ஒரு நிறுவனத்தின் வெற்றி என்பது வாகனங்களைக் கையாளும் லாவகத்தில்தான் இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து ஒரு பிரமுகர் வருகிறாரென்றால் விமானம் தரையிறங்குமுன் நம் வாகனம் அங்கே நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் சரக்குகளை எங்கு அனுப்பவேண்டும், எங்கிருந்து எடுத்துவர வேண்டும், ஊழியர்கள் எந்தெந்த இடத்தில் தயாராக இருக்கவேண்டும் இவை அத்தனையையும் வாகனப்பிரிவு துல்லியமாய்ச் செய்யவேண்டும். அந்த நிறுவனம்தான் வெற்றிபெறும். அந்த வகையில் ரவிச்சந்திரனின் கப்பல்துறை நிறுவனம் வெற்றிபெற்றிருக்கிறது. திருச்சி திருவெறும்பூரில் இருக்கும் அந்த நிறுவனத்தின் வாகனத்துறை குபேரனின் கையில். ரவிச்சந்திரன் அடிக்கடி சொல்வார். ‘என் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் மாபெரும் சக்தி குபேரனின் உழைப்பு’ என்று. உழைக்கலாம். உழைப்பை மதிக்கின்ற, உணர்கின்ற ஒரு முதலாளி எல்லாருக்குமா அமைகிறார்?
குபேரனின் குடும்பம் திருவெறும்பூரிலேயே ஒரு வாடகை வீட்டில்தான் இருக்கிறது. பக்கத்திலேயே அவரின் வீடு 2 சதுரத்தில் உருவாகிக் கொண்டிருக்கிறது. குபேரனின் பெற்றோர் திருச்சி, தில்லைநகரில் அவர்களின் பூர்வீக வீட்டில் இருக்கிறார்கள். வேலையின் காரணமாகவே குபேரன் இந்த வீட்டை வாடகைக்கு ஏற்பாடு செய்துகொண்டார். குபேரனின் மகள் குந்தவை கட்டடப் பிரிவின் உள் வடிவமைப்புத் துறையில் இறுதி ஆண்டில் இருக்கிறார். முடிக்கப்போகிறார். முடிப்பதற்கு முன்னாலேயே உள் வடிவமைப்புக்காக பல பணக்கார்ர்கள் குந்தவையைத் தேடி வருகிறார்கள். வசதியான வீட்டில் பிறந்த குழந்தையைப் போல் குந்தவையின் தனிப்பட்ட வங்கி இருப்பு வளர்ந்துகொண்டே இருக்கிறது. குந்தகையின் மிக முக்கியமான ரசிகன் குலசேகரன். அவரும் குந்தவையின் அதே வகுப்பில் வடிவமைப்புத்தான் படிக்கிறார். குந்தவையின் நுட்பமான அந்த அறிவை திறமையை பாராட்டுகிறார். தன் வடிவமைப்புகளுக்கு குந்தவையின் அணுகுமுறையை பின்பற்ற ஆசைப்பட்டு பல முறை தோற்றுப் போயிருக்கிறார். கடுகளவு பொறாமை இல்லாமல் ஒரு குழந்தைபோல் வெகுளியாக அவர் புகழ்வதில் குந்தவை அவர்பால் ஈர்க்கப்பட்டிருக்கிறார். அது ஒரு மரியாதை கலந்த அன்பு. அதைக் காதல் என்று சொல்வதா? பக்தி என்று சொல்வதா?
குலசேகரனின் தந்தை ஜெயராஜுக்கு சென்னையில் கப்பல் துறை நிறுவனம்தான். ரவிச்சந்திரன் தொழில் ரீதியாக அவரின் நண்பர்தான். சென்னையில் பல அமைச்சர்களுக்கு இடது வலது கையாகத் திகழ்கிறார். நல்ல விஷயங்களுக்கு பெரிய பெரிய தொகையை நன்கொடையாக அள்ளிக் கொடுக்கிறார். அவர்களின் ஒரு வீட்டின் உள் வடிவமைப்பை குலசேகரன் மூலமாக குந்தவைதான் செய்து கொடுத்தார். அந்த வடிவமைப்புக்குப் பின் தெரியும் அந்த விசால அறிவை அந்த நுட்பத்தை ஜெயராஜ் வெகுவாக ரசித்தார். ஒருநாள் ஜெயராஜ் நேரடியாகவே குலசேகரனிடம் கேட்டார்.
‘குந்தவையை நீ விரும்புகிறாயா?’
‘ஆம். அது ஒரு மரியாதை கலந்த அன்பு.’
‘உண்மையான காதல் என்பது அதுதான் மகனே. உனக்கு சரியென்றால் உடன் ஏற்பாடு செய்கிறேன்.’
‘எனக்கு சரிதான் ஆனால் அவர்களுக்கு?’
அதை நான் பார்த்துக் கொள்கிறேன். இப்போதைக்கு எனக்குத் தேவை உன் அனுமதி. இல்லை சம்மதம். ‘
உடனே ரவிச்சந்திரனை தொலைபேசியில் அழைத்தார். நேரடியாகவே விஷயத்துக்கு வந்தார்.
‘குபேரன் மகள் குந்தவையை என் மகனுக்கு முடிக்கலாம் என்று விரும்புகிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’
‘இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது. இதைவிட உயர்ந்த ஒரு சம்பந்தம் என் அனுபவத்தில் நான் கண்டதில்லை.அழகான முடிவு’
‘சரி. நான் குபேரனோடு பேசுகிறேன். நான் பேசுவேன் என்பதை தெரியப்படுத்துங்கள். பெண்பார்க்க நாங்கள் வருகிறோம் என்பதைத் தெரிவித்து விடுங்கள்.’
குபேரனுக்கு சேதி எட்டியது. குலசேகரன் சிலதடவை குந்தவையோடு வீட்டுக்கு வந்திருக்கிறார். அந்த ஆடம்பரமற்ற மரியாதையில் குபேரன் நெகிழ்ந்திருக்கிறார். ஒரு பணக்காரனின் பிள்ளை இப்படி இருப்பது அபூர்வம். வியந்திருக்கிறார். குந்தவையிடம் கேட்டார். குந்தவை நறுக்கென்று சொன்னார்
‘எனக்கென்று ஒரு முடிவு இல்லை. உங்களுக்கு சரியென்றால் எனக்கும் சரியே’
அடுத்த நாள் ஜெயராஜின் அழைப்பு.
‘நாம் இதுவரை பேசிக்கொண்டதில்லையே தவிர உங்களைப் பற்றி ரவி நிறைய சொல்லியிருக்கிறார். வருகிற வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நானும் என் மனைவி மட்டும் வருகிறோம். உங்கள் பெற்றோரும் ரவியும் நிச்சயம் வீட்டில் இருக்கவேண்டும். அடடா! மறந்துவிட்டேன். என்னதான் நான் ரவியிடம் பேசியிருந்தாலும் உங்கள் சம்மதம் எனக்கு முக்கியம். நீங்கள் என்ன சொல்கிறீர்கள? உங்கள் சம்மதத்துடன் தான் நாங்கள் அங்கு வர முடியும்.
‘உங்கள் அனுபவத்திற்கு முன் நான் ஒரு மாணவனே. உங்களுக்கு சரியென்று படுவது உலகத்துக்கே சரியாகத்தான் இருக்கும்.’
குபேரனின் பதிலில் சிலையானார் ஜெயராஜ்.
அந்த வெள்ளிக்கிழமையும் வந்தது. இருவர் மட்டும் அன்று காலையே திருச்சி வந்து ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கிவிட்டு மாலை சரியாக 4 மணிக்கு குபேரனின் வீட்டுக்கு வந்தார்கள். அந்த துல்லியம் குபேரனுக்கு பிடித்திருந்தது. ஏற்கனவே ரவிச்சந்திரனும் , குபேரனின் அப்பா தேவராஜ் மற்றும் தாயார் சரஸ்வதி வீட்டில் இருக்கிறார்கள். அந்த வரவேற்பறை அவர்களை வரவேற்பதில் பெருமை அடைந்தது. குபேரனும் ஜெயராஜும் நெஞ்சணைத்துக் கொண்டார்கள். அந்த இணைப்பில் ரவியும் தேவராஜனும் சேர்ந்து கொண்டார்கள். பல விஷயங்களைப் பேசினார்கள். இறுதியில் பேச வேண்டியதைப் பேசத் தொடங்கினார்கள். ஜெயராஜ் சொன்னார்.
‘இப்போது ஏப்ரல் வருகிற நவம்பர் 29ல் திருமணத்தை வைத்துக்கொள்வோம். திருமணம் சென்னையில்தான். மண்டபம் ஏற்பாடுகள் எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். 20000 பேர் வருவார்கள். விருந்துச் செலவில் மட்டும் பாதியை ஏற்றுக் கொள்ளுங்கள்’ சொல்லிவிட்டு வேறு யாருடனோ தொலைபேசிக்குத் திரும்பிவிட்டார். குபேரன் ரவியைப் பார்த்தார். ஒரு கண்ணைச் சிமிட்டி லேசாக தலையை வலதுபுறம் சாய்ந்துக் குனிந்தார். அதற்கு அர்த்தம் குபேரனுக்குத் தெரியும்.’சரியென்று சொல்.’ அப்பாவைப் பார்த்தார். இருகண்களையும் லேசாக மூடி முன்பக்கம் குனிந்தார். அதற்கு அர்த்தமும் அதுதான் ‘சரியென்று சொல்’ ஆனாலும் அந்த 20000 பேர் விவகாரம் கொஞ்சம் உறுத்தியது. அது ஒர ஈகோதானே? அந்த வார்த்தைகளற்ற உரையாடலை கவனிக்காததுபோல் ஆழமாகக் கவனித்து ரசித்தார் ஜெயராஜ். தொலைபேசியை தன் சட்டைப் பைக்குள் திணித்துவிட்டு குபேரனிடம் திரும்பினார்.
‘என்ன குபேரன். என்ன சொல்கிறீர்கள்?’
‘நான்தான் ஏற்கனவே சொன்னேனே. உங்கள் அனுபவத்திற்கு முன் நான் மாணவன். கற்றுக் கொள்வது மட்டுமே என் வேலை. சம்மதம்.’
மிகவும் மகிழ்ச்சியாக ஜெயராஜ் தம்பதியர் அங்கிருந்து புறப்பட்டார்கள். குபேரனின் அப்பா சொன்னார்
‘தலைக்கு 100 என்று வைத்தாலும் 10000 பேருக்கான செலவு 10 லட்சம். அதை நான் தருகிறேன். நீ கவலைப்படாதே. ‘
ரவிச்சந்திரன் சொன்னார்
‘ஜெயராஜிடம் நான் பேசிக் கொள்கிறேன். அவர் என்ன சொன்னாலும் அதை நான் பார்த்துக் கொள்கிறேன்.’
‘பெண்ணுக்குத் தகப்பன் நான். எனக்கு எந்தப் பொறுப்பும் இல்லையா?’
குபேரன் சொன்னதில் வீடே சிரித்தது.
ரவிச்சந்திரனுக்கு சிங்கப்பூரிலும் ஒரு கிளை. அங்கு இவரின் பங்குதாரராக தியோ என்கிற சீனர் இருக்கிறார். அதுவும் கப்பல்துறைதான். இப்போது நொண்டுகிறது. குபேரனை அங்கு அனுப்பிவைத்தால் அந்த நிறுவனம் மீண்டும் கம்பீரமாக நடக்கும் என்று ரவி நம்பினார். குபேரனை உடனே அனுப்ப ஏற்பாடு செய்தார்
‘இப்போது ஏப்ரல். செபடம்பர் வரை அங்கிருங்கள். அதுவரை இங்குள்ள வேலைகளை நான் கவனித்துக் கொள்கிறேன். திருமண ஏற்பாட்டுக்காக அக்டோபரில் நீங்கள் இங்கு வந்துவிடலாம். ‘
ரவியின் பேச்சைத் தட்டிப் பழக்கமில்லை. குபேரன் சிங்கைக்குப் புறப்பட்டார்.
சிங்கையில் குபேரன். வாகனத்துறையை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டார் முதுகுவலி, முட்டி வலி என்று விடுமுறை கேட்கும் சோம்பேறிகளை ஒதுக்கினார். சிங்கக்குட்டிகளை ஓட்டுநர் பணிக்கு நியமித்தார். வாகனத்துறையை அடித்து நிமிர்த்தினார். அதிகாலை நடுநிசி வேலைகளை தானே எடுத்துக் கொண்டார். யாரையும் தொந்தரவு செய்யவில்லை. குபேரனின் தொழிப் பக்தி சக தொழிலாளர்களின் வாய்களை அடைத்தது. பொறுப்பில் இருப்பவன் முதலில் உழைப்பால் தேயவேண்டும். தொழில் நிமிரத் தொடங்கியது. தியோ சொன்னார்.
‘வாகனங்களை எப்படி இன்னும் சிறப்பாக சிக்கனமாக பயன்படுத்தலாம் என்பதுபற்றி ஒரு பட்டறைக்கு ஏற்பாடு செய்கிறேன். ஸ்டீஃபன் என்கிற ஒரு நிபுணர்தான் பட்டறையை நடத்த வருகிறார். நம் ஓட்டுநர்கள் அனைவரும் அதில் பங்குபெறவேண்டும். நீங்கள்தான் முன்னின்று ஏற்பாடு செய்ய வேண்டும்’
முதலாளியின் உத்தரவு. ‘சரி.’ வேறு பதில் என்னவாக இருக்க முடியும்
9 மணிக்கு பட்டறை தொடங்கியது. 45 பேர் கலந்து கொண்டார்கள். ஸ்டீஃபன் மிகச் சிறப்பாகப் பேசினார். எல்லாரையும் சிலமுறை சிரிக்க வைத்தார். பலமுறை சிந்திக்க வைத்தார். இறுதியில் குபேரன் நன்றி கூற பட்டறை இனிதே முடிந்தது. ஓர் அருமையான அனுபவம். எல்லாரும் ஒப்புக் கொண்டனர்.
பட்டறை முடிந்து குபேரன் ஜூரோங்கிலிருக்கும் தன் அறைக்கு வந்தபோது இரவு மணி 10. நுழையும்போது ஒரு பல்லி தொப்பென்று விழுந்து வேகவேகமாக ஓடியது. தொடர்ந்து ஒரு தொலைபேசி அழைப்பு.
‘நீங்கள்தானே குபேரன்?’
‘ஆம்’
‘இன்றுகாலை ஒரு பட்டறைக்கு ஏற்பாடு செய்தீர்களா?’
‘ஆம்’
அந்தப் பட்டறையை நடத்தியது ஸ்டீஃபன் என்பவர்தானே?’
‘ஆம்’
‘அவருக்கு கொரோனா பாஸிடிவ். நான் சிங்கப்பூர் நல்வாழ்வுத் துறையிலிருந்து பேசுகிறேன். நீங்கள் தனிமைப் படுத்தப் படுகிறீர்கள். உங்களோடு பட்டறையில் இருந்த எல்லாருமே தனிமைப் படுத்தப்படுகிறார்கள்.’ எல்லாரையும் எங்களின் ஒரு குழு கவனித்துக் கொள்ளும். எக்காரணம் கொண்டும் வெளியே வரக்கூடாது. யாரையும் உள்ளே அனுமதிக்கவும் கூடாது. ‘
அந்தப் பல்லி ஒரு மூலையில் இருந்து குபேரனைத் திரும்பிப் பார்த்தது.
தொடர்ந்து தியோவின் அழைப்பு.
‘நல்வாழ்வுத் துறையிலிருந்து பேசினார்களா?’
‘ஆம்’
‘என்னிடமும் பேசினார்கள். மனிதவளத்துறையும் பேசியது. அதிர்ச்சியாக இருக்கிறது குபேரன். தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள். மிகவும் கண்டிப்பாக இருங்கள். முக்கியமான விஷயங்கள் இருந்தால் அழைக்கிறேன்.’
அந்தப் பல்லி அதே இடத்தில்தான் எங்கே போகலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து ரவிச்சந்திரன் அழைக்கிறார்.
‘கேள்விப்பட்டேன். அதிர்ச்சியாக இருந்தாலும் எனக்கு பயமில்லை. தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள். எல்லாம் சரியாகிவிடும். வீட்டோடு எப்போதும்போல் பேசுங்கள். இந்த விஷயத்தைக் காட்டிக் கொள்ள வேண்டாம்.’
‘சரி’
திருச்சியில் திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஜெயராஜிடமிருந்து அழைப்பு. எல்லாரும் சென்னை வரவேண்டுமாம். துணிமணிகள் எடுக்க வேண்டுமாம். ரவிச்சந்திரன் அனுப்பிவைத்தார். எல்லாவற்றையும் ரவி நேரடியாகப் பார்த்துக் கொண்டார். அந்த சிங்கப்பூர் விவகாரம் அவர்கள் காதுக்கு எட்டக்கூடாது என்பதில் குறியாக இருந்தார்.
14 நாட்கள் கழிந்துவிட்டது. ஓர் ஆம்புலன்ஸில் குபேரன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகிறார். சிகச்சை தரமாக இருக்கும் வகையில் எல்லா ஏற்பாடுகளையும் தியோ கவனித்துக் கொள்கிறார். கொரோனா பாதிப்பு சோதனைக்கு குபேரன் உட்படுத்தப்படுகிறார். ஓர் அழகான கண்ணாடிக் குடுவை கீழே விழுந்து சுக்குநூறாக உடைகிறது. டெஸ்ட் முடிவு. கொரோனா பாஸிடிவ். அவர் தீவிர சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட விருக்கிறார். இன்னும் சில நிமிடங்கள் அவர் பேசலாம். ரவி அழைத்தார்.
‘உங்கள் பேசியை துண்டித்துவிடுங்கள். நீங்கள் ஒரு ப்ராஜெக்ட்க்காக வியட்நாம் செல்கிறீர்கள். அங்கு வைஃபை வசதியில்லை என்று வீட்டுக்கு சொல்லிவிடுகிறேன். எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள். தியோ எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார். நீங்கள் தைரியமாக இருங்கள். எதுவும் நடக்காது. எல்லாப் புயல்களும் அமைதியை நோக்கியே.’
ரவிச்சந்திரனின் உறுதி பற்றி குபேரனுக்குத் தெரியும். மனுஷன். எத்தனை பெரிய இடி விழுந்தாலும் சாதாரணமாகத்தான் இருப்பார். நல்லதுதான் நடக்கும் என்று எப்போதுமே நம்புவார். ஆனால் இந்த விஷயத்தில்?
தீவிரக் கண்காணிப்பில் குபேரன். வெண்டிலேட்டர் அவசியமாகப் பட்டது. இரண்டு நாட்களிலேயே அவசியமற்றுப் போய்விட்டது. கொடுக்கும் மருந்துகள் உடனுக்குடன் வேலை செய்கிறது. குபேரன் மிக தைரியமாக இருந்தார். குபேரனின் உடல்நிலை முன்னேற்றத்தில் அந்த மருத்துவருக்கு ஏகப்பட்ட ஆச்சரியம். மருந்துகளுக்கு அப்பாற்பட்டு ஏதோ நடப்பதாக உணர்கிறார். ஆனால் அதை எப்படி புரிய வைப்பது. 14 நாட்களில் கொரோனா அறிகுறியே இல்லாமல் குணமடைந்தார் குபேரன். கீழே விழுந்த புள்ளிமான் குதித்து எழுவதுபோல் உணர்கிறார் குபேரன். அந்த மருத்துவர் மீண்டும் சொன்னார்.
‘மிகப் பெரிய தெய்வசக்தி உங்களிடம் இருக்கிறது. உங்களுக்கு தோல்வியே இல்லை. என்றாலும் சில நாட்கள் தனிமையில் இருங்கள். அக்டோபரில் இந்தியா செல்ல எந்தத் தடையும் இருக்காது.’
தியோ அன்னாந்து பார்த்து இரண்டு சொட்டு கண்ணீரைச் சிந்தினார். ரவி பேசினார்.
‘எனக்குத் தெரியும் உங்களை யாரும் எதுவும் செய்யமுடியாது. இப்போது நீங்கள் வியட்நாமிலிருந்து வந்துவிட்டீர்கள். ஹஹஹ்ஹா. வீட்டில் எல்லாரோடும் பேசுங்கள். அக்டோபரில் உங்களை வரவேற்கத் தயாராக இருக்கிறோம்.’
குபேரன் தன் அறைக்கு வந்தார். 15 நாட்கள் தனிமையாகவே இருந்தார். நேரடியாக திருச்சி செல்ல வேண்டியதுதான். நவம்பர் 10ஆம் தேதி திருச்சிக்குச் சென்ற ஸ்கூட் விமானம் குபேரனையும் சேர்த்துக் கொண்டு பறந்தது.
அறைகுறையாக விடப்பட்டிருந்த தன் வீடு முழுமையாகி இருந்தது. குந்தவையின் உள் வடிவமைப்பு வசந்தமாளிகையாக அதை ஆக்கியிருந்தது. உள்ளே நுழைந்ததும் குபேரன் கேட்டார்.
‘இது என்ன வீடா இல்லை அரண்மனையா?
எல்லாம் எப்படி எப்படியோ நடக்கிறது. வீட்டை முடிக்க குந்தவை யாரையும் தொந்தரவு செய்யவில்லை. தன் வங்கி இருப்பே போதுமானதாக இருந்தது. குபேரனின் அப்பா தேவராஜ் 12 லட்சம் ரொக்கத்துடன் வந்தார். அப்படியே குபேரனிடம் ஒப்படைத்தார். மேலும் தேவையென்றால் தெரியப்படுத்து என்று ஒரு சௌகரியமான கொக்கியையும் போட்டுவிட்டுச் சென்றார். ரவி வந்தார்.
‘சென்னையில் எல்லாம் தயார். நம் பங்குக்கு 10 லட்சம் மட்டும் கொடுக்க வேண்டும் . அது மட்டும்தான் இப்போதைக்கு நம் செலவு. மண்டபம் அலங்காரம் எல்லாம் தன் பொறுப்பு என்று ஜெயராஜ் சொல்லிவிட்டார். ‘
சொல்லிமுடித்து குபேரனை கவனித்தார். குபேரனின் கண்கள் கலங்கின. உதடுகள் துடித்தன.
‘என்ன குபேரன்? ஏதும் பிரச்சினையா?
‘ஆம் பிரச்சினைதான். இத்தனைக்கும் நான் அருகதை உள்ளவனா என்பதே பிரச்சினை’
‘அருகதை இருப்பவர்களைத் தேடித்தான் அன்பு ஓடி வரும் குபேரா. உங்கள் அப்பா உங்களுக்கு குபேரன் என்று பெயர் வைத்ததற்குக் காரணம் இப்போதுதான் புரிகிறது. இனிமேல் நீங்கள் குபேரனாகவே வாழ வேண்டும்’
இருவரும் சிரித்தார்கள். குபேரனின் ம்னைவியும், குந்தவையும் கூட சேர்ந்து சிரித்தார்கள். ஒரு சிட்டுக்குருவி வீட்டு ஜன்னலில் வந்தமர்ந்து எல்லாரையும் வேடிக்கை பார்த்தது. வேடிக்கை பார்க்கிறதா? வாழ்த்துகிறதா?
நவம்பர் 28. எல்லாரும் சென்னை பயணம். ஒரு 5 நட்சத்திர ஹோட்டலில் சில அறைகளை இவர்களுக்காக ஜெயராஜ் ஏற்பாடு செய்திருந்தார். ஜெயராஜ் வந்தார்.
‘வாருங்கள் மண்டபத்தைப் பார்ப்போம். அலங்காரங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.’
எல்லாரும் சென்றார்கள். அந்த 5 நட்சத்திர ஹோட்டலில் ஒரு பெரிய அரங்கம் இவர்களுக்காகத் திறக்கப்பட்டது. மணமேடை தயாராகிக் கொண்டிருக்கிறது. அந்த அரங்கம் 2000 பேரைத் தாங்கலாம். இங்குதான் விருந்தா? 20000 பேருக்கு எப்படி? கேள்விகள் தொடர்ந்தாலும் எதையும் குபேரன் காட்டிக் கொள்ளவில்லை.
பொழுது விடிந்தது. மணமகள் ஜோடிக்கப்பட்டு அவரின் அறைக்கு அழைத்துச் செல்கிறார்கள். இன்னோரு அறையில் குலசேகரன் ஓர் இளவரசனைப் போல் அலங்கரிக்கப் பட்டிருக்கிறார். முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பெரிய பெரிய அமைச்சர்களுக்கு இடது கை வலது கை என்றெல்லாம் சொன்னார்கள். ஒரு அமைச்சரும் வரவில்லையே. முக்கியப் பிரமுகர்கள் என்று யாருமே இல்லையே. வந்தவர்கள் அத்தனைபேரும் ஜெயராஜின் குடும்ப உறவுகள்தான். இருப்பவர்கள் முன்னிலையில் அவர்கள் அத்துனைபேரின் ஆசிர்வாதங்களோடு குந்தவையின் கழுத்தோடு மாங்கல்யம் கலந்தது.
எல்லாருமாக சமையல் கூடத்துக்கு வந்தார்கள். இறைச்சி பிரியாணி, கோழி பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி, அவித்த முட்டை, பொரித்த கோழி, தாள்ச்சா என்று ஏகப்பட்ட அண்டாக்கள். ஒரு பக்கம் இவைகள் பொட்டலங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. பொட்டலங்களை சிலர் அதற்கான துணிப்பைகளில் வைக்கிறார்கள். அந்தப் பையில்
‘நவம்பர் 29, 2020 திருமணம்.
மணமகன் குலசேகரன் மணமகள் குந்தவை
அழைப்பவர்கள்
ஜெயராஜ் மற்றும் குபேரன் குடும்பத்தினர்.’
என்று மட்டும் அச்சடிக்கப்பட்டிருந்தது.
யாரும் கேட்பதற்கு முன் ஜெயராஜின் முதன்மை உதவியாளர் சொன்னார்.
‘சென்னை நகரிலும் சுற்றுப்புறங்களிலும் இருக்கும் 108 முதியோர் இல்லங்கள், 80 மகளிர் காப்பகங்கள், 45 ஊமை செவிடர் பள்ளிகள், 60 உடற்குறையுள்ளோர் இல்லங்கள் இருக்கின்றன. அவைகளில் 20150 பேர் இருக்கிறார்கள். இவர்கள் அத்துனை பேரையும் ஜெயராஜ் த்த்தெடுத்திருக்கிறார் என்பது பலருக்குத் தெரியாது. அவர்கள் அனைவருக்கும் இன்றைய மதிய உணவு அனுப்பிவைக்கப்படும். ஜெயராஜ் குறுக்கிட்டார்.
‘அமைச்சர்கள், செல்வந்தர்கள், நடிகர்கள் யாருக்குமே பசி என்றால் என்னவென்றே தெரியாது. அவர்களுக்கெதற்கு இந்த விருந்து. இந்த 20000 பேர்தான் என் உறவினர்கள். என் உழைப்பு வருமானம் எல்லாம் இவர்களுக்குத்தான்.
குபேனுக்கு புல்லரித்தது. சிங்கப்பூரில் அந்த மருத்துவர் சொன்னது நினைவுக்கு வரவில்லை. அந்த மருத்துவரே மீண்டும் தன் கண்முன் மட்டும் தோன்றி பேசினார்.
‘மிகப் பெரிய தெய்வசக்தி உங்களோடு இருக்கிறது. உங்களுக்கு தோல்வியே இல்லை.’
‘அந்த தெய்வசக்தி இதுதானோ? இந்த நல்ல காரியத்தில் நம் பங்கு இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் சரிபாதியை நம்மிடம் கேட்டாரோ? ‘
குபேரனுக்கு புரிந்தது. ஓர் அமைதி நிலவியது. மணமக்கள் ஆசிர்வாதம் வாங்க அவர்களை நெருங்கிக் கொண்டிருந்தார்கள்
யூசுப் ராவுத்தர் ரஜித்
- கைகொடுக்கும் கை
- புலி வந்திருச்சி !
- பிள்ளை யார்?
- மாயாறு- மருத்துவர் .ஜெயமோகன் மரணம்
- பெற்றோர்கள் செய்ய வேண்டியது
- உன்னாலான உலகம்
- புலம்பெயர் ஈழத்து படைப்பாளர்களின் விபரத்திரட்டு
- கேட்காமலே சொல் பூத்தது : முகக்கவசம்
- அறியாமை அறியப்படும் வரை….
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- நான் தனிமையில் இருக்கிறேன்
- எழுத்தாளனும் காய்கறியும்
- எனக்கு எதிர்கவிதை முகம்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 220 ஆம் இதழ்
- அமைதியை நோக்கியே அத்தனை புயல்களும்
- தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா ? தைத் திங்கள் முதலா ?
- அப்பால்…..
- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- நாடு கேட்கிறது
- ஜீவ அம்சம்
- மொழிவது சுகம் ஏப்ரம் 19…2020
- பேரிடர் கண்காணிப்பு, பேரிடர் பாதுகாப்பு