பிச்சினிக்காடு இளங்கோ(10.4.2020)
1, மனமெல்லாம் இருளாகி
மகிழ்வெல்லாம் அரிதாகி
மவுனத்தில் உள்ளுக்குள் குமைகிறோம்-எந்த
மகிமையினால் தீருமென கரைகிறோம்
2, என்னென்ன வழியுண்டோ
எந்தெந்த முறையுண்டோ
அத்தனையும் செய்துநாம் தடுக்கிறோம்-வென்று
அனைவருக்கும் நலம்வழங்க துடிக்கிறோம்
3, வீணாக அலையாதீர்
வெறும்பேச்சில் உழலாதீர்
முகம்மூடி இடைவெளியைப் பேணுங்கள்-விரைவில்
முகம்மலர நன்மைவரும் பாருங்கள்
4, தடுக்கின்ற வழிதேடி
எடுக்கின்ற முடிவெல்லாம்
தவிக்கின்ற நிலைமாறி வாழ்த்தான் -நெஞ்சம்
கொதிக்கின்ற கொடுமையை நீக்கத்தான் ..
5, தூங்காத அரசுக்கும்
தூதாகும் அமைச்சுக்கும்
தோதாக நம்பணிகள் இருக்கட்டும்-யாரும்
ஓதாமல் நம்கடமை சிறக்கட்டும்
6, துவளாத தொண்டுக்கும்
துயர்நீக்கும் அருளுக்கும்
ஆளான தெய்வங்களை வணங்குவோம்- அதற்கு
மேலான தொன்றுமில்லை முழங்குவோம்
7, புதுவானம் புதுபூமி
புதுவாழ்வு விரைவாக
காணத்தான் விழைகிறோம் நாளும்- அரசு
காட்டத்தான் உழைக்கிறது கேளும்
8, விளையாட்டாய் இல்லாமல்
வீட்டுக்குள் நாமிருந்து
விரைவாக விடுதலையைக் காண்போம்-தலைமை
விடுக்கின்ற விதிமுறையைக் கேட்போம்