இனி, துயரீடு கேட்டுப் போராடலாம்….

author
1
0 minutes, 37 seconds Read
This entry is part 1 of 14 in the series 26 ஏப்ரல் 2020

கோ. மன்றவாணன்

      வழக்கம் போலவே வளவ. துரையன் அய்யா அவர்கள் ஒரு பதிவை அனுப்பி இருந்தார். அதில் நிவாரணம் என்ற சொல்லின் தற்காலப் பயன்பாடு தவறானது என்று கிருஷ்ணசாமி தியாகராசன் என்பவர் எழுதி இருந்தார். “நிவாரணம் என்றால் அழித்தல் என்று பொருள். நிவாரணம் வேண்டும் என்றால் அழிக்கச் சொல்கிறோம் என்றாகும்.  இடைக்கால நிவாரணம் என்றால் இடைக்கால அழிப்பு.” என்றவாறு அவர் விளக்கம் அளித்திருந்தார். அவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைதான்.

      நிவாரணம் என்பது சமஸ்கிருதச் சொல் என்பதில் எந்த ஐயமும் இல்லை. நிவர்த்தி / நிவிர்த்தி என்ற சொல்லும் நிவாரணம் என்பதற்கான பொருளையே உள்ளடக்கி உள்ளது. இச்சொல்லும் சமஸ்கிருதச் சொல்தான்.

      வலிநிவாரணம் என்றல் வலிநீக்கம் என்று பொருள்கொள்ளப்படுகிறது. அதற்கான மருந்தை வலிநிவாரணி என்கிறோம். தமிழில் வலிநீக்கி என எழுதுகிறோம். கஷ்ட நிவாரணம் என்றால் கஷ்டத்தை அழிப்பது அல்லது நீக்குவது என்பதாகும் புயல் நிவாரணம், வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம் என்றால் புயலை அழிப்பது… வெள்ளத்தை அழிப்பது… வறட்சியை அழிப்பது என்பனவாகவே பொருளாகும்.

      கடந்த காலங்களில் கஷ்ட நிவாரணம் என்று பேசப்பட்டது. அது சரியான பயன்பாடுதான். அதன் சுருங்கிய வடிவமாக நிவாரணம் என்ற சொல் இன்று நிலைத்துவிட்டது. அதனால்  நிவாரணம் என்ற சொல்லின் தற்காலப் பயன்பாடுகளில் பொருள்பிழைகள் உண்டாயின.. ஆனால் நிவிர்த்தி என்ற சொல் அதன் விடுபாடு, அழிப்பு என்ற பொருள் உணர்த்தலில் இருந்து மாறுபடவில்லை.

      புயல் கஷ்ட நிவாரணம் என்றால் புயல் துயரிலிருந்து விடுபடல் என்றோ புயல்துயர் அழிப்பு என்றோ அச்சொற்கள் ஒன்றிணைந்து சரியாகப் பொருள் உணர்த்தும். நிவாரணம் மற்றும் நிவர்த்தி ஆகிய சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொல் Relief என்பதாகச் சுட்டப்படுகிறது. இந்த ரிலீஃப் என்ற சொல்லுக்கு இணையாகவே சமஸ்கிருதத்தில் ஆபத்சகாயம், உபஷாமா, மோஜனம் போன்ற சொற்களும் உள்ளன.

      மேலும் பரிகாரம், பிராயச்சித்தம் போன்ற சொற்களும் தமிழில் ஆளப்படும் சமஸ்கிருதச் சொற்கள். பரிகாரம் என்ற சொல் கிட்டதட்ட ரிலீஃப் என்ற சொல்லுக்கு இணையாகச் சிலர் பயன்படுத்துகின்றனர். நீதிமன்ற வழக்குரைகளில் கோரப்படும் ரிலீஃப்  என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில் பரிகாரம் என எழுதுகின்ற போக்கு நீதிமன்றங்களில் தற்போதும் உண்டு. பிராயச்சித்தம் என்ற சொல்லையும் அதே பொருளில் பேசுகின்றவர்கள் உண்டு. பிராயச் சித்தம் என்ற சொல், தற்போதைய பயன்பாட்டில் உள்ள நிவாரணம் என்ற சொல்லுக்கு இணையானது இல்லை. பரிகாரம், பிராயச்சித்தம், நிவாரணம் ஆகிய சொற்களுக்கு இடையில் நுண்ணிய வேறுபாடுகள் உண்டு. 

      பேச்சு வழக்கில் இருக்கிற எந்த மொழியிலும் ஒருசொல், சூழலுக்கு ஏற்ப பலபொருள்களை வெளிப்படுத்துவது இயற்கையாகவே நிகழ்வதுதான். அந்த வகையில் கஷ்ட நிவாரணம் என்பது… நிவாரணம் என்ற ஒற்றைச்சொல்லாகிப் பயன்பாட்டில் உள்ளது. முற்காலத்தில் ஒரு பொருளும் தற்காலத்தில் வேறு பொருளும் கொண்ட சொற்கள் தமிழில் உண்டு. நாற்றம் என்ற சொல் அப்படிப்பட்டதுதான் அதுபோல் நிவாரணம் என்ற சொல்லின் இன்றைய பயன்பாட்டை ஏற்கலாம் என வாதிடலாம். இதற்கு வழுவமைதி என இலக்கணமும் சொல்லலாம்.

      இந்த நிவாரணம் என்ற சொல்லைத் துயர்துடைப்பு என்றும் துயர்தணிப்பு என்றும் துயர்தடுப்பு என்றும் தமிழாக்கம் செய்து பயன்படுத்துவதும் நடைமுறையில் உள்ளது. நிவாரண நிதியைத் துயர்துடைப்பு நிதி என்று சொல்வது உண்டு. வறட்சிகாலத் துயர்துடைப்பு உதவிகளை அரசு செய்து வருகிறது எனவும் சொற்றொடர் அமைக்கப்படுகிறது.

      தற்காலத்தில் அரசிடத்தில் நிவாரணம் கொடு என்று மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள். நிவாரணம் எனும்சொல் தற்போது அழித்தல் நீக்கல் என்ற அதன் பொருள்களை இழந்துள்ளது. அச்சொல், உதவிகள் என்ற பொருளில் ஆளப்படுகிறது. இப்படிப் பயன்படுத்துவது தவறுதான் என்பதில் சிலர் உறுதியாக உள்ளனர். சரியாகவும் அச்சொல்லைப் பயன்படுத்த முடியும். வறட்சித்துயர் நிவாரண உதவிகளை வழங்குங்கள். தொற்றுநோய்க் காலத் துயர் நிவாரண உதவிகளைத் தாருங்கள் என்று பயன்படுத்தினால் நிவாரணம் என்ற சொல் தவறான பொருளைத் தரவில்லை. ஆனால் தற்போதைய ஊடகங்களில் உள்ளவர்கள் இதைப் பொருட்படுத்த மாட்டார்கள்.

      நிவாரணம் என்ற வடசொல்லைத் தவறாகப் பயன்படுத்துவதைவிட அதற்குண்டான தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்துவதே சிறந்ததாகும். அந்த வகையில் நிவாரணம் என்ற சொல்லின் தற்கால பொருள்மாறுதலுக்கு உட்பட்டு… துயருதவி, இடருதவி எனச்சொல்லாம். இவை பேசுவதற்கு எளிதாகவும் இருக்கின்றன. இவை இருக்க… இன்னும் பொருள்செறிவு மிகுந்த வேறு தமிழ்ச்சொல்லைக் கண்டறியலாம். அதற்குத் துணைபுரியும் வகையில் சில தமிழ்ச்சொற்களைக் காணலாம்.

நஷ்டஈடு :

      உயிரிழப்பு, பொருளிழப்பு போன்றவற்றுக்குப் பணத்தால் ஈடுசெய்வதை இழப்பீடு என்கிறோம். முன்பு நஷ்டஈடு என்ற சொல்லைப் பயன்படுத்தினோம்.  தற்போது தமிழ்த்தூய்மை கருதி இழப்பீடு என்று சொல்கிறோம்.

பிராயச்சித்தம் :

      ஒருவர் மற்றவருக்குச ஒருபிழையைச் செய்துவிட்டுப் பின்னர் வருந்தி அதற்கு ஈடு செய்வதே பிராயச்சித்தம் எனப்படுகிறது. இதற்கு ஏற்கனவே கழுவாய் என்ற தமிழ்ச்சொல் உண்டு. பிராயச்சித்தம் என்ற சொல்லுக்குப் பிழையீடு என்ற அழகிய சொல்லை எழுத்தாளர் ஜெயமோகன் உருவாக்கிப் பயன்படுத்தி வருகிறார். இழப்பீடு என்ற சொல்லின் அடிப்படையில்தான் அவர் பிழையீடு என்ற சொல்லை உருவாக்கி இருக்கிறார் என்பது தெளிவு.

பரிகாரம் :

      ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய உரிமைக்கு / பாதிப்புக்குச் சரியாக ஈடு செய்வதே பரிகாரம் ஆகும். பரிகாரம் என்பதற்குச் சரியீடு என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். நீதிமன்ற வழக்குரையில் ரிலீஃப் என்பதற்குச் சரியீடு என்ற சொல் பொருந்தும். (சட்டத்தமிழ் அகராதியில் தீர்வழி என்ற சொல் உள்ளது)

நிவாரணம் :

      கஷ்ட நிவாரணம் என்பது எதிர்பாராது நிகழ்கின்ற துயர்களுக்கு ஈடாக பிறரோ அரசோ உதவுவது. இது உரிமையின் பாற்பட்டது அல்ல. கஷ்ட நிவாரணம் என்பதன் சுருங்கிய வடிவமாகிய இன்றைய நிவாரணம்என்ற சொல்லுக்கும் அதேபோல் ஒருசொல்லை உருவாக்க முடியும். வெள்ளத்தால் புயலால் தொற்றுநோய்ச் சூழலால் ஏற்படும் துயர்களுக்கு ஈடு செய்யும் உதவிகளுக்குத் துயரீடு என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்.. ஈடு என்ற பின்இணைப்புச் சொல், பல்வேறு உதவிகளை / வழிமுறைகளை உள்ளடக்கிப் பொருளுணர்த்தும்.

            இழப்பீடு :  நஷ்டஈடு

            பிழையீடு : பிராயச்சித்தம்

            சரியீடு :    பரிகாரம்

            துயரீடு :   நிவாரணம்

Series Navigationவாக்கும் விளக்கும் மதச்சார்பின்மையும் மற்றும்……
author

Similar Posts

Comments

  1. Avatar
    Valavaduraiyan says:

    மன்றவாணன் புதுச் சொல் ஆக்கங்களில் ஆர்வம் கொண்டவர். துயரீடு அருமையான கண்டுபிடிப்பு அவரைப் பாராட்டலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *