பாலமுருகன் வரதராஜன்
அவன் காத்திருந்தான்.
கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக, அதே இடத்தில் உட்கார்ந்து இருந்தாலும், பொறுமையாக காத்திருந்தான்.
அதற்கு அவனுக்கு பயிற்சி தரப்பட்டு இருந்தது..
பொறுமையாக இருப்பதற்கும், வெறுப்பு உமிழும் பார்வைகளை சமாளிக்கவும், கிடைக்கும் சில மணித்துளிகளில் அவன் மீது கவனத்தை ஈர்க்கவும், சரளமாக உரையாடவும் தயாராக இருந்தான்.
மிக நேர்த்தியாக உடையணிந்து, அதற்கும் மேலாக புன்னகை அணிந்து காத்திருந்தான்.
அவன் சூர்யா, மருத்துவப் பிரதிநிதி. ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் ஒரு விழுது. ஐந்திலக்கத்தில் சம்பளம், பைக், வாடகை ஃபிளாட்டில் குடியிருப்பு.
அழகனாய் இருந்தும் வாய்ப்புகள் பல வந்தும் பல்லைக் கடித்துக்கொண்டு அவனுக்கான தேவதைக்காகக் காத்திருக்கிறான்.
மெலிதாய் ஒலித்துக்கொண்டு இருந்த தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டும், மொபைலில் விளையாடிக் கொண்டும் காத்திருந்தான்.
இரண்டு வரிசைகளுக்கு முன்பு உட்கார்ந்திருந்த குழந்தையின் சிரிப்பில் கவனம் கலைந்தான்.அதன் புன்னகையை ரசித்து, முகத்தை அஷ்டகோணலாக மாற்றி, நாக்கு துருத்தி அதன் சிரிப்பை இன்னும் அதிகப்படுத்திக்கொண்டு இருந்தான்.
சிறிது நேரத்தில் அவனை, சிஸ்டர் அழைக்க எழுந்து சென்று டாக்டரிடம் அவனது கம்பெனி புராடக்ட்களை விளக்கி பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொண்டு வெளியே வந்தவன், “எக்ஸ்க்யூஸ் மி, நீங்க திருச்சி தானே?” என்ற குரல் வர சட்டென நின்றான். அந்தக் குழந்தையை வைத்திருந்த பெண்தான். “ஆமாம். நீங்க?” எனத் தெளிவாகக் குழம்பினான்.
“நான், செல்வி. பிஷப் காலேஜ்ல உங்க ஜுனியர்” என அறிமுகம் செய்து கொண்டாள்.
“காலேஜ்ல நீங்க கல்ச்சுரஸ்ல பாடும்போது அவ்வளவு ரசிப்போம்” என்றாள். திருமணம் முடிந்து சென்னை வந்துவிட்டதாகவும், கணவர் LIC ல் வேலை பார்ப்பதாகவும் சொல்லிக்கொண்டே வந்தவள், சட்டென, “ஷல்மாவை ஞாபகம் இருக்கா?” எனக் கேட்க தெறித்தான், சூர்யா. “அழகாய்ப் பூக்குதே” பாடலை மனசு தானாக ஹம் செய்ய ஆரம்பித்தது.
ஷல்மா, அவர்களது கல்லூரி தமிழ் பேராசிரியர். அப்துல் ரஹ்மான் அவர்களின் செல்ல மகள். அவர் எழுத்தின் பெருங்காதலர், எனவே மகளுக்கு “ஷல்மா” என பெயர் சூட்டி இருந்தார்.
சூர்யா கல்ச்சுரஸ்களில் கலக்கிக்கொண்டு இருக்கும் போது, ஷல்மா பட்டிமன்றங்கள், பேச்சுப்போட்டிகளில் பிரித்து மேய்ந்து கொண்டிருந்தாள்.”மெல்லத் திறந்தது கதவு” பட அமலா போல, கண்கள் மட்டுமே தெரியும் பர்தா அணிந்த, மேகங்கள் மறைத்த நிலவு போல. நட்சத்திரங்கள் போல தோழிகள் சூழ வலம் வந்து கொண்டிருந்தாள்.
அவள் இருக்கும் இடங்களில் அவ்வளவு மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். ஷல்மா அமைதியாகவும், தோழிகள் அனைவரும் ஒருவரையொருவர் கிண்டல் செய்து கொண்டும் சிரித்துக்கொண்டேயும் இருப்பார்கள். செல்வி அவர்களில் முக்கியமானவள், மிகவும் துடுக்கானவள்.சூர்யா அவர்களைக் கடந்து செல்லும் போதெல்லாம், “நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே” என்று பாடுவாள். அத்தனை கூட்டத்திலும் சூர்யாவிற்கு தெரிந்தது ஷல்மாவின் கண்கள் மட்டுமே.
பிஷப் கல்லூரிக்கான “ஆல்ரவுண்ட் சேம்பியன்ஷிப் கோப்பைகளுக்கு’ இருவரின் பங்களிப்பும் நிறைய இருந்தது.
போட்டிகளுக்கு ஒன்றாக சேர்ந்து சென்று வருவது, ஆரவாரங்கள் ஏதுமின்றி அடக்கமாக இருப்பது என ஈர்த்த விஷயங்கள் அதிகம் என்றாலும், வெளிப்படையாகச் சொல்லாமல் அப்படியே போய்க்கொண்டு இருந்தது.
ஷல்மாவின் முறைப்பையன் ஷார்ஜாவில் இருந்து வந்து அவளின் படிப்பை பாதியிலேயே முடித்து நிக்காஹ் செய்து சென்றது எல்லாம் மீண்டும் மனதில் ஓட, சூர்யா திரும்பி, கண் துடைத்து சமாளித்து, “வாங்க காஃபி சாப்பிடலாம்” என செல்வியையும் அழைத்துக்கொண்டு பக்கத்து கேன்டீனுக்குள் நுழைந்தான்.
கல்லூரி மலரும் நினைவுகளைப் பேசி, நிறைய சிரித்து, குழந்தைக்கும் டைரிமில்க் வாங்கிக் கொடுத்துவிட்டு, விடைபெறும் போது தான் நினைவுக்கு வர கேட்டான்.
“ஏங்க செல்வி, பையன் பேரைச் சொல்லவே இல்லையே? என்று.
திரும்பிப் பார்த்து சிரித்த செல்வி சொன்னாள் “சூர்யா”.
- இனி, துயரீடு கேட்டுப் போராடலாம்….
- வாக்கும் விளக்கும் மதச்சார்பின்மையும் மற்றும்……
- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 221 ஆம் இதழ்
- 3 இன் கொரோனா அவுட் – கொரோனா விழிப்புணர்வு குறும்படம்
- மெய்ப்பாட்டிற்கும் ஏனைய இலக்கிய கொள்கைகளுக்குமான உறவு
- இழப்பு !
- அழகாய் பூக்குதே
- ஈழத்து நாடக கலைஞர்:ஏ.ரகுநாதன்
- நான் கொரோனா பேசுகிறேன்….
- தக்க யாகப் பரணி [தொடர்ச்சி]
- சாளேஸ்வரம்
- கரையைக் கடந்து செல்லும் நதி – ஸிந்துஜா
- கரோனாவை சபிப்பதா? ரசிப்பதா?