கு சென்னையும் விதிவிலக்கல்ல.

சென்னையின் புறநகர்ப் பகுதிகளான தின்னனூர், செவ்வாய்ப்பேட்டை, மறைமலைநகர், குளப்பாக்கம் போன்ற பகுதிகளில் குடும்பமாகவோ, தனித்தோ செறிந்து வாழும் பார்வையற்றவர்களில் பெரும்பாலோர், இரயிலில் வணிகம் செய்தும், பாடல்கள் பாடியும் வாழ்ந்துவருகிறார்கள். இவர்களில் கணிசமானவர்கள் தங்கள் உறவுகளுக்குச் சுமையாகிவிடக்கூடாது என்ற எண்ணத்தால், பல ஆண்டுகளுக்கு முன்பே தங்களின் சொந்த ஊரைத் துறந்து இங்கு வசிப்பவர்கள். இரயில் நின்றுவிட்டபோதே, தங்களின் நிகழ்காலமும் நின்றுவிட்டதாக உணரத் தொடங்கியிருக்கிறார்கள். ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்பதான செய்திகள் இவர்களிடம் பெரும் கலக்கத்தையும் அச்சத்தையும் உண்டாக்குகின்றன.

பயணத்தில் உங்களுக்குத் தித்திக்கும் கடலைமிட்டாய் தந்தவர்களின் அன்றாடம் அத்தனை உவப்பானதாக இல்லை. காலிக்குப்பியாய் கவிழ்ந்து கிடக்கிறது உங்களிடம் வாசனைத்தைலம் விற்றோரின் இன்றைய வாழ்க்கைச் சூழல்.

இன்னும் விற்றுத்தீராது எஞ்சியிருக்கிற காற்றுத்தலையணைகளை, காலம் அவர்களின் வயிற்றுக்கு உவமையாக்கிவிடுமோ என்கிற அச்சம் மேலோங்குகிறது. அவர்களின் மூச்சுக்காற்றை சுருக்கியும் பெருக்கியும் உங்கள் செவிகளைச் சில்லிட வைத்த புள்ளாங்குழல்கள் கனத்த மௌனத்தைக் கடைபிடிக்கத் தொடங்கிவிட்டன.

இதோ! ஓடும் இரயில் ஏறி, உரக்கச் சத்தமிட்டு, “ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது” என்று உங்கள் தன்னம்பிக்கையைத் தட்டியெழுப்பிய சாமானிய சவுந்தரராஜன்களின் நிகழ்காலத்தில் இருள் கவியத் தொடங்கியிருக்கிறது. “உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு” என பயணத்தில் உங்களைத் தன் பாட்டால் நெறிப்படுத்திய ஶ்ரீனிவாஸ்கள் கதியற்று நிற்கிறார்கள்.

உங்களின் களைப்பான மாலைநேரப் பயணத்தில், சின்னச் சின்ன வண்ணக்குயிலாய் கொஞ்சிக் குதூகளிக்கச் செய்த எங்கள் ஜானகிகள் இரைதேட வழியின்றி கூட்டுக்குள் முடங்கியிருக்கிறார்கள். “பட்டத்து ராணி பார்க்கும் பார்வை” என உங்கள் பயணத்தைப் பரவசமாக்கிய பல பார்வையற்ற ஈஸ்வரிகள், இன்று விட்டத்தை நோக்கியபடி வீழ்ந்துகிடக்கிறார்கள்.

காலம் எங்களின் பார்வையற்றோர் குடும்பத்தில் ஒரு தரப்பின் பிழைப்பைத் தட்டிப் பறித்திருக்கிறது. இது எமக்கான தருணம், பணியிலுள்ள பார்வையற்றவர்களாகிய நாங்கள் எங்கள் பங்களிப்பைச் செய்வதோடு, இதை வாசிக்கும் பொதுமக்களாகிய உங்களிடமும் எழுத்தின் வாயிலாக யாசிக்கிறோம். உணவு, மளிகை பொருட்கள், அன்றாடத் தேவைகள் என எதுவாகினும் உங்களால் இயன்றதைச் செய்யுங்கள். உங்களின் மிகச்சிறிய உதவியும் அவர்களின் வாழ்வை மலர்த்தும். எல்லா இன்னல்களும் தீர்ந்த இன்னொரு நாளில், ஏதோ ஒரு இரயில் சந்திப்பில், உங்களுக்கான அவர்களின் நன்றிப்பாடல் இப்படி ஒலிக்கும்.

‘தலைசாய்க்க இடமா இல்லை
தலைகோத விரலா இல்லை;
இளங்காற்று வரவா இல்லை
இளைப்பாறு பரவாயில்லை;
நம்பிக்கையே நல்லது;
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது.’

எறும்புக்கும் உணவிடும் உயரிய நோக்கத்தோடு மாக்கோலமிட்டுப் பண்டிகை கொண்டாடும் மாண்புடையவர்கள்மீது நம்பிக்கைகொண்ட
இவண், ப. சரவணமணிகண்டன்

உதவ முன்வருவோர் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்:
U.சித்ரா – 9655013030
சரவணமணிகண்டன் – 9789533964
குறிப்பு: கட்டுரையில் சென்னை ஓர் உதாரணமாகக் கையாளப்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க வணிகம் செய்யும் பார்வையற்றோரின் நிலையும் இதுதான். சென்னையைப் போலவே, பிற பெருநகரங்களிலும் பார்வையற்றோர் செறிந்து வாழும் பகுதிகளும் உள்ளன. அவை:
மதுரை – சக்கிமங்களம் ஆணையூர்
திருச்சி –விராலிமலை செல்லும் வழியில் ஆலம்பட்டி குடியிருப்பு மற்றும் காந்திநகர்
கோவை – போத்தனூர்.

Series Navigationமாயப் பேனா கையெழுத்துநடு வீட்டுப் பண்ணை
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    ஷாலி says:

    காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் சொன்னது போல்..இன்று இரண்டு வகை இந்தியா உள்ளது.ஒன்று lockdown ஓய்வில் ராமாயணம்,சக்திமான் பார்த்துக் கொண்டும், யோகா செய்து கொண்டும் ஹயாக இருக்கும் enjoy India.

    அடுத்த இந்தியா …அடுத்த வேளை சோற்றுக்கு வழியற்ற பார்வையற்றவன் இந்தியா…பஞ்சை பராரிகளின் இந்தியா..இவர்கள் கண்ணுக்குத் தெரிவது 14 ம் நாள் கழித்து வரும் கொரோனோ அல்ல…அடுத்த மணி நேரத்தில் அடி வயிற்றில் உருவாகும் பசிப்பிணி நோய் மட்டுமே!

    இந்த நடைப்பயண…ரயில் பயண இந்தியர்கள் பற்றிய கவலை யாருக்கும் இல்லை.

    இன்று ஆளுபவர்கள் வேண்டுகோள் எல்லாம்…பால்கனி மாடியில் இருந்து கை தட்டுபவர்களுக்கும்….மின்சாரத்தை நிறுத்தி விட்டு விளக்கு ஏற்றுபவர்களுக்கானது மட்டுமே! இந்திய பார்வையற்றவர்கள் பயப்படுவது கொரோனோவுக்கு அல்ல…வயிற்றுப் பசிக்கு மட்டுமே…பசிப்பிணி போக்கும் மருத்துவ மாந்தர்களே…வாருங்கள்.இந்த மருத்துவம் செய்ய டாக்டர் பட்டம் தேவையில்லை.மனம் இருந்தால் போதும்.

  2. Avatar
    ஷாலி says:

    உலகை மக்களைப் பீடித்த கொரோனா இந்திதய மக்களை பீடிக்காமலே வறுமை எனும் பசி நோயை பரப்பி விட்டது.ஊரடங்கி விட்டது…நாடடங்கி விட்டது.ஆயினும் நடைப்பயண ஏழைகளுக்கும்,ரயில் பயண பஸ்ரீவையற்ற பாடகர்களுக்கும் பசி அடங்க மறுக்கிறது.அரச கட்டளைக்காக ஊரடங்கலாம்…ஆனால் பசியடங்காது.பார்வையற்றவர்களுக்காக யார் ஒளி ஏற்றுவது?

    இன்று ஒரு நாளாவது இரவு ஒன்பது மணிக்கு ஒன்பது நிமிடம் ஒளி ஏற்ற…பசிக்கும் வயிற்றுக்கு விளக்கேற்ற யார் தயார்? இந்தியா ஒளிர்கிறது என்றார் அன்று பாரதப் பிரதமர் வாஜ்பாய்…இன்றைய பிரதமர் ஒளியேற்றச் சொல்கிறார்.

    ” ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது!” என்று பாடிப்பிழைக்கும் டி எம் எஸ் களோ…உதவும் உள்ளங்களை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *