அப்துல்ரகுமானின் அயல்மகரந்த சேர்க்கை உணர்த்தும் சமூகம்

author
4 minutes, 56 seconds Read
This entry is part 6 of 11 in the series 10 மே 2020

முனைவர் பீ. பெரியசாமி,

தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632521. mail id: periyaswamydeva@gmail.com

 முன்னுரை

சமுதாயக் கேடுகளை, அரசியல் அக்கிரமங்களை, எழுத்தாளர்களின் வக்கிரங்களைக் கண்டிப்பதில் அப்துல்காதர் அவர்கள் சிறிதும் தயங்கியது இல்லை என்பதை இக்கட்டுரை தெள்ளிதின் உரைக்கிறது. நட்பின் இறுக்கம், இயற்கையின் நெருக்கம், ஆன்மிகச்சாரம், இசுலாம் ஈடுபாடு, கவிதையின் ஈரம், காதலின் கனிவு, புதுமையின் துணிவு, பூக்கள் தரும் வரம், ஜனநாயகம் இப்படி வாழ்வின் அடிமுதல் முடிவரை உள்ள ஏராளமான சமூக நிகழ்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். சமூகத்தின் உயர்வு தாழ்வுகளை அப்துல்காதர் அவர்கள் கடிந்து கூறியுள்ளார். நுட்பங்களை உணர்த்தியுள்ளார்.  எதிர்ப்புக்குரல் கொடுத்துள்ளார்.  இவருடைய கட்டுரைகளில் இலக்கியமும் சமூகமும் கைகோர்த்து உள்ளன.  உணர்வின் சிறகு இலக்கிய மென்றாலும் அது சமூகத்தின் குருதி நாளங்களைச் சுத்தப்படுத்தும் உயிர்வளி என்பதை அவர் மறந்து விடவில்லை. மதம், சாதி, இனம் என ஆயிரம் இயந்திரத் துப்பாக்கிகளால் மனிதம் சல்லடைக் கண்களாக துளைக்கப்படுவதை  அப்துல்காதரின் உள்ளம் ஏற்க மறுதளிக்கிறது என்பதை இக்கட்டுரை உணர்த்தவுள்ளது.

சமூக உணர்வு

இந்நூலின் வாழ்த்துரையில் சிலம்பொலிசெல்லப்பன் அவர்கள் இவரது சமூக உணர்வைப் பாராட்டுகையில்,

காதர் வண்டுஇலக்கியப் பூங்காவில் நுழைந்த,  பூக்கள் தோறும் கருத்துத் தேனுண்டபோது நடைபெற்ற பண்பு இணைப்பாகிய அயல் மகரந்தச் சேர்க்கையால் மாந்த நேயம் எனும் முளைகளைக் கொண்ட வீரியவிதைகள் விளைந்துள்ளன.  சமூகவயலில் இவற்றை விதைத்துப்     பயிராக்கிப் பயன் பெறுவோம்1

என்று உரைத்திருக்கிறார்.  மேலும், இதேநூலின் அணிந்துரையில் அப்துல்காதரின் சமூக உணர்வையும் எழுத்தின் வேகத்தையும் கண்டு வியந்த சிற்பிபாலசுப்பிரமணியம் கூறுகையில்,

விதைப்புத் தானிய மணிகளை விசிறி விடுகிற இந்தச் சொல்லோஉழவனின் கரங்கள் பக்குவப் பண்ணை நிலங்களைப் பார்த்து விதைத்தால் பரவாயில்லை. பாறைகளின் மீதும் விதைக்கின்றனவேஅய்யோ பயனின்றிப் போகுமே என்பதுதான் ஆதங்கம்வளமான தமிழை வசீகரமாக உச்சரிக்கும் உதடுகள் காற்றின் கன்னங்களைச் சிவக்க வைத்தாலும்காதுகளுக்கு  அப்பால் காற்றை அடக்கும் கணக்கறிவார் இல்லை2

என்று கூறியுள்ளமை புலனாகும்.

நட்பு

நட்பு இனிமை தரும்.  இனிய கணமில்லாதவர்களின் நட்பு ஆரம்பத்தில் இனித்தாலும் போகப் போகக் கசக்கும் என்பதை,

            “கருத்துணர்ந்து கற்றறித்தார் கேண்மையெஞ் ஞான்னுங்

             குருத்திற் கரும்புதின் றற்றே – குருத்திற்

             கெதிர்செலதத்தின் றன்ன தகைத்தரோஎன்றும்

             மதுர மிலாளர் தொடர்பு3

என்று நாலடியார் நயமாய் நட்பைப்பற்றிக் கூறுவது போல அப்துல்காதர் அவர்களும் நட்பின் ஆழத்தை உணர்த்தியுள்ளார்.

கைம்மாறு கருதாது நட்புறவு ஒன்றுதான்.  கடலில் சென்ற கலம் மூழ்கிவிடுகிறது.  இரண்டு நண்பர்கள்ஒருவன் நீச்சல் தெரிந்தவன்.  மற்றொருவன் தெரியாதவன் இருவரில் தான்மட்டும் பிழைக்க வாய்ப்புண்டு.  தன்  நண்பன் தன் கண்முன்னே சாவது கொடுமை.  எனவேஉலகில் தான் வாழ்வது அதனைவிடக் கொடுமை.  எனவேதன்னைச் சாகடித்தால்மிதக்கும் தன் பிணத்தை புணையெனப் பற்றி நண்பன் பிழைக்கட்டுமே என முடிவெடுக்கிறான்.  மூழ்கி மூச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறான். நண்பன் பிணத்தைப்பற்றிக் கரையேறுகிறான்”4

என்று கூறுவதோடு, நட்பு எந்நாளும் மூழ்குவதில்லை.  தண்ணீர்த்தாளில் எழுதப்பட்டதாக வரலாறு இது என்று உரைக்கிறார்.

அன்பை உரைக்கும் பாங்கு

பிற உயிர்களிடத்தில் அன்பு காட்டப்படவேண்டும் என்றும் உயர்ந்த கருத்துக்களைச் சொன்ன பெரியோர் பலர் வாழ்ந்த புண்ணிய பூமி.  அன்பை நிலைநாட்டிப் பல இலக்கியங்கள் தோன்றின.  அது போலத்தான் அப்துல்காதர் அவர்களின் படைப்புகளும் ஆகும். அன்புடையவர்கள் என்னதான் கடுமையாக பேசினாலும் இனிமையானதாகும்.  பகைவர்கள் என்னதான் இனிக்க இனிக்கப் பேசினாலும் மனம் விரும்பாது.  காரணம் அன்பில்லாத உள்ளமே ஆகும்.  சிரிக்கச் சிரிக்கப் பேசும் பகைவரை நம்பக் கூடாது.

               அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

               வற்றல் மரந்தளிர்த் தற்று5

என்பது வள்ளுவர் அன்பை நிலைநாட்டக் கையாண்ட திறன் ஆகும். இதனைப் போன்றே அப்துல்காதர் அவர்களும், அன்பை உணர்த்தாமல் இல்லை.  அவர் கூறுகையில்,

அன்பு வெள்ளம் அதிசயமானது.  அது கல்லணைக்கும் கட்டுப்படாது.  அன்பு ஒன்றே உன்னதமானது6

என்று அன்பின் மேன்மையினை நயம்பட உரைக்கின்றார்.

காதல் உணர்வுகள்

காதல் பற்றிய செய்திகளைக் காதலினும் இனிப்புடன் கூறியிருக்கிறார் அப்துல்காதர்.  முன்னோர் மொழிந்த பொருளைப் பொன்னாய்க் கொண்டு தம் கீர்த்தி மிகு வேலைப்பாட்டால் புதிய அணிகலன்களைச் செய்து தந்துள்ளார். ‘மலரினும் மெல்லிது காமம்’ என்றார் திருவள்ளுவர் அக்கூற்றுக்கேற்ப  செய்திகளை  நுண்ணியனவாயும்  கண்ணிய மிக்கவையாயும் அமைய வேண்டும் என்பதில் அப்துல்காதர் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார்.

திருவள்ளுவர் காதலை ஒரு விந்தை தீயாய்க் காண்கிறார்.  தீ தொட்டால் தான் சுடும்.  ஆனால் காதல் தீயோ விட்டு நீங்கினவரைச் சுடுகிறது.

               தொடிற்சுடின் அல்லது காமநோய் போல

                விடிற்சுடல் ஆற்றுமோ தீ7

எனக் கேட்கிறது திருக்குறள்.  பிரிவாற்றாமையால் துடிக்கும் தலைவனின் கூற்று இது.

விலகியிருக்கும்போது நெருப்பாய்ச் சுட்டவள்.  இணைந்திருக்கும் போது பனியாய்க் குளிர்கிறாளே!  இத்தகைய தன்மையை இவன் எங்கிருந்து பெற்றாள்  எனக் காதலியுடன் கூடியிருக்கும் காதலன் பாராட்டி மகிழ்கிறான்.

             காதல் நம் வசத்தில் இல்லை

             அது ஒரு

             அதிசய நெருப்பு

             பற்ற வைத்தால் பற்றாது

             அணைத்தால் அணையாது.8

என்பதுவே அக்கவிதையின் பொருள். சுய ஈர்ப்பின் உரசலில் பற்றிக் கொள்ளுமே தவிர, வலித்துப் பற்ற வைத்தால் பற்றாது காதல் நெருப்பு.  காமம் என்பது அகல் விளக்கு:  காற்று அதனை எளிதில் அணைத்துவிடும்.  காதல் ஒரு காட்டுத் தீ.  காற்றடிக்கக் காற்றடிக்க அது மூண்டு எரியுமே தவிர, அணைந்து போகாது என்பது இக்கவிதைக்கு அப்துல்காதர் தந்துள்ள விளக்கமாகும்.

வெயிற்காலத்தில் மந்தையில் மாடு மேய்ந்து அந்தியில் வீட்டிற்கு ஓட்டிச் சென்றவன் கொல்லைப் புறத்திற்குக் குளிக்கச் சென்றான்.  அவன் மனைவி அங்குத் தொட்டியின் நீரை மொண்டு முதுகில் ஊற்றிக் தேய்த்து நின்றாள்.  அப்போது  அவன்,

                தொட்டியின் தண்ணீர் கொதித்ததென்றான் – அவள்

                 தொட்ட இடம் மட்டும் சிலிர்த்ததென்றான்.9

தொட்டியின் தண்ணீர் வெப்பத்தால் சுட்டதாம்.  ஆனால், அவள் தொட்ட இடமோ குளிர்ச்சியில் சிலிர்த்ததாம்.  காதலின் இன்பக்கிளுகிளுப்பை இவ்வாறு பாடியுள்ளார் பாவேந்தர் பாரதிதாசன்.

‘மெய்தொட்டுப் பயிறல்’  என்பது அகப்பொருளில் ஒரு துறை.  இப்போதெல்லாம் திரைப்படங்களில் காட்டப்படுவது போலக் கண்டதும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அணைத்தக் கொள்வது கண்ணால் அவளைப் பார்ப்பாள்.  அவன், அவள் கூந்தலில் சூடியுள்ள மலர்களில் தேனுண்ணும் வண்டுகளிடம், “வண்டுகளிடம்! என் தலைவியின் கூந்தலைப் போல மணமுள்ள பூக்களை நீங்கள் அறிந்ததுண்டா? என்று கேட்டவாறு மெதுவாய் அவளை நெருங்கி, வண்டுகளை ஓட்டுபவன் போலக் கையைக் கூந்தலில் வைப்பான்.  நுண்மையும் மென்மையும் மிக்க இக்காதல் காட்சியை,

            “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

             காமம் செப்பாது கண்டது மொழிமோ!

             பயிலியது கெழிஇய நட்பின் மயிலியல்

             செறியெயிற் றரிவை கூந்தலின்

             நறியுவும் உளவோ நீயறியும் பூவே!10

எனும் குறுந்தொகைப் பாடல் காட்டுகிறது.

இதே மாதிரியானதொரு காட்சி வடபுல மன்னன் பத்ருஹரியின் பாடல் அமைந்திருப்பதை அப்துல்காதர் எடுத்துக்காட்டுகிறார்.

                அன்பே!

            இந்த பூக்கள்

            கொடியில் வாழ்வதைக் காட்டிலும்

            உன் கூந்தலில்

            சாவதையே விரும்புகின்றன.11

என்கிறான் பத்ருஹரியின் கவிதைக் காதலன்.  இப்படிக் கூறிய வண்ணம் அவன் அவள் கூந்தலை தடவியிருப்பான்.  மெய்தொட்டுப் பயிறலுக்கு வடமொழிக் கவிஞன் வடித்துள்ள பாடல் இது என்பதை அப்துல்காதர் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

சாதி

சாதி சமய வேறுபாடுகளை மறக்கக் கற்றுக்கொள்

மறக்க முடியாவிட்டால் புறக்கணிக்கக் கற்றுக்கொள்12

என்று சாதி பற்றிக் கூற வந்த மு.வ. சாதிப்பது இதைத்தான். மறப்பதும் புறக்கணிப்பதும் ஒரு படிநிலை என்றாலும் அங்கே சாதி இருக்கின்றது என்றுதான் பொருள். சாதியை விரட்ட முடியாத வேதனையில் விளைந்ததது தான் இந்த போதனை. “சாதிகள் இல்லையடி என்று கூறிய பாரதியும், “ஆயிரம் உண்டிங்கு சாதி” என்பதையும் பாட வேண்டியுள்ளது. பாப்பாவிற்குச் சொல்லும் அந்த அறவுரை பழுத்தவர்களுக்கும் பயன்படும் என்பதை உணர்ந்தார் அவர்.

இயல்பாக இருக்க வேண்டிய  இன உணர்வுக்குக் கூட இங்கு எதிர்ப்பு உள்ளது. அது சாதி வெறியால் வந்ததெனச் சாற்றுகிறார். ம.பொ.சி.

மொழிவழி இன உணர்ச்சிக்குத் தமிழ்நாட்டில் தான் எதிர்ப்பு இருக்கிறது. இதற்குக் காரணம் இங்குத் தேசியம் வளர்ந்திருப்பதல்லசாதிவெறி வளர்ந்திருப்பதாகும்13

என்று கூறுகின்றார். இச்சாதிக் கொடுமை இன்று ஏழை மக்களையே பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது. சாதி வேறுபாட்டை வரவேற்கின்றவர்கள் கூடத் தம்மைவிடத் தாழ்ந்த  சாதியினரிடத்தில் உறவு கொள்வதில்லை.

இங்குச் சாதி மாறுபடுகிறதே தவிர வேறுபாடு நீங்கவில்லை. உண்மையில் வேர் விடும், இந்தச் சாதி வேர் விட வேண்டுமென்றால் சட்டம் உதவ வேண்டும். சாதி ஒருபொய், சாதி வேறுபாடு பொய்யின் அடிப்படையில் நிற்கிறது. அதனால்தான் அறிவு வளர வளர, நாகரீகம் வளர வளர, சாதி இருக்குமிடம் தெரியாமல் மறைகிறது. இச்சாதி பாரபட்சமின்றி அனைத்து இடங்களிலும் இருக்கிறது. இதனை அப்துல்காதர் அவர்கள் வலியுறுத்துகையில்,

மடம் நடத்தும் நிறுவன விடுதிகளில் உயர்சாதி மாணவர்களோடுகீழ்ச்சாதி மாணவர்கள் சேர்ந்து உணவுண்ணத் தடைதனித்தனி மெஸ். 21 ஆம் நூற்றாண்டிலும் தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறார்கள்14

என்று சுட்டிக் காட்டுகிறார். இந்த ஏற்றத்தாழ்வு நீங்க மக்கள் மனம் மாற்றம் அடைய வேண்டும். ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் இச்சாதிதான் தடை; இதனை அறவே ஒழிக்க வேண்டும் என்பதுதான் அப்துல்காதர் அவர்களின் முயற்சியாகும்.

அரசியல்

இன்றைய அரசியல் பூசலும், ஊழலும் நிறைந்து காணப்படுகின்றன. தோன்றும் ஓர் அரசியல் கட்சி நன்றாய் வேர் விடாமல் நன்றாய் வேறுபடுகின்றது. தொண்டும் தொண்டர்களும் கட்சியில் தொடர்பில்லாமல் போகிறார்கள். உருவாக்குபவனைவிடக் கட்சியில் உறவாடுபவன் உயர்ந்துவிடுகிறான். அரவணைக்கும் போக்கைவிட ஆதரிப்பது போல் செய்யும் பாசாங்குத்தனத்திற்குப் பயன் கிடைத்து விடுகிறது. புரையோடிய இன்றைய அரசியலின் நிலையிது. இதனை அப்துல்காதர் அவர்கள் உரைக்கையில்,

தெளிவான மக்களைக் குழப்பிதன்னிறைவுத் – திட்டம் ஒன்றே எல்லாத் திட்டங்களுக்குமான உள்நோக்கம் ஆகக் கொண்ட அரசியல்வாதிகள் அணியில் நின்று ஜனநாயக சுயம்வரத்திற்காக நிற்கிறார்கள். சாதி,மதகட்சி சார்பின்றி வல்லமை மிக்க நல்லவர்களைத் தெரிவு செய்ய வேண்டும்15

என்கிறார். தரம் பார்த்து தேர்வு செய்யாவிட்டால் தீமை தான் கிட்டும். தாம் பார்த்துத் தேர்வு செய்யாவிட்டால் தீமை தான் கிட்டும். தாம் பார்த்துத் தேர்வு செய்யப்படுபவன். மக்களின் உயர்வையும் உயிரையும் மதிப்பான். அதற்காகத் தன் உயிரையும் விடுவான். மு.வ. அரசியல் கொள்கையில் இது ஆணி வேர் என்கிறார்.

கொள்கையை விடஉயர்ந்த நோக்கத்தைவிடப் பொதுமக்களின் உயர்வாழ்க்கை விலை உயர்ந்தது என்பதைத் தெளியச்  செய்கிறார் உலகத் தலைவர்கள்16

இன்றைய தொண்டர்கள் நாளைய தலைவர்கள், இன்றைய தலைவன் நேற்றைய தொண்டன் என்ற உணர்வோடு நல்லது செய்தல் வேண்டும். அரசியலில் ஈடுபடுகிறவர்கள் கட்சித் தொண்டாற்றுகிறார்களே தவிர மக்கள் தொண்டு ஆற்றவில்லை. சுயநலமாக அரசியல் நடத்துவதால் சுகாதாரமான நாடு உருவாகவில்லை. இதனால் ஏற்படும் விளைவுகளை அப்துல்காதர் கூறுகையில்,

முன்னர் மாதம் மும்மாரி பெய்தது: பின்னர் மாதமும் மாறிப்பெய்தது. ஊழிமழை பெய்தாலும் ஆட்சிக் களங்கத்தைமாசினைக் கழுவ முடியாது17

என்று அரசியல் நிலையினைப் படம்பிடித்துக் காட்டுகிறார். வாழ்க்கைக்காக உருவான அரசியல் நாளடைவில் திசைமாறி விட்டது. அரசியல் கொள்ளை வலுக்கிறது. எதிர்பாராத செயல்களைச் செய்கிறது. இன்றைய அரசியல் கட்சிகளை வளர்க்கிறதே தவிர மக்களையும் மக்களின் நலன்களையும் வளர்க்கவில்லை என்பதே ஆசிரியர் வருத்தமாகும்.

இனப் போராட்டம்

மனிதனும் இனமும் ஒன்றுக்கொன்று இணையானவை. இன வேட்டை நெடுநாட்களாகவே மக்களிடையே இருந்து வருகிறது. அத்தகைய இனப் போராட்டத்திற்கு ஆளான நாடுகளில் தென்னாப்பிரிக்கா முக்கியமான நாடாகும். அதற்கு விடிவை ஏற்படுத்திய நெல்சன் மண்டேலாவை ஆசிரியர் நினைவு கூறுகையில்,

உலக நடப்பெல்லாம் கறுப்பு வெள்ளைப் போராட்டம்தான் எந்தக்கருத்துக்கும் மதிப்பு அது பின்பற்றப்படுவதில் தான். கறுப்பு வெள்ளைப் போராட்டத்தைக்  கூர்மைப்படுத்திதென்னாப்பிரிக்கக் கறுப்பின மக்கள் வெள்ளை ஆதிக்க ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றிட 28 ஆண்டுகள் சிறைவாசம் இருந்தவர் நெல்சன் மண்டேலா. சிறையறையைச் சுதந்திரத்தின் கருவறையாக்கியவர்18

என்று புகழாரம் சூட்டுகிறார். மேலும், தென்னாப்பிரிக்கா விடுதலை அடைகிறது. நெல்சன் மண்டேலாவைத் தலைமையாகக் கொண்டு, முதல், கறுப்பின அமைச்சரவை பதவியேற்கிறது. இலட்சக்கணக்கான கறுப்பின மக்கள் கூடிநிற்கிறார்கள். முதல் அமைச்சரவையில் பொறுப்பேற்கவிருக்கும் சக போராளிகள் நெல்சன் மண்டேலாவை நோக்கி முகம் காட்டி நிற்கிறார்கள். பதவிப்பிரமாணத்திற்கு அமைச்சர்களைத் தனக்கு முதுகுகாட்டிப் பின்புறமாகத் திரும்பச் சொல்கிறார் மண்டேலா என்பதை எடுத்துரைக்கிறார்.

தொகுப்புரை

இக்கட்டுரையில் சமுதாயத்தில் நடக்கும் சீர்கேடுகளையும் உயர்வு தாழ்வுகளையும் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. மதம், சாதி, இனம் என ஆயிரம் இயந்திரத் துப்பாக்கிகளால் மனிதம் சல்லடைக் கண்களாகத் துளைக்கப்படுவதை  அப்துல்காதரின் உள்ளம் ஏற்க மறுதளிக்கிறது என்பதை இக்கட்டுரை உணர்த்தியுள்ளது. பிற உயிர்களிடத்தில் அன்பு காட்டப்படவேண்டும் என்றும் உயர்ந்த கருத்துக்களைச் சொன்ன பெரியோர் பலர் வாழ்ந்த புண்ணிய பூமி.  அன்பை நிலைநாட்டிப் பல இலக்கியங்கள் தோன்றின.  அது போலத்தான் அப்துல்காதர் அவர்களின் படைப்புகளும் ஆகும். அன்புடையவர்கள் என்னதான் கடுமையாகப் பேசினாலும் இனிமையானதாகும்.  பகைவர்கள் என்னதான் இனிக்க இனிக்கப் பேசினாலும் மனம் விரும்பாது.  காரணம் அன்பில்லாத உள்ளமே என்பதை இக்கட்டுரை வெளிப்படுத்தியுள்ளது. காதல் வெள்ளம் கல்லணைக்குக் கட்டுப்படாது:  பஞ்சணைக்கே கட்டுப்படும் பாச வெள்ளம் அது. கொடுக்கிற போதே வசூலாகிற ஒரே கடன் முத்தம். சமாதி கட்டப்பட்ட காதல்தான் சரித்திரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.               உன் மதம் என் மதம் ஆகும் மன்மதம் என்பதையும் இக்கட்டுரை உரைக்கிறது.

அடிக்குறிப்புகள்

1.            அப்துல்காதர், அயல்மகரந்தச்சேர்க்கை ப – 22

2.            மேற்படி, ப – 23

3.            நாலடியார், ப- 305

4.            அப்துல்காதர், அயல்மகரந்தச்சேர்க்கை ப – 65,66

5.            குறள் – 78

6.            அப்துல்காதர், அயல்மகரந்தச்சேர்க்கை ப – 42

7.            குறள்.1159.

8.            அப்துல்காதர், அயல்மகரந்தச்சேர்க்கை ப – 120

9.            மேற்படி, ப – 110

10.           குறுந்தொகை, ப – 116

11.           அப்துல்காதர், அயல்மகரந்தச்சேர்க்கை ப -145

12.           மு.வ., தம்பிக்கு, ப – 52

13.           ம.பொ.சி., தமிழகத்தில் பிறமொழியினர், ப -24

14.           அப்துல்காதர், அயல்மகரந்தச்சேர்க்கை ப – 90

15.           மேற்படி, ப – 154

16.           மு.வ., அன்னைக்கு, பக் – 18, 19

17.           அப்துல்காதர், அயல்மகரந்தச்சேர்க்கை ப – 78

18.           மேலது, ப – 123

19.           தந்தை பெரியார், பிரகிருதிவாதம், ப – 121

20.           அப்துல்காதர், அயல்மகரந்தச்சேர்க்கை ப – 125

21.           மேற்படி

துணைநின்ற நூல்கள்

1.            அப்துல் காதர், அயல் மகரந்தச் சேர்க்கை, நேஷ்னல் பதிப்பகம், சென்னை – 17, 2006.

2.            மாணிக்கம். அ. (உ.ஆ), திருக்குறள் தெளிவுரை, தென்றல் நிலையம், சிதம்பரம் – 01, 2002.

3.            முத்துரத்ன முதலியார், நாலடியார் உரை, தஞ்சை சரஸ்வதி மகால் நிருவாகக் குழு, தஞ்சாவூர். 1988.

4.            வரதராசனார். மு, தம்பிக்கு, பாரி நிலையம், சென்னை, 1972.

5.            சிவஞானம். ம.பொ., தமிழகத்தில் பிறமொழியினம், பூங்கொடி பதிப்பகம், சென்னை, 1979.

6.            வரதராசனார். மு,       அன்னைக்கு, பாரி நிலையம், சென்னை, 1973.

7.            தந்தை பெரியார், பிரகிருதிவாதம், பகுத்தறிவு நூற்பதிப்புக்கழகம், ஈரோடு, 1953.

8.            குறுந்தொகை மூலம், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை-98. 1981.

Series Navigationதக்கயாகப் பரணி [தொடர்ச்சி]தனிமை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *