சாளேஸ்வரம்

author
1
1 minute, 45 seconds Read
This entry is part 12 of 14 in the series 26 ஏப்ரல் 2020


கௌசல்யா ரங்கநாதன்
…….

-1-

இந்த வாரத்தில் இரண்டாம் முறையாய், என் கடை முதலாளி தம்பி என்னை அழைப்பதாய் அவர் பிள்ளையாண்டான் வந்து அழைத்தபோதுதான் நான்
மறுபடியும் ஏதோ தவறு செய்துவிட்டிருக்கிறேன் போலும்  என்று எண்ணியவாறு  கூனிக்குறுகி அவனருகில் போனால்,  அவன் “அண்ணே வாங்க,
உட்காருங்க… தாக சாந்தி எதனாச்சம் பண்றீங்களா” என்றான், நாராயணன், என் மகன் வயதையொத்தவன்..
அவன் அப்பா காலத்திலிருந்து, அதாவது, சுமார் 50 வருடங்களுக்கு முன்பு, என் 20 வயதில் அந்த ஹோல்சேல் மளிகை கடைக்கு என்னை வேலைக்குக்
கொண்டு வந்து சேர்த்தது என் அப்பாதான்.  இன்று என் வயது 70+.  முதலாளி  அருணாசலம்  செட்டியார் என்னை தன் பிள்ளையாகவே எண்ணி,அன்பு
 செலுத்தி எல்லாம் சொல்லிக்கொடுத்தார்.  அவரே முன் நின்று என் திருமணத்தையும் நடத்தி வைத்தார் தன் செலவில்.  ஒரு வீட்டையும் பிடித்து
மாத வாடகையும் செலுத்தினார். தவிர, மளிகை சாமான்கள் எல்லாம் இனாமாய் கொடுத்து விடுவார்.  மாசா மாசம்  என் சம்பளத்திலிருந்து  வாடகை,
மளிகை சாமான்களுக்கு பிடித்தம் பண்ணிக்குங்க”  என்றால் “என்னடா, நீ என் மகன் போல.  உங்கிட்ட போய்.   வேலையை மட்டும் சின்ஸியராய்ப்
பாருடா. உன் குடும்பம், என் குடும்பம்னு பேதம் எல்லாம் பார்க்க வேணாம்,” என்பார் அன்புடன்.என்  இரு மகன்களையும் நன்றாய் படிக்கவைத்தவர்.
அதனால் அவர்களுக்கு நல்ல வேலையும் கிடைத்த போது அக மகிழ்ந்தவர் அவரே.  ஒரு நல்லது, பொல்லாததுகளுக்கெல்லாம்  முன் நிற்பவர், பெற்ற
தகப்பவன்போல.  ஈரேழு ஜன்மங்கள் எடுத்தாலும், என்ற  இசை ஞானி  பாடல் தான் நினைவுக்கு வருகிறது ஒரு தாய்க்கு தாயாய், தந்தைக்கு தந்தையாய்
பிரதிபலன் எதுவும் எதிர்பாராமல் அவர் செய்த உதவிகளை இன்று நினைக்கும்போதும்,  நெஞ்சு கனத்துப் போகிறது..அழுகையை அடக்கமுடியவில்லை.
நானும் கால நேரம் பாராமல் உழைத்தேன். அவர் மரணத் தருவாயில், என்னைப்பற்றி, என்ன நினைத்தாரோ என்னவோ, என்னையும் உடன் வைத்துக்
கொண்டு தன் மகனிடம், கண்களில் கண்ணீர் தளும்பிட, சொன்னார் “என்னை கடைசி காலம் வரை அவர் மகன் தன்னுடனேயே வைத்துக்கொள்ள வேண்டும்,ஒரு சகோதரனைப் போல பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் எந்த காரணத்தைக்கொண்டும்,
என்னை வெளியில் அனுப்பிவிடக்கூடாது என்றும்.  சத்தியமே வாங்கிக் கொண்டதும் எனக்கு இன்றளவும் நினைவில் நிற்கிறது.
ஆனால் இன்று நிலைமையே வேறு.  அவர் மகன்தான் பாவம் என்ன செய்வான்?  என்னை தன் சொந்த அண்ணனுக்கும் மேலாய் பாவித்து அன்பு
செலுத்திக்கொன்டிருப்பவன்தான், தேவதா விசுவாசம் என்பார்களே,  அப்படி ஒரு அன்பு, பாசம், பக்தி அவனுக்கு என் மீது.  எதுவொன்றையும் என்னைக்
கேட்காமல் செய்ய மாட்டான்.  சில வருடங்களாய் அதுவும் உலகமயமாக்கலுக்கு பிறகு நகரமே மாறிப்போய் மிக பிரம்மாண்டமான மால்கள், ஷாப்பிங்
காம்ப்ளெக்சுகள், நவீன சூப்பர் மார்கெட்டுகளென எல்லா பொருள்களும்  ஒரு கூரையின் கீழ் என்றாகிவிட்ட நிலைமையில்  சின்ன, சின்ன  கடைகளை
நாடி மக்கள் வருவது குறைந்து கொண்டுதான் வருகிறது என்பதே நிதர்சனம்.  அதுவும் பள, பளா பாக்கிங்கில், மிக நேர்த்தியாய், பார்பவர்களை ஈர்க்கும்
வகையில், சில  மால்களில் சானல் மியூசிக்குடன் என்றாகிவிட்டபோது, சாதாரண மளிகைக் கடைகளில் வெகுவாகவே வியாபாரம் டல்லடிக்க எங்கள்
கடையும் ஈ ஓட்டிக்கொண்டிருக்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மை.
-2-
இப்படி எதை, எதையோ எண்ணியவாறு முதலாளி தம்பி அருகே போய் நின்ற போது, “அண்ணே உட்காருங்க… நீங்க என் மூத்த சகோதரன் போல.
அதனால் தான் நான் உங்க கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசலாம்னு”,என்றபோது,
“கேளு தம்பி. எங்கிட்ட கேட்க என்ன தயக்கம் உனக்கு? ஆனா நீ என்ன கேட்கப்போறேனு  விளங்குது.  நான் ஒண்ணும் வேணும்னு செய்யலைப்பா.
ஆனா அது தப்பேயில்லைனு சொல்லலை நான். என்னையும் அறியாம நான் செய்யற தவறுகள்,  இதைப்பத்தித்தானே இப்ப நீ கேட்கப்போறே ?.”
“அண்ணே என்னை தப்பா நினைச்சுரக்கூடாதுனுதான் சொல்ல வரேன்.  அண்ணே உங்க பிரச்சினைதான் என்ன. ஏன் சமீப காலமாய் இந்த தடுமாற்றம்?
உங்க உடம்புக்கு என்ன அண்ணே, தயங்காம சொல்லுங்க.  சமீப காலாமாய் கணக்கு வழக்குகளில் …….”
“அது…. அது.  …..”.
“இந்த தம்பியாண்ட சொல்ல என்ன தயக்கம்?  உங்க பிரச்சினை என் பிரச்சினை இல்லையா?ஏன் என்னை வேத்து மனுஷனா நினனைக்கோணும்?”
“அப்படியெல்லாம் எதுவும் இல்லைப்பா .  கடவுள் என்னை ரொம்பத்தான் சோதிக்கிறார்.  விடு .. பார்ப்போம்.”
“இல்லைண்ணே நீங்க என்னத்தையோ மனசுக்குள்ளார போட்டு குழம்பறீங்க.  “
“அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா, பயப்படறாப்பல.  நான்பாட்டுக்கு என் வேலையுண்டு நானுண்டுனு  இருந்தவனுக்கு இப்ப சமீப காலமாய் …  “
“என்னண்ணே பயமுறுத்தறீங்க.  உங்களுக்கு உடம்புக்கு எதனாச்சும்னா என்னால் பொறுக்க முடியுமா? அப்புறம் வீட்டில அண்ணியைப்பத்தி
கொஞ்சம் நினைச்சுப்பார்த்தீங்களா?யாருங்க இருக்காங்க அவங்களுக்கு?  அப்புறம் எனக்கு பைத்தியமே பிடிச்சிரும்  உங்களுக்கு எதனாச்சும்னா.”
“அட விஷயம் ஒண்ணுமில்லப்பா பயப்படறாப்பல.  கண் பார்வைதான் கொஞ்சம் மங்கலாயிட்டு வருது”.
“இதுக்குப்போய் ஏன் அண்ணே கவலைப்படறீங்க?ஆமாம்… ஏற்கனவே இரண்டு தபா ஐ டாக்டராண்ட போய், டெஸ்ட் பண்ணி கண்ணாடி
போட்டுகிட்டீங்கல்ல?  எத்தினி வருஷங்களாச்சு கண்ணாடி  மாத்தி?”.
“அது இருக்கும்பா ஒரு ஏழெட்டு வருஷம்.”
“”என்னண்ணே இப்படியா இருப்பீங்க?  2/3 வருஷத்துக்கு ஒரு தபா ஐ டாக்டராண்ட போய் டெஸ்ட் பண்ணிக்கிட்டு  பவர் இங்க்¡£ஸாயிருக்கானு
பார்த்து வேற கண்ணாடி மாத்திக்க வேணாமா?”
“நீ சொல்றது எல்லாம் கரக்ட்தான் தம்பி.  மாத்திக்கணும்தான்.  ஆனா!”……
“அண்ணே உங்க நிலைமை நல்லா விளங்குது.  நான் ஏதனாச்சும் செய்ய முடியுமானு பார்க்கிறேன். கவலையை விடுங்கண்ணே.
“உன் நிலைமையும் மோசம்தான்.  வியாபாரம் சுத்தமா இல்லை.  கடனுக்கு வாங்கறவனும் ஒழுங்கா கடனை திருப்பித்தரதில்லை.  எல்லாருமே
சூப்பர் மார்கெட் தேடிப்போய் அவங்க என்ன விலை சொன்னாலும் மயங்கி வாங்கிட்டு வந்துடறாங்க.  அவங்களையும் குறை சொல்ல முடியாது.அங்கே
அனேகமா குண்டூசியிலிருந்து , T.V, Fridge, லொட்டு, லொசுக்குனு, எல்லாமே கிடைக்குது.  நம்ம போல கடைகள்ளனா தூசி, தும்பு,அத்தோட,
நியூஸ் பேப்பர்ல சணல்ல பொட்டலமா கட்டிக் கொடுக்கிறோம்.  வீட்டுக்குப்போய் பொடைச்சு, சுத்தம் பண்ணிக்கணும்.   ஊம்  போகட்டும்.  எல்லாம்
காலத்தின் கோலம்ணே.  மளிகை வியாபாரம் இவ்வளவு டல்லடிச்சுப்போயிரும்னு நாம் நினைச்சுக்கூடப்பார்திருப்போமா என்ன. விடுங்கண்ணே.
இந்தாங்கண்ணே Rs. 500/.  இப்பத்திக்கு இதை வச்சு டாக்டாரண்டபோய் சமாளிக்கப்பாருங்க. ஐ டெஸ்ட் பண்ணிக்குங்க. அடுத்த வாரத்துக்குள்ளார
மறுபடி என்ன தேவையோ,அதை எப்படியாச்சும் புரட்டித்தரேன். கவலைப்படாதீங்க “
“வேணாம்பா.  டாக்டராண்ட போகவே பயமாயிருக்கு.  ஏற்கனவே காடராக்ட் ஃபார்ம் ஆகும்போல இருக்குனார்.  இப்ப அதை கன்பர்ம் பண்ணி,
காடராக்ட் ஆப்பரேஷன் உடனடியாய் பண்ணிக்கணும்னா,நான் என்னப்பா பண்ணுவேன்?.”
“அதுக்காக அப்படியே விட்டுட முடியுமா அண்ணே ?சுவர் இருந்தாதானே சித்திரம் வரைய முடியும்.  நான் இருக்கேண்ணே.  அப்பா கிட்ட அவர் போகச்
சொல்ல சத்தியம் பண்ணிகொடுத்திருக்கேன்ல  உங்களை கடோசி வரை பார்த்துகிறதா? டாக்டாராண்ட போய் வாங்க.  பார்ப்போம்.  ஆப்பரேஷன்தான்
பண்ணோனும்னு டாக்டர் சொன்னா அதையும் பண்ணிடுவோம்” என்று சொல்லி Rs.500 என் கையில் திணித்து  தைர்யம் சொல்லி அனுப்பிவைத்தான்.
– 3-
என் மனம் பின்னோக்கி சென்றது.
என் 45 வயதில் கண் மங்கலாக ஆரம்பித்தது.  அப்போதெல்லாம் கடையில் வியாபாரம் கொடிகட்டி பறக்கும், அதுவும் காலை 7 மணி முதலே.
இரவு 10, 11 மணி வரை கூட கடை இயங்கும்.  ஏகப்பட்ட கஸ்டமர்கள்  அண்ணாச்சி, அண்ணாச்சி  என்று அன்புடன் பொறுமையாய் நின்று
பொருள்கள் வாங்கி செல்வார்கள்.  ஒரு முறை வாங்கிய பொருள் நன்றாய் இல்லையென திருப்பிக்கொண்டு வந்து  தயங்கி, தயங்கிக்கொடுத்தால் கூட,
“ஏன் தயங்கிறீங்க? நல்லாயில்லைனா திருப்பிக்கொடுத்து வேற வாங்கிட்டு போக வேண்டியதுதானே.. கொடு நீ வாங்கிக்கிட்டுப்போன ஜாமாங்களை”
என்று வாங்கிக்கொண்டு, மாற்றுப்பொருள்கள் கொடுத்து அனுப்புவார் அப்பா புன்னகையுடன். 50 வருடங்களுக்கு முன்பேயே, இப்படி கனிவான
சேவை செய்தவர் செட்டியார் அப்பா.  ஆம் .. அவரை அன்புடன் நான் அப்பா என்றுதான் அழைப்பேன்.  அவரும் என்னை அன்புடன் “மகனே” என்றும்,
என் மனைவியைப் பார்த்து “எப்படியிருக்கே மருமகளே? நல்லா சாப்பிடு.  உடம்பைப்பார்த்துக்க.  உனக்கு எது தேவைனாலும் மாமானு எங்கிட்ட
மனம் விட்டு கேளு, உன் மாமனார் இருந்தா எப்படி அவராண்ட கேட்பியோ, அப்படி.. என்ன ?” என்பார்..நான் கடை வேலைக்கு
 வந்த பிறகுதான் வியாபாரம் கொடி கட்டி பறப்பதாய் அவருக்கு ஒரு நம்பிக்கை.   தான் பெற்ற மகனை விட என் மீதுதான் அவருக்கு பாசம் அதிகம்..
கடைக்கு வந்து வாங்க முடியாதவர்களுக்கென நான் தான் வீடுகளுக்கே  பொருள்களை சப்ளை செய்யும் புதிய திட்டத்தை அறிமுகப்படுதினேன்.
இதனால் முன்னிலும் வியாபாரம் அதிகமாயிற்று, அதாவது 1960 களிலேயே. படிப்படியாய் ஹோட்டல்களுக்கும், கலியாண வைபவங்களுக்கும்,வீட்டு
 விசேஷங்களுக்கும் மொத்தமாய் சாமான் சப்ளை பண்ணி, மிச்சமிருந்தால் அவற்றை திருப்பி எடுத்துக்கொண்டு பணத்தை திருப்பி கொடுப்பதும்
நான் செய்த ஏற்பாடு.  “இப்படியெல்லாம் கூட பண்ணலாம்னு எனக்கு விளங்காமப்போச்சே..  உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போறேன்பா”
என்பார் செட்டியார் அப்பா.  “என்னப்பா இது ஒரு மகன் தந்தைக்கு ஆற்றும் உதவியில்லையா இது.  இதுக்குப்போய் நன்றினு உங்க வாயால
சொல்லலாமாப்பா?  இன்னைக்கு நாங்க பசி, பட்டினி இல்லாம சாப்பிடறது நீங்க  போட்ட பிச்சைப்பா.  நீங்க மட்டும் அன்னைக்கு கை
கொடுக்கலைனா, இன்னேரம் பிச்சைதான் எடுத்துகிட்டிருப்பேன்” எனும் என்னைப்பார்த்து “அட போடா பைத்தியக்காரா என்ன, என்னவோ
பேசிக்கிட்டு”என்பார் என் கைகளை அன்பாய் பற்றிக்கொண்டு.  கடைக்கு பொருள்கள் வாங்க ஒரு சின்ன அரை டிராயர் போட்ட பையன் வந்தால் கூட
“என்னப்பா” ரோக்கா” கொண்டு வந்திருக்கியா? (“ரோக்கா” என்றால் மளிகை சாமான்கள்வாங்குவதற்கான லிஸ்ட் என்று பொருள்.  தஞ்சை மாவட்டத்து
வட்டார வழக்கு)அதே ரோக்காவில் பொருள்களின் விலையை எதிர், எதிராய் குறித்து, பொருள் வாங்க வந்தவர் கொடுத்த பணம், பொருள்கள் விலை
போக மிச்சப்பணமும் கொடுத்தனுப்புவோம்..  அப்பா கடையில் ஏமாற்று வேலை, சில்லறையை குறைவாய் கொடுப்பது என்று யாரும் குறை சொல்ல முடியாது. அது மட்டுமா?  அன்றன்று வியாபாரம் எவ்வளவு ,விற்பனையான பொருள்கள் எவ்வளவு, தோராயமான கையிருப்பு எவ்வளவு என்பதெல்லாம்  பார்த்த பின்பே அன்றைய கலக்ஷனுடன் செட்டியார் வீட்டுக்கு, அது இரவு 12 மணி வேளையானாலும் போய், சொல்லி, பணத்தைக்கொடுத்த
பிறகே வீடு திரும்புவேன் மன நிம்மதியுடன்.  அப்போது, ஒரு நாள்..
-4-
இரவு…  12 மணி வரையிலும் கணக்கு டாலியாகவில்லை.  அதிக அமௌன்ட் ஒன்றும் இல்லைதான்.  ஒத்த ரூபாய்தான்.  நிசமாலுமே ஒரு ரூபாய், கணக்கில் உதைத்தது.  டாலியாகவில்லை எனும்போது அது ஒரு ரூபாயாய் இருந்தால் என்ன லட்சங்களாய் இருந்தால் என்ன?கணக்கு, கணக்குதானே. அந்த இரவு 12 மணி வேளையில் வீட்டிலிருந்து செட்டியார் அப்பா பதறியடித்துக்கொண்டு, கடைக்கு வந்து என்னை சாடித்தீர்த்தார்.”என்ன
 பிள்ளைடா நீ? ஒத்த ரூபாய்க்காக நடு நிசி 12 மணி வரையிலுமா இப்படி உட்கார்ந்திருப்பே. இப்ப  கடையை மூடிக்கிட்டு உடனே கிளம்பப்போறியா இல்லையா” என்ற அவர் வாக்கை தட்ட முடியாமல் வீட்டுக்குப்போனேன்.  என் வீடு வரை அவர் அந்த நிசியிலும் கொண்டு வந்து விட்டு பிறகே அவர் வீடு திரும்பினார்.
இப்படி உயிரைக்கொடுத்து நானும் உழைத்தேன்.  வஞ்சனை இல்லாமல் செட்டியார் அப்பாவும் என் தேவைகளுக்கு மேலேயே அள்ளிக் கொடுத்தார், கணக்கு பார்க்காமல். நாள், கிழமை, பண்டிகை, பிள்ளைகளின் படிப்பு மருத்துவ செலவுகள் எல்லாம்  அவர் குடும்பத்தாருக்குசெய்வதுபோலவே செய்தார். அவர் மறைவுக்குப்பின் அவர் பிள்ளையாண்டானுக்கு அவ்வளவாய் சாமர்த்தியம் பத்தவில்லை.வெள்ளந்தியாய் இருந்தான்..
“அண்ணே, எல்லாம் நீங்களே பார்த்துக்குங்க.” என்றான். உலக மயமாக்கலுக்குப்பின் நகர் பூரா, சின்ன, சின்ன, மீடியம், பொ¢ய கடைகள் நசிந்தும் மல்டிப்ளெக்ஸ் மால்கள், சூப்பர் மார்கெட்டுகள், டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ், என்று பல்கிப்பெருகிவிட்ட நிலையில், சின்ன கடைகள்
தங்களை தக்க வைத்துக் கொள்வதே சிரமமாயிற்று..  
இந்த சமயத்தில் தான் என் 45 வது வயதில் என் கண் பார்வை மங்கியது என்று சொன்னேன் அல்லவா!. ஆனால் அப்போதும் என் மனைவி
“பூ இதுக்கெல்லாம் போய் அலட்டிக்கலமா. இந்த வயசில் சாளேஸ்வரம் வரது சகஜம்தானே, அதாவது வெள்ளெழுத்து வந்திருக்குங்க உங்களுக்கு.
வயசு 45 தாண்டிருச்சில்ல…  டாக்டராண்ட போய்  கண் டெஸ்ட் பண்ணிக்கிட்டு கண்ணாடி போட்டுகிட்டா போச்சு.  பயப்படாதீங்க” என்றாள்.
-5-
அதாவது, அந்த காலகட்டத்தில், (40 வருஷங்கள் முன்பு) ஐ டாக்டரைப்பார்த்து டெஸ்ட் பண்ணிக்கொண்டு, கண்ணாடி போட்டுக்கொள்ள, மொத்தமாக Rs. 1000/- ஆயிற்று. பிறகு, சில வருஷங்களில் மறுபடி கண் பார்வை மங்கத்தொடங்க, டாக்டரைபார்த்து, கன்ஸல்டேஷன் ஃபீஸ் கொடுத்த போது பவர் அதிகமாயிருக்கு. அதனால் வேற கண்ணாடி வாங்கிப்போட்டுக்குங்க” என்று சொன்னதால் வேற புது கண்ணாடி வாங்க வேண்டியதாயிற்று மிகுந்த
சிரமத்துக்கிடையே.  மறுபடி சில வருஷ இடைவேளையில்  கண் பார்வை  மங்கத்தொடங்க,  விழி பிதுங்கி நின்றேன் செய்வதறியாமல்.மாத சம்பளம் மிகக் குறைவு.  கடையே நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருந்தது.  முதலாளி மகனைப்பார்க்கவே  பாவமாய் இருந்தது.  அவனிடம் கூடசொல்ல விரும்பவில்லை என் நிலைமயை.  என் பிள்ளைகள் வேறு படித்துக்கொண்டிருந்தார்கள்.  வீட்டு வாடகை வேறு அதிமாகிக்கொண்டே போயிற்று.  அப்பா சொத்து எதுவும் சேர்த்து வைத்திருக்கவில்லை.  மனைவி வகையிலும்  உதவ யாருமில்லை.  எப்படியோ  அந்த முறையும் கண் டாக்டரைப்பார்த்து டெஸ்ட் பண்ணியபோது அவர் சொன்னார்.
-6-
“இப்ப இன்னம் கொஞ்சம் அதிக பவர் உள்ள  கண்ணாடியை ரெகமண்ட் பண்றேன் உங்களுக்கு..இருந்தாலும், உங்களுக்கு காடராக்ட் ஃபார்மாயிரு
க்கும் போல . ஆப்பரேஷன் செய்யணும்.  45 கடந்தவர்களுக்கு இது சகஜம்.  பணம் ரெடி பண்ணிக்கிட்டு வாங்க.  முதல்ல ஒரு கண்ணுக்கு
பண்ணிடுவோம். அப்புறம், 6 மாசம் கழிச்சு,  இன்னொரு கண்ணுக்கும் பண்ணிக்கலாம்..இப்பெல்லாம் ஆப்பரேஷனுக்குப்பிறகு, கண்ணாடி
கூட போட வேண்டாம். லென்ஸ் ஃபிக்ஸ் ப ண்ணிடலாம். யோசிச்சு சொல்லுங்க…எப்படியும் Rs. 50 000/-வரை செலவாகும்”  என்றார்.
“இரண்டு கண்களுக்கு  50 000 ரூபாயா” என்ற என்னைப்பார்த்து  டாக்டர் சொன்னார் “நீங்க எந்த உலகத்தில் இருக்கீங்க சார்.  நான் சொன்னது
ஒரு கண்ணுக்கு.  இது தவிர வெளிநாட்டு, தரமான, லென்ஸ் பொருத்தணும்னா, இன்னம் கொஞ்சம் பணம் அதிகம் செலவாகும்.”
“அவ்வளவு ஆகுமா டாக்டர்?”
“ஆமாம்..  இது தனியார் ஆஸ்பத்தி¡¢. நீங்க ஒண்ணு செய்யுங்க.  கவர்ன்மென்ட் ஆஸ்பத்தி¡¢க்கு போங்க.  இல்லைனா சில தனியார் தொண்டு
நிறுவனங்கள் அப்பப்ப, சில “கண்சிகிச்சை முகாம்கள்”  நடத்துவாங்க.  அங்கே போனா இலவசமாகவே  எல்லாம்,  அறுவை சிகிச்சை, கண்ணாடி உட்பட
கிடைக்கும்…யோசிச்சு முடிவெடுங்க” என்றார்..
என் பிள்ளைகள் இருவருமே படிப்பு  முடித்து வெளி நாட்டில் நல்ல வேலைகளில் இருக்கிறார்கள்.  இது வரை அவர்களிடம் உதவி என்று
எதுவும் கேட்டதில்லை.  அவர்களும் மிகுந்த சிரமத்துக்கிடையே  அப்பாவும், அம்மாவும் பல தியாகங்கள்  செய்துதானே தங்களை ஆளாக்கி
விட்டனர் பசி, பட்டினி கிடந்து, கடனுடன் பட்டு என்றெல்லாம் நினைத்து பார்க்காமல்  சொல்லி வைத்தார்போல்,  நாங்களே ரொம்ப
சிரமத்தில் இருக்கோம்.  இருந்தாலும் நீங்க கேட்கிறீங்க…  இல்லைனு எப்படி சொல்றதுன்றதால  எங்களால் முடிஞ்சதை அனுப்பியிருக்கோம்
என்று ஒருவன் ரூபாய் ஆயிரமும், இன்னொருவன் நூறும், அனுப்பினான்.  இந்த தொகையை வைத்துக்கொண்டு எப்படி கண் புரை சிகிச்சை
இரண்டு கண்களுக்கும் செய்துகொண்டு, லென்ஸும் பொருத்திக்கொள்வது என்று நினைத்தபோது வேதனைதான் மிஞ்சி நின்றது.
எப்படி இவ்வளவு பணம் புரட்டுவேன் என்று கலங்கியபோது என் மனைவி ஜானு சொன்னாள்”அரசாங்க மருத்துவமனையும் வேண்டாம்.
ஃப்¡£ ஐ காம்பும் வேணாம்.  அதுக்கும் சிபார்சு வேணும். யாரையாவது பிடிக்கணும்.  நம்ம தெய்வம் கருமா¡£  அம்மா நம்மை கை விட மாட்டங்க.
நான் விரதம் இருந்து, மண் சோறு தின்னு, அங்க பிரதட்சிணம் எல்லாம் பண்ணி, எப்படியும் ஏதாவது செய்யமாட்டாளா அந்தம்மானு
பார்க்கிறேன்” என்றவள், என் முகம் பார்த்து வேதனை கலந்த புன்னகையுடன் ” என்னங்க செய்யறது, நம்மைப்போல கையாலாகாதவங்க கடவுளை
நம்பறதை தவிர, என்றாள்.  ஏதாவது அதிசயம் நடந்தாதான் உண்டு.  ஊம்.  விடு.  நடக்கிறது நடக்கட்டும்” என்ற என்னைப்பார்த்து
ஜானு ஹோவென அழுதாள்.  தொடர்ந்து, “நாம் யாருக்கு என்ன கெடுதி செய்தோம்.  சிரமபட்டு, கடனுடன் பட்டு, தாலியைக்கூட வித்துத்
தானே நம்ம பிள்ளைகளை ஆளாக்கினோம்.  நன்றி கெட்டவங்க.  எங்கேயிருந்தாலு ம் நல்லாயிருக்கட்டும்” என்றாள்.
“சிரமத்தைக்கொடுக்கிற கடவுளே நமக்கு நல்லதையும் செய்வான்.  கடைசி வரை,எதுக்காகவும், யார் கிட்டவும் நான் கையேந்த விரும்பலை. விடு
பார்ப்போம்” என்றேன்.
-7-
என் இந்த வயதிலும் இன்னம் நான் திடகாத்திரமாய்த்தான் இருக்கிறேன்.ரத்தகொதிப்பு, கொழுப்பு, சர்க்கரை, நெஞ்சு வலி, ஜீரணக்கோளாறு,
முட்டி,முழங்கால் வலி,  இவ்வளவு ஏன், ஒரு சாதாரண காய்ச்சல், தலை வலி கூட வந்ததில்லை.  இப்போது கண்களில் காடராக்ட்   ஃபார்மாயிருக்கலாம்
என்று  டாக்டர் அச்சுறுத்துகிறார்.  “லாம்” தான்.  இல்லாமலும் இருக்கலாம்.  கடவுளே அப்படியே எதுவும் இல்லாமல் இருந்து விடக்கூடாதா?
“அருள் செய்வாய் கருணைக்கடலே” என்று பாடத்தோன்றியது அந்த வேதனையான சமயத்திலும்.  கடவுளே ஏன் என்னை ஏழ்மையாய் படைத்தாய்?
குசேலனுக்கு அவன் வறுமை போக்க ஒரு கண்ண பரமாத்மா இருந்தார்.  எனக்கு?  ஐம்பதாயிரம் என்பது என்ன சின்ன தொகையா? கலைவாணர்
என்.எஸ்.கே. பாடியது போல “எங்கே தேடுவேன்..  பணத்தை எங்கே தேடுவேன்? ” என்று பாடத்தோன்றியது. கொடிது, கொடிது வறுமை கொடிது..  அதனினும் கொடிது இளைமையில் வறுமை  என்றார் அவ்வை பிராட்டியார்.  முதுமையில் மட்டும்  வறுமை
இனிக்குமா என்ன?எனக்கெந்த ஆதிசங்கரர் என் முன்  தோன்றி என் வறுமை போக்க “கனகதாராஸ்தவம் சொல்லி,   ஊம்  ஊம். இவ்வளவு ரூபாய்
மட்டும் என்னிடம் இருந்தால் ஒரு சின்ன பெட்டிக்கடையாவது வைத்து  பிழைத்துக்கொள்வேனே நான்.  இந்தத் தொகையை நான் கண்ணால்கூட
பார்த்தது இல்லையே இதுவரை.   தவிரவும், ஒரு சின்ன மளிகை கடையில் வரவு, செலவு, கொள்முதல், கணக்கு எழுதும் எனக்கு கண்
பார்வையில் கோளாறு  என்றால் எப்படி?    இப்படி எதை,எதையோ எண்ணி நான் குழம்பிக் கொண்டிருந்த போது தான் என் மனைவி அந்த யோசனையை சொன்னாள் என்னிடம்.
-8-
“என் திருமாங்கல்யத்தில் இருக்கிற தங்கம் 3 பவுன்.  ஒரு மஞ்சள் கிழங்கு எடுத்து கட்டிகிட்டு, இதை வித்து உங்க இரண்டு கண்கள் அறுவை சிகிச்சை
 செலவையும் பார்த்துக்கிடலாம்,” என்றவளிடம்,”வேண்டாமென  நான் எவ்வளவோ எடுத்துச்சொல்லி,  அவளை சமாதானப்படுத்த முயற்சி செய்தும் அவள் கேட்பதாக இல்லை.
“வேற நல்ல “ஐ” டாக்டராய் பார்க்கலாம்  ஜானு.  முன்னபோல அவர்கிட்ட டெஸ்ட் பண்ணிக்கிட்டு, இப்பத்திக்கு கொஞ்சம் பவர் கூடின
கண்ணாடியைப் போட்டு பார்க்கலாம் இல்லையா, ஓடறவரை ஓடட்டுமே..  ரொம்ப முடியாதப்ப ஆப்பரேஷன் பத்தி யோசிக்கலாம்ல.
அதுக்குள்ள கடவுள் கண் திறக்கமாட்டாரானு பார்ப்போம்.”
“அதெல்லாம் கண் விஷயத்தில risk வேணாம்ங்க.  காடராக்ட் இப்பல்லாம் சர்வ சாதாரணமாயிருச்சி.   இப்ப நீங்க சொல்ற அந்த வேற  டாக்டரும்
இதையே சொன்னா என்ன செய்வீங்க? அதுவும் அதுக்குள்ளாற முழு பார்வையும் போயிருச்சினா.  அதனால இப்பவே அரைகுறை பார்வை
இருக்கச்சொல்லவே டாக்டர் அட்வைஸை புறம் தள்ளாம ஆப்பரேஷனை பண்ணிகிடலாங்க.”என்றவளிடம்,
  “ஆனாலும் இதுக்கோசரம் தாலியையெல்லாம் வித்து, ஆயிரக்கணக்கில் பணம் செலவு பண்ண எனக்கென்னவோ மனசொப்பலைம்மா.  “
“விடுங்க. எனக்கு உங்க ஆரோக்கியம்தான் முக்கியம்.  கண் ;பார்வை நல்லாயிருந்தாதானே நாம பிறத்தியார் கிட்ட கையேந்தாம காலம் தள்ள  முடியும்! உடம்பு நல்லா இருக்கும் தன்னியும்,  சம்பாதிக்கலாம்.  மானமா காலம் தள்ளலாம்,  கால் வயித்து கஞ்சியாவது குடிச்சுக்கிட்டு..  ” என்றவள்,  பேச்சைத்   தட்ட முடியாமல் டாக்டரை பார்க்கச்சென்றபோது, அவர் எல்லா டெஸ்டுகளையும் தான் சொல்லும் லாபுகளில் மட்டுமே எடுத்து வர வேண்டுமென்றார்.
“எனக்கு காடராக்ட்தான்னு நம்பறீங்களா டாக்டர்?” என்ற போது “அம்பது வயசுக்குமேல காடராக்ட் வர சான்ஸ் இருக்கு” என்றார்.
அன்று வெள்ளிக்கிழமை.  பான் புரோக்கர் ஷாப்புகளுக்கு விடுமுறை என்பதால் சனியன்று காலை 9 — 10.30 ராகு காலத்துக்கு முன்பே
மார்வாடி கடைக்குப்போய் வருவதாக சொல்லியிருந்தாள் ஜானகி.  அன்று இரவு பூரா எனக்கு தூக்கம் பிடிக்கவில்லை. நடு இரவில்  எழுந்த
நான், பாத்ரூம் போக எண்ணி,அந்த மங்கலான நைட் லாம்ப் வெளிச்சத்தில்  தட்டு தடுமாறியவாறு,அதுவும், ஜானு விழித்துக்கொள்வதற்குள்  போய்
வந்து விடுவோமே என்றெண்ணி மெல்ல நடக்க, என்ன அதிசயம்! எனக்கு, பார்வை பளிச்சென இருப்பதுபோல் ஒரு உணர்வு. அந்த 12 மணி நடு
நிசியிலும். நான் என்னையே கிள்ளி பார்த்துக்கொண்டேன்.  நான் காண்பது என்ன கனவா அல்லது நினைவா என்றே தோன்றியது. கடவுளே
நீ என்னை வச்சு காமடி, கீமடி எதுவும் பண்ணலையே என்று வடிவேல் மொழியில் எனக்குள் நானே கேட்டுக்கொண்டேன்.    ஆனாலும் கண் பார்வை
பளிச்சென்று இருந்தது.”என்னங்க, லைட்ட போட்டுக்கிட்டு போகக்கூடாதா ? இல்லைனா என்னை கூப்பிடக்கூடாதா? இருட்டில் எங்கேயாவது தடுமாறி கீழே விழுந்து வச்சீங்கனா, என்னங்க பண்றதாம்?”
 என்ற போது “ஹாப்பி இன்று முதல் ஹாப்பி “என்று பாடாத குறையாய்  அவளிடம் விபரம் சொன்ன போது  “உங்க திட்டம் விளங்குதுங்க எனக்கு.
வேணாம் இந்த விபா£த விளையாட்டு” என்றாள்.
“நீ என்ன சொல்லவரே?” என்றபோது, “ஏன் தான் உங்க புத்தி இப்படி வேலை செய்யுதோ? பொய் எல்லாம் சொல்ல வேண்டாம்.  பணம் போனாப்போகுது.
பணம்,பணம்னு பார்த்து வாழ்நாள் பூரா குருடனாவே இருக்கப்போறீங்களா என்ன.?  ஏன் நடிக்கிறீங்க திடீர்னு பார்வை வந்துருச்சுனு.?  அது எப்படிங்க பார்வை திடீர்னு வரும் ஒருத்தருக்கு?”
 என்றவளிடம், “பொய் எல்லாம் இல்லை ஜானு.  நிசமாகவே எனக்கு பார்வை இப்ப வந்துருச்சு திடீர்னு. கடவுள் நம்மை கைவிடலைமா ” என்ற போதும்,
அவள் என்னை நம்பத்தயாராய் இல்லை.  “குழந்தைங்கதான், டாக்டர் கிட்ட போகணும்னா,”வேணாம் டாக்டர் .  எனக்கு உடம்பு இப்ப நல்லாயிருச்சு.
டாக்டர்கிட்ட போனா ஊசி போடுவார்னு” பயப்படும்.  நீங்க கூடவா இப்படி.  கருமம், கருமம்.  போய் படுங்க.  எதுவானாலும் காலைல பார்த்துக்கலாம்” என்றவளின் பேச்சையும் புறம் தள்ள முடியவில்லை..அரை,குறை தூக்கத்தில் நான்தான் பிதற்றுகிறேனா! ஒருகால் பார்வை வந்துவிட்டதுபோல் கனவா!
மறு நாள் காலையிலும் எனக்கு பளிச்சென பொடி எழுத்துக்கள்  THE HINDU வில்  படிக்க முடிந்தது வியப்பாய் இருந்தது.  இன்னம் சில சிதிலமான கசங்கிய,
எண்ணைக்கறை படிந்த, பல வருடங்களுக்கு முன் அச்சாகியிருந்த எழுத்துக்கள் கூட பளிச்சென்று இருந்தது.  ஆனாலும் நான் பொய் சொல்வதாகவே என் மனைவி
நினைத்தாள்.  பக்கத்து வீட்டுக்காரரை அழைத்து அழுது கொண்டே “என் தலை விதி இப்படியா ஆகணும்.  இவருக்கு கண் பார்வைதான் மங்கியிருந்தது.  ஆனா இப்ப
மென்டலாகவும் ஆயிட்டார்னு தோணுது.  என்ன செய்யப்போறேனோ ?.  ஆண்டவன் என் தலையில் என்ன அனுபவிக்கணும்னு எழுதி வச்சிருக்காரோ!
  நீங்க தான் அவர் கிட்ட பேசி புத்தி சொல்லணும் என்றாள்.  என்னை யாரும் ஏன் நம்ப தயாராயில்லை.  ஒரு கால் எனக்கு என் மனைவி சொல்வது போல
மென்டல் டிப்ரஷன்தானோ. ஊஹூம் .பக்கத்து வீட்டுக்காரராண்ட எனக்கு கண் பார்வை  திடீர்னு வந்திருச்சினு எப்படி  விளங்கவைக்கிறது..நம்புவாங்களா நான் சொல்றதை?அதனால் அந்த பக்கத்து வீட்டுக்காரர் அருகில் போய்,    
மிகப்பொடிசான எழுத்துக்களை இன்னும் ஒருமுறை நான் படித்து காண்பித்ததும்  “வாவ்.. உங்க வீட்டுக்காரர் பொய் சொல்லலைனு எனக்குத்தோணுது
சிஸ்டர்.  எதுக்கும், அப்பாய்ன்ட்மென்ட் கண் டாக்டர் கிட்ட வாங்கியிருக்கோம்ல.  போய்தான் பார்த்துட்டு வருவோமே” என்று சொல்லி என்னை அந்த “ஐ
ஸ்பெஷலிஸ்டிடம் அழைத்துப்போய் விபரம் சொல்ல அவரும் “அப்படியா.  குட்.  எதுக்கும் ஒரு முறை டெஸ்ட் பண்ணித்தான் பார்த்துடுவோமே” என்று
சொல்லி எனக்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேல் வித விதமான டெஸ்டுகள் எடுத்து   “குட்.. உங்களுக்கு பார்வை திரும்பக் கிடைச்சிருக்குனு நினைக்கிறேன்..இருந்தாலும் ஒரு 15 நாட்கள் கழிச்சு வாங்களேன் இங்கே..
   அப்பவும் கண் பார்வை இப்படியே பளிச்சுனு இருந்தா நல்லதுதான்.  அப்புறம் ஆப்பரேஷன்லாம்
தேவையில்லை இப்பத்திக்குனு எடுத்துக்குவோம்.  வாழ்த்துக்கள்” என்றவர், “என் பிழைப்பில் மண்ணை அள்ளி போட்டுட்டீங்க.  ஒன்லி ஜோக் தான்”, என்றார்.
–9–
எனக்கு கண் பார்வை வந்து இன்றுடன் ஒரு மாதம் ஆகிறது.  15 நாட்களுக்கு பிறகு, டாக்டர் சொன்னது போல  “ஐ” டாக்டரை பார்த்ததும் அவர் சொன்னார்.
“இது போல வெகு சிலருக்கு 70 வயசுக்கப்புறம்  கண் பார்வை திரும்ப வரதுண்டு, அதிசயமா  .  அப்படிதான் உங்களுக்கும்
பார்வை திரும்ப கிடைச்சிருக்குனு
நினைக்கிறேன்.  மனித வாழ்க்கையில ஒவ்வொருத்தருக்கும் 40 தாண்டியதும்  கண் பார்வை மங்கும்.  இதை வெள்ளெழுத்து, இல்லைனா சாளேஸ்வரம்னு சொல்வாங்க.
அப்படித்தான் தலை தும்பைப்பூவாய் வெளுத்துப்போகும். வழுக்கை விழும்.  தோல் சுருங்கும்.  பல் எல்லாம் கொட்டிப்போகும்.  முதுமைன்றது ஒவ்வொருவர்
வாழ்க்கைலயும் தவிர்க்கமுடியாத ஒண்ணு.  போய் வாங்க எதை பற்றியும் கவலைப்படாம” என்று டாக்டர் சொல்லியும் எனக்குள் ஒரு பயம் இருந்துகொண்டுதான்
இருந்தது.  எப்படி ஒரு நாள் இரவு கண் பார்வை திரும்பக்கிடைத்ததோ அப்படியே போய் விட்டால் என்ன செய்வது என்று. அன்று    என் பாலிய
நண்பன் ஒருவனை சந்தித்தபோது அவனும் கண்ணாடி அணியாமல் இருந்ததைப்பார்த்து அது பற்றி கேட்க அவனுக்கும் என்னைப்போல வயது 70 கடந்த பிறகு
கண் பார்வை திரும்ப கிடைத்து விட்டதாக சொன்னான்.  என் கதையையும் அவனிடம் சொல்ல,   “இப்படி சிலருக்கு கண் பார்வை திரும்பி கிடைக்கிறது
சகஜம்தான்னு சொல்றாங்க..பயப்படாதே..ஓடறவரை ஓடட்டும்..அப்புறம் பிரச்சினைனு வந்தா பார்த்துக்கலாம்..”என்றான்..
“கடவுளே, இனி உள்ள என் சொச்ச காலம் பூரா உடம்பில் எந்த நோவும் வராம காப்பாத்து..தெம்பு திடமாய் வை..சாப்பாடுக்கு யார் கைகளையும்
எதிர்பார்க்காம நான் உழைச்சு, அந்த உழைப்பில் வர ஊதியம் சொற்பமானதாக இருந்தாலும், அதை வச்சு அரை வயிறு, ஒரு வேளையானாலும்
கூழோ, கஞ்சியோ சாப்பிட்டுக்கிட்டு நிம்மதியாய் இருக்க வழிவகை செய்” என்று இறைஞ்சுவதைத் தவிர வேறு என்போன்ற அகவை முதிர்ந்த
அன்றாடம் காய்ச்சிகள் என்ன செய்ய முடியும்.. !
                                                                    ———

Series Navigationதக்க யாகப் பரணி [தொடர்ச்சி]கரையைக் கடந்து செல்லும் நதி – ஸிந்துஜா
author

Similar Posts

Comments

  1. Avatar
    சிவ சீனிவாசன் says:

    அருமை…எதார்த்த (வணிக)வாழ்வியலின் நிதர்சன உண்மைகள் சுடுகிறதே சற்று…💐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *